Sunday, December 23, 2012

இராமாயணம் - இறுதி தான் , ஆனால் எதன் இறுதி ?


இராமாயணம் - இறுதி தான் , ஆனால் எதன் இறுதி ?


சூர்பனகை சிலவற்றிற்கு இறுதியாய் வந்தாள். முதலில் "தன் கிளைக்கு இறுதி ஈட்டுவாள்" என்றான் கம்பன். அவள் இன்னும் சிலவற்றிற்கு முடிவு கட்ட வந்தாள். 

தேவர்களுக்கும், தவ சீலர்களுக்கும், மனிதர்களுக்கும் ஓர் இறுதி கொண்டு வந்தாள். இதற்க்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

மேலோட்டமாகப் பார்த்தால் இவர்களை எல்லாம் ஒழித்துக் கட்ட வந்தாள் என்று ஒரு பொருள் தரும். 

அவர்களுக்கு, அவர்கள் படும் துன்பங்களுக்கு ஒரு இறுதி காண வந்தாள் என்று இன்னொரு பொருள். அவள் இராமன் மேல் காதல் கொள்ள விட்டால், இராமன் அவளை வெறுக்கா விட்டால், அவள் சென்று இராவணனிடம் சீதை மேல் காதலை உண்டாக்கா விட்டால், இராமன் இராவணை வதைக்க விட்டால் இவர்களின் துன்பம் எப்படி தீரும். ? அவர்களின் துன்பங்களுக்கு இறுதியாய் வந்தாள். 


கூனியும் சூர்பனகையும் இரண்டு வணங்கத் தக்க தாய்மார்கள். அவர்கள் இல்லை என்றால் இராமயணம் இல்லை. இந்த மின் அஞ்சலும் இல்லை. 


பாடல் 


செம் பராகம் படச் 
     செறிந்த கூந்தலாள், 
வெம்பு அராகம் தனி 
     விளைந்த மெய்யினாள், 
உம்பர் ஆனவர்க்கும், ஒண் 
     தவர்க்கும், ஓத நீர் 
இம்பர் ஆனவர்க்கும், ஓர் 
     இறுதி ஈட்டுவாள்,


பொருள்;

செம் பராகம் படச் = செம்பட்டையான, செம்மை படர்ந்த 

செறிந்த கூந்தலாள்  = அடர்ந்த கூந்தலை கொண்டவள். ஏன் செம்மை படர்ந்த கூந்தல் ? என்னை தடவுவது கிடையாது, சிக்கல் எடுப்பது கிடையாது, சீவுவது கிடையாது...எனவே கருமை மாறி செம்பட்டையான கூந்தல். ஒரு வேளை மனிதர்களையும் தேவர்களையும் கொன்று தின்று அந்த இரத்தக் கறை படிந்த கையை தலை மேல் தடவி தடவி முடி சிவந்த நிறமாய் மாறி இருக்குமோ ?
 
வெம்பு = வெப்பம் (இங்கு காமத்தால் விளைந்த வெப்பம் என்பது பொருந்தும்)

அராகம் = இச்சை, ஆசை

 தனி விளைந்த மெய்யினாள் = உண்டான உடலை கொண்டவள்

உம்பர் ஆனவர்க்கும் = தேவர்களுக்கும் 

ஒண் தவர்க்கும் = சிறந்த தவ சீலர்களுக்கும்

ஓத நீர் இம்பர் ஆனவர்க்கும் = நீர் சூழ்ந்த இந்த உலகில் உள்ளவர்களுக்கும் 

ஓர் இறுதி ஈட்டுவாள் = ஓர் முடிவை கொண்டு வருவாள். அவர்களுக்கு ஒரு முடிவை கொண்டு வருவாள். அவர்களையே முடிப்பாள் என்று சொல்லவில்லை. அரக்கர் குலத்தை அடியோடு அழித்து, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு முடிவை கொண்டு வந்தவள் சூர்பனகை. 

சூர்பனகையின் மூலம் கம்பன் இராமனின் அழகை அணு அணுவாக இரசிக்கிறான். 

ஆச்சரியப் படத்தக்க, உதட்டோரம் புன்னகை வரவழைக்கும் அந்த பாடல்கள்....


2 comments: