Thursday, December 20, 2012

இராமாயணம் - உடன் பிறந்தே கொல்லும் வியாதி


இராமாயணம் - உடன் பிறந்தே கொல்லும்  வியாதி


மாரடைப்பு, சர்க்கரை வியாதி, மூச்சிறைப்பு (ஆஸ்துமா ) என்று மருத்துவரிடம் போனால், அவர் முதலில் கேட்பது உங்கள் அப்பா, அம்மா அல்லது தாத்தா பாட்டிக்கு இந்த வியாதி இருந்ததா என்றுதான். 

அவர்களுக்கு இருந்தால், உங்களுக்கும் வரும் சாத்திய கூறுகள் அதிகம். 

இன்று நிறைய வியாதிகள் மரபு சார்ந்தவை என்று மருத்துவர்கள் கூறக் கேட்க்கிறோம். 

இந்த வியாதிகள் நாம் பிறப்பதற்கு முன்னே நம் பெற்றோரிடமோ அல்லது அவர்களின் பெற்றோரிடமே பிறந்து அவர்களிடம் இருந்து நமக்கு மரபணுக்கள் மூலம் நமக்கு வந்து சேர்கின்றன. இந்த நோய்கள் நாம் பிறக்கும் போதே நம்மோடு கூடப் பிறந்து விடுகின்றன. நாம் வளரும் போது, நம்மோடு வளர்ந்து...சரியான காலம் பார்த்து நம்மை பிடித்துக் கொள்ளும், கொல்லும். 

அது போல் சூர்பனகை இராவணின் கூடவே பிறந்தாள்...அவனை கொல்ல பிறந்த நோய் போல். 

பாடல் 


நீல மா மணி நிற 
     நிருதர் வேந்தனை 
மூல நாசம் பெற முடிக்கும் 
     மொய்ம்பினாள், 
மேலைநாள் உயிரொடும் 
     பிறந்து, தான் விளை 
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய 
     நோய் அனாள்,

பொருள்

நீல மா மணி = நீல நிறமான மணியைப் போல

நிற = நிறம் கொண்ட
 
நிருதர் வேந்தனை = இராவணனை

மூல = அடியோடு

 நாசம் பெற = நாசம் அடைய

முடிக்கும் மொய்ம்பினாள் = முடிக்கும் வலிமை கொண்டவள் 
 
மேலைநாள் = முன்பு ஒரு நாள்
 
உயிரொடும் பிறந்து = உயிர் பிறக்கும் போது கூடவே பிறந்து

தான் விளை காலம் ஓர்ந்து, = தான் நன்றாக விளையும் காலம் வரை கவனமாக  இருந்து (ஓர்தல் = ஆராய்ந்து அறிதல், தெரிந்து எடுத்தல்)

உடன் உறை = உடலில், நம் கூடவே இருந்து 

கடிய நோய் அனாள் = கொடிய நோயை போன்றவள் (சூர்பனகை)

எப்படி நோய் நம் கூடவே வளர்கிறதோ, இராவணன் கூடவே வளர்ந்தாள் சூர்பனகை. சரியான காலத்தில் நோய் போல அவனைக் கொன்றாள், அவன் இறப்பதற்கு காரணமாக இருந்தாள்.

சூர்பனகை எப்படி எல்லோருக்கும் உதவி செய்தாள் என்பதை கம்பன் எப்படி சொல்கிறான் தெரியுமா ?





2 comments:

  1. உவமை எழுதக் கம்பரைப் போல் இல்லை!

    "உடன் பிறந்தே கொல்லும் வியாதி" என்று இன்னொரு பாடலில் வந்தாற்போல் தோன்றுகிறதே? அது எந்தப் பாட்டு?

    ReplyDelete