Sunday, September 1, 2013

இராமாயணம் - மானை எடுக்கும் யானை

இராமாயணம் - மானை எடுக்கும் யானை 


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியை சொல்ல தசரதன் கைகேயின் மாளிகை நோக்கி வருகிறான். அங்கே கைகேயி தன் அலங்காரங்களை எல்லாம் அழித்துவிட்டு தரையில் கிடக்கிறாள்.

பதறிப் போனான் தசரதன்.

பெண்ணே உனக்கு என்ன வந்தது என்று கவலையோடு கேட்டு அவளை ஒரு மானை , யானை தூக்குவதை போலத் தூக்கினான்.

யானை தன் தும்பிக்கையால் தூக்கும். ஒரு கையால். அது போல தசரதன் அவளை  அத்தனை எளிதாகத் தூக்கினான். 

யானையின் வலு என்ன ? பெரிய பெரிய மரங்களை தூக்கும் வலு கொண்டது.  மானின் பாரம் என்ன? மானைத் தூக்குவது யானைக்கு ஒன்றும் பாரம் அல்ல. அவ்வளவு எளிதாக தூக்கும். அது போல தசரதன் அவளை தூக்கினான்.

தசரதனுக்கு எத்தனை வயது இருக்கும் ? ஒரு அறுபது  அல்லது அறுபத்து ஐந்து வயது இருக்கலாம்.  அந்த வயதிலும் அவன் உடல் உரம் மனைவியை அவ்வளவு எளிதாகத் தூக்கும்படி இருந்தது. ..

அது மட்டும் அல்ல, கைகேயி அவ்வளவு மென்மையாக, எடை போடாமல் இருந்தாள் . சக்ரவர்த்தினி...வேண்டுமானால் எவ்வளவும் சாப்பிடலாம். ஒரு வேலையும் செய்ய வேண்டாம். எல்லாவற்றிற்கும் வேலை ஆட்கள் உண்டு. பணிப் பெண்கள் உண்டு. இருந்தும் அவள் உடலை எடை போடாமல்  பாதுகாத்து வைத்து இருக்கிறாள்.

நமக்கெல்லாம் பாடம்.

பாடல்

அடைந்து, அவண் நோக்கி, 'அரந்தை என்கொல் வந்து
தொடர்ந்து?' எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன்,
மடந்தையை, மானை எடுக்கும் ஆனையே போல்,
தடங்கைகள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான்


பொருள்

அடைந்து = கைகேயின் மாளிகை அடைந்து

அவண் நோக்கி = அங்கிருந்த நிலையை நோக்கி

அரந்தை = பெண்ணே

என்கொல் வந்து தொடர்ந்து = உனக்கு என்ன நேர்ந்தது ?

எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன் = என்று துயர் கொண்டு சோர்ந்த நெஞ்சினன்

மடந்தையை = கைகேயியை

மானை எடுக்கும் ஆனையே போல் = மானை எடுக்கும் யானையைப் போல்

தடங்கைகள் கொண்டு = தன்னுடைய பெரிய கைகளால்

 தழீஇ, எடுக்கலுற்றான் =தழுவி எடுத்தான்


அந்த நள்ளிரவு நேரத்திலும், தசரதன்  கோசலையைப்  பார்க்காமல், கைகேயியை பார்க்க வந்ததன்  காரணம் புரிகிறதா ? 

2 comments:

  1. புரியவில்லை, என்ன காரணம்?

    ReplyDelete
  2. எனக்கும் புரியவில்லை புரிந்தவர்கள் சொல்லவும்

    ReplyDelete