Sunday, September 22, 2013

தேவாரம் - யாதும் ஓர் குறைவில்லை

தேவாரம் - யாதும் ஓர் குறைவில்லை 


குறை இல்லாத மனிதன் யார் ? எல்லோருக்கும் ஏதோ  ஒன்று இல்லை. இது இருந்தால் அது இல்லை, அது இருந்தால் இது இல்லை.

கல்யாணம் ஆகாதவனுக்கு திருமணம் ஆகவில்லையே என்று குறை.

ஆனவனுக்கு பிள்ளை இல்லை என்று குறை.

பிள்ளை இருப்பவனுக்கு அது  சரியாகப் படிக்கவில்லையே என்று குறை.

பணம் இல்லாக் குறை, ஆரோக்கியம் இல்லாக் குறை...இப்படி குறை இல்லா மனிதன் யாரும் இல்லை.

ஞான சம்பந்தர் பாடுகிறார்....குறையை மட்டுமே ஏன் எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் ? எவ்வளவு நல்லது எல்லாம் இருக்கிறது ?

இந்த பூமி, இந்த இந்திய நாடு எவ்வளவு நல்ல நாடு...இங்கு நல்லபடி வாழலாம், நல்ல கதி அடைய ஒரு குறையும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, இவற்றை அளிக்க கழு மலம் என்ற ஊரில் நல்ல பெண்ணோடு (பார்வதியுடன்) சிவன் இருக்கிறான் என்கிறார்.

பாடல்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே



 பொருள்




மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம் = மண்ணில் நல்ல படி வாழலாம்

வைகலும் = எப்போதும்

எண்ணின் = யோசித்துப் பார்த்தால்

நல்ல கதிக்கி =நல்ல கதிக்கு  அடைய

யாதுமோர் குறைவிலை = எந்த குறையும் இல்லை

கண்ணினல் லஃதுறுங் = கண்ணுக்கினிய 

கழுமல வளநகர்ப் = சிறந்த வளங்களைக் கொண்ட கழு மலம் என்ற ஊரில்

பெண்ணினல் லாளொடும் = நல்ல பெண்ணான (பார்வதியோடு)

 பெருந்தகை யிருந்ததே = பெருந்தகை இருப்பதால். தகை என்றால் அன்பு, அருள் , பெருமை  என்று பொருள்

இந்த பாடலை சைவ வீடுகளில் நடக்கும் எல்லா நிகழ்சி அழைப்புகளிலும் அச்சடித்திருப்பார்கள். குறிப்பாக திருமண அழைப்பிதழ்களில் இந்த பாடல் இடம் பெற்று இருக்கும்.

4 comments:

  1. என்ன ஒரு அருமையான பாடல்! அதற்க்கு அழகான விளக்கம்

    ReplyDelete
  2. அருமையான பாடலின் பொருள் சிதையாதொரு அருமையான விளக்கம்..

    ReplyDelete
  3. நன்றி🙏🙏🙏

    ReplyDelete