Monday, September 16, 2013

இராமாயணம் - இராமன் அம்பா ? காமன் அம்பா ?

இராமாயணம் - இராமன் அம்பா ? காமன் அம்பா ?


மாரீசனை ஏதோ கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். கம்பன் அப்படிச் சொல்லவில்லை. அவனை மிக நல்லவனாக காட்டுகிறான்.

மாரீசன், எவ்வளவோ எடுத்துச் சொல்லுகிறான். இராவணன் கேட்டான் இல்லை. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்று.

கடைசியில், நீ போகவில்லை என்றால் உன்னை கொல்வேன் என்றான் இராவணன்.

வேறு வழியில்லாமல் மாரீசன் ஒத்துக் கொண்டான்.

இராவணனுக்கு ஒரே குஷி.....மாரீசனை அப்படியே கட்டிக் கொண்டு, கோபம் எல்லாம் நீங்கி,  "மலை போல் உயர்ந்த தோள்களை கொண்டவனே, மன்மதனின் கொதிக்கும் அம்பால் அழிவதை விட, இராமனின் அம்பால் இறப்பது எவ்வளவோ பெருமை தருவது அல்லவா ? எனவே, தென்றலை விட மென்மையான சீதையை தருவாய்" என்று கூறினான்.

பாடல்

என்றலும், எழுந்து புல்லி, ஏறிய வெகுளி நீங்கி,
'குன்று எனக் குவிந்த தோளாய்! மாரவேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ?
தென்றலைப் பகையைச் செய்த சீதையைத் தருதி' என்றான்.

பொருள் 



என்றலும் = சரி, நான் என்ன செய்ய வேண்டும் என்று மாரீசன் கேட்டவுடன்

எழுந்து = இராவணன் எழுந்து நின்று

புல்லி = கட்டிப் பிடித்து

ஏறிய வெகுளி நீங்கி = பொங்கி வந்த சினம் நீங்கி

'குன்று எனக் குவிந்த தோளாய்! = குன்று போல உயர்ந்த தோள்களை கொண்டவனே

மாரவேள் = மன்மதன்

கொதிக்கும் அம்பால் = கொதிக்கும் அம்பால். காமம் சுடும். நீரில் மூழ்கினும் சுடும். மலை மேல் ஏறி நின்றாலும் சுடும் காமம்.


பொன்றலின் = இறப்பதை விட

இராமன் அம்பால் = இராமனின் அம்பால்

பொன்றலே புகழ் உண்டு அன்றோ? = இறப்பதே புகழ் தருவது அல்லவா

தென்றலைப் பகையைச் செய்த சீதையைத் தருதி' என்றான் = தென்றலை பகையாகச் செய்த சீதையை தா

சீதை, தென்றலை விட மென்மையானவள். தென்றலுக்கு சீதையை கண்டால் பொறாமை....தன்னை விட மென்மையாக, இதமாக இருக்கிறாளே என்று.

சீதையின் நினைவு வந்த பின், இராவணனுக்கு தென்றலும் பகையாகி விட்டது. தென்றல் கொதிக்கிறது.  தென்றலை பகையாக்கி வைத்தாள் .

சீதை - தென்றலைச் செய்தாள் . பகையைச் செய்தாள்  (இராமனோடு இராவணனுக்கு பகை உண்டாக காரணமாக இருந்தாள் )



1 comment:

  1. "தென்றலைப் பகையைச் செய்த..." - இதற்கு மூன்று அர்த்தங்களா?!! ஆகா!

    ReplyDelete