Friday, May 30, 2014

திருக்குறள் - நினைக்கும் உயிர் காதல் மனம்

திருக்குறள் - நினைக்கும் உயிர் காதல் மனம் 


அவனும் அவளும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்தார்கள். திருமணமும் செய்து  கொண்டார்கள். அல்லது காதலிக்காமலேயே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்ட கொஞ்ச நாள் வாழ்க்கை மிக இனிமையாக  இருந்தது.

நாள் ஆக நாள் ஆக, இனிமை குறையத் தொடங்கியது.

இது எல்லார் வீட்டிலும் நடப்பதுதான்.

காரணம் என்ன ?

வள்ளுவர் ஆராய்கிறார்....

நாள் ஆக நாள் ஆக ...ஒருவர் மற்றவரின் குறைகளை காண ஆரம்பித்து விடுகிறார்கள். அதுதான் காரணம்.

மனைவி கணவனின் குறையை கண்டு அதை அவனிடம் சொல்கிறாள்.

அவனுக்கு கோபம் வருகிறது.

நீ மட்டும் என்ன உயர்வா என்று அவன் அவளின் குறைகளை கண்டு சொல்கிறான்.

அவளுக்கு கோபம் வருகிறது.

 இதுதான் காதல் குறையக் காரணம்.

காதல் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் ஒருவர் மற்றவரின் குறைகளை காணாமல் அவர்களின் நல்ல திறமைகளை கண்டு பாராட்ட வேண்டும்.


பாடல்

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு”   


பொருள்

எள்ளின் = தவறு கண்டு சிரித்தால்

இளிவாம் = கீழ்மை

என்று எண்ணி = என்று நினைத்து

அவர் = அவருடைய

திறம் = திறமைகளை

உள்ளும் = நினைக்கும்

உயிர்க்காதல் நெஞ்சு = உயிர் போல காதல் கொண்ட மனம்

 
உங்கள் துணைவியோ, துணைவனோ - அவர்களின் நல்ல பண்புகளை, திறமைகளை  பட்டியல் போடுங்கள். அவற்றைப் பற்றி அவர்களிடம் சமயம் வரும்போதெல்லாம் உயர்வாகப்   பேசுங்கள்.

காதல் வராமல் எங்கே போகும் !

இராமாயணம் - சூர்பனகை செய்த தவறு

இராமாயணம் - சூர்பனகை செய்த தவறு 


சூர்பனகை என்ன தவறு செய்தாள் என்று இராமன் இலக்குவனிடம் கேட்டான்.

அதாவது, இராமனுக்குத் தெரியாது சூர்பனகை என்ன செய்தாள் என்று.

இலக்குவனுக்கும் சரியாகத்  தெரியவில்லை.

இவள் சீதையின் பின்னால் போனாள். ஒரு வேளை இவள் சீதையை பிடித்து தின்பதற்கோ, அல்லது இவளுக்கு பின் வேறு யாரும் இருக்கிறார்களோ...எதற்காக இவள் சீதையின் பின்னால் போனால் என்று தெரியவில்லை...கண்கள் தீப் பறக்க இவள் கோபத்தோடு சீதை பின்னால் போனாள்

அவ்வளவுதான் சூர்பனகை செய்த தவறு என்று இலக்குவன் கூறுகிறான்.

சீதைக்கு ஆபத்து என்று இலக்குவன் நினைத்ததில் தவறு காண முடியாது.

ஒரு விசாரணை இல்லை. சந்தேகத்தின் மேல் கொடுக்கப்பட்ட தண்டனை இது.

பாடல்
 

'தேட்டம்தான் வாள் எயிற்றில் 
     தின்னவோ? தீவினையோர் 
கூட்டம்தான் புறத்து உளதோ? குறித்த 
     பொருள் உணர்ந்திலனால்; 
நாட்டம்தான் எரி உமிழ, 
     நல்லாள்மேல் பொல்லாதாள் 
ஓட்டந்தாள்; அரிதின் இவள் உடன்று 
     எழுந்தாள்' என உரைத்தான்.

பொருள்

தேட்டம்தான் = தேடுவது (சூர்பனகை தேடுவது )

வாள் = வாள் போன்ற கூரிய

எயிற்றில் = பற்களால்

தின்னவோ? = தின்பதற்கோ ? (கேள்விக் குறி...சந்தேகம் )

தீவினையோர் = தீவினை செய்பவர்கள்

கூட்டம்தான் = கூட்டம்

புறத்து உளதோ? = வெளியே இருக்கிறதோ (மறுபடியும் கேள்விக் குறி...சந்தேகம்)


 குறித்த பொருள் = எதற்காக இவள் வந்து இருக்கிறாள் என்று 

உணர்ந்திலனால் = தெரியாததால்

நாட்டம்தான் = அவளின் நோக்கம், இங்கே விழி

எரி உமிழ = தீக் கக்க
 
நல்லாள்மேல் = சீதையின் மேல்

பொல்லாதாள் = பொல்லாதவளான சூர்பனகை

ஓட்டந்தாள்; = பின்னால் வேகமாக போனாள்

அரிதின் = யாருக்கும் தெரியாமல்

இவள் = சூர்பனகை

உடன்று = தீராக் கோபத்தோடு

எழுந்தாள்' = எழுந்தாள்

என உரைத்தான் = என்று கூறினான்

சூர்பனகை கோபத்தோடு சீதையின் பின்னால் போனாள் .

அது தான் அவள் செய்த தவறு என்று இலக்குவன் கூறுகிறான்.


சீதைக்கு துணையாக இலக்குவன் என்ற வீரம் மிக்க ஆண்மகன் இருக்கிறான் என்று தெரிந்தாலே சூர்பனகை ஓடிப் போய் இருப்பாள்.

அவளை மிரட்டி விரட்டி இருக்கலாம்.

வேண்டுமானால் இரண்டு அடி கூட கொடுத்து இருக்கலாம்.

அவள் முடியைப் பிடித்து இழுத்து, காலால் உதைத்து, காதையும், மூக்கையும், முலையும் வெட்ட வேண்டுமா ?

Thursday, May 29, 2014

கலிங்கத்துப் பரணி - விடுமின் பிடிமின்

கலிங்கத்துப் பரணி - விடுமின் பிடிமின் 


அவனோடு ஊடல் கொண்டு கதவைத் திறக்காமல் இருக்கிறாள் அவள். அவளிடம் கெஞ்சுகிறான் அவன்.

அவர்கள் ஒன்றாக இருக்கும் போது, அவள் ஆடையை அவன்  பற்றுவான்.அப்போது அவள், அய்யோ விடுங்கள் விடுங்கள் என்று மழலை மொழியில் கெஞ்சுவாள் அவனிடம். விடு விடு என்று சொன்னாலும், அந்த இடத்தை விட்டு விலக மாட்டாள். அது என்னவோ, விடாதே, பிடித்துக் கொள் என்று சொல்வது மாதிரி இருக்கிறது அவனுக்கு. உண்மை கூட அதுதானோ என்னவோ.

அவள் அப்படி விலகிச் செல்லாமல் இருப்பது, அவனுக்கு அருள் செய்வது மாதிரி  இருக்கிறதாம்.


பாடல்

விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
     வெகுளி மென் குதலை துகிலினைப் 
பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய் 
   பெடைந லீர்கடைகள் திறமினோ.

பொருள்

விடுமின் = விடுங்கள்

எங்கள்துகில் = எங்கள் ஆடைகளை

விடுமின் = விடுங்கள்

என்று = என்று

முனி வெகுளி = கோபித்து (ஊடல்)

மென் = மென்மையான

குதலை = மழலைச் சொல்லால் 

துகிலினைப் = ஆடையை

பிடிமின் = பிடித்து கொள்ளுங்கள்

என்ற பொருள் விளைய = என்ற அர்த்தம் தோன்ற

நின்றருள்செய் = நின்று அருள் செய்யும்

பெடை = அன்னம்

நலீர் = நல்லவர்களே

கடைகள் திறமினோ = கதவுகளை திறவுங்கள்


அந்த அருள் என்ற வார்த்தையை கண்டு நான் அசந்து போனேன்.

தெய்வம் தான் அருள் புரியும். அருள் கிடைத்தால் முக்தி கிடைக்கும். சொர்க்கம் கிடைக்கும்.

அவள் அதைத்தானே தருகிறாள்.

அதுவும் நின்று அருள் செய்யும்.  ஆடையை விடு விடு என்று சொன்னாலும், அவனை விட்டு விலகாமல் அங்கேயே நின்று அவனுக்கு அருள் செய்கிறாள்.

"நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை  என் சொல்வேன்"



இராமாயணம் - பகை என்ற சொல்லே இல்லாத இராவணன்

இராமாயணம் - பகை என்ற சொல்லே இல்லாத இராவணன் 


இலக்குவனனால் மூக்கும், காதும், முலையும் வெட்டப்பட்ட சூர்பனகை இராமனிடம் வந்து முறையிடுகிறாள்.

இராமனுக்கு அவள் யார் என்றே தெரியவில்லை.

முதலில் வரும் போது அழகான பெண்ணாக வந்தவள் இப்போது அரக்கி வடிவில், உடல் அவயங்கள் எல்லாம் அறுபட்டு இரத்தம் வழிய நிற்பதைப் பார்த்த பின் இராமனுக்கு அவளை யார் என்றே தெரியவில்லை.

நீ யார் என்று கேட்கிறான்..."உன் மேல் அன்பு வைத்த பாவம் அன்றி வேறு ஒன்றும் செய்யாதவள் " என்று சூர்பனகை கூறிய பின்னும்.

சூர்பனகைக்கு மேலும் கோபம் வருகிறது...

"என்னை நீ அறிய மாட்டாயா ? யாருடைய சீற்றத்தைக் கண்டால் இந்த உலகம் அனைத்தும் பயந்து அவன் முன் எதிர்த்து நிற்கப் பயபடுமோ, எவன் இலை போன்ற கூறிய வேலை உடையவனோ, எவன் விண்ணுலகம் உட்பட அனைத்து உலகையும் உடையவனோ அந்த இராவணின் தங்கை " என்றாள் .


பாடல்

அவ் உரை கேட்டு, அடல் அரக்கி, 
     'அறியாயோ நீ, என்னை? 
தெவ் உரை என்று ஓர் உலகும் 
     இல்லாத சீற்றத்தான்; 
வெவ் இலை வேல் இராவணனாம், 
     விண் உலகம் முதல் ஆக 
எவ் உலகும் உடையானுக்கு 
     உடன்பிறந்தேன் யான்' என்றாள்.

பொருள்

அவ் உரை கேட்டு = அந்த உரையைக் கேட்டு. "நீ யார்": என்று இராமன் கேட்ட அந்த உரையைக் கேட்டு 

அடல் அரக்கி = சண்டை போடும் அரக்கி

'அறியாயோ நீ, என்னை? = என்னை நீ அறிய மாட்டாயா ?

தெவ் உரை = பகை என்ற சொல்

என்று = என்று

ஓர் உலகும் இல்லாத = ஒரு உலகிலும் இல்லாத

சீற்றத்தான் = கோபம் கொண்டவன். அவன் கோபத்தைக் கண்டால், அவன் முன் பகை கொண்டு நிற்க யாரும் அஞ்சுவார்கள் 

வெவ் இலை= இல்லை போன்ற

வேல் இராவணனாம் = வேலைக் கொண்ட இராவணன்

விண் உலகம் முதல் ஆக = விண்ணுலகம் தொடங்கி

எவ் உலகும் உடையானுக்கு = அனைத்து உலகையும் உடையவனுக்கு

உடன்பிறந்தேன் யான்' என்றாள்.= உடன் பிறந்தவள் நான்

ஒரு புறம் வலி. இன்னொரு புறம் அவமானம். இன்னொரு புறம் இராமனை அடைய முடியவில்லையே  என்ற ஏக்கம், ஆதங்கம். இதற்கு நடுவில் "நீ யார்" இராமனே  கேட்ட வலி.

இத்தனைக்கும் நடுவில் நிற்கிறாள் சூர்பனகை.

அப்போதும் அவள் தன் அண்ணனின் பெருமையை மறக்கவில்லை. அவன் பெருமை  பேசுகிறாள்.

இராமன் அடுத்து என்ன செய்தான் ?


Wednesday, May 28, 2014

கம்ப இராமாயணம் - அன்பு செய்த பிழை

கம்ப இராமாயணம் - அன்பு செய்த பிழை 


மூக்கையும், காதையும் மற்றும் முலையையும் அறுக்கும் அளவுக்கு சூர்பனகை செய்த பிழைதான் என்ன ?

அவ்வாறு அறுபட்ட சூர்பனகை வலியில் துடிக்கிறாள். துவள்கிறாள். அண்ணனை அழைக்கிறாள். தனக்கு நேர்ந்த துன்பத்தை வாய் விட்டு அழுது அரற்றுகிறாள். அந்த வனத்தில், கேட்பார் யாரும் இல்லை.

அப்போது, அங்கு இராமன் வருகிறான்.

இராமனிடம் முறையிடுகிறாள்.

இராமனின் முகத்தைப் பார்த்து, வயற்றில் அடித்துக் கொண்டு, கண்ணீரும் இரத்தமும் ஒழுகி , அவை நிலத்தை சகதியாக்கி கொண்டிருக்கும் நேரத்தில் சொல்வாள், அந்தோ, உன் திருமேனி மேல் அன்பு செய்த ஒரு பிழையால் நான் பட்ட பாடை கண்டாயா என்று அவன் காலில் விழுந்தாள்.

சூர்பனகை மொத்தம் செய்தது அந்த ஒரு பிழைதான். இராமன் மேல் அன்பு கொண்டாள் . அவனை அடைய ஆசைப் பட்டாள்.

அவ்வளவுதான்.


பாடல்

'வந்தானை முகம் நோக்கி, 
     வயிறு அலைத்து, மழைக் கண்ணீர், 
செந் தாரைக் குருதியொடு 
     செழு நிலத்தைச் சேறு ஆக்கி, 
அந்தோ! உன் திருமேனிக்கு 
     அன்பு இழைத்த வன் பிழையால் 
எந்தாய்! யான் பட்டபடி 
     இது காண்' என்று, எதிர் விழுந்தாள்.

பொருள்

'வந்தானை = வந்த இராமனை

முகம் நோக்கி = அவன் முகத்தைப் பார்த்து

வயிறு அலைத்து = வயிற்றில் அடித்துக் கொண்டு

மழைக் கண்ணீர் = மழையே கண்ணீராக கொட்ட

செந் தாரைக் = சிவந்த நீர் அருவி. அதாவது, இரத்தம் அருவி போல  கொட்டுகிறது.

 குருதியொடு = இரத்தத்தோடு

செழு நிலத்தைச் சேறு ஆக்கி = நல்ல நிலத்தை சேறாக்கி

அந்தோ! = ஐயோ

உன் திருமேனிக்கு = உன் திருமேனிமேல்

அன்பு இழைத்த = அன்பு வைத்த

வன் பிழையால் = பெரிய பிழையால்

எந்தாய்! = என் தந்தை போன்றவேன்

யான் பட்டபடி = நான் பட்டவைகளை அப்படியே

இது காண்' =  இதைப் பார்

என்று = என்று

எதிர் விழுந்தாள் = அவன் முன் விழுந்தாள் .

சூர்பனகையை பொறுத்த வரை , அவள் செய்த ஒரே பிழை இராமன் மேல் அன்பு  வைத்தது. 

பின் இராமன் சூர்பனகையை விசாரிக்கிறான், அடுத்து இலக்குவனை விசாரிக்கிறான். பின் நடந்தது என்ன ?

பார்ப்போம்.


ஐந்திணை ஐம்பது - நண்டே , வழியை அழிக்காதே

ஐந்திணை ஐம்பது - நண்டே , வழியை அழிக்காதே 


அது ஒரு கடற்கரை கிராமம்.

தலை வருடும் காற்று, செவி வருடும் அலை ஓசை. பரந்து பட்ட மணல் வெளி.

அவளை விட்டு அவன் பிரிந்து சென்று விட்டான். அவன் போன வழி பார்த்து அவள் காத்து இருக்கிறாள். அவன் ஞாபகமாக அவன் ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. ஒரு கடிதம், ஒரு சாக்லேட் பேப்பர், ஒரு பேனா என்று ஒன்றும் தந்து விட்டுச் செல்லவில்லை.

அவன் நினைவாக அவளிடம் இருப்பது ஒன்றே ஒன்று தான்....அவன் தேர் சென்ற வழித் தடம். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவன் நினவு அவளை வாட்டும்.

அந்த வழித் தடத்திருக்கும் வந்தது ஆபத்து.

அவள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வழிகளில் உள்ள நண்டுகள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைகின்றன. அப்படி அலையும் போது , தலைவன் சென்ற அந்த வழித் தடத்தின் மேலும் நடக்கின்றன.


அவள் பதறுகிறாள் .

நண்டிடம் சொல்லுகிறாள், நண்டு தயவுசெய்து அந்த தேர் தடத்தின் மேல் நடந்து அதை அழித்து விடாதே என்று அந்த நண்டிடம் வேண்டுகிறாள்.


பாடல்


கொடுந்தா ளலவ ! குறையா மிரப்பே
மொடுங்கா வொலிகடற் சேர்ப்ப - னெடுந்தேர்
கடந்த வழியையெங் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ.

பொருள்


கொடுந்தா ளலவ ! = வளைந்த கால்களை உள்ள நண்டே 

குறையா மிரப்பே = என்னுடைய குறையை உன்னிடம் கூறி வேண்டுகிறேன்

மொடுங்கா வொலி = ஒடுங்கா ஒலி. நிற்காமல் வரும் அலை ஓசை

கடற் சேர்ப்ப = கடற்கரையின் தலைவன்

னெடுந்தேர் = நெடுந்தேர். நீண்ட தூரம் சென்ற தேர். அவளை விட்டு விலகி நீண்ட தூரம் சென்று விட்டான்.

கடந்த வழியை = சென்ற வழியை

யெங் கண்ணாரக் காண = என் கண்ணாரக் காண

நடந்து சிதையாதி நீ = அவற்றின் மேல் நடந்து சிதைக்காதே நீ

மலரினும் மெல்லியது காமம் என்றார்  வள்ளுவர்.அந்த மென்மையான காதலை  இங்கே காணலாம்.

Tuesday, May 27, 2014

கலிங்கத்துப் பரணி - கணவர் தோள் மலையில் ஆடி வரும் மயில்

கலிங்கத்துப் பரணி - கணவர் தோள் மலையில் ஆடி வரும் மயில் 


கணவன் போர்க்களம் சென்று திரும்பி வருகிறான். வரத் தாமதமாகி விட்டது. மனைவி கோவித்துக் கொண்டு கதவை திறக்க மாட்டேன் என்கிறாள். அவளை கொஞ்சி கொஞ்சி கதவைத் திறக்க சொல்கிறான் கணவன்.

வீரமும் காதலும் கொஞ்சும் பாடல்கள்.

கலிங்கத்துப் பரணியில் கடை திறப்பு.

பாடல்

விலையி லாதவடம் முலையி லாட
    விழி குழையி லாட
விழை கணவர்தோள் மலையி லாடி
    வரு மயில்கள் போலவரு
மடந லீர்கடைகள் திறமினோ.

பொருள்

விலையி லாதவடம் = விலை மதிப்பில்லாத கழுத்தில் அணியும் ஆரம் (chain )

முலையி லாட = மார்பின் மேல் விழுந்து விளையாட

விழி குழையி லாட = பெண்களுக்கு கண்கள்   நீண்டு இருந்தால் அழகு. காதளவோடிய கண்கள் என்று சொல்வார்கள். இங்கே, பெண்களின் கண்கள் காது நீண்டு  அது காதில் அணிந்துள்ள அணிகலன்களோடு விளையாடுகிரதாம். விழி, குழையில் ஆட 


விழை கணவர் = விரும்புகின்ற கணவர் 

தோள் மலையி லாடி = தோள் நேட்ற மலையில் ஆடி
   
வரு மயில்கள் = வருகின்ற மயில்கள்

போலவரு = போல வரும்

மட நலீர் = வெகுளித் தனம் நிறைந்த நல்ல பெண்களே

கடைகள் திறமினோ = கொஞ்சம் கதவைத் திறங்கம்மா. திறக்க மாட்டீங்களா என்று கெஞ்சுகிறான், கொஞ்சுகிறான்.



பட்டினத்தார் பாடல் - விதி ஏட்டை கிழிக்க

பட்டினத்தார் பாடல் - விதி ஏட்டை கிழிக்க 


இருந்த செல்வம் அத்தனையும் ஒரே நாளில் உதறித் தள்ளிவிட்டு துறவியானார்  பட்டினத்தார்.

வாழ்வின் நிலையாமை, செல்வத்தின் நிலையாமை, மனிதர்கள் சிற்றின்பத்தின் பால் அலையும் அர்த்தமற்ற செயல்கள் இவற்றைப் பற்றி வெகுவாகப் பாடி  இருக்கிறார்.

நாம் பெரிதாக நினைக்கும் உறவுகள், செல்வம், வாழ்கை தரும் இன்பங்கள்,  எதிர் காலம் பற்றிய கனவுகள், பயங்கள் இவற்றை எல்லாம் "பூ" என்று ஊதித் தள்ளுகிறார் பட்டினத்தடிகள்.

விதி விதி என்று நாம் சில சமயம் நொந்து கொள்வோம். அந்த பிரமன் எழுதிய விதி என்ற ஏட்டினை கிழித்து எரிய ஒரு வழி இருக்கிறது. திரு ஒற்றியூர் என்ற திருத்தலத்தில் நடக்கும் பக்தர்களின் பாதங்கள் நம் தலை மேல் படும் படி அந்தத் தெருவில் உருள்வதே விதி என்ற ஏட்டினை கிழிக்கும் என்கிறார் பட்டினத்தடிகள்.

பாடல்

சுடப்படு வார் அறி யார், புரம் மூன்றையுஞ் சுட்டபிரான் 
திடப்படு மாமதில் தென்ஒற்றி யூரன் தெருப்பரப்பில் 
நடப்பவர் பொற்பதம் நந்தலை மேற்பட நன்குருண்டு 
கிடப்பது காண்மன மே விதி ஏட்டைக் கிழிப்பதுவே!


பொருள்

சுடப்படு வார்  = இறந்த பின் இந்த உடல் சுடுகாட்டில் வைத்து எரிக்கப் படும். சுடப் படும்.

அறி யார் = அதை யாரும் அறிவது இல்லை.

புரம் மூன்றையுஞ் சுட்டபிரான் = திரி புரம் மூன்றையும் சுட்ட பிரான் (சிவன்)

திடப்படு மாமதில் = உறுதியான பெரிய சுவர்களைக் கொண்ட

தென் = தெற்கு

ஒற்றி யூரன் = ஒற்றியூர் என்ற ஊரில்

தெருப்பரப்பில் = தெருவில்

நடப்பவர் = நடப்பவர்கள்

பொற்பதம் = பொன் போன்ற பாதங்கள்

நந்தலை = நம் தலை மேல்

மேற்பட = மேல் பட

 நன்குருண்டு = நன்றாக உருண்டு

கிடப்பது = கிடப்பது

காண் மன மே = கண்டு கொள் மனமே

விதி ஏட்டைக் கிழிப்பதுவே! = விதி என்ற ஏட்டை கிழிப்பதுவே


வாழ்வைப் பற்றி ஒரு நிதானம் பிறக்கும். ரொம்ப அலட்டிக் கொள்ள வேண்டி இருக்காது  - பட்டினத்தார் பாடல்களைப் படித்தால். ஒண்ணுமே பெரிய விஷயம் இல்லை  என்று தோன்றும்.

திரு ஒற்றியூரில் உள்ள சிவனின் மேல் "ஒற்றியூர் உடைய கோவே " என்று உருகி  உருகி நாவுக்கரசர் பாடி இருக்கிறார். நேரம் இருப்பின் அதையும் படித்துப் பாருங்கள். 


Monday, May 26, 2014

நள வெண்பா - கன்னி மனக்கோயில் கைக்கொள்ள

நள வெண்பா - கன்னி மனக்கோயில் கைக்கொள்ள


அன்னப் பறவை வந்து நள மகாராஜாவிடம் தமயந்தியின் அழகைப் பற்றி சொல்லத் தொடங்கியது. அந்த சொல் அவனின் காதில் சென்று விழுவதற்குள் தமயந்தி அவன் மனம் என்ற கோவிலில் சென்று அதை கைப் பற்றிக் கொண்டாள் . அந்த நேரத்தில், நளன் "அவள் யாருடைய பெண் " என்று அன்னத்திடம் கேட்டான்.  அதே சமயம் மன்மதன் தன் கரும்பு வில்லை வளைத்து நளன் மேல் மலர் அம்புகளைத் செலுத்தத் தொடங்கினான். நளனும் அதனால் உடலும் உள்ளமும் பதைத்தான்.

பாடல்

அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்ப
பார்மடந்தை கோமான் பதைத்து.

பொருள்

அன்னம் = அன்னப் பறவை

மொழிந்த = சொன்ன

மொழிபுகா முன்புக்குக் = சொல் அவன் காதில் நுழைவதற்கு முன்

கன்னி = கன்னியாகிய தமயந்தி

மனக்கோயில் = நளனின்  மனமாகிய கோவிலை

கைக்கொள்ளச் = கைப்பற்றிக் கொள்ள

சொன்னமயில் = "நீ சொன்ன அந்த மயில்"

ஆர்மடந்தை = யார் பெற்ற பெண்

என்றான் = என்று நளன்  கேட்டான்

அனங்கன் = மன்மதன்

சிலைவளைப்ப = வில்லை வளைக்க (சிலை = வில்)

பார்மடந்தை = பூலோகத்தின்

கோமான் = அரசன்

பதைத்து = உடல் பதைத்துக் கேட்டான்

இவளுக்க சும்மா இருக்கிறது இல்ல. மனசுக்குள்ள ஏறி உக்காந்துகிட்டு படுத்தறது. பதறாம என்ன செய்யும் ?


கம்ப இராமாயணம் - சூர்பனகை பற்றி கும்பகர்ணன்

கம்ப இராமாயணம் - சூர்பனகை பற்றி கும்பகர்ணன் 


கும்பகர்ணனும் இலக்குவனும் நேருக்கு நேர் போருக்கு நிற்கிறார்கள். அப்போது கும்ப கர்ணன் சொல்வான்.

"இலக்குவனா, நீங்கள் நான்கு பேர்  அண்ணன் தம்பிகள் - இராம, இலக்குவ, பரத சத்ருகனன் என்று. உங்களோடு உடன் பிறந்த பெண் பிள்ளைகள் யாரும் இல்லை. உங்களுக்கு அக்கா தங்கைகள் யாரும் இல்லை. இருந்திருந்தால் சகோதரி பாசம் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

எங்க வீட்டுல அப்படி இல்லடா....நாங்கள் செய்த தவத்தால் ஒரு கொடி போன்ற பெண் எங்களோடு பிறந்தாள். அவள் ஒரு குற்றமும் செய்யாதவள். அவள் மூக்கை நீ வெட்டி விட்டாய். அவள் கூந்தலை பற்றி இழுத்த உன் கையை தரையில் விழச் செய்வேன், முடிந்தால் காத்துக் கொள் "

என்றான்.

சூர்பனகையை "கொடி " என்கிறான் கும்ப கர்ணன். அவள் மேல் அவ்வளவு பாசம், வாஞ்சை அவனுக்கு.

உனக்கு கூடப் பிறந்த அக்கா தங்கி இல்லாததால் சகோதரி பாசம் உனக்குத் தெரியவில்லை என்றான். தனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்பதில் அவனுக்கு பெரிய பெருமிதம். தவம் செய்து பெற்ற தங்கை என்கிறான்.

அவள் ஒரு பாவமும் அறியாதவள். அவளைப் போய் முடியைப் பிடித்து இழுத்து மூக்கை வெட்டி விட்டாயே என்று இலக்குவன் மேல் கும்ப கர்ணன் கோபம் கொண்டு உன் கையை வெட்டுகிறேன் பார் என்று கூறுகிறான்.

பாடல்

‘பெய் தவத்தின் ஓர் பெண் கொடி,
    எம்முடன் பிறந்தாள்,
செய்த குற்றம் ஒன்று இல்லவள்,
    நாசி வெஞ்சினத்தால்
கொய்த கொற்றவ! மற்று அவள்
    கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடைக் கிடத்துவென்;
    காக்குதி ‘என்றான்.


பொருள்

‘பெய் தவத்தின் = செய்த தவத்தால், எங்களிடையே இருந்த தவத்தால்

ஓர் பெண் கொடி = ஒரே ஒரு பெண் கொடி. இரண்டு மூன்று இல்லை, ஆசைக்கு ஒரே ஒரு தங்கச்சி

எம்முடன் பிறந்தாள் = எங்களோடு பிறந்தாள்

செய்த குற்றம் ஒன்று இல்லவள் = ஒரு குற்றமும் செய்யாதவள்

நாசி = அவளின் மூக்கை

வெஞ்சினத்தால் = கொடிய சினத்தால்

கொய்த கொற்றவ! = வெட்டிய மன்னவனே

மற்று = மேலும்

அவள் = அவளுடைய

கூந்தல் தொட்டு = கூந்தலை தொட்டு

ஈர்த்த = இழுத்த

கை = உன் கைகளை

தலத்திடைக் = நிலத்தில்

கிடத்துவென் = கிடைக்கும் படி செய்வேன்

காக்குதி ‘என்றான். = முடிந்தால் காத்துக் கொள்  என்றான்

சூற்பனகையின் மூக்கு, காது, முலைகளை வெட்டியது ஒரு புறம் இருக்கட்டும்.  அவள் கூந்தலைப் பற்றி இழுத்ததைக் கூட கும்ப கர்ணனால் பொறுத்துக்  கொள்ள முடியவில்லை. அவள் கூந்தலை தொட்டு இழுத்த  உன் கைகளை  வெட்டுவேன் என்கிறான். 

தங்கையின் மற்ற அங்கங்களை வெட்டியதை வாயால் சொல்லக் கூட அவனால்  முடியவில்லை. 

Saturday, May 24, 2014

திருவிளையாடற் புராணம் - பெண்ணும் மரமும்

திருவிளையாடற் புராணம் - பெண்ணும் மரமும் 


பெண்கள் ஊடல் கொள்ளும் போது தங்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வது இல்லை. அவற்றைத் துறந்து வெறுமையாக இருப்பார்கள். வெயில் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருப்பதைப் போல.

காதல் கொண்டு கூடும்போது உள்ளம் மகிழ்ந்து உடல் பூரித்து குழைந்து இருப்பவர்களைப் போல, மழைக் காலத்தில் மரங்கள் தளிர் விட்டு மப்பும் மந்தாரமுமாக இருக்கும்.

அன்புக் காதலர்கள் அவர்களை விட்டு நீங்கினால் கண்ணில் நீர் வர உடல் எல்லாம் ஒரு வித பசலை படரும் அது மரங்களில் பசலை படர்வது போலவும்

ஒரு பெண் தன் காமத்தை, காதலை வாய் விட்டுச் சொன்னால் அது ஊர் பூராவும் வதந்தியாகப் பரவி விடும் அது மரங்களில் மலர்கள் கொத்து கொத்தாக பூத்து கிடப்பதைப் போல இருக்கிறது என்கிறார் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில்.....

பாடல்

ஊடினார் போல வெம்பி யிலையுதிர்ந் துயிரன் னாரைக்
கூடினார் போல வெங்குங் குழைவரத் தழைத்து நீங்கி
வாடினார் போலக் கண்ணீர் வாரமெய் பசந்து மையல்
நீடினா ரலர்போற் பூத்து நெருங்கின மரங்க ளெல்லாம்.

சீர் பிரித்த பின்

ஊடினார் போல வெம்பி இலை உதிர்த்து உயிர் அன்பினாரை 
கூடினார் போல எங்கும் குழை வரத் தழைத்து நீங்கி
வாடினார் போலக் கண்ணீர் வார மெய் பசந்து மையல்
நீடினார் அலர் போல் பூத்து நெருங்கின மரங்க ளெல்லாம்.


பொருள் 

ஊடினார் போல = ஊடல் கொண்ட பெண்களைப் போல

வெம்பி = வெம்பி

இலை உதிர்த்து = இலை உதிர்த்து

உயிர் அன்பினாரை = உயிருக்கு உயிரான அன்பினாரை (காதலரை, கணவரை)

கூடினார் போல = கூடியவர்களைப் போல

எங்கும் = எல்லா இடங்களிலும்

குழை = இலைகள்

வரத் தழைத்து = வரும் போது எப்படி தழைத்து நிற்குமோ அது போல

 நீங்கி = கணவரை, காதலரை நீங்கிய பெண்கள்

வாடினார் போலக் =எப்படி வாடிப் போவார்களோ  அதி போல

கண்ணீர் வார = மரக் கண்களில் நீர் கசியும்

மெய் பசந்து = உடல் பசுமை நிறம் அடைந்து

மையல் = காதல், காமம்

நீடினார் = சொன்ன பெண்களைப் பற்றி

அலர் போல் = வதந்தி போல

பூத்து  = மலர்கள் கொத்து கொத்தாக பூத்து

நெருங்கின மரங்க ளெல்லாம் மரங்கள் எல்லாம் நெருங்கி இருந்தன



இராமாயணம் - சூர்பனகையின் அண்ணன் பாசம்

இராமாயணம் - சூர்பனகையின் அண்ணன் பாசம் 


இலக்குவன் காதையும், மூக்கையும், முலையையும் சிதைத்த பிறகு சூர்பனகை அழுது அரற்றுகிறாள்.

அம்மாவை கூப்பிடவேண்டும் என்று தோன்றவில்லை.

அப்பாவை கூப்பிடவேண்டும் என்று தோன்றவில்லை அவளுக்கு.

கணவன் இல்லை. பிள்ளைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அண்ணனை கூப்பிடுகிறாள். அண்ணன் மேல் அவ்வளவு பாசம்.

அண்ணா, என் நிலையைப் பார் என்று வலியின், அவமானத்தின் உச்சியில் இருந்து அரற்றுகிறாள்.

"இந்த உலகில் நிலைத்த புகழோடு நீ இருக்க, தவம் செய்யும் இவர்கள் (இராம இலக்குவனர்கள்) வில்லோடு இப்படி அலைவது ஒரு சிறுமை அல்லவா ? தேவர்கள் கூட உன்னை நிமிர்ந்து பார்க்க அச்சப்படுவார்களே ...கையில் தழலை எடுத்த சிவனின் மலையை கையில் எடுத்த மலை போன்ற உறுதியான உருவம் கொண்டவனே ...இந்த கொடுமையை நீ காண வாராயோ "

பாடல்

'நிலை எடுத்து, நெடு நிலத்து 
     நீ இருக்க, தாபதர்கள் 
சிலை எடுத்துத் திரியும்இது சிறிது 
     அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! 
     தழல் எடுத்தான் 
மலை எடுத்த தனி மலையே! 
     இவை காண வாராயோ?


பொருள்

'நிலை எடுத்து = நிலையான புகழைக் கொண்டு

நெடு நிலத்து = நீண்ட இந்த நிலத்தில்

நீ இருக்க = நீ இருக்க

தாபதர்கள் = தவம் செய்பவர்கள் (இராம இலக்குவனர்கள்)

சிலை எடுத்துத் திரியும் இது = வில்லை கையில் கொண்டு திரியும் இது

 சிறிது அன்றோ? = சிறுமை அன்றோ

தேவர் = தேவர்களும்

எதிர் = உன் எதிரில்

தலையெடுத்து = நிமிர்ந்து

விழியாமைச் சமைப்பதே! = பார்க்கமால் சிலை போல் நிற்பார்களே (அல்லது அஞ்சி நிற்பார்களே )

தழல் எடுத்தான் = கையில் அனலை எடுத்த  (சிவனின் )

மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த

தனி மலையே! = சிறப்பான மலை போன்றவனே

இவை காண வாராயோ? = இவற்றை காண வாராயோ

பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

பாடலின் அழகை இரசிப்பதா ? அல்லது சூர்பனகையின் அவலத்தை நினைத்து வருந்துவதா என்று தெரியவில்லை.



Friday, May 23, 2014

மகர நெடும்குழைக் காதர் பாமாலை

மகர நெடும்குழைக் காதர் பாமாலை



திருப்பேரை என்ற திருத்தலத்தில் உள்ள பெருமாளின் பெயர் மகரப் பூஷணப் பெருமாள். இதைத் தமிழ் படுத்தி மகர நெடும்குழைக் காதர் என்று அழைக்கிறார்கள்.

அவர் மேல் பாடப்பட்ட ஒரு பாமாலையில் இருந்து ஒரு பாடல்

எங்கள் துயர் தீர்த்த தயா நிதியே, நீ அன்று எவ்வளவு பேருக்கு கூற்றுவனாய் இருந்தாய் ...புய வலி கொண்ட வாலிக்கும், உன் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத  கடலுக்கும்,மாய மானாக வந்த மாரீசனுக்கும், மயன் மகள் மண்டோதரியின் தாலிக்கும் எமனாய் நின்றவன் நீ...எங்கள் துன்பம் அவ்வளவு பெரிது ஒன்றும் இல்லை...நீ நினைத்தால் இதை ஒரு நொடியில் போக்கி விடலாம் .....

பாடல்



வேலிக்குள் நின்று விளைபயிர் போல விரும்பும் எங்கள் 
பால் இக்கொடுந் துயர் தீர்த்தளித்தாய், பகை வென்ற புய 
வாலிக்கும் வேலைக்கும் மானுக்கும் மாய மயன் மகள் தன் 
தாலிக்கும் கூற்றுவனானாய்! தென் பேரைத் தயா நிதியே!’ 


பொருள்

வேலிக்குள் நின்று = வேலிக்குள் நின்று

விளைபயிர் போல = விளையும் பயிர் போல எந்த ஆபத்தும் இல்லாமல்

விரும்பும் எங்கள் பால் = உன்னை விரும்பும் எங்கள் மேல் 

இக்கொடுந் துயர் தீர்த்தளித்தாய் = வந்த இந்த கொடுமையான துன்பத்தை தீர்த்தாய்

பகை வென்ற = பகைவர்களை வென்ற

புய வாலிக்கும் = கரங்களைக் கொண்ட வாலிக்கும்

வேலைக்கும் = உன் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்காத கடலுக்கும்

மானுக்கும் = மாய மானுக்கும் 

மாய =  இறக்கும்  படி

மயன் மகள் = மாயன் மகள் (மண்டோதரி)

தன் = அவளின்

தாலிக்கும் = தாலிக்கும்

கூற்றுவனானாய்! = எமனானாய்

தென் பேரைத் = தென் பேரை என்ற திருத் தலத்தில் எழுந்து அருளியுள்ள

தயா நிதியே!’ = தயா நிதியே 

பட்டினத்தார் பாடல் - நடுத் தலையில் குட்டு

 பட்டினத்தார் பாடல் - நடுத் தலையில் குட்டு 


பொது மகளிர்...பொருளுக்காக ஆண்களோடு அன்பாக இருப்பது போல பேசுபவர்கள்.

பொது மகள் எப்படி எல்லாம் இருப்பாள் என்று பட்டினத்தார் பட்டியல் இடுகிறார்....

நாவார இதமாகப்  பேசுவார்கள்.உங்களைப் பிரிந்தால் உயிர் வாழமாட்டேன் என்று சத்தியம் செய்வார்கள். எப்போதும் உடன் இருந்து உண்பார்கள். நம் கையில் உள்ள பணம் குறைந்தால், "போய் வாரும்" என்று நடுத் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பி  விடுவார்கள். அப்படிப் பட்ட பெண்களுக்கு தான் பெற்ற செல்வத்தையெல்லாம் கொடுத்து பின் கஷ்டப் படுவதோ தலைவிதி, இறைவா கச்சி ஏகம்பனே.....

பாடல்

நாவார வேண்டும் இதஞ் சொல்லுவாருனை நான்பிரிந்தால்
சாவேன் என்றேயிருந் தொக்கவுண்பார்கள் கைதான்வறண்டால்
போய்வாரும் என்றுநடுத் தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார் தலைவிதியோ இறைவாகச்சி ஏகம்பனே.

பொருள்

நாவார = நாக்குக்கு  இனிமையாக.உள்ளத்தில் இருந்து வரவில்லை. சொல், நாக்கில் இருந்து வருகிறது.

வேண்டும் = தேவையான

இதஞ் = இதமான சொற்களை

சொல்லுவாருனை = சொல்லுவார். உன்னை

நான்பிரிந்தால் = நான் பிரிந்தால்

சாவேன் =  சாவேன்,உயிர் வாழ மாட்டேன்

என்றேயிருந் தொக்கவுண்பார்கள் = என்றே இருந்து ஒக்க (உடன்) உண்பார்கள்

கைதான்வறண்டால் = கையில் உள்ள பொருள் குறைந்தால்

போய்வாரும்= சென்று வாரும்

என்று = என்று

நடுத் தலைக்கே = நடு  மண்டையில்

குட்டும் = குட்டு வைக்கும்

பூவையருக்கு = பெண்களுக்கு

ஈவார் = ஈகை புரிவார். பொருளை தானமாகத் தருவார்

தலைவிதியோ = அது அவர்களின் தலைவிதியோ

இறைவா = இறைவா

கச்சி = காஞ்சி

ஏகம்பனே = எகாம்பரேஸ்வரனே

விலை மகளிர் எப்படியும்  போகட்டும்.

ஒரு ஆண், மனைவியைத் தவிர்த்து இன்னொரு பெண் பின் ஏன் போகிறான் ?

- இதமான சொல்
- கூட அமர்ந்து உண்பது
- நீ இன்றி நான் இல்லை என்று அன்பொழுகப் பேசுவது

இவை அவனுக்கு வேண்டி இருக்கிறது. அன்பான பேச்சும், அவளின் அன்யோன்யமும் வேண்டி இருக்கிறது.

அது எங்கு கிடைக்கிறதோ அங்கு போகிறான் - தவறு என்று தெரிந்தும்.

பாடலைப் படிக்கும் போது பாடமும் படிப்போம் 

இராமாயணம் - தொடரும் சூர்பனகையின் வலி

இராமாயணம் - தொடரும் சூர்பனகையின் வலி 


இலக்குவன், சூர்பனகையின் மூக்கையும், காதையும், முலையையும் வெட்டிய பின், சூர்பனகை வலியால் துடிக்கிறாள்.

மூக்கில் இருந்து வழியும் இரத்தத்தை துணியால் ஒத்தி எடுக்கிறாள். கொல்லன் உலையில் இருந்து வரும் நெருப்புப் புகை போல மூச்சு விடுகிறாள். கையை தரையில் ஓங்கி அடிக்கிறாள். வெட்டப்பட்ட முலைகளை கையால் பிடித்து பார்ப்பாள். உடல் எல்லாம் வியர்ப்பாள் . அங்கும் இங்கும் ஓடுவாள். இரத்தம் ஆறாகப் பெருக சோர்ந்து விழுவாள்.

பாடல்

ஒற்றும் மூக்கினை; உலை உறு 
     தீ என உயிர்க்கும்; 
எற்றும் கையினை, நிலத்தினில்; 
     இணைத் தடங் கொங்கை 
பற்றும்; பார்க்கும்; மெய் வெயர்க்கும்; 
     தன் பரு வலிக்காலால் 
சுற்றும்; ஓடும்; போய், சோரி 
     நீர் சொரிதரச் சோரும்.


பொருள்

ஒற்றும் மூக்கினை = மூக்கினை ஆடையால் ஒத்தி எடுப்பாள்

உலை உறு = உலையில் இருந்து வரும்

தீ என = தீப் போல

உயிர்க்கும் = மூச்சு விடுவாள்

எற்றும் கையினை  நிலத்தினில் = கையை நிலத்தில் அடிப்பாள்

இணைத் = இணையான

தடங் கொங்கை = பெரிய கொங்கைகளை

பற்றும் = கைகளால் பிடித்துப்

பார்க்கும் = பார்ப்பாள்

மெய் வெயர்க்கும் = உடல் வியர்ப்பாள்

தன் பரு வலிக்காலால் = தன்னுடைய பெருத்த வலிமையான காலால்

சுற்றும்; ஓடும்; = சுற்றி சுற்றி ஓடுவாள்

போய் = அங்கும் இங்கும் போய்

சோரி = இரத்தம்

நீர் = ஆறாகப்

சொரிதரச் சோரும் = பெருக சோர்ந்து விழுவாள்


Thursday, May 22, 2014

மூதுரை - காக்கை உகக்கும் பிணம்

மூதுரை - காக்கை உகக்கும் பிணம் 


நல்லதை படிக்க வேண்டும், நல்லவரக்ளோடு சேர வேண்டும் என்று சிலருக்கு விருப்பம் இருக்கும். வேறு சிலருக்கோ, ஊர் சுற்ற வேண்டும், தண்ணி அடிக்க வேண்டும், அப்படிப் பட்ட நண்பர்களை கண்டால்  பிடிக்கும்.

குளத்தில் தாமரை மலர் இருக்கும். அன்னப் பறவை  அந்த தாமரை மலரோடு ஒட்டி உறவாடும். காகம், சுடு காட்டில் உள்ள பிணங்களோடு ஒட்டி உறவாடும்.

யார் யாருக்கு எது பிடிக்கிறதோ அதனோடு சேர்ந்து இருப்பார்கள்.

பாடல்

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா [போல்
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
    காக்கை உகக்கும் பிணம்.

பொருள்

நற்றா மரைக்கயத்தில்= கயம் என்றால் குளம். நல்ல தாமரைக் குளத்தில்

 நல்லன்னஞ்சேர்ந்தாற்போல் = நல்ல அன்னம் சேர்ந்ததைப் போல

கற்றாரைக் = கல்வி அறிவு  உடையவர்களை

கற்றாரே = படித்தவர்களே

காமுறுவர் = அன்பு செய்வர். அவர்களோடு இருக்க ஆசைப் படுவார்கள்

கற்பிலா = கற்று அறிவு இல்லாத

மூர்க்கரை = முரடர்களை

மூர்க்கர் முகப்பர் = முரடர்களே விரும்புவார்கள்

முதுகாட்டிற் = பழைய காட்டில்

காக்கை = காக்கை

உகக்கும் = விரும்பும்

பிணம் = பிணம்



இராமாயணம் - பெண்ணாய் பிறந்த பிழை

இராமாயணம் - பெண்ணாய் பிறந்த பிழை 


மூக்கும்,  காதும், முலையும் அறுபட்ட பின்னால் சூர்பனகை எவ்வளவு வலியால் துடித்தாள் என்பதை கம்பன்  காட்டுகிறான்.படிக்கும் நமக்கு வலிக்கிறது.

வலி தாளாமல் குதிக்கிறாள். அது வானம் வரை  போகிறது.பின் கீழே விழுகிறாள். தரையில் கிடந்து நெளிகிறாள். கைகளை பிசைந்து ஒன்றும் தெரியாமல் திகைக்கிறாள். உயிர் சோர்வடைகிறது. பின் அங்கும் இங்கும் நகர்வாள் .நான் பெண்ணாய் பிறந்ததால் வந்த பிழை இது என்று நொந்து கொள்வாள். இப்படி துயரப் படும் அவள் எந்த குலத்தில் பிறந்தவள் தெரியுமா ? துயரம் கிட்ட வரவே பயப்படும் சிறந்த குலத்தில் பிறந்தவள். அவளுக்கு இப்படி ஒரு  துன்பம்.ஏற்கனவே துன்பம் நிறைந்த வீட்டில் பிறந்து இருந்தால், எவ்வளவோ துன்பங்களோடு இதுவும் ஒன்று என்று இருந்திருப்பாள். ஆனால், இவளோ துன்பம் என்பதே என்ன என்று அறியாத குலத்தில் பிறந்தவள். முதன் முதலாக துன்பம்  வருகிறது.

பாடல்

உயரும் விண்ணிடை; மண்ணிடை
    விழும்; கிடந்து உழைக்கும்;
அயரும்; கை குலைத்து அலமரும்;
    ஆர் உயிர் சோரும்;
பெயரும்; ‘பெண் பிறந்தேன் பட்ட
    பிழை ‘எனப் பிதற்றும்;
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத்
    தொல் குடிப் பிறந்தாள்.


பொருள்

உயரும் விண்ணிடை = வான் வரை எகிறி குதிப்பாள்

மண்ணிடை விழும் = மண்ணில் விழுவாள்

கிடந்து உழைக்கும் = கிடந்து வலியில் நெளிவாள்

அயரும் = அயர்ச்சி கொள்வாள்

கை குலைத்து அலமரும் =  கை தன் கட்டுப்பாட்டை இழந்து திகைப்பாள்

ஆர் உயிர் சோரும் = அருமையான உயிர் சோர்வடையும்

பெயரும் = நகர்வாள்

‘பெண் பிறந்தேன் பட்ட பிழை ‘எனப் பிதற்றும்; = பெண்ணாய் பிறந்ததால் வந்த பிழை என்று பிதற்றுவாள்

துயரும் = துயரமும்

அஞ்சி = அச்சப்பட்டு

முன் = முன்பிருந்தே

தொடர்ந்திலாத் = தொடர்ந்து வந்திலாத

தொல் குடிப் பிறந்தாள் = பழமையான குடியில் பிறந்தவள்

பிரமன் வழி வந்தவள் சூர்பனகை. தொல் குடி. அவள் குடியை தொட துன்பமும் அஞ்சும்.

எவ்வளவு  வலித்திருக்கும்.

பெண் எதையும் சகிப்பாள், ஆனால் அவளின் அழகை யாராவது குறைத்தால் அவளால் தாங்க  முடியாது.

வலி பொறுப்பாள்.

அவமானம் பொறுப்பாள்.

ஆனால், தன் அழகை குறைக்கும் யாரையும் அவள் பொறுக்க மாட்டாள்.

மூக்கும், காதும், முலையும் அறுபட்ட வலி  ஒருபுறம்.அந்த வலி கொஞ்ச நாளில்  போய்  விடும். ஆனால் மூக்கும், காதும், முலையும் இல்லாமல் அவள் எப்படி வெளியே போவாள் ? அந்த அவமானம் எவ்வளவு பெரிய வலி.



நள வெண்பா - புலம்பும் சிலம்பும்

நள வெண்பா - புலம்பும் சிலம்பும்  


தமயந்தி நடந்து வருகிறாள். அவள் காலில் கொலுசு ஒலிக்கிறது. அந்த கொலுசு என்ன சொல்லுகிறது தெரியுமா ?

இந்த தமயந்தியின் தனங்களை இவளின் சிறிய இடை தாங்காது என்று அவளின் கொலுசுகள் அவளின் காலைப் பிடித்துக் கொண்டு புலம்பியதாம்.

பாடல்

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.

பொருள்

மோட்டிளங் கொங்கை = உயர்ந்த இளமையான கொங்கைகள்

முடியச் = வாழ்நாள் முடிய , எப்போதும். இப்போது இளமையாக  இருக்கிறது.இவை இன்னும் வளர்ந்து முடிய நாள்  ஆகும். இப்பவே இதன் பாரம் தாங்க முடியவில்லை. இன்னும் வளர்ந்தால், இந்த இடை என்ன ஆகுமோ என்று கொலுசுக்குத் தவிப்பு.


சுமந்தேற = சுமக்க

மாட்டா திடையென்று = மாட்டாது இடை என்று

வாய்விட்டு = வாய் திறந்து

நாட்டேன் = நாள் + தேன்

அலம்புவார் = அலம்பும் பூக்களை சூடிய. பதமயந்தி சூடிய பூக்களில் தேன் ததும்புகிறது.

கோதை = தமயந்தி

அடியிணையில் = இரண்டு பாதங்களிலும்

வீழ்ந்து = விழுந்து

புலம்புமாம் = புலம்பின

நூபுரங்கள் = கொலுசுகள்

பூண்டு = அணிந்து

காலில் அணிந்துள்ள கொலுசுகள், அவள் காலைப் பற்றிக் கொண்டு புலம்பின.

ஹ்ம் .....

Wednesday, May 21, 2014

நள வெண்பா - பெண்மை அரசு

நள வெண்பா - பெண்மை அரசு 



எல்லா பெண்களும் அரசிகள்தான்.

அவர்கள் எந்த நாட்டுக்கு அரசிகள் ? அவர்களின் படைகள் என்ன, அவர்களின் வெண் கொற்ற குடை எது ?

நள வெண்பா பாடிய புகழேந்திப் புலவர் கூறுகிறார்....

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு வித குணங்களே நான்கு விதமான படைகள் (இரதப் படை, யானைப் படை, குதிரைப்படை , காலாட்படை) , ஐந்து புலன்களும் அவர்களை வழி நடத்தும் அமைச்சர்களாக, இரண்டு கண்களும் வில்  படையும்,வேல் படியுமாக, அவர்களின் அழகிய முகமே வெண்கொற்றக் குடியாக பெண்மை அரசு செய்கிறது....


பாடல்

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.

பொருள்

நாற்குணமும் = நான்கு குணங்களும்

நாற்படையா = நான்கு படைகளாக

ஐம்புலனும் = ஐந்து புலன்களும்

நல்லமைச்சா = நல்ல அமைச்சர்களாக

ஆர்க்கும் சிலம்பே = ஒலி எழுப்பும் சிலம்பே

அணிமுரசா = அழகிய முரசாக

வேற்படையும் = வேல் படையும்

வாளுமே = வாள்  படையும்

கண்ணா = கண்களாக

வதன = முகம்

மதிக் =  நிலவு

குடைக்கீழ் = குடையின் கீழ்

ஆளுமே = ஆட்சி செய்யுமே

பெண்மை அரசு = பெண் என்ற அரசு

அவர் சொன்னது தமயந்திக்குத் தான் என்றாலும், எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும்.

படுத்துராளுக !



Tuesday, May 20, 2014

இராமாயணம் - சூர்பனகையின் வலி

இராமாயணம் - சூர்பனகையின் வலி 


மூக்கையும், காதையும், முலையையும் வாளால் அறுத்து எறிந்தால் வலிக்குமா இல்லையா ? அரக்கியாக இருந்தாலும், அவளும் பெண் தானே.

பெண்ணின் மார்பகம் என்பது அவளின் குழந்தைக்கு பாலூட்ட இயற்கை படைத்தது. அதை வாளால் அறுப்பது என்றால் .....

எவ்வளவு வலித்திருக்கும் ?

வாய் திறந்து அழுகிறாள்...அவளின் வலியை, அவமானத்தை, துன்பத்தை கம்பன் பாட்டில் வடிக்கிறான்....

அந்த நேரத்தில் அவள் வாய் திறந்து அலறிய அலறல் அனைத்து திசைகளிலும் சென்றது. அது மட்டும் அல்ல, வானுலகையும் எட்டியது. தேவர்களின் காதை எட்டியது...அவர்கள் காதில் உள்ளே நுழைந்தது...அதற்கு மேல் என்ன சொல்ல ? அவளின் மூக்கில் இருந்து பெருகிய இரத்தம் ஓடி உலகம் அனைத்தையும் நனைத்தது.


பாடல்

அக் கணத்து அவள் வாய் திறந்து
    அரற்றிய அமலை
திக்கு அனைத்தினும் சென்றது;
    தேவர்தம் செவியும்
புக்கது; உற்றது புகல்வது என்?
    மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று,
    உருகியது உலகம்.

பொருள் 

அக் கணத்து = அந்த நேரத்தில். இலக்குவன் அவளின் (சூர்பனகையின் ) மூக்கையும், காதையும், முலையையும் அரிந்த அந்த நேரத்தில்

அவள் வாய் திறந்து = அவள் வாய் திறந்து

அரற்றிய அமலை = கதறிய ஓசை

திக்கு அனைத்தினும் சென்றது = அனைத்து திசைகளும் சென்றது

தேவர்தம் செவியும் புக்கது;= தேவர்கள் செவியுள்ளும் சென்றது

உற்றது =  நடந்தது

புகல்வது என்? = என்ன சொல்லுவது

மூக்கு எனும்  = மூக்கு என்ற

புழையூடு = துளையின் வழியே

உக்க சோரியின் = வழிந்த இரத்தத்தினால்

ஈரம் உற்று = ஈரம் உற்று

உருகியது உலகம்.= உலகம் உருகியது.  உலகம் அவளுக்காக உருகியது என்று கொள்ளலாம். அல்லது, நனைந்தது என்றும் கொள்ளலாம்.

எவ்வளவு வலித்திருக்கும் ?

பாவம். 

கம்ப இராமாயணம் - சூர்பனகை அங்கம் குறைபட்டது - 2

கம்ப இராமாயணம் - சூர்பனகை அங்கம் குறைபட்டது - 2


சூர்பனகை சீதையைப் பற்ற வந்தாள். அதைக் கண்டு  கோபம் கொண்ட இலக்குவன், அவளின் கூந்தலைப் பற்றி இழுத்து , அவளை உதைத்து தன் உடை வாளை உருவினான்.

சூர்பனகை பார்த்தாள் , இப்படி தன்னோடு சண்டையிடும் இவனையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்று நினைத்தாள் .

அப்படி நினைத்தவளை, "தீமை செய்யாதே " என்று கூறி, அவளுடைய மூக்கும், காதும், முலைக் கண்களையும் ஒவ்வொன்றாக வெட்டி எறிந்தான். அவற்றைப் போக்கிய பின்னரே அவன் சினம் போயிற்று போயிற்று என்றான் கம்பன்.

இது அளவுக்கு அதிகமான தண்டனை என்றே படுகிறது.

பாடல்

ஊக்கித் தாங்கி, ‘விண் படர்வென்‘ என்று உருத்து எழுவாளை
நூக்கி, நொய்தினின், ‘வெய்து  இழையேல் ‘என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும் முறையால்
போக்கிப் போக்கிய சினத்தொடும், புரி குழல் விட்டான்.


பொருள்

ஊக்கித் = முயன்று

தாங்கி = தூக்கிக் கொண்டு

‘விண் படர்வென்‘ = வானில் செல்வேன்

என்று = என்று

உருத்து = கோபம் கொண்டு

எழுவாளை = எழுகின்றவளை

நூக்கி = கீழே தள்ளி

நொய்தினின் = எளிதாக

‘வெய்து  இழையேல் ‘= கொடுமை செய்யாதே

என நுவலா = என்று கூறி

மூக்கும் = மூக்கையும்

காதும் = காதையும்

வெம் = வெம்மையான

முரண் முலைக் கண்களும் = முரடான வலிய முலைக் கண்களையும்

முறையால் = ஒவ்வொன்றாக

போக்கிப் = வெட்டி எரிந்து

போக்கிய சினத்தொடும் = சினம் அடங்கி (காது மூக்கோடு சினமும் போனது )

புரி குழல் விட்டான் = அவள் முடியை விட்டான்

இந்த இடத்தில் வால்மீகி முலையை வெட்டினான் என்று கூறவில்லை என்று சில உரை ஆசிரியர்கள்  கூறுகிறார்கள். பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் கம்பன்  ஏன் அப்படி செய்தான் என்று  தெரியவில்லை.

என்ன  இருந்தாலும்,இது மிக மிக அதீதமான ஒரு தண்டனையாகவே தெரிகிறது.

நாம் படிக்கும் பாடங்கள்

- பெண்ணின் கோபம், வஞ்சம் மிக மிக ஆழமானது. எந்த அளவு வேண்டுமானாலும் போகும்.   எச்சரிக்கையாக இருக்க  வேண்டும்.பெண் தானே என்று அலட்சியம்  கூடாது.

- கோபம் மிகுந்த துன்பத்தைச் செய்யும்.

- யாருக்கு யாரிடம் உறவோ நட்போ ? யாருக்குத் தெரியும் ? கோவித்து ஒன்று செய்து விட்டால் அல்லது சொல்லி விட்டால் அது எங்கு வந்து வெடிக்குமோ தெரியாது.

உணர்சிகளை கையாளத் தெரிய வேண்டும்.

சூர்பனகை சரியாக கையாளவில்லை. இலக்குவனும் அப்படியே. 

Monday, May 19, 2014

இராமாயணம் - சூர்பனகையை அங்கம் குறைப் படச் செய்தது

இராமாயணம் - சூர்பனகையை அங்கம் குறைப் படச் செய்தது 


சூர்பனகை இராமன் மேல் காதல் கொண்டாள் . இராமன் அதை மறுத்திருக்கலாம். அதை விடுத்து அவளோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறான். பின்   சீதை வருகிறாள். சூர்பனகை சீதையைப் பார்த்து அவள் அழகை வியக்கிறாள். சீதை இருக்கும் வரை இராமன் தன்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டான் என்று எண்ணி  சீதையை பிடித்துச் செல்ல சோலைக்கு வருகிறாள். 

 அவளை இலக்குவன் தண்டிக்கிறான்.

சூர்பனகையை மிரட்டி அனுப்பி  இருக்கலாம். அதை விடுத்து இலக்குவன் செய்தது மிக மிகையான  .செயல்.

என்ன செய்தான் தெரியுமா ?

சூர்பனகையின் முடியை கையில் இழுத்து சுருட்டி, அவளை காலால் எட்டி உதைத்து, தன் சுருள் வாளை உருவி .....

பாடல்  

  'நில் அடீஇ' என, கடுகினன், 
     பெண் என நினைத்தான்; 
வில் எடாது அவள் வயங்கு எரி 
     ஆம் என விரிந்த 
        சில் வல் ஓதியைச் செங் கையில் 
     திருகுறப் பற்றி, 
ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி 
     கிளர் சுற்று-வாள் உருவி,

பொருள் 

  'நில் அடீஇ' என, = நில் அடி என்று 

கடுகினன் = விரைந்து அவள் பால் சென்றான் 
 
பெண் என நினைத்தான் = அவள் பெண் என்று நினைத்து 
 
வில் எடாது = வில்லை எடுத்துக் கொள்ளாமல்  

அவள் = அவளுடைய 

வயங்கு எரி = கொளுந்து விட்டு எரிகின்ற 

ஆம்  = போல  

என விரிந்த = விரிந்த 
 
சில் வல் ஓதியைச் = சில வலிமையான முடியை 

செங் கையில் =  சிவந்த கையில் 

திருகுறப் பற்றி, = திருகிப் பிடித்து 
  
ஒல்லை ஈர்த்து = வேகமாக இழுத்து 

உதைத்து = உதைத்து 

ஒளி கிளர் = ஒளி விடும் 

சுற்று-வாள் உருவி = சுற்று வாளை உருவி 

என்ன செய்தான் என்று அடுத்த பாடலில் சொல்கிறான்.....

அண்ணியின் மேல் வைத்த பாசம் என்று சொல்வதா, கட்டுக்கு அடங்காத கோபம் என்று சொல்வதா ?

கண நேரக் கோபம் எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டது.

எத்தனை பேரைக் துன்பத்திற்கு உள்ளாக்கியது ?

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர்.



Saturday, May 17, 2014

மண்டோதரி புலம்பல் - இராவணனை கொன்றது ஒரு அம்பு அல்ல

மண்டோதரி புலம்பல் - இராவணனை கொன்றது ஒரு அம்பு அல்ல 


இறந்து கிடக்கும்  இராவணன்  மேல் விழுந்து புலம்புகிறாள் மண்டோதரி.

அவ்வளவு பெரிய இராவணனை ஒரு சாதாரண மனிதனின் அம்பா வீழ்த்த முடியும் ? அவளால் இராமனின் வீரத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் கணவனை யாராலும் வீழ்த்த முடியாது என்று அவள் நம்புகிறாள். பின் எப்படி இராம பானம் பட்டு இறந்து கிடக்கும் கணவனையும் பார்க்கிறாள்.

அவன் இறந்ததற்கு காரணம்  இராமனின் வீரம் மட்டும் அல்ல

- சீதையின் பேரழகும்
- சீதையின் கற்பும்
- இராவணன் அவள் மேல் கொண்ட காதலும்
- சூர்பனகை இழந்த மூக்கும்
- தசரதன் போ என்று இராமனிடம் சொன்ன சொல்லும்
- எல்லாம் சேர்த்து இந்திரனின் தவத்திற்கு துணை போய் இராவணனை கொன்று விட்டது என்கிறாள்



பாடல்

'காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்

ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,

வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!

பொருள்



'காந்தையருக்கு = பெண்களுக்கு

அணி அனைய = அணி போன்ற. பெண்களில் சிறந்த

சானகியார் பேர் அழகும் =   ஜானகியின் பேரழகும்

அவர்தம் கற்பும் = அவளின் கற்பும்

ஏந்து = உயர்ந்த, சிறந்த


புயத்து = கைகளை உடைய

இராவணனார் காதலும், = இராவணின் காதலும்

அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும் = சூர்பனகையின் இழந்த மூக்கும்

வேந்தர் பிரான் = வேந்தர்களின் தலைவன் ஆன

 தயரதனார் = தசரதனின்

பணியதனால் = கட்டளையால்

வெங் கானில் = வெம்மையான காட்டில்

விரதம் பூண்டு = விரதம் பூண்டு

போந்ததுவும் = இராமன் போனதுவும்

கடைமுறையே = கடைசியில்

புரந்தரனார் = இந்திரனின்

பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! = பெரிய தவமாய் போயிற்று அம்மா

இவ்வளவும் இல்லாமல் இராமன் சண்டை இட்டு இருந்தால் இராவணனை வென்று இருக்க முடியாது என்று சொல்லாமல் சொல்கிறாள்.

மேலும், கற்பின் வலிமை எதையும் சாதிக்கும்,

 பெண்ணின் கோபம் (சூர்பனகை) எதையும் சாதிக்கும்

என்று சொல்லாமல் சொல்கிறாள்.



Friday, May 16, 2014

மண்டோதரி புலம்பல் - ஓர்அம்போ, உயிர் பருகிற்று

மண்டோதரி புலம்பல் - ஓர்அம்போ, உயிர் பருகிற்று


'
போரில் இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து மண்டோதரி புலம்புகிறாள்.

இராவணன் எவ்வளவு பெரிய வீரன் ? அவன் மார்பை குகைகள் போல ஒரு மானுடனின் அம்பு திறக்க முடியுமா ? ஒரு மனிதனுக்கு அவ்வளவு வீரமா ? இருக்க முடியாது என்ற சந்தேகம் இழையோடுகிறது...


பாடல்


ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்

தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று

வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து, வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!

ஓர்அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ!


பொருள்


ஆரம் போர்  = ஆரம் போர்த்திய

திரு மார்பை = சிறந்த மார்பை

அகல் = அகன்ற

முழைகள் = குகைகள்

எனத் திறந்து = என்று திரிந்து

இவ் உலகுக்கு அப்பால் = இந்த உலகுக்கு அப்பால்

தூரம் போயின = வெகு தூரம் போயின

ஒருவன் = ஒருவனின்

சிலை = வில்லை

துரந்த சரங்களே = விட்டு விலகிய அம்புகள்

போரில் தோற்று = போரில் தோற்று

வீரம் போய் = வீரமெல்லாம் போய்

உரம் குறைந்து = வலிமை குறைந்து

வரம் குறைந்து =பெற்ற வரங்களின் வலிமை குறைந்து

வீழ்ந்தானே! = போரில் வீழ்ந்தானே

வேறே! = மேலும்

கெட்டேன்! = நான் கெட்டேன்

ஓர்அம்போ, = ஒரு அம்பா

உயிர் பருகிற்று = உயிரை பருகிற்று ?

இராவணனை? = இராவணனின்

மானுடவன் ஊற்றம் ஈதோ! = ஒரு மானிடனின் வலிமை இவ்வளவா ?

இராவணின் உயிரை எடுத்தது ஒரு அம்பு இல்லை, வேறு ஏதோ என்று அடுத்த  பாடலில் சொல்கிறாள்.....






Thursday, May 15, 2014

திருக்கோத்தும்பி - `வா' என்ற வான் கருணை

திருக்கோத்தும்பி - `வா' என்ற வான் கருணை


மகான்களின் வாழ்வில் ஏதோ நிகழ்கிறது. அவர்கள் வாழ்கை அதற்குப்பின் மாறிப் போகிறது.

இறைவன் நேரில் வந்து அருள் செய்ததாக கூறுகிறார்கள். உபதேசம் செய்ததாக, ஆட் கொண்டதாக, அருள் புரிந்ததாக, சொல்கிறார்கள். அருணகிரியார் ஒரு படி மேலே போய்  முருகன் ஜெப மாலை தந்ததாக கூறுகிறார். "செப மாலை தந்த சத் குரு நாதா, திருவாவினன் குடிப் பெருமாளே" என்பார்.

இங்கே மாணிக்க வாசகர்,

கண்ணப்பன் போல் என்னிடம் அன்பு இல்லை. இருந்தும், என்னையும் நீ ஆண்டு கொண்டு எனக்கு ஒரு நல் வழியை காட்டினாய். உன்னுடைய கருணை வான் போல பரந்து விரிந்து அளவற்றது. அப்படிப் பட்ட , திருநீறு அணிந்த சிவனை நீ பாடு, அரச வண்டே

என்கிறார்.

பாடல்

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!


பொருள் 


கண்ணப்பன் = கண்ணப்பன்

ஒப்பது  = ஒப்பிட்டு பார்க்கும் படி

ஓர் அன்பு = ஒரு உயர்வான அன்பு

இன்மை கண்டபின் = இல்லாமை கண்ட பின்பும்

என் அப்பன் = என் தந்தை போன்றவனும்

என் ஒப்பு இல் = என்னுடைய ஒப்பு இல்லாதவனும்

என்னையும் ஆட்கொண்டருளி = என்னையும் ஆட்கொண்டு அருளி

வண்ணப் பணித்து = எந்த வண்ணம் (வழி) நான் வாழ வேண்டும் என்று என்னைப் பணித்து

என்னை  = என்னை

`வா' என்ற வான் கருணைச் = வா என்று அழைத்து சேர்த்துக் கொண்ட வான் போன்ற கருணை

சுண்ணப் = பொடி  (திரு நீறு )

பொன் = பொன் போன்ற நிறம் உடைய

நீற்றற்கே = நிறம் கொண்டவற்கே

சென்று ஊதாய்; = சென்று பாடுவாய்

கோத்தும்பீ = அரச வண்டே 

Wednesday, May 14, 2014

திருக்கோத்தும்பி - ஆனந்தத் தேன் சொரியும்

திருக்கோத்தும்பி -  ஆனந்தத் தேன் சொரியும்


உலக இன்பங்கள் சிறிது நேரத்தில், சிறிது காலத்தில் தீர்ந்து போய் விடுபவை. நீண்ட காலம் இன்பம் தரும் ஒன்று இல்லை.

எவ்வளவு பெரிய இன்பம் என்றாலும் மனம் சிறிது காலத்தில் சலித்து விடும்.

இதற்கா இவ்வளவு அலைந்தோம் என்று ஒரு தன்னிரக்கம் வரும்.


சில இன்பங்கள் பார்க்கும் போது இன்பம் தரும். சில இன்பங்கள் தொடும்போது இன்பம் தரும். சில இன்பங்கள் சுவைக்கும் போது இன்பம் தரும்.

சரி பார்க்கும் போது இன்பம் தருகிறதே என்று பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா ?

சுவைக்கும் போது இன்பம் தருகிறதே என்று எப்போதும் சுவைத்துக் கொண்டே இருக்க முடியுமா ?

எல்லாம் கொஞ்ச நேரத்திற்குத் தான்.

எப்போதெல்லாம் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்,
எப்போதெல்லாம் நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்,
எப்போதேலாம் அதைப் பற்றி பேசுகிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்
அது மட்டும் அல்ல
அது மட்டும் அல்ல எல்லா நேரத்திலும், அனைத்து செயலிலும் இன்பத்தை மழையாக பொழிவது அவன் திருவடிகளே.

இந்த சின்ன பூவில் இருக்கும் தேனை விட்டு விட்டு அவன் திருவடியை நாடு என்று தும்பிக்குச்  சொல்கிறார். நமக்கும்தான்.

பாடல்

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

பொருள்

தினைத்தனை உள்ளது = தினை அளவு சிறிய

ஓர் பூவினில் = ஒரு பூவில்

தேன் உண்ணாதே, = தேனை உண்ணாமல்

நினைத்தொறும், = நினைக்கும் ஒவ்வொரு பொழுதிலும்

காண்தொறும் = எப்போதெல்லாம் காண்கிறோமோ அப்போதெல்லாம்

பேசும்தொறும் = எப்போதெல்லாம் பேசுகிறோமோ அப்போதெல்லாம்

எப்போதும் = எல்லா சமயத்திலும்

அனைத்து எலும்பு உள் நெக = உடம்பில் உள்ள அனைத்து ஏலேம்புகளும் உருக

ஆனந்தத் தேன் சொரியும் = ஆனதமயமான தேனை பொழியும்

குனிப்பு உடையானுக்கே = குனிப்பு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம். ஒன்று நடனம். இன்னொன்று வளைக்கை. வளையல் அணிந்த கை. வளையல் அணிந்த கை உடையவன் அவன் ஒருவன் தான். மாதொரு பங்கன். அர்த்த நாரி.

சென்று ஊதாய் = சென்று ரீங்காரமிடுவாய்

கோத்தும்பீ = அரச வண்டே

இது மேலோட்டமான பொருள்.

ஆழமான பொருள் என்ன ?

ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் குழந்தை உருவாகிறது.

ஒவ்வொரு குழந்தையும் தனக்குள் தாயின் (பெண்ணின்) அம்சத்தையும், தந்தையின்  (ஆணின்) அம்சத்தையும் கொண்டு பிறக்கிறது.

நாளடைவில், இந்த சமுதாயம் ஆண் குழந்தை என்றால் பெண் அம்சத்தையும், பெண் குழந்தை என்றால் ஆண் அம்சத்தையும் அழுத்தி நாளடைவில் மறக்கடித்து  விடுகிறது.

நாம் பெரியவர்கள் ஆகும் போது குறை பட்டவர்களாகவே இருக்கிறோம். ஏதோ  ஒன்று நம்மில் குறைகிறது.  அந்த குறையை வெளியில் இருந்து இட்டு நிரப்ப முயல்கிறோம். என்னதான் இட்டு நிரப்பினாலும் அது நிறைய மாட்டேன்  என்கிறது.

நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் இணைய வேண்டும்.

ஆண் என்றால் அழுத்தி வைக்கப்பட்ட பெண் உணர்வு வெளி வர வேண்டும். ஒன்றாகக் கலக்க வேண்டும்.

அதே போல் பெண் என்றால் அவளுக்குள் அழுந்திக் கிடக்கும் ஆண் உணர்வு வெளி வர வேண்டும்.

ஆணுக்குள் இருக்கும் பெண்ணும், பெண்ணுக்குள் இருக்கும் ஆணும் ஒன்றாக சேரும்போது  உண்மையான , நிரந்தரமான இன்பம் பிறக்கிறது.


இதே கருத்தை நாவுக்கரசரும் பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அவற்றை இன்னொரு நாள்  பார்ப்போம்.


Tuesday, May 13, 2014

திருக்கோத்தும்பி - நான் யார் ?

திருக்கோத்தும்பி - நான் யார் ?


நான் யார் ?

நான் என்பது என் உடலா ? என் உள்ளமா ? என் நினைவுகளா ? என் அறிவா ? என் மனமா ? இவை அன்றி கண்ணுக்கு காணாத உயிரா ? ஆத்மாவா ?

எது நான் ?

நான் என்பது மாறிக்  .இருக்கிறது. இப்படி மாறும் நானில் மாறாத நான் யார் ?

காலம் காலமாக இந்த கேள்வி பெரிய பெரிய ஞானிகளை வாட்டி வதைத்து இருக்கிறது.

மாணிக்க வாசகரையும் இந்த கேள்வி விடவில்லை.

இருந்தாலும்,

இறைவா நீ என்னை ஆட்கொள்ளாவிட்டால்,  நானும்,என் அறிவும், என்ன ஆகியிருப்போம் ? என்னை இந்த உலகில் யார் அறிந்து இருப்பார்கள். உன் கருணையினால் என்னை ஆண்டு கொண்டதால் நான் பிழைத்தேன். அப்படிப் பட்ட சிவனின் தாமரை போன்ற பாதங்களில் சென்று நீ வணங்குவாய் என்று தேனியிடம் (தும்பி)  கூறுகிறார் அடிகள்.

பாடல்

நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

பொருள்

நான் ஆர்? = நான் யார்

என் உள்ளம் ஆர்? = என் உள்ளம் யார்

ஞானங்கள் ஆர்? = என் அறிவு என்பது என்ன

என்னை யார் அறிவார் = நான் என்று சொல்லும் என்னை , அது என்ன என்று யார் அறிந்து சொல்ல முடியும் ?


வானோர் பிரான் = வானவர்களின் தலைவன் (பிரியாதவன் என்பது பிரான் என்று ஆயிற்று)

என்னை ஆண்டிலனேல்? = என்னை ஆட்கொல்லா விட்டால்

மதி மயங்கி = மதி மயங்கி . சிவன் ஏன்  மணிவாசகரை ஆட்கொள்ளவேண்டும்? அதனால் சிவனுக்கு கிடப்பது என்ன ? ஒன்றும் இல்லை. ஏதோ மதி மயங்கி, என்னை ஆட் கொண்டு விட்டான் என்று அடக்கத்தோடு அடிகள். நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. அவன் என்னவோ மயக்கத்தில் எனக்கு அருள் செய்து விட்டான் என்கிறார்.


ஊன் ஆர் = மாமிசம் இருக்கும்

உடை தலையில் = உடைந்த மண்டை ஓட்டில்

உண் பலி = உணவு உண்ணும்

தேர் அம்பலவன் = அம்பலத்தில் ஆடும் அவனின்

தேன்  ஆர் = தேன் சொரியும்

கமலமே = தாமரை போன்ற திருப்பாதங்களில்

சென்று ஊதாய்; = சென்று ஊதாய்

கோத்தும்பீ! = அரச வண்டே

நான் என்ற  எண்ணமும்,அறிவும் இறை அருள் பெறும் போது நிறைவு பெறுகிறது.

இதையே வள்ளுவரும்

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலவறிவன் நற்றாள் தொழார் எனின்  என்றார்.

அறிவு, அருள் பெறும்போது அர்த்தம் பெறுகிறது



Monday, May 12, 2014

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு 


முதலிலேயே சொல்லி விடுகிறேன், இந்த பாடல் வயது வந்தவர்களுக்கு மட்டும்.  வயது வராதவர்கள், அல்லது ஆண் பெண் உடல் கூறு சம்பந்தப் பட்ட வார்த்தைகளால் சங்கப்படுபவர்கள் இதை மேலும் படிக்காமல் இருப்பது நல்லது.

தமயந்தியின் நினைவால் நளன்  .வாடுகிறான். காமம் அவனை சுட்டு எரிக்கிறது.

அந்த சூட்டை தணிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான்.

சூட்டுக்கு இதமாக ஏதாவது இளநீர் பருகலாம், கரும்புச் சாறு நல்லது, குளிர்ந்த நீர் குளத்தில் நீராடலாம், நல்ல நிழலில் போய் நிற்கலாம்....இவற்றால் இந்த காமம் என்ற சூட்டினால் விளைந்த தாகம் தீரலாம்....

பாடல்

கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளம் சொல்கரும்பால்
பொங்குசுழி என்னும் பூந்தடத்தில் - மங்கைநறும்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ

வெய்தாமக் காம விடாய்.


பொருள்

கொங்கை இளநீரால் = (தமயந்தியின்) மார்புகள் என்ற இள நீரால்

குளிர்ந்த = குளிர்ச்சியான

இளம் = இளமையான

சொல்கரும்பால் = அவளுடைய சொல் என்ற கரும்பால்

பொங்கு = பொங்கி

சுழி = சுழித்து ஓடும்

என்னும் = என்ற

பூந்தடத்தில் = அவளுடைய தொப்பூழ் (வயறு)

மங்கை = பெண்

நறும் = வாசம் வீசும்

கொய் = கொய்த

தாம = மலர் சூடிய

வாசக் = வாசம் வீசும்

குழல் = குழல், தலை முடி

நிழற் கீழ்= நிழலின் கீழே. குழல் நிழல் தரலாம்....நிழல் போல குழலும் கருமையாக இருக்கும்.

ஆறேனோ = குளிர்வேனோ ?


வெய் = கொடுமையான

ஆம் = ஆன

காம விடாய். = காமத்தினால் வந்த தாகம்

அவள் மேல் எத்தனை ஆசை அவனுக்கு. உருகுகிறான்.




Sunday, May 11, 2014

மண்டோதரி புலம்பல் - இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்!

மண்டோதரி புலம்பல் - இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 

போரில் இறந்து கிடக்கிறான் இராவணன்.

மண்டோதரி அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

அவளால் நம்ப முடியவில்லை. இறந்து கிடப்பது இராவணன் தானா என்று சந்தேகம் வருகிறது அவளுக்கு. இராவனானாவது இறப்பதாவது என்று நினைத்து இருந்தவள் அவள். இறந்து கிடக்கும் இராவணனின் உடலைப் பார்த்த பின்னும் அவளால் நம்ப முடியவில்லை.  மண்ணின் மேல் கிடப்பது என் உயிர் நாயகனின் முகங்கள் தானா ? என்று கேட்கிறாள்.

ஐயோ எனக்கு இப்படி ஒரு அவலம் நேர்ந்து விட்டதே.  என் கணவன் எனக்கு முன்னால் இறந்து விட்டானே. இதுதானா என் கற்பின் பெருமை.

எவ்வளவோ படித்தான், தவம் செய்தான்,  தானம் செய்தான், கடைசியில் இராவணனுக்கு கிடைத்த பரிசு இது தானா ... இப்படி அனாதையாக மண்ணில் கிடக்கிறானே என்று துக்கம் தாளாமல் அழுகிறாள்.....




பாடல்

'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன் 
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த  கருத்து அதுவும் பிடித்திலேனோ? 
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய  முகங்கள்தானோ? 
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 

பொருள்

'அன்னேயோ! அன்னேயோ! = அம்மா, அம்மா

ஆ, = ஆ

கொடியேற்கு = கொடியவளான எனக்கு

அடுத்தவாறு! = நேர்ந்த கொடுமை என்ன

அரக்கர் வேந்தன் = அரக்கர் வேந்தன் (இராவணன்)


பின்னேயோ, இறப்பது? = அவனுக்கு பின்னாலா நான் இறப்பது ?

முன் பிடித்திருந்த  கருத்து அதுவும் பிடித்திலேனோ? = அவனுக்கு முன் நான் இறக்க வேண்டும் என்று நான் முன்பு நினைத்திருந்த கொள்கையும் 

முன்னேயோ விழுந்ததுவும் = எனக்கு முன்னால் விழுந்தது

முடித் தலையோ? = இவை முடி சூடிய தலைகல்தானா ?

படித் தலைய  முகங்கள்தானோ? = இவை என் ஆருயிர் நாயகனின் தலைகள் தானா ?


என்னேயோ, என்னேயோ, = என்னவோ, என்னவோ

இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ  = இராவணன் முடிந்த முடிவு இதுதானா ?

பாவம்! = பாவம்



இராமாயணம் - மண்டோதரி புலம்பல் - கடல் மேல் மின்னல் வீழ்ததென

இராமாயணம் - மண்டோதரி புலம்பல் - கடல் மேல் மின்னல் வீழ்ததென 


இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அரக்கியர்கள் எல்லோரும் அவன் மேல் விழுந்து அழுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மண்டோதரி வருகிறாள்.

மண்டோதரி புலம்பலில் நாம் சோகத்தையும், வாழ்வின் நிலையாமையும், ஆறாம் பிறழ்ந்த வாழ்வின் முடிவும், விதியின் வலியும் , இறைத் தத்துவங்களையும் காண முடியும்.



இராவணன் மேல் மண்டோதரி வந்து விழுகிறாள். கடல் மேல் மின்னல் விழுந்தது மாதிரி இருந்தது என்கிறான் கம்பன்.

என்ன உதாரணம் இது ?

இராவணின் மேனி பெரிய கரிய மேனி. கடல் போல. மண்டோதரி மின்னல் போல மெலிந்து, ஒளி பொருந்தியவள் என்பது ஒரு அர்த்தம்.

கடல் மேல் மின்னல் விழுந்தால் அதைப் பின் கடலில் இருந்து பிரித்து எடுக்க முடியாது என்பது ஒரு அர்த்தம்.

மின்னல் கடல் மேல் விழுந்தால், கடலுக்கு ஒன்றும் ஆகி விடாது. ஆனால், அதே மின்னல் வேறு எதன் மேல் விழுந்தாலும் அது எரிந்து சாம்பாலாகி விடும். பெண், கணவனோடு சேர்ந்தால் ஒரு குழப்பமும் இல்லை. மாறாக பிற ஆடவன் தீண்டினால், அவனை எரிக்கும் அவள் கற்பு.  கற்பின் பெருமையை சொல்லும் அர்த்தம் இன்னொன்று.


அப்படி மண்டோதரி புலம்பும் போது வாய் இல்லாத மரங்களும் மலைகளும் அதைக் கண்டு உருகின.



பாடல்

தரங்க நீர் வேலையில் தடித்து வீழந்தென,
உரம் கிளர் மதுகையான் உருவின் உற்றனள், 
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து, 
இரங்கினள் - மயன் மகள், - இனைய பன்னினாள்: 

பொருள்

தரங்க நீர் = அலை கொண்ட நீர்

வேலையில் = கடலில்

தடித்து வீழந்தென = மின்னல் விழுந்தது போல

உரம் = வலிமை

கிளர் = பொங்கும்

மதுகையான் = இராவனைனிடம்

உருவின் உற்றனள் = உடலின் மேல் விழுந்து

மரங்களும் மலைகளும் உருக = மரங்களும் மலைகளும் உருக

வாய் திறந்து = வாய் திறந்து

இரங்கினள் = அழுதாள்

மயன் மகள் = மயனின் மகள்

இனைய பன்னினாள் = இவற்றை செய்தாள் . அதாவது பின் வரும் புலம்பலாகிய செயலைச் செய்தாள்.

பின் வரும் மண்டோதரியின் புலம்பலுக்கு கட்டியம் கூறுகிறான் கம்பன்.

மண்டோதரியின் வாயிலாக இராமனின் மன நிலை, கம்பனின் மன நிலை, இராவணன் மேல்  மண்டோதரி கொண்ட பாசம், அத்தனையும் வெளிப் படுகிறது.

அவற்றைப் பார்ப்போம்.



நீதி நூல் - பட்டினியே நல்ல மருந்து

நீதி நூல் - பட்டினியே நல்ல மருந்து 


பசித்து இருப்பது நல்லது. பசிக்காமல் இருக்கும் போது உண்பது நோய் செய்யும். அந்த நோய்க்கு மருந்து ஒன்றும் கிடையாது, பட்டினி போடுவதைத் தவிர.

சாப்பிடுவது என்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை.

நினைத்த போது நினைத்ததை சாப்பிடக் கூடாது. எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், ஏன் சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும்  என்று அறிந்து உண்ண வேண்டும். காரண காரியங்களை அறிந்து உண்ண வேண்டும்.

பாடல்

பாரண மின்றிச் சின்னாள் பசித்திருந் தாலு நன்றாஞ்
சீரண மின்றி யுண்ணும் தீனிநோய் செயும தற்கோர்
சூரண மிலைமெய்த் தன்மை துவ்வுணாத் தன்மை யேனைக்
காரண காரி யங்கள் கண்டுண்பா ரறிஞ ரம்மா.

சீர் பிரித்த பின்

பாரணம் இன்றி சில நாள் பசித்து இருந்தாலும் நல்லதாம் 
சீரணம் இன்றி உண்ணும்  தீனி நோய் செய்யும் அதற்கு ஓர் 
சூரணம் இல்லை மெய்த் தன்மைது உண்ணாத்  தன்மை யேனைக்
காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா 


பொருள்

பாரணம் இன்றி = உணவு இன்றி

சில நாள் = சில நாள் (சில மணி நேரம் இல்லை )

பசித்து இருந்தாலும் = பசியோடு இருந்தாலும்

நல்லதாம் = நல்லதே

சீரணம் இன்றி = முன் உண்ட உணவு சீரணம் ஆவதற்கு முன்னால்

உண்ணும்  = உண்ணும்

தீனி = உணவு அல்ல தீனி. தீனி என்பது விலங்குகள் உண்ணும் உணவு.

நோய் செய்யும் = நோயை உண்டாக்கும்

அதற்கு ஓர் சூரணம் இல்லை = அந்த நோய்க்கு மருந்து இல்லை.

மெய்த் தன்மைது = உண்மை உணர்ந்து

உண்ணாத்  தன்மை யேனைக்  = உண்ணாத தன்மையே அதற்கு மருந்து

காரண காரியங்கள் கண்டு  = உண்பதற்கான காரண காரியங்களை கண்டு

உண்பார் = பின் அதுற்கு தகுந்த மாதிரி உண்பார்கள்

அறிஞர் அம்மா = அறிஞர்கள்.

காரணம் காரியம் இல்லாமல் உண்பவர்கள் மடையர்கள் என்பது சொல்லாமல்  சொன்ன பொருள்.



Saturday, May 10, 2014

இராமாயணம் - இறந்த பின்னும் மறக்காத மனம்

இராமாயணம் - இறந்த பின்னும் மறக்காத மனம் 



இருக்கும் போது காதலிப்பவர்களை கேட்டு  இருக்கிறோம்.இறந்த பின்னும் காதலிப்பவர்களை கேட்டு இருக்கிறோமா ?


இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அவன் மேல் அரக்கியர்கள் எல்லாம் விழுந்து அழுகிறார்கள்.

அவர்களுக்குத் தெரியும் இராவணன், சீதை மேல் கொண்ட காதல்.

அறம் தொலைந்து போக மனத்தில் சீதையை மனத்தில் அடைத்து வைத்தாய். அவளை இன்னுமா மறக்கவில்லை. அவளை மறக்காததால் எங்களோடு பேச மாட்டேன் என்கிறாய். எங்களை கண் திறந்தும் பார்க்க மாட்டேன் என்கிறாய். எங்களுக்கு அருளும் செய்ய மாட்டேன் என்கிறாய். ஒரு வேளை நீ இறந்து விட்டாயோ என்று ஏங்கி அழுதனர்.


பாடல்

அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர் 
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை; 
இறந்தனையோ?' என இரங்கி, ஏங்கினார். 

பொருள்

அறம் தொலைவுற = அறம் தொலைந்து போக

மனத்து அடைத்த சீதையை = மனதில் அடைத்து வைத்த சீதையை

மறந்திலையோ, இனும்? = இன்னுமா மறக்காமல் இருக்கிறாய் ?

எமக்கு = எங்களுக்கு

உன் வாய்மலர் திறந்திலை = உன் வாய் என்ற மலரை திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டேன் என்கிறாய்

 விழித்திலை; = எங்களை பார்க்கவும் மாட்டேன் என்கிறாய்

அருளும் செய்கிலை = எங்களுக்கு அருளும் செய்யவில்லை

இறந்தனையோ?' = ஒருவேளை இறந்து விட்டாயோ

என இரங்கி, ஏங்கினார் = என வருத்தப் பட்டு ஏங்கி அழுதனர்

சீதையின் நினைவாகவே இருந்ததால் பார்கவோ , பேசவோ இல்லையோ என்று அவர்கள்  நினைத்தார்கள். அது இராவணனின் காதலின் ஆழம்.



Friday, May 9, 2014

இராமாயணம் - திருத்தமே அனையவன்

இராமாயணம் - திருத்தமே அனையவன்


பிரமன் இராவணனைப் படைத்தான். ஏதோ சரி இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.

கொஞ்சம் திருத்தினான். அப்புறமும் சரி இல்லை என்று பட்டது.

இன்னும் கொஞ்சம் திருத்தினான்.

இப்படி மாறி மாறி திருத்தி திருத்தி உன்னதமாக வடிவமைக்கப் பட்ட உருவம் இராவணனின் உருவம்.

திருத்தங்களின் மொத்த உருவம் அவன். Perfect Person. "திருத்தமே அனையவன்"

அப்பேற்பட்ட இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அவன் மேல் அரக்கியர்கள் விழுந்து அழுகிறார்கள்.

அவர்களுக்கு வாழ்க்கை என்ன என்றால் அவனோடு எப்போதும் பொருந்தி வாழ்வது மட்டும்தான்.

அவர்களுக்குத் துன்பம் எது என்றால் அவனை விட்டு பிரிந்து இருப்பது மட்டும்  தான்.

அப்படிப்பட்ட அரக்கியர் அவன் மேல் விழுந்து புலம்பினார்கள். அவர்கள் உடல் அவன் மேல் விழவில்லை....அவர்களின் உயிர் அவன் மேல் விழுந்து அழுததாம்.

பாடல்

வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்குவார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்-
திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். 


பொருள்

வருத்தம் ஏது எனின் = (அரக்கியர்களுக்கு) வருத்தம் என்ன என்றால்

அது புலவி = (இராவணனை விட்டு விலகி இருத்தல்)

வைகலும் = நாளும்

பொருத்தமே வாழ்வு  = அவனோடு பொருந்தி இருப்பதே வாழ்க்கை

எனப் பொழுது போக்குவார் = என பொழுதைப் போக்குவார்

ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து = ஒருவர் மேல் ஒருவர் விழுந்து

உயிரின் புல்லினார் = உயிரால் தழுவினார்கள்

திருத்தமே அனையவன்  = திருத்தங்களின் மொத்த உருவமான இராவணனின். இந்த வார்த்தைக்கு பல பொருள் சொல்கிறார்கள். திருத்தி அமைக்கப் பட்ட தோள்கள் என்கிறார்கள். தீர்த்தம் என்பதன் மருஊ என்று பாடம் சொல்வாரும் உண்டு.  தவறுகள் ஏதும் இன்றி, அப்பழுக்கு இல்லாத வடிவம் உடையவன் இராவணன் என்பது சரியான அர்த்தம் என்று தோன்றுகிறது.  

சிகரத் தோள்கள்மேல் = மலை போன்ற தோள்களின் மேல் 

Thursday, May 8, 2014

பழ மொழி - சொல்லாக்கால் சொல்லுவது இல்

பழ மொழி - சொல்லாக்கால் சொல்லுவது இல்


சொல் திறம், சொல் வன்மை என்பது மிக மிக இன்றி அமையாதது.

சில பேர் நன்றாகப் படித்து அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். கடுமையாக வேலையும் செய்வார்கள். இருந்தாலும் வாழ்வில் முன்னேற முடியாமல் தவிப்பார்கள். அவர்களை விட அறிவும், அனுபவும் குறைந்தவர்கள் மேலே மேலே சென்று கொண்டே இருப்பார்கள்.

காரணம் - சொல் திறம். எப்படி பேச வேண்டும், யாரிடம் பேச வேண்டும், எதைப் பற்றி பேச வேண்டும் என்ற பேச்சுத் திறன் இன்மையால்.

பெரும் தவம் செய்த முனிவர்களுக்குக் கூட நா வன்மை இல்லை என்றால் அவர்களின் தவத்தால் ஒரு பயனும் இல்லை என்கிறது இந்த பழமொழிப் பாடல்.

பாடல்

கல்லாதான் கண்டகழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு)அடு கிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்.

பொருள் 

கல்லாதான் = படிக்காதவன்

கண்ட = அறிந்த

கழிநுட்பம் = ஆழ்ந்த நுண்ணிய பொருள்

காட்டரிதால் = மற்றவர்களுக்கு சொல்ல முடியாது

நல்லேம்யாம் = இருப்பினினும், அவன் தான் நல்லவன் அறிஞன் என்று

என்றொருவன் = என்று ஒருவன் தனக்குத் தானே

நன்கு மதித்தலென் = நன்றாக பெருமை பட்டுக் கொண்டால் என்ன பயன்

சொல்லால் = மந்திரங்களால்

வணக்கி = வழிபட்டு

வெகுண்(டு) = சாபம் தரும் அளவுக்கு கோபம் கொண்டு

அடு கிற்பார்க்கும் = செயல்களை செய்யும் முனிவர்களுக்கும்

சொல்லாக்கால் சொல்லுவது இல் = தாங்கள் அறிந்தவற்றை சொல்ல முடியாவிட்டால் , அவர்களைப் பற்றி சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

மற்றவர்களிடத்து எடுத்துச் சொல்ல முடியாவிட்டால், கற்றவனும் கல்லாதவன் போலவே கருதப்  படுவான்.

என்ன படித்து என்ன பயன், பரிட்சையில் ஒழுங்காக எழுதாவிட்டால் குறைந்த மதிப்பெண்கள் தானே கிடைக்கும்.

அறிந்ததை, தெரிந்ததை, செய்ததை மற்றவர்கள் அறியும்படி அழகாகச் சொல்லத் தெரிய வேண்டும்.

நீங்கள் அது மாதிரி சொல்லா விட்டால் உங்களைப் பற்றி மற்றவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  குடத்தில் இட்ட விளக்காய் இருக்க வேண்டியதுதான்.

பேசப் படியுங்கள்.



இராமாயணம் - நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்

இராமாயணம் - நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்


போரில் இறந்து கிடக்கும் இராவணனை காண அவன் மனைவி மண்டோதரி வருகிறாள்.

அவளின் கற்பை சீதையின் கற்புக்கு இணை சொல்வான் கம்பன். அனுமனே மண்டோதரியைப் பார்த்து அவள் சீதையோ ஒரு கணம் திகைத்தான்.

மண்டோதரி கணவனை ஒரு பொழுதும் மறக்காத மனம் படைத்தவள். நினைப்பும் இல்லை, மறதியும் இல்லை.


நினைந்ததும் மறந்ததும் இல்லாத நெஞ்சினள்  .என்கிறான் கம்பன்.

பாடல்

அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,
புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார்,
இனம் தொடர்ந்து உடன் வர, எய்தினாள் என்ப -
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 

பொருள்


அனந்தம் = அநேகம்

நூறாயிரம் = நூறு ஆயிரம்

அரக்கர் மங்கைமார் = அரக்கப் பெண்கள்

புனைந்த பூங் குழல் = முடித்த தலை முடியை

விரித்து = விரித்து

அரற்றும் = அழுது

பூசலார் = வணங்குபவர்கள்  (அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்)


இனம் தொடர்ந்து உடன் வர = அந்த அரக்கியர் என்ற  இனம் தொடர்ந்து கூட வர

எய்தினாள் = இராவணன் இறந்து கிடக்கும் இடத்தை அடைந்தாள்

என்ப = அடைந்தது யார் தெரியுமா ? இது வரை அப்படி வந்தது யார் என்று சொல்லவில்லை.  அடுத்த வரியில் சொல்கிறான்.

நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் = நினைப்பும் மறப்பும் இல்லாத மனம் கொண்டவள்

எவ்வளவு  உயர்ந்த பெண் ?

கணவன் இன்னொரு பெண்ணை  விரும்பினான் என்று தெரிந்த போதும் அவனை வெறுத்து ஒதுக்கி விடவில்லை. அவனோடு துணை நின்றாள்.

இன்னும் தொடர்ந்து வரும் பாடல்களையும் பார்ப்போம்.



Wednesday, May 7, 2014

பழ மொழி - நல்லாரை நல்லாரே உணர்வர்

பழ மொழி - நல்லாரை நல்லாரே உணர்வர் 


உங்களை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, உங்கள் நல்ல மனதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று வருத்தப் பட்டது உண்டா ?

கவலையை விடுங்கள்.

படித்த அறிஞனை இன்னொரு அறிஞனால்தான் அறிய முடியும். முட்டாளால் அறிவாளியை அறிய முடியாது.

அது போல நல்லவர்களை இன்னொரு நல்லவன் தான் அறிய முடியும். மற்றவர்களால் முடியாது.

இரும்பை பிளக்க  வேண்டும் என்றால் அது இன்னொரு இரும்பு அல்லது இரும்பை விட உறுதியான ஒன்றினால்தான் முடியும்.

முட்டாள்களோடு பேசியோ, வாதம் பண்ணியோ புண்ணியம் இல்லை. அவர்கள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

நல்லவர்கள் தான் நல்லவர்களை அறிவார்கள்.

பாடல்

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயிலாலே போழ்ப அயில்.


பொருள் 

நல்லார் = நல்லவர்களின்

நலத்தை = நல்ல குணத்தை

உணரின்= உணர வேண்டும் என்றால்

அவரினும் நல்லார் உணர்ப = அவரை விட நல்லவர்களே அதை உணர்வார்கள்

 பிறருணரார் = பிறர் உணர மாட்டார்கள்

நல்ல = நல்ல

மயிலாடு = மயில் ஆடுகின்ற

மாமலை = பெரிய மலையை

வெற்ப = அரணாகக் கொண்டவனே 

மற்(று) என்றும் = மற்றபடி எப்போதும்

அயிலாலே = இரும்பாலே

போழ்ப = பிளக்க முடியும்

அயில் = இரும்பை

உங்களை விட நல்லவர்களைத்  போங்கள் , அவர்கள் உங்களை அறிந்து கொள்வார்கள்.

உங்களை விட கீழே உள்ளவர்கள் உங்களை ஒரு காலும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.



நீத்தல் விண்ணப்பம் - நின்னைச் சிரிப்பிப்பனே

நீத்தல் விண்ணப்பம் - நின்னைச் சிரிப்பிப்பனே


மாணிக்க வாசகரில் கிண்டல், நகைச்சுவை உள்ள பாடல்களை காண்பது அரிது.  "அழுதால் உன்னைப் பெறலாமே " என்று பாடியவர்.

அவர் சிவனிடம் சொல்கிறார்...

"நீ பெரிய வீரனாக இருக்கலாம். நீ என்னை கை விட்டு விட்டால் நான் என்ன ஆவேன். திக்குத் தெரியாமல் அலைவேன். என்னை எல்லோரும் கேட்பார்கள், "இப்படி அலைகிறாயே, நீ யாருடைய அடியான் " என்று. அப்போது அவர்களிடம் நான் உன் அடியவன் என்று சொல்லுவேன். எனகென்ன , அவர்கள் உன்னை பார்த்துதான் சிரிப்பார்கள். அப்படி அவர்கள் உன்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் என்னை கை விட்டு விடாதே"


பாடல்

தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடி லென்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங் கைக்கரசின்
சீரடி யார்அடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே.


பொருள்

தாரகை போலும் = நட்சத்திரம் போல (வெண்மையாக, சிறு புள்ளி போல )

தலைத் = தலைகளை அதாவது மண்டை ஓடுகளை

தலை மாலைத் = உன் தலையில் மாலையாக கொண்டவனே

தழலரப்பூண் = தழல் + அரவு + பூண் = வேள்வித் தீயில் வந்த பாம்பை அணிகலமாக அணிந்த

வீர = வீரனே 

என் றன்னை = என்னை

விடுதி கண் டாய் = விட்டு விட்டாதே

விடி லென்னைமிக்கார் = விடில் + என்னை + மிக்கார் = அப்படி நீ விட்டு விட்டால் , மற்றவர்கள்

ஆரடி யான் = யார் + அடியான் = நீ யாருடைய அடியவன்

என்னின் = என்று கேட்டால்

 உத்தர கோசமங் கைக்கரசின் = உத்தர கோச மங்கைக்கு அரசனின்

சீரடியார் அடியானென்று = அடியவர்களின் அடியவன் என்று கூறி 

 நின்னைச் சிரிப்பிப்பனே. = உன்னை பார்த்து அவர்கள் சிரிக்கும்படி செய்வேன்

பழி உனக்கு மட்டும் அல்ல, உன் மற்ற அடியார்களுக்கும்தான் என்று சிவனின் மேல்  அழுத்தத்தை (Pressure ) அதிகரிக்கிறார்.

மற்ற பாடல்களில் இருந்து வித்தியாசமான பாடல்



Tuesday, May 6, 2014

நீதி நூல் - அதிகம் உண்டால் ஆற்றல் அழியும்

நீதி நூல் - அதிகம் உண்டால்  ஆற்றல் அழியும் 


உணவில் இருந்து நமக்கு சக்தி கிடைக்கிறது.

அதிகம் உண்டால் அதிகம் சக்தி கிடைக்க வேண்டும் அல்லவா ?

 அதுதான் இல்லை.

அளவோடு உண்டால், அது உடலில் சக்தியாக மாறி உடல் எங்கும்  இயங்கும். அதுவே அளவுக்கு அதிகமானால் ?

ஒரு குளத்தில் கொஞ்சம் நீர் இருக்கிறது. மேலும் கொஞ்சம் நீர் வந்தால் குளம்  நிறையும்.மேலும் மேலும் நீர் வந்து கொண்டே இருந்தால், அது குளத்தின் கரையை உடைத்து இருக்கின்ற நீரையும் சேர்த்து கொண்டு போய் விடும். அது போல அளவுக்கு அதிகமாக உண்டால் உடலில் ஏற்கனவே உள்ள சக்தியையும் அது கொண்டு போய் விடும்.

சரி, அந்த அளவை எப்படி கண்டு பிடிப்பது ?

உணவு உண்ட பின் வயிறு பள்ளமாக இருக்க வேண்டும். மேடாக மாறக் கூடாது. அதாவது வயிறு முட்ட சாப்பிடக் கூடக் கூடாது.

பாடல்

கொள்ளுரு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம்
உள்ளநீ ரையுமி ழக்கும் உண்மைபோற் பேர கட்டின்
பள்ளமே டாக வுண்ணும் பதமுடல் வளத்தைப் போக்கும்
எள்ளலில் சிற்று ணாவற் றுடலெங்கு மியங்கு மாலோ.

சீர் பிரித்த பின் 

கொள்ளுரு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம்
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல்  பேர் அகட்டின் 
பள்ளம்  மேடாக உண்ணும்  பதம் உடல்  வளத்தைப் போக்கும்
எள்ளலில் சிற் உணவால் அற்று உடலெங்கும் இயங்கும் மாலோ 


பொருள் 

கொள்ளுரு நீரைக் = அளவுக்கு அதிகமான நீரைக்

கொண்ட  குளங்கரை = கொண்ட குளத்தின் கரை

புரண்டு = உடைந்து

முன்னம் = முன்பே

உள்ள = உள்ள

நீரையும் இழக்கும் உண்மை போல் = இழக்கும் உண்மை போல

பேர் அகட்டின் = அகடு என்றால் வயிறு

பள்ளம் = ஒட்டிய வயிறு

 மேடாக = உப்பி பெரிதாகும் வரை

உண்ணும்  பதம் = உண்ணும் உணவு

உடல்  வளத்தைப் போக்கும் = உடல் வளத்தை போக்கும்

எள்ளலில் = சிறந்த

சிற் உணவால் =கொஞ்சமான உணவை  உண்டால் 

அற்று உடலெங்கும் இயங்கும் மாலோ = அது செரிமானமாகி சக்தியாக உடல் எங்கும்  இயங்கும்.


வயிறு முட்ட உண்ணாதீர்கள். அது சக்தியை அழிக்கும். 

வயறு ஒட்டி இருக்கும் படி உண்ணுங்கள். அது உடலுக்கு சக்தியை  தரும்.


நீதி நூல் - அதிகம் உண்டால் ஆபத்து

நீதி நூல் - அதிகம் உண்டால் ஆபத்து 


அளவுக்கு அதிகமாக உண்பவர்கள் இன்று மட்டும் அல்ல நீதி நூல் எழுதப் பட்ட அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.

அதிகம் உண்டால் என்ன  ஆகும் என்று சொல்கிறது நீதி நூல்.

நீதி என்றால் ஏதோ சட்டம் என்று நினைத்துக் கொள்ள கூடாது. வாழ்க்கைக்குத் தேவையான நல்லவைகளை எடுத்துக் கூறுவது நீதி நூல்.

நெல் வளர நீரும், மிதமான வெப்பமும் தேவை. அதிகமான நிழல், அதிகமான தண்ணீர் இருந்தால் நெல் பயிர் அதிகமாக வேகமாக வளராது. அழுகிப் போகும்.

நோய் வந்தால் மருந்து உண்கிறோம். சீக்கிரம் குணமாக வேண்டும் என்று இருக்கின்ற மருந்தை எல்லாம் ஒரே நாளில் உண்டால் நோய் தீர்க்கும் மருந்தே விஷமாகி நம்மை கொன்றுவிடும்.

அது போல

அளவுக்கு அதிகமாக உண்டால், அது சிலவற்றை அன்போடு கூடவே அழைத்து  வரும். அவை என்ன தெரியுமா ?

- பனி - (சளி, காய்ச்சல் ,இருமல் முதலியன )
- பிணி - அனைத்து விதமான நோய்கள்
- மடமை - முட்டாள் தனம் (அறிவு மழுங்கிப் போகும் )
- மந்தம் - சுறுசுறுப்பின்மை, சோம்பேறித்தனம்
- பழிச் சொல் - வேலை இல்லாமல் , முட்டாளாக இருந்தால் பழிச் சொல் வராமல் பாராட்டா வரும் ?

இவற்றையெல்லாம், இந்த அளவுக்கு அதிகமாக உண்ணும் செயல், ஒரு தூதுவனைப் போல சென்று அன்போடு அழைத்துக் கொண்டு வரும்.

பாடல்

நனிநிழல் புனல்கொள் பைங்கூழ் நாசமா மிகவே யுண்ணும்
இனியமா மருந்து நஞ்சா மின்பமு மிகிற்றுன் பாகும்
பனிபிணி மடமை மந்தம் பழியெலாம் வம்மி னென்னக்
கனிவொடு மழைக்குந் தூதாங் கழியபே ருண்டி மாதோ.

சீர்  பிரித்த பின்

நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசம் மிகவே உண்ணும் 
இனிய மாமருந்து நஞ்சாம் இன்பம் மிகித்து உண்பாகும் 
பனி பிணி மடமை மந்தம் பழி எல்லாம்  வம்மி னென்னக்
கனிவொடு அழைக்கும் தூதாம்  கழிய பேருண்டி மாதோ.

பொருள்


நனி நிழல் = அதிகமான நிழல்

புனல் = அதிகமான நீர்

கொள் = கொள்ளும்

பைங்கூழ் = நெற் பயிர்

நாசம் = நாசமாகும்

மிகவே உண்ணும் = அதிகமாக உண்டால்

இனிய = இனிமையான

மாமருந்து = சிறந்த நோய் தீர்க்கும் மருந்து

நஞ்சாம் = விஷமாகிவிடும்

இன்பம் மிகித்து = இன்பம் இருக்கிறது என்று அதிகமாக

உண்பாகும் = உண்டால்

பனி = சுரம்

பிணி = நோய்

மடமை = முட்டாள்தனம்

மந்தம் = சோம்பேறித்தனம்

பழி = பழிச் சொல்

எல்லாம் = எல்லவாற்றையும்

வம்மி னென்னக் = தீமைகளை எல்லாம்

கனிவொடு அழைக்கும் = அன்போடு அழைக்கும் 

 தூதாம்  = தூதனாக செயல் படும்

கழிய பேருண்டி மாதோ = அளவுக்கு அதிகமான உணவு

கழி என்றாலே அதிகம் என்று  அர்த்தம்.இதில் பேருண்டி என்று இன்னொரு அடைமொழி.



Monday, May 5, 2014

நீதி நூல் - அழகியை காணாமல் திகைத்தோம்

நீதி நூல் - அழகியை காணாமல் திகைத்தோம் 


பெண்ணின் அழகில் மயங்காதவர்கள்  யார் ?

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருபவள் அவள் என்று வள்ளுவர்  கூறுகிறார்.

அவள் ஒரு அழகான பெண். அவள் கிட்ட போனாலே ஒரு இனிய மணம்  வீசும்.தாமரை இதழ்கள் போன ஆதாரங்கள். நூல் போல இடை; அன்னம் போல  நடை, அழகிய  மார்புகள், பிறை சந்திரன் போன்ற  நெற்றியும்,மீன் போன்ற கண்கள், பால் போல மொழியும் எல்லாம் அவளிடம்  இருக்கும். ஒரு நாள் அவள் இறந்து போனாள் . அவளைத் தேடி சுடுகாடு போனோம். அங்கே இவை ஒன்றும்  இல்லை. காய்ந்த குசிகளை அடுக்கி வைத்தது போல சில எலும்புகள் தான் கிடந்தன,  தேடிச் சென்ற அழகியைக்  காணோம்.

 பாடல் 

தோல்வாசம் துறந்திறந்து கிடந்தஅழ
    கியைக்காணச் சுடலை சென்றோம்
கோல்போன்ற வெள்ளென்பின் குவையொன்றே
   கண்டனஞ்செங் குமுத வாயும்
நூல்போன்ற இடையுமன நடையுமணி
   தனமுமதி நுதலும் வாய்ந்த
சேல்போன்ற விழியும்பான் மொழியுங்கா
   ணாமலுளந் திகைத்தோமன்னோ.

 சீர்  பிரித்த பின்


தோல் வாசம் துறந்து இறந்து கிடந்த அழகியை 
    காணச் சுடலை சென்றோம்
கோல்போன்ற வெள் எலும்பின் குவை ஒன்றே 
   கண்டனம் செங் குமுத வாயும்
நூல்போன்ற இடையும் அன்ன நடையும் அணி 
   தனமும் மதி நுதலும் வாய்ந்த
சேல்போன்ற விழியும் பால் மொழியும் 
   காணாமல் உள்ளம்  திகைத்தோம் அன்னோ.

பொருள்

தோல் வாசம் = அவள் உடலில் இருந்து  வரும் வாசம்

 துறந்து = விட்டு

இறந்து கிடந்த அழகியை = இறந்து கிடக்கும் அழகியை

காணச் = காண்பதற்கு

சுடலை சென்றோம் = சுடுகாட்டிற்குப் போனோம்

கோல்போன்ற = குச்சி போன்ற

வெள் எலும்பின் = வெண்மையான எலும்பின்

குவை ஒன்றே கண்டனம் = குவியல் ஒன்றைக் கண்டோம்

செங் குமுத வாயும் = சிவந்த தாமரை போன்ற வாயும் (இதழ்களும்)

நூல்போன்ற இடையும் = நூல் போன்ற சிறிய இடையும்

அன்ன நடையும் = அன்னம் போன்ற நடையும் 

அணி தனமும் = ஆபரணங்கள் அணிந்த மார்புகளும்

 மதி நுதலும்= நிலவு போன்ற நெற்றியும்

வாய்ந்த = கொண்ட

சேல்போன்ற விழியும் = மீன் போன்ற விழியும்

பால் மொழியும்  = பால் போன்ற மொழியும்

காணாமல் உள்ளம்  திகைத்தோம் அன்னோ= காணாமல் உள்ளம் திகைத்தோம்


இத்தனயும் ஒரு நாளில் சில பல எலும்புக் குவியலாக மாறிவிடும்.

அந்த எலும்பு குவியலுக்கா இத்தனை  உருக்கம், பாடல்,  காதல், கலவி, வலி, வேதனை,  இலக்கியம், சண்டைகள்....?




Sunday, May 4, 2014

நீதி நூல் - அழகென்னும் செருக்கு

நீதி நூல் - அழகென்னும் செருக்கு 


ஆணவம் பல வழியில் வரும்.

அழகு ஒரு வழி. நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் ஆணவத்திற்கு அடிகோலும். எல்லா ஆணவமும் அழிவுக்கு, துன்பத்திற்கு வழி கோலும்.

அழகாய் இருக்கிறோம் என்று  படாதே. அழகான ஆடையை நீக்கி, உடலை கழுவாமல் கண்ணாடியில் பார்த்தால் தெரியும் எவ்வளவு அழகு என்று. சுடுகாட்டுக்குப் போய் பார்த்தால் நிறைய மண்டை ஓடுகள் கிடக்கும். அந்த மண்டை ஓடுகள் எல்லாம் ஒரு காலத்தில் உன் முகம் போலத்தான் இருந்தன என்று அறிந்து கொள் என்கிறது நீதி நூல்.

பாடல்

எழிலு ளேமெனச் செருக்குறு நெஞ்சமே யிழைதுகில் நீத்தங்கம்
கழுவிடாதுற நோக்குதி முகந்தனைக் கஞ்சந் தனில்நோக்கின்
எழுநி லத்திடை யுன்னின்மிக் காருள ரெனவறி வாயீமத்து
அழியும் வெண்டலை யுன்றலை போலிருந் தவணுற்ற தறிவாயே.

சீர் பிரித்த பின் 

எழில் உள்ளேம் என செருக்கு உறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம் 
கழுவிடாது உற நோக்குதி முகம் தனை கஞ்சம் தனில் நோக்கின் 
எழு நிலத்திடை உன்னின் மிக்காருளர் என அறிவாய் மற்று 
அழியும் வெண் தலை உன் தலை போல் இருந்தவன் உற்றது அறிவாயே 

பொருள் 


எழில் உள்ளேம்  = அழகாக இருக்கிறோம் 

என = என்று 

செருக்கு உறு நெஞ்சமே = ஆணவம் கொள்ளும் மனமே 

இழை துகில் நீத்து = ஆடையை நீக்கி  

அங்கம் கழுவிடாது = உடலை கழுவாமல்  

உற நோக்குதி = ஆழ்ந்து நோக்கு 

முகம் தனை = முகத்தை 

கஞ்சம் தனில் = கண்ணாடியில் 

நோக்கின் = நோக்கினால் 
 
எழு நிலத்திடை = இந்த உலகில் 

உன்னின் மிக்காருளர் = உன்னைவிட அழகானவர்கள் இருக்கிறார்கள் 

என அறிவாய் = என்று அறிவாய் 

மற்று = அது மட்டும் அல்ல 
 
அழியும் வெண் தலை = அழியும் மண்டை ஓடு (வெண் தலை)

உன் தலை போல் = உன்னுடைய தலை போல ஒரு காலத்தில் 

இருந்தவன்  = இருந்ததை 

உற்றது அறிவாயே  = உணர்ந்து அறிந்து கொள் 



Saturday, May 3, 2014

திருக்குறள் - பிறர்பழியும் தம் பழியும்

திருக்குறள் - பிறர்பழியும் தம் பழியும் 



பிறர்பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு 
உறைபதி என்னும் உலகு 

பிறருடைய பழியையும், தன்னுடைய பழியையும் கண்டு நாணம் அடைவோரை நாணத்தின் உறைவிடம் என்று உலகம் சொல்லும்.

இது மேலோட்டமான அர்த்தம்.

வள்ளுவர் இவ்வளவு மேலோட்டமாக எழுதக் கூடியவர் அல்ல. இதில் ஆழ்ந்த அர்த்தம் எதுவாக இருக்கும் ?

தவறு செய்யும் நிறைய பேர் நினைப்பது என்ன என்றால், மாட்டிக் கொண்டால் என்ன ? இது எல்லாம் ஒரு பெரிய விஷயமா ? ஊர் உலகத்தில் செய்யாததையா நான் செய்கிறேன்....என்று தாங்கள் செய்யும் தவறினால் வரும் பழியை அவர்களோடு மட்டும் வைத்துப் பார்கிறார்கள். அவர்களை சார்ந்த மற்றவர்களின் பழியைப் பார்ப்பது இல்லை.

ஒரு தந்தை, தான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஏதாவது தவறு செய்தால், அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் மனைவியை, அவன் பிள்ளைகளை பாதிக்கும்.  திருடன் மனைவி, திருடன் பிள்ளை என்று பழி அவர்கள் மேலும் விழும். அவன் பெற்றோரைப் பாதிக்கும். அப்படி ஒரு மோசமான பிள்ளையை பெற்றவர்கள் என்று. அதனால், மற்றவர்களுக்கு வரும் பழியையும் தனக்கு வரும்  பழி என்று நினைக்க வேண்டும்.

ஒரு மாணவன் சரியாகப் படிக்க வில்லை, வகுப்பில் தேறவில்லை என்றால் பழி அவனுக்கு  மட்டும் அல்ல, அவனுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர், பெற்றோர் என்று அனைவர் மேலும்   பழி வரும். நம் பெற்றோருக்குத் தலை குனிவை  நாம் ஏற்படுத்தி விடுவோம் என்ற பழிக்கு அவன் நாண வேண்டும்.

ஒரு பெண்ணை ஒருவன் கெடுத்து விட்டான் என்றால், அந்த பெண்ணின் மேலும் பழி வரும்.  அந்தப் பழிக்கும் அவன் நாண வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் தலைவர் தவறு செய்தால், அந்தப் பழி அந்த நிறுவனத்தின் மேலும்    படியும்.

இப்படி, ஒருவன் செய்யும் பழிச் செயல் அவனோடு நிற்காமல் அவனைச் சார்ந்தவர்களையும்  பற்றிப் படரும். ஒருவன் மற்றவர்கள் பழிக்கும் நாண வேண்டும்.


இன்னும் சற்று உன்னிப்பாக பார்த்தால் தெரியும், வள்ளுவர், முதலில் பிறர் பழியைச்  சொல்லி பின் தன் பழியைச்  சொல்கிறார்.

தான் செய்யும் பாவச் செயலால் மற்றவர்களுக்கு வரும் பழியைப் பற்றி முதலில்  சிந்திக்க வேண்டும்.

ஒருவன் பழிச் செயலைச் செய்கிறான். அதனால் அவனுக்கு சில பலன்கள் கிடைக்கலாம். பழியும் பாவமும் ஓரிடத்தில். ஆனால், அவன் செய்த பழியால் மற்றவர்களுக்கு  ஒரு பலனும் இல்லை, பழி மட்டும் அவர்களுக்கு கிடைக்கும்.  எனவே,மற்றவர்களுக்கு வந்து சேரும் பழியையும் அவன் நினைக்க வேண்டும்.


இன்னும் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

மற்றவர்கள் பழியையும் தன் பழி போல் நினைக்க வேண்டும்.

மற்றவர்கள் பழி நம்மால் விளைந்ததாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது அவர்களாகவே தேடிக் கொண்டதாகக் கூட இருக்கலாம். அதையும் தன் பழி போல் நினைத்து அதற்காக வெட்கி, அந்த பழியைத் துடைக்க பாடு பட வேண்டும்.

உதாரணமாக, நம் பிள்ளையே ஒரு தவறு செய்து விட்டால், அந்தத் தவறை நாமே செய்தது போல  நினைத்து, அதற்கு பரிகாரம் தேட வேண்டும்.

கணவனோ மனைவியோ தவறு செய்து விட்டால், அதனால் வரும் பழியை தன்  பழி என நினைத்து செயல் படவேண்டுமே அன்றி அது அவர்கள் செய்த பழி அவர்களே  அதை சரி செய்யட்டும் என்று நினைக்கக் கூடாது.

பிறர் பழி என்று வள்ளுவர் சொன்னதை பிள்ளைகள், கணவன் மனைவி என்று  குறுகிய வட்டத்திற்குள் அடைக்காமல், நண்பர்கள், உறவினர்கள், அண்டை அயல் என்று  விரித்து நோக்கினால் யார் மேல் பழி வந்தாலும் அது தன் பழியாக  நினைத்து செயல் பட வேண்டும்.

இப்படி எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டால், உலகம் எவ்வளவு இனிமையாக  இருக்கும் ?

ஏழு வார்த்தைகளில் உலகம் உய்ய வழி சொல்லித் தருகிறார் வள்ளுவர்.


Friday, May 2, 2014

இராமாயணம் - விதி நிலையை மதியாத கொள்கை

இராமாயணம் - விதி நிலையை மதியாத கொள்கை


கம்பன் விதியை ஆழமாக நம்புகிறான்.

செயல்களுக்கு விளைவுகள் இருக்கும் என்றால், விளைவுகள் செயலுக்கு ஆதாரமாக இருக்கின்றன என்று அவன் நம்புகிறான்.

இராமனை கானகம் போகச் சொன்னதை கேட்டு வெகுண்ட இலக்குவனிடம், "நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை மைந்த விதியின் பிழை" என்று இராமன் சொல்கிறான்.

அதற்கு இலக்குவன் "விதிக்கும் விதி காணும் என் விற்தொழில் தொழில் காண்டி" என்று சினக்கிற இடத்திலும் கம்பன் விதியை காண்பிக்கிறான்.

இப்படி பல இடத்தில் கம்பன் விதியை கொணர்கிறான்.

இங்கே, போரில் இறந்து விழுந்த இராவணன் மேல் விழுந்து புலம்பும் வீடணனை சாம்பவான் என்ற குரங்கு அரசன் தேறுதல் கூறுகிறான்.

"நீ என்ன இந்த உலகம் அனைத்தையும் மதியினால் வெல்ல முடியும் என்று நினைக்கிறாயா ? விதியை மதியால் வெல்ல முடியாது.  விதி என்று ஒன்று இல்லை என்று நினைப்பதால் நீ வருந்துகிறாய். இது எல்லாம் விதியின் படி நடக்கிறது. நீ வருந்தாதே" என்று அவனுக்கு ஆறுதல் கூறுகிறான்.


பாடல்

என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து, சாம்பவனாம் எண்கின் வேந்தன், 
'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச் 
சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது வருந்துதியோ?' என்ன, தேறி 
நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டாள் மயன் பயந்த நெடுங் கண் பாவை. 

பொருள்

என்று ஏங்கி = இறந்து கிடக்கும் இராவணனை பார்த்து ஏங்கி  அரற்றுவான்தனை  = அழுகின்ற வீடணனை
எடுத்து = கையில் எடுத்து
சாம்பவனாம் எண்கின் வேந்தன் = சாம்பவான் என்ற கரடிகளின் அரசன்

'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! = குன்று போல் உயர்ந்த தோளினை கொண்டவனே

விதி நிலையை = விதியின் நிலையை
மதியாத = மதிக்காத
கொள்கைத்து ஆகிச்  = கொள்கை கொண்டு

சென்று = சென்று

ஓங்கும் உணர்வினையோ? = அப்படி பட்ட அறிவை கொண்டவனா நீ ?

தேறாது வருந்துதியோ?' = அதை அறியாமல் வருந்துகிறாயா ?

என்ன, தேறி = என்று சொன்னவுடன், வீடணன் தேறி 

நின்றான்  = நின்றான்

அப்புறத்து; = அந்த புறத்தில்

அரக்கன் நிலை கேட்டாள் = இராவணின் நிலை கேட்டாள்

மயன் பயந்த நெடுங் கண் பாவை = மயனின் மகளான மண்டோதரி

நாம் எல்லாம் நம் அறிவால் , நம் திறமையால் செய்து முடித்து விட முடியும்  என்று  நினைக்கக் கூடாது. 

என்ன முயன்றாலும், முடியாத காலங்களும் உண்டு. 

எவ்வளவு பெரிய இராவணனுக்கு இப்படி அழிவு வரும் என்று யார் நினைத்து இருப்பார்கள் ?

விதி !

துக்கம் வரும்போது அமைதியாக இருங்கள். இது விதியின் விளைவு என்று இருங்கள். அந்த துக்கத்தை ஏற்றுக் கொள்ளும் வலிமை வரும். அதை சகித்துக் கொள்ளும்  பொறுமை வரும். 

உண்மையோ பொய்யோ அது வாழ்கையை இலேசாக மாற்றும்.