Saturday, May 3, 2014

திருக்குறள் - பிறர்பழியும் தம் பழியும்

திருக்குறள் - பிறர்பழியும் தம் பழியும் 



பிறர்பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு 
உறைபதி என்னும் உலகு 

பிறருடைய பழியையும், தன்னுடைய பழியையும் கண்டு நாணம் அடைவோரை நாணத்தின் உறைவிடம் என்று உலகம் சொல்லும்.

இது மேலோட்டமான அர்த்தம்.

வள்ளுவர் இவ்வளவு மேலோட்டமாக எழுதக் கூடியவர் அல்ல. இதில் ஆழ்ந்த அர்த்தம் எதுவாக இருக்கும் ?

தவறு செய்யும் நிறைய பேர் நினைப்பது என்ன என்றால், மாட்டிக் கொண்டால் என்ன ? இது எல்லாம் ஒரு பெரிய விஷயமா ? ஊர் உலகத்தில் செய்யாததையா நான் செய்கிறேன்....என்று தாங்கள் செய்யும் தவறினால் வரும் பழியை அவர்களோடு மட்டும் வைத்துப் பார்கிறார்கள். அவர்களை சார்ந்த மற்றவர்களின் பழியைப் பார்ப்பது இல்லை.

ஒரு தந்தை, தான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஏதாவது தவறு செய்தால், அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் மனைவியை, அவன் பிள்ளைகளை பாதிக்கும்.  திருடன் மனைவி, திருடன் பிள்ளை என்று பழி அவர்கள் மேலும் விழும். அவன் பெற்றோரைப் பாதிக்கும். அப்படி ஒரு மோசமான பிள்ளையை பெற்றவர்கள் என்று. அதனால், மற்றவர்களுக்கு வரும் பழியையும் தனக்கு வரும்  பழி என்று நினைக்க வேண்டும்.

ஒரு மாணவன் சரியாகப் படிக்க வில்லை, வகுப்பில் தேறவில்லை என்றால் பழி அவனுக்கு  மட்டும் அல்ல, அவனுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர், பெற்றோர் என்று அனைவர் மேலும்   பழி வரும். நம் பெற்றோருக்குத் தலை குனிவை  நாம் ஏற்படுத்தி விடுவோம் என்ற பழிக்கு அவன் நாண வேண்டும்.

ஒரு பெண்ணை ஒருவன் கெடுத்து விட்டான் என்றால், அந்த பெண்ணின் மேலும் பழி வரும்.  அந்தப் பழிக்கும் அவன் நாண வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் தலைவர் தவறு செய்தால், அந்தப் பழி அந்த நிறுவனத்தின் மேலும்    படியும்.

இப்படி, ஒருவன் செய்யும் பழிச் செயல் அவனோடு நிற்காமல் அவனைச் சார்ந்தவர்களையும்  பற்றிப் படரும். ஒருவன் மற்றவர்கள் பழிக்கும் நாண வேண்டும்.


இன்னும் சற்று உன்னிப்பாக பார்த்தால் தெரியும், வள்ளுவர், முதலில் பிறர் பழியைச்  சொல்லி பின் தன் பழியைச்  சொல்கிறார்.

தான் செய்யும் பாவச் செயலால் மற்றவர்களுக்கு வரும் பழியைப் பற்றி முதலில்  சிந்திக்க வேண்டும்.

ஒருவன் பழிச் செயலைச் செய்கிறான். அதனால் அவனுக்கு சில பலன்கள் கிடைக்கலாம். பழியும் பாவமும் ஓரிடத்தில். ஆனால், அவன் செய்த பழியால் மற்றவர்களுக்கு  ஒரு பலனும் இல்லை, பழி மட்டும் அவர்களுக்கு கிடைக்கும்.  எனவே,மற்றவர்களுக்கு வந்து சேரும் பழியையும் அவன் நினைக்க வேண்டும்.


இன்னும் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

மற்றவர்கள் பழியையும் தன் பழி போல் நினைக்க வேண்டும்.

மற்றவர்கள் பழி நம்மால் விளைந்ததாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது அவர்களாகவே தேடிக் கொண்டதாகக் கூட இருக்கலாம். அதையும் தன் பழி போல் நினைத்து அதற்காக வெட்கி, அந்த பழியைத் துடைக்க பாடு பட வேண்டும்.

உதாரணமாக, நம் பிள்ளையே ஒரு தவறு செய்து விட்டால், அந்தத் தவறை நாமே செய்தது போல  நினைத்து, அதற்கு பரிகாரம் தேட வேண்டும்.

கணவனோ மனைவியோ தவறு செய்து விட்டால், அதனால் வரும் பழியை தன்  பழி என நினைத்து செயல் படவேண்டுமே அன்றி அது அவர்கள் செய்த பழி அவர்களே  அதை சரி செய்யட்டும் என்று நினைக்கக் கூடாது.

பிறர் பழி என்று வள்ளுவர் சொன்னதை பிள்ளைகள், கணவன் மனைவி என்று  குறுகிய வட்டத்திற்குள் அடைக்காமல், நண்பர்கள், உறவினர்கள், அண்டை அயல் என்று  விரித்து நோக்கினால் யார் மேல் பழி வந்தாலும் அது தன் பழியாக  நினைத்து செயல் பட வேண்டும்.

இப்படி எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டால், உலகம் எவ்வளவு இனிமையாக  இருக்கும் ?

ஏழு வார்த்தைகளில் உலகம் உய்ய வழி சொல்லித் தருகிறார் வள்ளுவர்.


1 comment:

  1. "நாணத்தின் உறைவிடம்" என்பது கொஞ்சம் புரிய முடியாததாக இருக்கிறது.

    ReplyDelete