Thursday, May 22, 2014

இராமாயணம் - பெண்ணாய் பிறந்த பிழை

இராமாயணம் - பெண்ணாய் பிறந்த பிழை 


மூக்கும்,  காதும், முலையும் அறுபட்ட பின்னால் சூர்பனகை எவ்வளவு வலியால் துடித்தாள் என்பதை கம்பன்  காட்டுகிறான்.படிக்கும் நமக்கு வலிக்கிறது.

வலி தாளாமல் குதிக்கிறாள். அது வானம் வரை  போகிறது.பின் கீழே விழுகிறாள். தரையில் கிடந்து நெளிகிறாள். கைகளை பிசைந்து ஒன்றும் தெரியாமல் திகைக்கிறாள். உயிர் சோர்வடைகிறது. பின் அங்கும் இங்கும் நகர்வாள் .நான் பெண்ணாய் பிறந்ததால் வந்த பிழை இது என்று நொந்து கொள்வாள். இப்படி துயரப் படும் அவள் எந்த குலத்தில் பிறந்தவள் தெரியுமா ? துயரம் கிட்ட வரவே பயப்படும் சிறந்த குலத்தில் பிறந்தவள். அவளுக்கு இப்படி ஒரு  துன்பம்.ஏற்கனவே துன்பம் நிறைந்த வீட்டில் பிறந்து இருந்தால், எவ்வளவோ துன்பங்களோடு இதுவும் ஒன்று என்று இருந்திருப்பாள். ஆனால், இவளோ துன்பம் என்பதே என்ன என்று அறியாத குலத்தில் பிறந்தவள். முதன் முதலாக துன்பம்  வருகிறது.

பாடல்

உயரும் விண்ணிடை; மண்ணிடை
    விழும்; கிடந்து உழைக்கும்;
அயரும்; கை குலைத்து அலமரும்;
    ஆர் உயிர் சோரும்;
பெயரும்; ‘பெண் பிறந்தேன் பட்ட
    பிழை ‘எனப் பிதற்றும்;
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத்
    தொல் குடிப் பிறந்தாள்.


பொருள்

உயரும் விண்ணிடை = வான் வரை எகிறி குதிப்பாள்

மண்ணிடை விழும் = மண்ணில் விழுவாள்

கிடந்து உழைக்கும் = கிடந்து வலியில் நெளிவாள்

அயரும் = அயர்ச்சி கொள்வாள்

கை குலைத்து அலமரும் =  கை தன் கட்டுப்பாட்டை இழந்து திகைப்பாள்

ஆர் உயிர் சோரும் = அருமையான உயிர் சோர்வடையும்

பெயரும் = நகர்வாள்

‘பெண் பிறந்தேன் பட்ட பிழை ‘எனப் பிதற்றும்; = பெண்ணாய் பிறந்ததால் வந்த பிழை என்று பிதற்றுவாள்

துயரும் = துயரமும்

அஞ்சி = அச்சப்பட்டு

முன் = முன்பிருந்தே

தொடர்ந்திலாத் = தொடர்ந்து வந்திலாத

தொல் குடிப் பிறந்தாள் = பழமையான குடியில் பிறந்தவள்

பிரமன் வழி வந்தவள் சூர்பனகை. தொல் குடி. அவள் குடியை தொட துன்பமும் அஞ்சும்.

எவ்வளவு  வலித்திருக்கும்.

பெண் எதையும் சகிப்பாள், ஆனால் அவளின் அழகை யாராவது குறைத்தால் அவளால் தாங்க  முடியாது.

வலி பொறுப்பாள்.

அவமானம் பொறுப்பாள்.

ஆனால், தன் அழகை குறைக்கும் யாரையும் அவள் பொறுக்க மாட்டாள்.

மூக்கும், காதும், முலையும் அறுபட்ட வலி  ஒருபுறம்.அந்த வலி கொஞ்ச நாளில்  போய்  விடும். ஆனால் மூக்கும், காதும், முலையும் இல்லாமல் அவள் எப்படி வெளியே போவாள் ? அந்த அவமானம் எவ்வளவு பெரிய வலி.



1 comment:

  1. இந்த மாதிரி ஒரு பெண்ணைப் பாடு படுத்திய இலக்குவன் மேல் கோபம் வருகிறது. இலக்குவனுக்கு ஒரு தண்டனை இல்லையா?

    இப்படி ஒரு அநியாயம் நடந்தால், நம் இலக்கியங்களில் "அதெல்லாம் சூர்ப்பனகையின் பூர்வ ஜென்ம பாவத்தின் பலன்" என்று சொல்லி விடுவார்கள்! அப்படியானால், சீதை கடத்தப்பட்டதும் பூர்வ ஜென்ம பலன்தானா?!?!?

    ReplyDelete