Thursday, May 1, 2014

நீத்தல் விண்ணப்பம் - சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?

நீத்தல் விண்ணப்பம் - சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?  


குழந்தையோடு ஒரு கோவிலுக்கோ, திருவிழாவுக்கோ, சினிமாவுக்கோ போகிறோம். நடுவில் பிள்ளையை காணவில்லை.

எப்படி பதறிப் போவோம். எப்படி தேடுவோம் ? எங்கெல்லாம் தேடுவோம் ? எதிரில் பார்க்கும் எல்லோரையும் கேட்போம் "இந்த மாதிரி ஒரு பிள்ளையை பார்த்தீர்களா " என்று. மனம் பதறும், பயம் கவ்விக் கொள்ளும், வயறு என்னோவோ செய்யும். என்னவெல்லாமோ நினைப்போம்....

அப்படியா இறைவனைத்  தேடுகிறோம் ?

நாள் கிழமை என்றால் கோவிலுக்குப் போவது, வீட்டில் விளக்கு ஏற்றுவது, பலகாரங்கள் பண்ணி உண்பது, அப்பப்ப சில பல பாடல்களை பாடுவது....

இதுவா தேடல் ?

தேடலில் ஆழம் இல்லை, அவசரம் இல்லை, நம்பிக்கை இல்லை. பின் எப்படி கிடைக்கும்.

மணி வாசகர் சொல்கிறார்.....

உன்னைப் பற்றி பாட மாட்டேன், உன்னை பணிய மாட்டேன், எனக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கும் உன்னை காண முடியாமல் இந்த ஊன் உடலை விட மாட்டேன், உன் பெருமைகளை நினைத்து வியக்க மாட்டேன், நீ எங்கே அலறித் தேட மாட்டேன், சிவன் எங்கே இருக்கிறான், யார் அவனைக் கண்டார்கள் என்று ஓடி சென்று அறிய முயல மாட்டேன், உள்ளம் உருக மாட்டேன், நின்று உழல்கிறேனே என்று உருகுகிறார் அடிகள்.

பாடல்

பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; `சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.


பொருள்

பாடிற்றிலேன் = உன்னைப் பற்றி பாட மாட்டேன்

பணியேன் = உன்னை பணிய மாட்டேன்

மணி = மணி போன்ற

நீ = நீ

ஒளித்தாய்க்குப் = எனக்கு அகப்படாமல் ஒளிந்து கொண்டிருக்கிறாய்

பச்சூன் = பசிய ஊன் (ஊன் உடம்பு)

வீடிற்றிலேனை = விட மாட்டேன்

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

வியந்து = உன் பெருமைகளை வியந்து

ஆங்கு = அங்கு

அலறித் = அலறி

தேடிற்றிலேன் = தேட மாட்டேன்

`சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று = செய்வான் எங்கே இருக்கிறான், யார் அவனைக் கண்டவர்கள் என்று

ஓடிற்றிலேன்; = ஓடிச் சென்று அறிய முயல மாட்டேன்

கிடந்து உள் உருகேன் = உள்ளம் உருக மாட்டேன்

நின்று உழைத்தனனே = கிடந்து உழல்கிறேனே

ஆர்வத்தோடு, ஆழத்தோடு, அவசரமாகத் தேடுங்கள்....

தேடுங்கள் கண்டடைவீர்கள்


No comments:

Post a Comment