Saturday, May 17, 2014

மண்டோதரி புலம்பல் - இராவணனை கொன்றது ஒரு அம்பு அல்ல

மண்டோதரி புலம்பல் - இராவணனை கொன்றது ஒரு அம்பு அல்ல 


இறந்து கிடக்கும்  இராவணன்  மேல் விழுந்து புலம்புகிறாள் மண்டோதரி.

அவ்வளவு பெரிய இராவணனை ஒரு சாதாரண மனிதனின் அம்பா வீழ்த்த முடியும் ? அவளால் இராமனின் வீரத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் கணவனை யாராலும் வீழ்த்த முடியாது என்று அவள் நம்புகிறாள். பின் எப்படி இராம பானம் பட்டு இறந்து கிடக்கும் கணவனையும் பார்க்கிறாள்.

அவன் இறந்ததற்கு காரணம்  இராமனின் வீரம் மட்டும் அல்ல

- சீதையின் பேரழகும்
- சீதையின் கற்பும்
- இராவணன் அவள் மேல் கொண்ட காதலும்
- சூர்பனகை இழந்த மூக்கும்
- தசரதன் போ என்று இராமனிடம் சொன்ன சொல்லும்
- எல்லாம் சேர்த்து இந்திரனின் தவத்திற்கு துணை போய் இராவணனை கொன்று விட்டது என்கிறாள்



பாடல்

'காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்

ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,

வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!

பொருள்



'காந்தையருக்கு = பெண்களுக்கு

அணி அனைய = அணி போன்ற. பெண்களில் சிறந்த

சானகியார் பேர் அழகும் =   ஜானகியின் பேரழகும்

அவர்தம் கற்பும் = அவளின் கற்பும்

ஏந்து = உயர்ந்த, சிறந்த


புயத்து = கைகளை உடைய

இராவணனார் காதலும், = இராவணின் காதலும்

அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும் = சூர்பனகையின் இழந்த மூக்கும்

வேந்தர் பிரான் = வேந்தர்களின் தலைவன் ஆன

 தயரதனார் = தசரதனின்

பணியதனால் = கட்டளையால்

வெங் கானில் = வெம்மையான காட்டில்

விரதம் பூண்டு = விரதம் பூண்டு

போந்ததுவும் = இராமன் போனதுவும்

கடைமுறையே = கடைசியில்

புரந்தரனார் = இந்திரனின்

பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! = பெரிய தவமாய் போயிற்று அம்மா

இவ்வளவும் இல்லாமல் இராமன் சண்டை இட்டு இருந்தால் இராவணனை வென்று இருக்க முடியாது என்று சொல்லாமல் சொல்கிறாள்.

மேலும், கற்பின் வலிமை எதையும் சாதிக்கும்,

 பெண்ணின் கோபம் (சூர்பனகை) எதையும் சாதிக்கும்

என்று சொல்லாமல் சொல்கிறாள்.



2 comments:

  1. இந்த மாதிரிப் பாடல்களில் "காதல்" "காமம்" என்று இரண்டு சொற்களையும் கலந்து உபயோகிக்கின்றனர். நாம் இப்போது காதல் வேறு, காமம் வேறு என்கிறோம். இராவணன் சீதை மேல் கொண்டது காதலா, காமமா?!

    ReplyDelete
    Replies
    1. தன் கணவன் இன்னொரு பெண்ணை விரும்புகிறான் என்றால், எந்தப் பெண்ணும் அதை காமமாகத்தான் பார்ப்பாள். மண்டோதரி , இராவணன் சீதை மேல் கொண்டது காதல் என்கிறாள். இராவணனுக்கு மிக நெருங்கியவள், புத்திசாலி மண்டோதரி. அவள் கூற்றில் உண்மை இருக்கும்.

      Delete