Wednesday, May 7, 2014

பழ மொழி - நல்லாரை நல்லாரே உணர்வர்

பழ மொழி - நல்லாரை நல்லாரே உணர்வர் 


உங்களை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, உங்கள் நல்ல மனதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று வருத்தப் பட்டது உண்டா ?

கவலையை விடுங்கள்.

படித்த அறிஞனை இன்னொரு அறிஞனால்தான் அறிய முடியும். முட்டாளால் அறிவாளியை அறிய முடியாது.

அது போல நல்லவர்களை இன்னொரு நல்லவன் தான் அறிய முடியும். மற்றவர்களால் முடியாது.

இரும்பை பிளக்க  வேண்டும் என்றால் அது இன்னொரு இரும்பு அல்லது இரும்பை விட உறுதியான ஒன்றினால்தான் முடியும்.

முட்டாள்களோடு பேசியோ, வாதம் பண்ணியோ புண்ணியம் இல்லை. அவர்கள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

நல்லவர்கள் தான் நல்லவர்களை அறிவார்கள்.

பாடல்

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயிலாலே போழ்ப அயில்.


பொருள் 

நல்லார் = நல்லவர்களின்

நலத்தை = நல்ல குணத்தை

உணரின்= உணர வேண்டும் என்றால்

அவரினும் நல்லார் உணர்ப = அவரை விட நல்லவர்களே அதை உணர்வார்கள்

 பிறருணரார் = பிறர் உணர மாட்டார்கள்

நல்ல = நல்ல

மயிலாடு = மயில் ஆடுகின்ற

மாமலை = பெரிய மலையை

வெற்ப = அரணாகக் கொண்டவனே 

மற்(று) என்றும் = மற்றபடி எப்போதும்

அயிலாலே = இரும்பாலே

போழ்ப = பிளக்க முடியும்

அயில் = இரும்பை

உங்களை விட நல்லவர்களைத்  போங்கள் , அவர்கள் உங்களை அறிந்து கொள்வார்கள்.

உங்களை விட கீழே உள்ளவர்கள் உங்களை ஒரு காலும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.



1 comment:

  1. புவனா அவர்கள் முன்பு எழுதியது போல, கீழே உள்ளவர்களை எப்படி முன்னேற்றுவது?

    "கற்றாரைக் கற்றாரே காமுறுவர், இடுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்" என்பது நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete