Saturday, October 27, 2018

இராமானுஜர் நூற்றந்தாதி - கள்ளம் கழற்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - கள்ளம் கழற்றி 



உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரிடம் செல்வோம். அவர் ஸ்கேன், X Ray , blood test எல்லாம் எடுத்து பார்த்து விட்டு, சாதாரண வியாதி என்றால் மருந்து மாத்திரை தருவார்.


அதுவே கொஞ்சம் சிக்கலான வியாதி என்றால், "இதற்கு அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் " என்று சொல்லி அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விடுவார்.


அறுவை சிகிச்சை என்றால் என்ன சும்மாவா ?


இரத்த அழுத்தம் பார்க்க வேண்டும், சர்க்கரை அளவு பார்க்க வேண்டும் , எல்லாம் சரியாக இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும் போது வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து தருவார்கள். சிகிச்சை முடிந்து உடம்பு பழைய படி வர அதற்கு வேண்டிய மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.


உடம்பில் ஒரு உபாதை என்றாலே இந்தப் பாடு.


மனதில் சிக்கல் என்றால் என்ன செய்வது?


மனதுக்கு எவ்வளவு வியாதி வருகிறது - கோபம், தாபம், பொறாமை, பயம், காமம், என்று ஆயிரம் வியாதி வருகிறது. மனதுக்குள் போய் இவற்றை அறுவை சிகிச்சை செய்து அறுத்து அகற்ற வேண்டும். அதுவும் வலி இல்லாமல்.  யார் செய்வது ? எப்படி செய்வது ?


அது மட்டும் அல்ல, நமக்கு அப்படி ஒரு மனோ வியாதி இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. உடம்பில் நோய் என்றால் தெரியும். வலிக்கும். சோதனை செய்து கண்டு பிடித்து விடலாம். மனதில் ஒரு வியாதி வந்தால் தெரியக் கூட செய்யாது.


அது மட்டும் அல்ல, ஒரு முறை சரி செய்தால் மீண்டும் அந்த வியாதி வரக் கூடாது. அப்படி ஒரு மருத்துவம் செய்ய வேண்டும்.


யார் செய்வார்கள் ? எப்படி செய்வார்கள் ?


ஒரு நல்ல ஆசிரியன், ஆசாரியன் தான் நம்மை அறிந்து, நம் மனதில் உள்ள குற்றங்களை களைந்து, நம்மை கொண்டு போய் இறைவனிடம் சேர்ப்பிக்க முடியும்.


எங்கு போய் அப்படி ஒரு ஆச்சரியனை நாம் தேடி கண்டு பிடிப்பது? தேவையே இல்லை. நாம் தயாராக இருந்தால், ஆசாரியன் நம்மைத் தேடி வருவான்.


திருவரங்கத்தமுதனார் சொல்கிறார்


"இராமானுஜரே , நீர் என் மனதுக்குள் நான் அறியாமல் புகுந்து, என் மனதில் உள்ள குற்றங்களை எல்லாம் நீக்கி விட்டீர். அது மட்டும் அல்ல, இனி அக்குற்றங்கள் என்னிடம் வரமால் செய்து விட்டீர். மேலும், என்னை அந்த திருமகள் துணைவனிடம் கொண்டு சேர்த்தும் விட்டீர் "


என்ன உன் கருணை என்று உருகுகிறார்.


பாடல்


கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே.

பொருள்


கருத்திற் புகுந்து = என் மனதினில் புகுந்து

உள்ளிற் = உள்ளத்தில் உள்ள

கள்ளம் கழற்றிக் = கள்ளம் (குற்றம்) நீக்கி

கருதரிய = நினைத்தும் பார்க்க முடியாத

வருத்தத்தி னால் = சிரமப் பட்டு

மிக வஞ்சித்து = என்னை ஏமாற்றி

நீயிந்த = நீ இந்த

மண்ணகத்தே = மண்ணுலகில்

திருத்தித் = என்னை திருத்தி

திருமகள் = இலக்குமி தேவியின்

ள்வனுக் காக்கிய பின் = துணைவனுக்கு என்று என்னை ஆக்கிய பின்

என் நெஞ்சில் = என் நெஞ்சில்

பொருத்தப் படாது = பொருந்தாது

எம் இராமா னுச! = எம் இராமானுச

மற்றோர்  = வேறு ஒரு

பொய்ப் பொருளே.= பொய் பொருளே

ஒருவரின் மனதால், அவரே அறியாமல் போய் அதில் உள்ள குற்றங்களை களைவது என்றால்  எளிதான காரியம் அல்ல. இராமானுசர் அப்படி , திருவரங்கத்து அமுதனார்  மனதில், அவரே அறியாமல் கள்ளத்தனமாக புகுந்து, அவர் மனதில் உள்ள குற்றங்களை நீக்கினாராம். அது மட்டும் அல்ல, குற்றங்களை நீக்கி  அவரை கொண்டு போய் இறைவனிடம் சேர்ப்பித்தும் விட்டார்.


"என் உள்ளம் கவர் கள்வன் " என்பார் திரு ஞான சம்பந்தர். இறைவனோ, ஆச்சாரியனோ , நம்மை கேட்டு நமக்கு நல்லது செய்வது இல்லை. நமக்குத் தெரியாமலேயே பல நன்மைகளை செய்து விடுகிறார்கள்.


வீட்டுக்கு வரும் திருடன் , நம்மை கேட்டு விட்டா வருகிறான். நமக்குத் தெரியாமல் நம் வீட்டுக்குள் புகுந்து நல்லதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.


இங்கே, ஆசாரியன் , வஞ்சககமாக நம் மனதில் நுழைந்து, நம் மனதில் உள்ள  வேண்டாத விஷயங்களை எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.


"பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி " என்பார் மணிவாசகர்.


நல்லது எது கெட்டது எது என்று நமக்கு எங்கே தெரிகிறது?


நல்ல ஆசாரியன், குரு நமக்கு எது நல்லதோ அதைச் செய்வான், அதுவும் நாம் அறியாமலேயே.


எல்லாம் குருவருள்.


ஆச்சரியனின் அருள் எப்படி எல்லாம் நமக்கு உதவுகிறது என்று இராமானுச நூற்றந்தாதியில்  திருவரங்கத்து அமுதனார் உருகி உருகி நூறு பாடல்கள் பாடி இருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.


குருவருள் சேரட்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_27.html

1 comment:

  1. இப்படியும் ஒரு குரு பக்தியா! குரு வந்தனையா! அற்புதமாக இருக்கிறதே!

    உள்ளத்தில் உள்ள குற்றங்களை அழிப்பவனே குரு என்ற கருத்து எண்ணிப் பார்த்தால் ஆழமாக இருக்கிறது.

    ReplyDelete