Tuesday, October 30, 2018

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன்

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன் 


தெரு நாய் பார்த்து இருக்கிறீர்களா? யாரவது காரில் போனால், அந்த காரை துரத்தும். குலைக்கும். எங்கோ வேறு ஒரு தெருவில் ஒரு நாய் குரைத்தால், இந்த நாயும் குரைக்கும். காரணம் இல்லாமல் மற்ற நாய்களோடு சண்டை போடும். இங்கிருந்து அங்கு ஓடும். பின் அங்கிருந்து இங்கு ஓடி வரும். நாள் பூராவும் ஏதோ சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும்.

இரவில் களைத்துப் போய் விடும்.

சரி, உருப்படியாக என்ன செய்தாய் என்று கேட்டால் அதற்கு ஒன்றும் தெரியாது. ஓடினேன், வந்தேன், குறைத்தேன், கார்களை துரத்தினேன் என்று சொல்லும்.


அந்த நாய்க்கு அவ்வளவுதான் அறிவு.

நமக்கு ?

இத்தனை வயது வரை என்ன செய்தோம்?

25 வயது வரை ஏதேதோ படித்தோம். படித்ததில் ஏதாவது நினைவில் இருக்கிறதா ? அது வாழ்க்கைக்கு எங்காவது உதவுகிறதா ?

சரி, வேலைக்குப் போனோம். சாதித்தது என்ன?  யாருக்கோ பணம் போனது. யாருக்கோ நன்மை கிடைத்தது. நாம் சாதித்தது என்ன.

திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்றோம். அதனால் கிடைத்த பலன் என்ன?

 இப்படி ஒரு குறிக்கோள் இல்லாமல் அந்தத் தெரு நாய் போல அலைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நாய் போலத்தான் பேயும். ஒரு குறிக்கோள் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்.

சுந்தரர் சொல்கிறார் ...

"நாய் போன்ற நான் ஒரு குறிக்கோள் இன்றி பேய் போலத் திரிந்தேன். எப்படியோ பெற  முடியாத உன் அருளைப் பெற்றேன். இனி உனக்கு அடிமை ஆகிவிட்டேன். இனி, நான் என்று ஒன்று இல்லை "

பாடல்

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் 
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெறலாகாவருள் பெற்றேன் 
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்  நல்லூரருட் டுறையுள் 
ஆயாஉனக் காளாய்இனி அல்லேன் என லாமே.

பொருள்

நாயேன் = நாய் போன்றவனான நான்

பல நாளும் = பல நாட்கள்

நினைப் பின்றி = என்ன செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்ற நினவு இல்லாமல்

மனத் துன்னைப் = மனதில் உன்னை

பேயாய்த்திரிந் தெய்த்தேன் = பேய் போல திரிந்தும் உன்னை அடையவில்லை

பெறலாகாவருள் பெற்றேன் =  பெற முடியாத அருளைப் பெற்றேன்

வேயார் = மூங்கில் காடுகள் நிறைந்த

பெண்ணைத் = பெண்ணை ஆற்றின் கரையில்

தென்பால் = தெற்கு பக்கம் உள்ள

வெண்ணெய் = திருவெண்ணெய்

நல்லூரருட் டுறையுள் = நல்லூர் என்ற அருள் தலத்தில்

ஆயா = தலைவனே

உனக் காளாய் = உனக்கு எற்றவனானேன்

இனி அல்லேன் என லாமே. = இனி நான் என்று ஒன்றும் இல்லை என்று ஆகி விட்டேன்

வாழ்வின் குறிக்கோள் என்ன என்று அறிந்து பின் செல்லுங்கள். அங்காடி நாய் போல் அலைந்தனையே மனமே என்பார் பட்டினத்து அடிகள்.

இனிமையான பாடல்.

இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். உண்மை புலப்படும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_30.html



No comments:

Post a Comment