Thursday, June 17, 2021

திருக்குறள் - வழி அடைக்கும் கல் - பாகம் 2

 

திருக்குறள் - வழி அடைக்கும் கல்  - பாகம் 2 


(இதன் முதல் பகுதியை கீழே உள்ள பதிவில் காணலாம்)

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1.html



பாடல் 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/2.html


(Please click the above link to continue reading)


வீழ்நாள் = செய்யாது கழியும் நாள் 


படாஅமை  = உளவாகாமல் 


நன்றாற்றின் = நல்லது செய்தால், அறத்தை செய்தால் 


அஃதொருவன் = அந்த செயல் 


வாழ்நாள் = மீண்டும் மீண்டும் வந்து வாழும் நாட்களை 


வழியடைக்கும் கல் = வழி அடைக்கும் கல் 



ஐந்து விதமான குற்றங்களால் வரும் இரண்டு விதமான வினைகளால் உயிர் இந்த உடம்போடு கூடி அந்த அந்த வினைகளது பயனை அனுபவிக்கும். எனவே, அந்தக் காலம் முழுவதும் வாழ் நாள் எனப்பட்டது. 


அது என்ன ஐந்து வித குற்றம், இரண்டு வினை,  வினைப் பயன் ....?


நாளை சிந்திப்போமா?


என்று முந்தைய ப்ளாகில் சிந்தித்த்தோம். 


ஐந்து விதமான குற்றங்கள் என்பன 


அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, மேலும்  வெறுப்பு  என்பவை. 


அவிச்சை என்றால் மயக்கம். நல்லதை தீயவை என்றும் தீயதை நல்லது என்றும் நினைப்பது.  மக்கள் நல்லது எது கெட்டது எது என்று மயங்குகிறார்கள். ரொம்ப போக வேண்டாம், எந்த உணவு நல்லது என்று தேடப் போனால், ஆளாளுக்கு ஒன்று சொல்கிரார்கள். காப்பி குடிப்பது நல்லது என்று கொஞ்ச பேர். இல்லை கெடுதல் என்று கொஞ்சம் பேர். மிதமான அளவு மது குடித்தால் உடம்புக்கு நல்லது என்று சிலர். குடிக்கவே கூடாது என்று சிலர். எது நல்லது, எது தீயது என்று தெரியாமல் குழம்புவது அவிச்சை. 


அகங்காரம் - தான் என்ற செருக்கு. நான் தான் எல்லாம், என்னை விட்டால் ஒன்றும் இல்லை, என்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற மமதை. 


அவா - அவா என்றால் ஆசை இல்லை. ஒரு பொருளை அடைய நினைக்கும் முயற்சிக்கு அவா என்று பெயர். 


விழைவு அல்லது ஆசை - பெற்ற ஒரு பொருளை பிரிய மனம் இல்லாமல் பற்றிக் கொண்டு இருப்பது. ஆசை ஆசையாக கட்டிய வீடு என்று சொல்லும் போது அதை விட முடியாத பற்று. 


இராமன் காடு போன போது கௌசலை உயிரை விடவில்லை, தசரதன் விட்டான். கோசலை கொண்டது அன்பு. தசரதன் கொண்டது ஆசை. இராமனை பிரிய முடியவில்லை. அது ஆசை.  ஆசை கொல்லும். அன்பு கொல்லாது.


வெறுப்பு - பகைமை பற்றி தோன்றும் உணர்வு. 


இந்த ஐந்து குற்றங்களால் நல்வினை, தீவினை செய்கிறோம். 


நல்வினை செய்தால் புண்ணியம் கிடைக்கிறது. 


தீவினை செய்தால் பாவம் வந்து சேர்கிறது. 


புண்ணியம் சேர்ந்தால்  அதை அனுபவிக்க மறு பிறவியில் இன்பம் கிட்டுகிறது. 

பாவம் சேர்ந்தால் அதை அனுபவிக்க மறு பிறவியில் துன்பம் நிகழ்கிறது. 


எனவே

ஐந்து வித குற்றங்கள். அதில் இருந்து 


இரண்டு வித வினைகள் - நல்வினை, தீவினை. அதில் இருந்து 


இரண்டு விளைவுகள் - புண்ணியம், பாவம். அதில் இருந்து 


இரண்டு அனுபவங்கள் - இன்பம், துன்பம்

நல்வினை - புண்ணியம் - இன்பம் 

தீவினை - பாவம் - துன்பம். 


நல்லது செய்தாலும் பிறவி வரும், தீயது செய்தாலும் பிறவி வரும். 


"அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர். இரண்டும் கயிறு தான். இரண்டும் நம்மை இந்த பிறவியோடு கட்டிப் போடும். இதில் இருந்து விடுதலை தராது. 


சரி, அதுக்கு என்னதான் செய்வது? இதில் இருந்து எப்படி மீழ்வது என்றால், அதற்கு ஒரே வழி தொடர்ந்து அறம் செய்வதுதான். 


அந்த அறம் இந்த பிறவி என்ற வழியை அடைக்கும் கல். இதற்கு மேல் போக முடியாது என்று அடைக் கல் வழியை அடைப்பது போல, இனிமேல் பிறக்க முடியாது என்று அறம் உங்கள் பிறவிப் பாதையை அடைக்கும் கல் என்கிறார் வள்ளுவர். 


"வாழ்நாள்" என்ற ஒரு வார்த்தையை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு விரிவாக உரை செய்கிறார் பரிமேலழகர். 


நம்மால் இதை எல்லாம் சிந்திக்கவாவது முடியுமா? 


அவர் உரை இல்லை என்றால் குறள் நமக்கு புரிந்தே இருக்காது. 


யார் செய்த புண்ணியமோ, இதை எல்லாம் படிக்க, இரசிக்க கொடுத்து வைத்து இருக்கிறோம்.





என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

5 comments:

  1. அற்புதம் ...அய்யா இல்லையேல் உரை புரிதலேது !

    அருமை அண்ணா

    ReplyDelete
  2. ஐயா, அருமையான விளக்கம். நன்றி. ஒரு வினா? தொடர்ந்து அறம் மட்டுமே புரிந்தால் பிறவிக்கயிறு அறுபடுமா?

    ReplyDelete
  3. பரிமேலழகர் உரை வேண்டும்தான். இருப்பினும் உங்களுடைய விஸ்தாரமான, நேர்த்தியான விளக்கம் இல்லாமல் எனக்கு புரிந்திருக்காது

    ReplyDelete
  4. தங்களின் விளக்கம், உரை மிக அருமை எனக்கு🙏

    ReplyDelete
  5. பரிமேலழகர் உரை ஆழமானது, அதைப் புரிந்துகொள்ளும்படித் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete