Tuesday, June 29, 2021

திருக்குறள் - இல்லறம் - இல்லறத்தின் நோக்கம்

திருக்குறள் - இல்லறம் - இல்லறத்தின் நோக்கம்


வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேற வேண்டும். 


வீடு பேறு அடைவதுதான் வாழ்வின் நோக்கம் என்று நம்மவர்கள் கொண்டார்கள். 


இல்லை. எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. கடவுளே இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது. பின் எப்படி அவரை அடைவதை நான் என் வாழ்வின் குறிக்கோளாக கொள்ள முடியும் என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. 


வீடு பேறு வேண்டாம். வேறு என்ன குறிக்கோள் இருக்க முடியும்? 


செல்வம் சேர்ப்பது, இன்பமாக இருப்பது, புகழ் அடைவது,  பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் செய்வது, கவிதை எழுதுவது, ஊரு சுற்றுவது என்று எவ்வளவோ குறிக்கோள்கள் இருக்கலாம். 


சரி, அவற்றை அடைந்த பின் என்ன செய்வது? 



அவற்றை அடைந்தவர்கள் என்ன செய்கிறார்கள்? 


எந்த ஒரு குறிக்கோளும் முடிவு அல்ல. ஒன்றை அடைந்தால் மனம் அதைவிட பெரியது ஒன்றை நாடும். 


ஒரு இலட்சம் சேர்ப்பது குறிக்கோளாக இருந்தால், அது அடைந்த பின், பத்து இலட்சம், பின் கோடி, பின் பத்து கோடி,  என்று விரிந்து கொண்டே போகும். 


அப்படி என்றால் அதற்கு மேல் ஒன்று இல்லை என்ற ஒரு நிலை வரை நாம் சென்று கொண்டே இருப்போம் அல்லவா?  அதை விட பெரியது, சிறந்தது என்று ஒன்று இல்லை என்றால், அது தான் கடைசி. அதை அடைந்த பின் வேறு ஒன்று இல்லை. 


அப்படி ஒன்று இருக்கிறதா என்ன ? அது என்ன? 




(click the above link to continue reading)


அதை நீங்கள் கடவுள் என்று வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது தன்னைத் தான் அறிவது என்று வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். 


வள்ளுவர் அதற்கு வீடு பேறு என்று வைத்து இருக்கிறார். அவ்வளவுதான். 


அதை அடைவதுதான் வாழ்வின் நோக்கம். எல்லோருக்கும். அதுவே குறிக்கோள்.


அதை எப்படி அடைவது?

துறவறத்தின் மூலமே அடைய முடியும். 


சரி.


துறவறத்தை எப்படி அடைவது?


இல்லறத்தின் மூலமே அதை அடைய முடியும். (விதி விலக்குகள் இருக்கலாம்) 


எனவே, முதலில் இல்லறம் பற்றி சொல்லத் தொடங்குகிறார். 


இல்லறம் என்பது வீடு பேறு அடைய ஒரு வழியே தவிர அதுவே முடிவு அல்ல. 


பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், கல்யாணம் பண்ணி, பிள்ளை குட்டிகள், பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்வதுதான் வாழ்வின் நோக்கம் என்று. 


அது அல்ல. 


இல்லறம் முதல் படி. 


அடுத்த படி, துறவறம். 


அடுத்த படி, வீடு பேறு. 


முதல் படியிலேயே இருந்து விடக் கூடாது. 


கோவிலுக்குப் போனால் சுண்டல் கிடைக்கும். 


சுண்டலுக்காக கோவிலுக்கு போவதா?


இல்லறத்தில் ஆண் பெண் இன்பம், பிள்ளைகள் இன்பம், பொருள்களினால் வரும் இன்பம், சுற்றம், நட்பு இவற்றால் வரும் இன்பம் என்று இதெல்லாம் இருக்கும். இவை எல்லாம் சுண்டல் போல. 


கோவிலுக்குப் போய், வேறு ஒன்றும் செய்யாமல்,  சுண்டல் மட்டும்  வாங்கி உண்டு விட்டு வந்தால் எப்படி இருக்கும். 


கணவன், மனைவி, பிள்ளைகள், சாப்பாடு, டிவி,  அரட்டை, இதையெல்லாம் கடந்து மேலே போக வேண்டும். 


ஆசார அனுஷ்டானங்களிலேயே வாழ்க்கை முடிந்து விடக் கூடாது. 


இல்லறம் என்பது ஒரு நீண்ட சாலை.  திருமணத்தில் தொடங்கி வீடு பேறு வரை அந்த சாலை செல்லும். நடந்து கொண்டே இருக்க வேண்டும். தொடங்கிய இடத்திலேயே அமர்ந்து விடக் கூடாது. 


போகிற வழியில் கொஞ்சம் பசிக்கும். வழியில் ஒரு டீ கடை இருக்கும். ஒரு தேநீர் அருந்தலாம். 


அடடா என்ன அருமையான தேனீர். நான் இங்கேயே இருந்து விடுகிறேன். மேலே போக வேண்டாம் என்று அந்த டீ கடையிலேயே உட்கார்ந்து இருபதல்ல வாழ்க்கை. 


எவ்வளவு சுவையாக இருந்தாலும், குடித்த தேநீருக்கு காசு கொடுத்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.


எப்படி போவது என்று வள்ளுவர் சொல்கிறார். 


அவர் கை பிடித்துச் செல்வோமா?


No comments:

Post a Comment