Saturday, June 19, 2021

திருக்குறள் - அறத்தால் வருவதே இன்பம்

 திருக்குறள் - அறத்தால் வருவதே இன்பம் 


உயிர்கள் ஒன்றில் இருந்து மற்றது பல விதங்களில் மாறுபாடு கொண்டுள்ளன. ஒரே வீட்டில் பிறந்த பிள்ளகைளிடம் கூட பல வேற்றுமைகள் இருக்கின்றன. 


இருந்தும், உலகம் முழுவதிலும், அனைத்து உயிர்களிடத்தும் ஒரு ஒற்றுமை உண்டு. உயிர் என்று சொல்லும் போது இங்கே மனிதர்களை மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், செடி, போன்றவையும் தான். 


அது என்ன என்றால் "இன்பத்தை நாடுவது".


இன்பம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு உயிர் இருக்கிறதா? அனைத்து உயிர்களும் இன்பம் நோக்கியே வாழ்கையை நடத்துகின்றன. 


இன்பம் எப்படி வரும் ? 


பணத்தால்,பதவியால், படிப்பால், அதிகாரத்தால் வருமா?


இல்லை.  இன்பம் வர ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. 


அறத்தான் வருவதே இன்பம் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_19.html


(click the above link to continue reading)



அறத்தான் வருவதே இன்பம் = அறத்தால் வருவதே இன்பம் 


மற் றெல்லாம் = மற்றவை எல்லாம் 


புறத்த = துன்பம் 


புகழு மில  = புகழும் இல்லாதான 


மேலோட்டமான பொருள் இது. 


இனி, பரிமேலழர் கூறும் ஆழ்ந்த நுண்ணிய பொருளை காண்போம்.


முதலாவது, அறத்தான் என்றால் இல்லறத்தால் வருவதே இன்பம் என்கிறார். இல்லறம் என்று குறளில் இல்லை. இல்லறம் என்று எப்படி உரை எழுதலாம். ஏன் துரவறத்தால் இன்பம் வராதா? வள்ளுவர் இல்லறம் என்று சொல்லவில்லையே என்று கேட்டால், அதற்கு விளக்கம். 


வள்ளுவர் தன் நூலை அறம், பொருள், இன்பம் என்று மூன்றாகப் பிரித்து இருக்கிறார். அதில் இன்பம் என்பது தலைவனும் தலைவியும் தம்முள் இரண்டற கலந்து அனுபவிக்கும் இன்பத்தையே சொல்கிறார். அது பின்னால் வரப் போகிறது. 


அந்த இன்பம் இல்லறத்தில் தான் கிடைக்கும். எனவே, இங்கே அறம் என்று சொன்னது "இல்லறம்" தான் என்று பொருள் கொள்கிறார். 


இரண்டாவது, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க இல்லறம் தேவை இல்லையே. அதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கின்றனவே என்று விதண்டாவாதம் பேசினாலும், அதற்கும் வள்ளுவர் விடை தருகிறார். 


அப்படி வரும் இன்பங்கள், முதலில் இன்பம் போல் தோன்றினாலும், அவை இன்பம் அல்ல. துன்பமே என்கிறார். 


துன்பம் என்ற சொல்லே குறளில் இல்லையே? என்றால். 


ஆம், துன்பம் என்ற சொல் குறளில் இல்லை, ஆனால் "புறத்த" என்ற சொல் இருக்கிறது. 


இன்பத்திற்கு புறத்த என்றால் இன்பத்தில் சேராத, தள்ளி நிற்கும், விலகி நிற்கும், சம்பந்தமில்லாத என்று அர்த்தம். இன்பத்தில் இல்லை என்றால் அது துன்பம் தானே.


மேலும், "புகழும் இல" என்கிறார். 


இல்லறத்துக்கு வெளியே ஒருவன் இன்பம் காண்பானாகில் அது துன்பத்தில் முடிவது மட்டும் அல்ல, அவனுக்கு அது புகழும் சேர்க்காது.


பரத்தையரிடம் போவது, மாற்றான் மனைவியை அடைவது என்பதெல்லாம் முதலில் இன்பம் போல் தோன்றினாலும் பின் துன்பத்தைத் தந்து, அவன் புகழையும் அழிக்கும். 


பெரிய பதவிகளில் இருப்பவர்கள், கண நேரம் சபலப்பட்டு எவ்வளவு பெரிய துன்பத்தில் விழுந்து விடுகிறார்கள், அவர்கள் சேர்த்த பேரும் புகழும் அழிந்து போகிறதை நாம் எவ்வளவோ முறை கண் கூடாக பார்க்கிறோம். 




பின்னால் வரும் "இன்பம்" என்ற சொல்லுக்கு "காம நுகர்ச்சி" என்று பொருள் எடுக்கிறார். 


மூன்றாவது , "அறத்தான்" என்று ஏன் கூறினார்? அறத்தால் என்று தானே சொல்லி இருக்க வேண்டும். "ஆன்' என்ற உருபு "உடனிகழ்ச்சிகண்" வந்தது என்கிறார். 


உடன் நிகழ்வது என்றால் இரண்டும் ஒன்றாக நிகழ்வது. 


இராமனோடு இலக்குவன் வந்தான் என்று கூறும் போது எப்படி ஓடு ஒருபு எவ்வாறு இருவரும் ஒன்றாக வந்தார்கள் என்று சொல்கிறதோ அது போல 'ஆன்' உருபும் ஒன்றாக நிகழ்வதை குறிக்கும். 


இல்லறத்தில் இருப்பதும், இன்பம் அனுபவிப்பதும் ஒன்றாக நிகழும். அறம் செய்வது இப்போது. இன்பம் வருவது பின்னொரு நாளில் என்று அல்ல. கூடவே நிகழும். நிகழ வேண்டும். 


நான்காவது, பலர் நினைக்கலாம், அறம் அல்லாத வழியில் செல்பவர்கள் இன்பமாகத்தானே இருக்கிறார்கள். நாமும் அந்த வழியில் சென்றால் என்ன என்று. வள்ளுவர் தெளிவாக சொல்கிறார். அறத்தான் வருவதே இன்பம். மற்றவை எல்லாம் இன்பம் போலத் தோன்றினாலும் அவை இன்பம் அல்ல.


இலஞ்சம் வாங்குவது...அந்த நேரத்துக்கு அது இன்பம் போலத் தோன்றும். மாட்டிக் கொண்டால்? வேலை போகும். மானம் போகும். சிறைக்குச் செல்ல வேண்டும். புகழ் போய் விடும். 


அதிகாரத்தைப் பயன் படுத்தி தனக்கு கீழே பணி புரியும் பெண்களை தன் வசப்படுத்தலாம். அதிகாரம் போன பின் அவை வெளிவரும்.  வரும் போது எவ்வளவு அவப் பெயரை கொண்டு வரும் ? தினம் செய்திகளில் பார்கிறோமே.


அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில


யார் சொல்லித் தருவார்கள்?

3 comments:

  1. அருமையான விளக்கம்

    ReplyDelete
  2. ஆன் உருபு இலக்கணம் எளிமை, அருமை.

    ReplyDelete
  3. இதை அனைவரும் படிக்க இறைவன் அதன் அருள் புரிய வேண்டும்

    ReplyDelete