Tuesday, June 1, 2021

நள வெண்பா - பெண்மை அரசு

நள வெண்பா - பெண்மை அரசு 


இனி வரும் நாட்களில் பெண்மை என்று ஒரு குணம் இருந்ததாகவும், அந்தக் குணம் பெண்களிடம் இருந்ததாகவும் வரலாற்று புத்தகங்களில் காணலாம்.  பெண்மை என்றால் ஏதோ அடிமைத்தனம் என்ற எண்ணம் பெண்களுக்கு வந்து விட்டது. எப்படியாது இந்தப் பெண் தன்மையை விட்டு ஒழிக்க வேண்டும் என்று பாடு படுகிறார்கள். 


ஆண்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அவற்றை தாங்களும் செய்வோம் என்று பெண்கள் ஆண்மையை ஏற்றுக் கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். 


நாங்களும் தண்டால், குஸ்தி போடுவோம், பளு தூக்குவோம், படையில், போலீஸ் வேலையில் சேர்வோம், பிள்ளைகளை பார்க்க மாட்டோம் என்று ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டு இருக்கிறது. 


அது தவறா, சரியா என்று காலம்தான் சொல்ல வேண்டும். 


அந்தக் காலத்தில், 


தமயந்தி இருந்தாள். அவள் எப்படி இருந்தாள் என்று ஒரு அன்னப் பறவை நள  மன்னனிடம் கூறுகிறது. 


"பெண்மை" என்ற அரசை ஆண்டாளாம்.


அது என்ன அரசு?


"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் நான்கு படைப் பிரிவுகளாக, ஐந்து புலன்களும் அமைச்சர்களாக இருந்து அறிவு புகட்ட, காலில் அணிந்த சிலம்பு முரசாக ஒலிக்க, கண்கள் இரண்டும் வேல் மற்றும் வாள் என்ற ஆயுதமாக இருக்க, நிலவு போன்ற குளிர்ந்த முகம் வெண் கொற்றக் குடையாக இருக்க, பெண்மை என்ற அரசை அவள் ஆண்டாள்" என்கிறார் புகழேந்தி. 


பாடல் 


 நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா

ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்

வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்

ஆளுமே பெண்மை அரசு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post.html


(Please click the above link to continue reading)


நாற்குணமும்  = அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் 


நாற்படையா  = நான்கு படைகளாக (இரதம், யானை, குதிரை, காலாட் படை) 


ஐம்புலனும் = ஐந்து புலன்களும் 


நல்லமைச்சா = நல்ல அமைச்சர்களாக இருந்து வழி காட்ட 


ஆர்க்கும் சிலம்பே = ஒலிக்கும் சிலம்பே  (கொலுசு) 


அணிமுரசா = முரசமாக ஒலிக்க 


வேற்படையும் = வேல் படையும் 


வாளுமே  = வாள் படையும் 


கண்ணா  = இரண்டு கண்களாக 


வதன = முகம் 


மதிக் = சந்திரன், நிலவு 


குடைக்கீழ் = வெண் கொற்றக் குடைக் கீழ் 


ஆளுமே பெண்மை அரசு. = பெண்மை என்ற அரசை ஆண்டு கொண்டிருந்தாள் 


நல்ல காலம் புகழேந்தி எழுதி வைத்தார். 


4 comments:

  1. முதல் இரண்டடிகளில் எதுகை என்ன வகை என்று சொல்ல முடியுமா?
    ற் ர் க் ற்

    ReplyDelete
  2. ஆமாம் ....நாம சொன்னா சண்டைதான்....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அருமையான கற்பனை. இப்படி ஒரு பெண் இருந்தால், அவள் அப்படி அழகாக இருந்திருப்பாள் என்று எண்ண வைக்கிறது. (அனால், அந்தப் பெண் கார் ஓட்டக்கூடாது, கணினியில் வேலை பார்க்கக் கூடாது, குஸ்தி போடக்கூடாது எனது பொருள் அல்ல. குஸ்தி வீராங்கனையும், போலீஸ்காரியும் அழகாக இருக்க முடியும்.)

    ReplyDelete