திருக்குறள் - எது இனிது?
நம் குழந்தைகளின் மழலைச் சொல் கேட்க எவ்வளவு இன்பம்? அது சொல்லும் ம்ம்மா, பப்பா, அத்த்த்த என்று பேசும் போது எவ்வளவு இனிமையாக் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின் சில எழுத்துக்களின் உச்சரிப்பு சரியாக வராது. அது கூட கேட்க்க இன்பமாகத்தான் இருக்கும்.
நம் குழந்தைகளின் மழலை மொழி குழலை விட, யாழை விட இனிமையாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.
பாடல்
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_29.html
(Please click the above link to continue reading)
குழலினிது = புல்லாங்குழல் இனிமையாக இருக்கும்
யாழினிது = யாழ் இனிமையாக இருக்கும்
என்ப = என்று கூறுவார்கள், யார்?
தம் மக்கள் = தங்களுடைய குழந்தைகளின்
மழலைச்சொல் = மழலை சொற்களை
கேளா தவர் = கேட்காதவர்கள்
மிக எளிமையான குறள். இருந்தும் அதில் எவ்வளவு நுணுக்கம் சேர்கிறார் வள்ளுவர்.
தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று, இலக்கணம் தெரியாமலேயே அதன் இலக்கணத்தின் பயன்பாட்டை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இங்கே, குழல் இனிது என்றால் என்ன அர்த்தம்? குழல் பார்க்க இனிது என்று அர்த்தமா? "குழல்" என்று சொல்வது இனிமையா?
இல்லை, குழலில் இருந்து வரும் ஒலி இனிமையானது என்று நமக்குப் புரிகிறது.
எப்படி நாம் அதை புரிந்து கொள்கிறோம்?
யாராவது சொன்னார்களா? இல்லை? இருந்தும் தன்னிச்சையாக அது நமக்கு புரிந்து விடுகிறது.
இலக்கணத்தில் இதற்கு ஆகு பெயர் என்று பெயர்.
ஒன்றின் சொல் மற்றதற்கு ஆகி வருகிறது.
குழல் என்ற சொல் குழலில் இருந்து வரும் ஒலிக்கு ஆகி வருகிறது.
இந்த இலக்கணம் நமக்குத் தெரியாமலேயே அது புரிந்து விடுகிறது. காரணம், தமிழ் இலக்கணம், பயன்பாட்டில் இருந்து பிறந்தது. அது இயற்கையாகவே அப்படித்தான் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள ரொம்ப சிரமப் பட வேண்டியது இல்லை.
ஏன் முதலில் குழலைச் சொல்லி,பின் யாழைச் சொன்னார் என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்கு நயம் பாராட்டுவார்கள்.
குழலில் இருந்து பிறக்கும் இசை இயற்கையாகவே வரும். மூங்கிலில் வண்டு துளைக்க, அதில் புகுந்து புறப்படும் காற்று புல்லாங்குழல் ஒலியாக வரும். புல்லாங்குழலுக்கு சுருதி கிடையாது. அதற்கு சுருதி பிடிக்க முடியாது. ஒவ்வொரு குழலும் ஒரு சுருதியில் இருக்கும்.
யாழ், நாம் செய்ய வேண்டும். அதற்கு சுருதி பிடிக்க வேண்டும். நரம்புகள் சரியானபடி இருக்க வேண்டும்.
குழந்தை முதலில் தானே பேச முயற்சி செய்யும். ம்மா...ப்பா, என்று முயற்சி செய்யும்.
பின் நாம் அதற்கு துணை செய்வோம்.
முதலில் இயற்கை, பின் மனித முயற்சி.
எனவே, முதலில் குழல் என்றும் பின் யாழ் என்றும் கூறினார்.
"தம் மக்கள்" என்று கூறினார். அதே மழலையை பக்கத்து வீட்டு பிள்ளை பேசினால் "இனிமையாக" இருக்காது. நம் பிள்ளை பேசுவதுதான் நமக்கு இனிமை.
கடைசி மூன்று குறள்களில் பிள்ளைகளின் இம்மைப் பயன் கூறப்பட்டது என்கிறார் பரிமேலழகர்:
அதாவது,
- மக்கள் சிறு கை அளாவிய கூழ் அமிழ்தினும் இனியது
- அவர்கள் மெய் தீண்டல் உடலுக்கு இன்பம் ; அவர்கள் சொல் கேட்டல் செவிக்கு இன்பம்
- மூன்றாவதாக இந்தக் குறளில் குழல், யாழை விட மழலை மொழி இனியது என்று கூறுகிறார்.
அது தான் மேலே சொன்ன இரண்டாவது குறளில் கூறியாகிவிட்டதே,
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
பின் எதற்கு
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
மழலை மொழியைப் பற்றி மீண்டும் கூற வேண்டும் என்ற கேள்வியை கேட்டு, அதற்கு பதிலும் தருகிறார் பரிமேலழகர்.
"இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு"
என்கிறார்.
முந்தைய குறளில் "சொற் கேட்டல் செவிக்கு இன்பம்" என்றார். அது மழலை மொழியாக இருக்க வேண்டும் என்று அல்ல. கல்லூரிக்கு செல்லும் பிள்ளை வந்து, கல்லூரியில் நடந்ததை சொல்வதை கேட்பதும் இன்பம் தான்.
பிள்ளைகள் பேசுவதை கேட்பது எப்போதும் இன்பம் தான் என்றாலும், மழலை இன்னும் சிறப்பு வாய்ந்தது என்பதற்காக அதை சிறப்பு வகையாலும் கூறினார் வள்ளுவர் என்று பரிமேலழகர் கூறுகிறார்.
எவ்வளவு ஆழமாக படித்து இருக்கிறார்கள்.
படிக்க படிக்க அத்தனை அழகு, ஆழம், இனிமை....
திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் ....அனுபவிப்போம்....