Sunday, March 31, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - புலால் என்ற புண்

திருக்குறள் - புலால் மறுத்தல் - புலால் என்ற புண் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_31.html


நம் உடம்பில் ஒரு வெட்டு காயம் ஏற்பட்டால், அல்லது கீழே விழுந்து அடி பட்டாலோ, ஒரு புண் வரும் அல்லவா. தோல் கிழிந்து, சதை கிழிந்து, இரத்தம் வரும். அந்த புண்ணை யாராவது தின்பார்களா?  


ஒரு விலங்கை கத்தியால் வெட்டினால், அதுவும் அதன் உடலில் வரும் புண்தானே. அந்தப் புண்ணை யாராவது தின்பார்களா?  எவ்வளவு அசிங்கம் அது. எவ்வளவு அருவெறுப்பு அது. அது தெரியாததால் தான் மக்கள் ஒரு விலங்கின் புண்ணை உண்கிறார்கள் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்

புண்ண துணர்வார்ப் பெறின்.


பொருள் 


உண்ணாமை வேண்டும் = உண்ணாமல் இருப்பார்கள் (எப்போது என்றால்)


புலாலைப் = புலால் என்பது 


பிறிதொன்றின் = மற்றொரு உடம்பின் 


புண்ணது = புண் அது (என்று)  


உணர்வார்ப் பெறின் = உணரும் அறிவைப் பெற்றால் 


மாமிசம் என்பது ஒரு விலங்கின் புண். புண்ணை யாராவது தின்பார்களா? என்று ஒரு அருவெறுப்பை உண்டாக்குகிறார். 




Wednesday, March 27, 2024

பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - நாட்டு வளம்

 பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - நாட்டு வளம் 


நாம் வாழும் நாட்டின் சிறப்பு நமக்கு பல சமயம் புரிபடுவதில்லை. இந்த நாட்டில் பிறந்தோம், வளர்கிறோம். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நினைக்கலாம். 


போரின் காரணமாக சொந்த நாட்டை விட்டு அகதிகளாக போனவர்களிடம் கேட்க வேண்டும். நாடு என்றால் என்ன என்று அவர்களுத்தான் தெரியும். மண்ணின் மகிமை அதை விட்டுப் போனால்தான் புரியும். 


எந்த அயல்நாட்டுக்குப் போனாலும், அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், சொந்த மண்ணின் சுகம் எங்கும் வராது. 


மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அவனுடைய ஏனைய தொடர்புகளையும் பாதிக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். 


நம் இல்லக்கியங்கள் நாட்டு வளம், ஊர் சிறப்பு பற்றி முதலில் பேசிவிட்டுத்தான் சொல்ல வந்த விடயத்துக்குள் நுழையும். மண் நன்றாக இருந்தால் மக்களும் நன்றாக இருப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை. 


இயற்பகை நாயனார் வரலாறை சொல்ல வந்த சேக்கிழார் பெருமான், நாயனார் பிறந்த நாட்டின் பெருமையை முதலில் சொல்கிறார். 


என்ன ஒரு அழகு அந்த நாட்டுச் சிறப்பை கூறுவதில். 


எத்தனை விடயங்களை அடக்குகிறார் அதில். 


"புகார் நகரம். 

வளமான புகார் நகரம். 

சிறந்த வளமான புகார். 

நலத்தில் சிறந்த வளமான  புகார். 

நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 

பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 

நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 

பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


மருத நிலங்களை வளமாக்கி, இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


நீண்ட காலமாகவே மருத நிலங்களை வளமாக்கி, இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


அநபாய சோழ அரசனின் அரச குலம் புகழ் பெருக்கி சிறப்படைய நீண்ட காலமாகவே மருத நிலங்களை வளமாக்கி, இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


என்று முடிக்கிறார். 


பாடல் 


சென்னி வெண்குடை நீடந பாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்

மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்

பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக் குவதோர்

நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.


பொருள் 


சென்னி = தலை. தலைக்கு மேல் 


வெண்குடை நீள  = வெண் கொற்ற குடை  நீண்டு நிலைத்து இருக்க 


அநபாயன் = அநபாயன் என்ற சோழ அரசனின் 


திருக் குலம் = சிறந்த அரச குலம் 


புகழ் பெருக்கிய = புகழைப் பெருக்கிய 


சிறப்பின் = சிறப்பில் 


மன்னு = நிலைத்து நிற்கும் 


தொல்புகழ் = பழமையான புகழ் 


மருதநீர்  நாட்டு வயல்வ ளந்தர = மருத நிலத்தின் வயல்கள் வளம் பெற 


இயல்பினில் = இயல்பாக, இயற்கையாக 


அளித்துப் = அளித்து 


பொன்னி = பொன்னி என்ற 


நன்னதி = நல்ல நதி 


மிக்கநீர் = மிகுந்த நீர் 


பாய்ந்து = பாய்ந்து 


புணரி தன்னையும் = புணரி என்றால் கடல். அந்த பொன்னி நதி சேரும் கடலையும் 


புனிதமாக் குவதோர் = தூய்மை ஆக்கி 


நன்னெ டும் = நல்ல நீண்ட 


பெருந் தீர்த்தமுன் னுடைய = பெரிய நீர் நிலைகளை உடைய 


நலஞ்சி றந்தது = நலன்கள் சிறந்தது 


வளம் = வளங்கள் நிறைந்த 


புகார் நகரம் = புகார் நகரம்


நாட்டுச் சிறப்பு, ஆற்றின் சிறப்பு, அரசனின் சிறப்பு, என்று அனைத்து சிறப்புகளையும் ஒரே பாடலில் அடக்கி விடுகிறார் சேக்கிழார். 


ஆறு பாய்ந்து, நீர் நிலைகள் நிறைந்து, வயல்கள் செழிப்பாக இருந்து, நல்ல விளைச்சலைத் தந்து, மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அரசன் செம்மையாக ஆட்சி செய்து சிறந்து விளங்கும் புகார் நகரம். 


என்ன ஒரு அற்புதமான பாடல் !




Sunday, March 24, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - கொல்வதும், தின்பதும்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - கொல்வதும், தின்பதும் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_24.html


இப்போது எல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் அசைவ உணவை உற்பத்தி செய்கிறார்கள். விலங்குகளை கொல்வதும், அதை சரியானபடி வெட்டி, பதப்படுத்தி, தேவையான மசாலா பொருட்களை சேர்த்து, டப்பாவில் அடைத்து விற்கிறார்கள். அந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?


"நான் அசைவ உணவு உண்பது இல்லை. யாரோ உண்கிறார்கள். அவர்களுக்காகத்தானே இந்த விலங்குகளை கொல்கிறோம். என்னைப் பொறுத்தவரை இது ஒரு வேலை. இது பாவம் என்றால், எனக்கு இந்தப் பாவத்தில் பங்கு இல்லை"


என்று சொல்லுவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார்...


"தின்பவர் யாரும் இல்லை என்றால், விலங்குகளை கொல்பவர் யாரும் இருக்க மாட்டார்கள். தின்பவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்"


என்கிறார். 


பாடல் 


தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்

விலைப்பொருட்டா லூன்தருவா ரில்.


பொருள் 


தினற்பொருட்டாற் = தின்பதற்கு என்று 


கொள்ளாது = வாங்காது 


உலகெனின்  = உலகில் உள்ளவர்கள் என்றால் 


யாரும் = ஒருவரும் 


விலைப்பொருட்டால் = விலைக்கு விற்பதற்கு என்று 


லூன்தருவா ரில் = ஊன் தருவார் இல். அதாவது ஊனை விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 


வாங்குபவர்கள் யாரும் இல்லை என்றால், விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 


வாங்குபவர்கள் என்றால் வாங்கி உண்பவர்கள். மாமிசத்தை உண்பவர்கள் இருப்பாதால் தான், உயிர்களை கொன்று அவற்றின் உடலை விற்பவர்கள் இருக்கிறார்கள். 


எனவே, தின்பவர்கள்தான் அந்த கொலைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிறார். 




Saturday, March 23, 2024

பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - பாகம் 1

 பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - பாகம் 1

https://interestingtamilpoems.blogspot.com/2024/03/1.html

நமக்கு தெரிந்து பக்தர்கள் இறைவனை நோக்கி ஓலம் இட்டு அழைத்து கேட்டு இருக்கிறோம். 


"சிவனே சிவனே என்று ஓலம் இடினும்" என்பார் மணிவாசகர். 


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

       போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய் படிறீ கடைதிறவாய்

       ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

       சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)

"ஓலம்" இடினும் உணராய் உணராய் கான்

       ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்.


இறைவனே பக்தனை நோக்கி ஓலம் இட்டு, ஒரு முறை அல்ல, பல முறை ஓலம் இட்டு  கூப்பிட்ட கதை தெரியுமா?


அதுதான் இயற்பகை நாயனார் கதை. 


இப்படியும் கூட ஒரு பக்தியா என்று வியக்க வைக்கும் பக்தி. 


கண்ணில் நீரை வரவழைக்கும் பக்தி. 


சிவ பெருமானின் அடியார்களை தொகுத்து சுந்தர மூர்த்தி நாயனார் ஒரு நீண்ட பட்டியல் தந்து இருக்கிறார். அந்த நீண்ட நெடிய பட்டியலில் மூன்றாவது இடம் இயற்பகை நாயனாருக்கு. அப்படி என்றால் அவரின் சிறப்பு தெரியும். 




தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

  திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

  இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

  விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே


சரி, அப்படி என்னதான் அவர் செய்தார்?  

சிந்திப்போம். 


Wednesday, March 20, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - உண்ணாமை உள்ளது உயிர்நிலை

திருக்குறள் - புலால் மறுத்தல் - உண்ணாமை உள்ளது உயிர்நிலை 


நாம் மாத்திரை எப்படி சாப்பிடுவோம்? 


முதலில் தலையை சற்று பின்னே சாய்த்து, வாயைத் திறந்து, மாத்திரையை உள்ளே போட்டு, கொஞ்சம் தண்ணி குடித்து, விழுங்கி விடுவோம். பின் வாயை மூடியபடி, தலையை நேரே ஆக்கி விடுவோம். உள்ளே போன மாத்திரை வெளியே வராது அல்லவா? 


அது ஒரு உதாரணம். எதற்கு என்றால், 


ஊண் உண்பவர்களை நரகம் தன் வாயில் போட்டு விழுங்கி விடுமாம். நாம் மாத்திரையை விழுங்கி விடுவது போல. 


இன்று நாம் காண இருக்கும் குறளில் வள்ளுவரின் உயிர் சூழ்நிலை சார்ந்த அறிவை நாம் கண்டு வியக்கலாம். 


காட்டிலே புலி சிங்கம் போன்ற மிருகங்கள் மானை வேட்டையாடி உண்கின்றன. என்னிடம் வலிமை இருக்கிறது என்று இருக்கின்ற மானை எல்லாம் வேட்டையாடி தின்று விட்டால், நாளை உண்பதற்கு மான் இருக்காது. அது மட்டும் அல்ல, அளவுக்கு அதிகமாக வேட்டையாடி, நன்றாக தின்று புலி சிங்கம் போன்றவை தங்கள் இனத்தை வளர்த்துக் கொண்டே போனால், புலி, சிங்கம் நிறைய இருக்கும். அவைகளுக்கு நிறைய மான் வேண்டி இருக்கும். மான் கூட்டமோ குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில், மான்களே இல்லாமல் போய் அல்லது மிகக் குறைந்து கடைசியில் புலிகளும், சிங்கங்களும் தங்களுக்குள் உணவுக்காக அடித்துக் கொண்டு சாக வேண்டிய நிலை வரும். 


வள்ளுவர் சொல்கிறார் 


"ஊன் உண்ணாததால் உயிர்கள் நிலைத்து நிற்கின்றன. ஊன் உண்டால், உண்டவனை நரகம் வாயில் போட்டு தின்று விடும். வாயில் போட்ட பின், அது வாயைத் திறக்காது. "


பாடல்  


உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண,

அண்ணாத்தல் செய்யாது, அளறு.


பொருள் 


உண்ணாமை = ஊன் உண்ணாமல் இருப்பதால் 


உள்ளது உயிர்நிலை = உயிர்கள் நிலைத்து உள்ளன 


ஊன் உண்ண = ஊன் உண்டால் 


அண்ணாத்தல் செய்யாது = (உண்டவனை விழுங்கிய பின்) வாயைத் திறக்காது


 அளறு = நரகம் 


அதாவது, ஊன் உண்பவன், உண்ணும் போது வாயைத் திறந்து, மூடி கடித்து உருசித்து தின்பான். வாயை மூடிக் கொண்டே சாப்பிட முடியுமா?  எலும்பைக் கடிக்க வேண்டும்.  ஆனால், அவனை வாயில் போட்ட நரகம், வாயைத் திறக்கவே திறக்காது. அப்படி என்றால், அதில் இருந்து வெளி வரவே முடியாது என்று அர்த்தம். 


நமது இந்து மதக் கோட்பாட்டின் படி, ஆத்மா அழிவது இல்லை. அது மீண்டும் மீண்டும் வந்து பிறக்கிறது. ஊன் உண்பவர்கள், விலங்குகளின் உடலை கொன்று தின்கிறார்கள். அந்த விலங்குகளின் ஆன்மா மீண்டும் பிறக்க உடல் வேண்டும். எளிய விலங்குகளை எல்லாம் பிடித்துத் தின்று விட்டால், அந்த உயிர்கள் வலிமையான விலங்குகளாக வரும். நாளை அவை நம்மையே தின்னலாம். வள்ளுவர் மிரட்டுகிறார். 


சைவ உணவு உண்பவர்கள் நினைத்துக் கொள்ளலாம், "இது நமக்கு இல்லை. நாம் எங்கே ஊன் உண்கிறோம்" என்று. 


வாயில் போட்டு உண்பது மட்டும் அல்ல, உண்பது என்றால் அனுபவிப்பது. 


விலங்குகளின் தோலை உரித்து பெல்ட் செய்து கொள்வது, செருப்பு, shoe செய்வது, சூட் case செய்வது, கைப் பை, என்று உயிர்களை கொலை செய்து அவற்றின் தோல், மாமிசம் போன்றவற்றை ஏதோ ஒரு வகையில் அனுபவிக்கிறோம். 


எத்தனை இலட்சம் பட்டுப் புழுக்களை கொன்று, பட்டுச் சேலை, பட்டாடை செய்து அணிந்து மகிழ்கிறோம்?  அது கொலை இல்லையா? 


சிப்பியைக் கீறி, அதன் வயிற்றில் இருந்து முத்தை எடுத்து, அணிகலன் செய்து போட்டுக் கொள்கிறோம்.


அது கொலை இல்லையா?  


கன்றுக்கு விடாமல் பாலை கறந்து குடித்து விடுகிறோம். 


பாடுபட்டு தேனீக்கள் சேர்த்த தேனை எளிதாக திருடிக் கொண்டு வந்து விடுகிறோம். உணவு இல்லாமல் அவை என்ன செய்யும்?  


அசுரர்கள் தங்களை விட வலிமை குன்றியவர்களை வாட்டி வதைத்தார்கள். 


நாமும் நம்மை விட வலிமை குன்றிய உயிர்களை கொன்று, அதில் இருந்து வரும் பொருள்களைக் கொண்டு  மகிழ்கிறோம். 


ஒரு வகையில் நாமும் அசுரர்கள்தான்.


அது எல்லாம் அருள் அற்ற செய்கை. உயிர்கள் மேல் அன்பு இல்லாததால் வருவது. 



Tuesday, March 19, 2024

Crossed 27 Lacs Page Views

இன்று இந்த வலைத்தளம் 27 இலட்சம் பார்வையாளர்களை (page views ) தாண்டியிருக்கிறது.


தொடர்ந்து வாசித்து வரும் அனைவர்க்கும் நன்றி. 



 


Monday, March 18, 2024

கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்து

 கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்து


நம் உடம்பிலே சக்தி ஒடுங்கி இருக்கிறது. அது எங்கே ஒடுங்கி இருக்கிறது என்றால் மலத் துவாரத்துகும், பிறப்பு உறுப்புக்கும் இடையில் உள்ள இடத்தில் ஒடுங்கி கிடக்கிறது என்கிறார்கள். 


அந்த சக்தியை எழுப்பி மேலே கொண்டு வர முடியும். அது ஒவ்வொரு படியாக மேலே ஏறி வரும். அந்த ஒவ்வொரு படியும் ஒரு சக்கரம் என்கிறார்கள். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆங்க்யா என்ற ஆறு சக்கரங்களின் வழியாக மேலே ஏறி, தலைக்கு மேல் சஹாஸ்ரார் என்ற இடத்தை சென்று அடையும் என்கிறார்கள். 


இந்த சக்தி ஒவ்வொரு இடத்திலும் ஏறி நிற்கும் போது, பல நிகழ்வுகள் ஏற்படும் என்கிறார்கள். 


உதாரணமாக கழுத்தில் வந்து நின்றால் அவர்கள் சொல்வதை உலகம் கேட்டு நடக்கும், என்கிறார்கள். ஏன், சிலர் சொல்வதை உலகம் கேட்கிறது என்றால் காரணம் அவர்களின் சக்தி அங்கே நிற்கிறது. 


இந்த சக்கரங்கள் உண்மையா? அப்படியும் நடக்குமா? மற்ற மதங்களில் இது பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்விகள் நிற்கின்றன. நிறைய ஆராய வேண்டி இருக்கிறது. 


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க


சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க


என்பார் மணிவாசகர். 


குண்டலினி என்ற அந்த சக்தி இதயத்துக்கு வருவதும், தலைக்கு மேல் வருவதையும் இது குறிப்பதாக சில உரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள். 


இங்கே, அருணகிரியார் பாடுகிறார் 


"இந்த குண்டலினி சக்தி ஆறு நிலைகளைத் தாண்டி சஹாஸ்ரார் என்ற அந்த நிலைக்கு செல்லும் பேறு எனக்குக் கிடைக்குமா? கோபம் கொண்டு வரும் சூரனை வென்று, தேவர்கள் மனம் குளிரும்படி தேவ லோகத்தை அவர்களுக்கு கொடுத்தவனே "


என்று. 


பாடல்  


ஆறாறையு நீத் ததன் மேனிலையைப் 

பேறாவடி யேன் பெறு மாறுளதோ 

சீறா வரு சூர் சிதைவித் திமையோர் 

கூறா வுலகங் குளிர் வித்தவனே 


சீர் பிரித்த பின் 


ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையை  

பெறாத அடியேன் பெறுமாறு உளதோ  

சீறா வரும்  சூர் சிதைவித்து இமையோர்  

கூறா உலகம்  குளிர் வித்தவனே 


பொருள் 


ஆறு = வழி, பாதை 


ஆறையும் = ஆறு நிலைகள் (மூலாதாரம் தொடங்கி ஆங்க்யா வரை) 


நீத்து = விடுத்து 

அதன் மேல் நிலையை  = அதற்கு மேல் உள்ள நிலையான சஹாஸ்ரார் 

 

பெறாத அடியேன் = இது வரை பெறாத அடியேன் 


பெறுமாறு உளதோ = இனி அடையும் வழி உள்ளாதா? 

  

சீறா வரும் = சீறி வரும் 


 சூர்= சூரனை 


சிதைவித்து = வென்று 


இமையோர் =தேவர் 

  

கூறா உலகம் = அவர்களுக்கு அளிக்கப்பட்ட உலகத்தை அவர்களுக்கு அளித்து 


குளிர் வித்தவனே  = அவர்களை குளிர்வித்தவனே 


"கூறா உலகம்" - செய்யா எனும் வாய்பாடு. கூறாக பிளந்து கொடுக்கப்பட்ட உலகம். தேவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட தேவலோகத்தை அசுரர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதை மீட்டு தேவர்கள் மனம் குளிரும்படி செய்தவனே.


"ஆறாறையும்" என்பதை 6 x 6 = 36 என்று கொண்டு, முப்பத்தி ஆறு தத்துவங்களையும் கடந்து மேலே செல்வது என்றும் பொருள் சொல்லுவார்கள். 





Thursday, March 14, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - அருள் அல்லது யாது எனின்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - அருள் அல்லது யாது எனின் 


இன்று ஒரு சிக்கலான குறளைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். சில சமயம் சொற் சிக்கனம், புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குறள்களில் நாம் காண இருக்கும் குறளும் ஒன்று. 


அன்பின் விரிவு அருள் என்று பார்த்தோம். அருள் இருந்தால் மற்ற உயிர்களை கொல்லத் தோன்றாது. சொல்ல வந்தது அவ்வளவுதான். ஆனால், குறள் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்:


பாடல் 


அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் றினல்.


பொருள் 


அருளல்ல = அருள் அல்லாதது 


தியாதெனிற் = யாது எனில் 


கொல்லாமை = கொல்லாமை 


கோறல் = கொல்லுதல் 


பொருளல்ல = பொருள் அல்ல 


தவ்வூன் றினல் = அந்த ஊனை தின்பது 


பரிமேலழகர் போன்ற உரை ஆசிரியர்கள் இல்லாவிட்டால் அர்த்தம் புரியாமல் போவது மட்டும் அல்ல, தவறான அர்த்தமும் வந்து விடும். 


பரிமேலழகர் சொல்கிறார் 


அருள் என்பது யாது எனின் = அருள் என்றால் என்ன என்று கேட்டால் 


அல்லது யாது எனின் = அதாவது அருள் அல்லாதது எது என்றால் 


கோறல் = கொல்லுதல் 


பொருள் என்றால் சிறந்தது என்று அர்த்தமும் உண்டு. 


"போற்றி என் வாழ் நாள் முதலாகிய பொருளே" 


என்பார் மணிவாசகர். 


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்

ஒன்றும் அரும்"பொருளே" அருளே. உமையே. இமயத்து

அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.




திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க

எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--

தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்

வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்"பொருளே".



"பொருளே", பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்

மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்

அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.


என்பது அபிராமி பட்டர் வாக்கு. 


இங்கே குறளில் 


"பொருள் அல்லது யாது எனில் ஊன் தின்றல்" என்பதில் பொருள் என்பது அறம் நோக்கி நின்றது. அதை அறம் என்பது யாது எனின் ஊன் தின்றல் என்று கொள்ள வேண்டும். 


கொல்லாமை கோறல் என்றால் என்ன. 


கொல்லாமை என்றால் கொல்லாமல் இருப்பது. 

கோறல் என்றால் கொல்லுவது.


கொல்லாமை கோறல் என்றால் என்ன ?


கொல்லாமை என்ற விரத்தை கொல்லுவது. அதாவது அதை கை விட்டுவிடுவது என்று பொருள் சொல்கிறார்கள். 




அவ்வூன் என்றார். கொல்லப்பட்ட அந்த ஊனை என்று அர்த்தம். 


கொல்வதும், கொன்றதைத் தின்பதும் அருள் அற்ற செயல்.






Tuesday, March 12, 2024

கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும்

கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும் 


பக்திப் பாடல்களில் பொதுவாக பாடப்படும் கடவுளைப் பற்றிய வர்ணனைகள் நிறைந்து இருக்கும். பாடும் கடவுளின் வாகனம், உடல் வண்ணம், அவர் செய்த லீலைகள், அருள் பாலித்த விதங்கள், தீயவர்களை தண்டித்த விதம் என்று இருக்கும். இந்த குணாதிசயங்கள் மீண்டும் மீண்டும் வரும். 


அவற்றை ஒரு முறை வாசித்து விட்டு, பாட்டில் உள்ள மற்றைய செய்திகள்/கருத்துகளுக்குள் நாம் போகலாம். 


அருணகிரியார் சொல்கிறார் ,


"என் தாய் நீ. எனக்கு அருள் செய்யும் தந்தை நீ. என் மனதில் உள்ள சலனங்களை எல்லாம் போக்கி, என்னை ஆட்கொள்"


என்று. 


பாடல் 


எந்தாயு மெனக் கருள் தந்தையு நீ 

சிந்தா குலமானவை தீர்த்தெனையாள் 

கந்தா கதிர் வேலவனே உமையாள் 

மைந்தா குமரா மறை நாயகனே . 



சீர் பிரித்த பின் 


என் தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ 
 
சிந்தா குலமானவை தீர்த்து எனை ஆள்  

கந்தா கதிர் வேலவனே உமையாள் 

மைந்தா குமரா மறை நாயகனே . 


பொருள் 


என் தாயும் = என்னுடைய தாயும் 


எனக்கு அருள் தந்தையும் நீ = எனக்கு அருள் செய்யும் தந்தையும் நீயே 
 
 
சிந்தா குலமானவை = என் சிந்தையுள் ஏற்படும் சலனங்களை 


தீர்த்து = முடித்து வைத்து 


எனை ஆள் = என்னை ஆட்கொள்வாய் 
  

கந்தா = கந்தா 


கதிர் வேலவனே = கதிர் வீசும் வேலை உடையவனே 


உமையாள் மைந்தா = உமா தேவியின் மைந்தனே 


குமரா = குமரனே 


மறை நாயகனே = வேதங்களின் தலைவனே 

 


சிந்தையில் உள்ள சலனங்கள் நின்றால்தான் இறைவனால் ஆட்கொள்ளப்பட முடியும். அந்தச் சலனங்களை நாமே நிறுத்த முடியுமா?  அருணகிரியார் சொல்கிறார், "முருகா நீயே அந்தச் சலனங்களை நிறுத்தி என்னை ஆட்கொள் " என்று. இறைவனிடமே அந்தப் பொறுப்பையும் விட்டுவிடுகிறார். பூரண சரணாகதி. 


Monday, March 11, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - உடல் சுவை உண்டார்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - உடல் சுவை உண்டார் 



இளம் பருவத்தில், புலால் உணவே சாப்பிடாமல் வளர்ந்த சிலர் பிற்காலத்தில் மாமிச உணவை விரும்பிச் சுவைப்பதை நாம் கண்டு இருக்கிறோம். 


எப்படி இப்படி மாறினீர்கள் என்று கேட்டால் , "பள்ளியில், கல்லூரியில் மாமிச உணவு என்று சொல்லாமல், நண்பர்கள் ஏமாற்றி உண்ண வைத்து விட்டார்கள். அந்த சுவை பிடித்துப் போய் விட்டது. அப்படியே பழகிப் போய் விட்டது. விட முடியவில்லை" என்பார்கள். 


ஒருமுறை புலால் உணவை சுவைத்து விட்டால் பின் அதை விட முடியாது. மனம் மீண்டும் மீண்டும் அந்தச் சுவையை நாடும். 


உயிர்களை கொன்று தின்பது என்று ஆரம்பித்து விட்டால், மனம் அருளின் பக்கம் போகாது. 


அது எப்படி என்று ஒரு உதாரணம் சொல்கிறார் வள்ளுவர். 


வீட்டில் சின்ன பையன்கள் கையில் ஒரு சின்ன குச்சியைக் கொடுத்தால் அதை வைத்து எதையாவது தட்டிக் கொண்டே இருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். எதைப் பார்த்தாலும், அதை தட்டி ஒலி உண்டாக்குவார்கள். 


அது போல, கையில் கத்தி, துப்பாக்கி போன்ற கொலைக் கருவிகளை வைத்து இருப்பவர்கள் மனம் யாரைப் போட்டுத் தள்ளலாம் என்றுதான் நினைக்கும். கருவியின் பின்னே மனம் போகும். கையில் செல் போன் இருந்தால், நொடிக்கு நூறுதரம் அதைப் பார்க்கச் சொல்லும். 


அது போல, மாமிச உணவின் சுவை கண்டு விட்டால், மனம் அதன் பின்னே மீண்டும் மீண்டும் போகும். 


பாடல் 


படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்றி

னுடல்சுவை யுண்டார் மனம்.


சீர் பிரித்த பின் 


படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஒன்றன்

உடல் சுவை உண்டார் மனம்.


பொருள் 


படைகொண்டார் = கத்தி போன்ற படைக் கருவிகளை கொண்டவர்கள் 


நெஞ்சம் போல் = மனம் போல் 


நன்று ஊக்காது = நல்லதை நினைக்காது 


ஒன்றன் = ஒரு உயிரின் 


உடல் சுவை = உடலின் சுவையைக் 


உண்டார் மனம் = உண்டவர்களின் மனம் 



"நன்று ஊக்காது" அதாவது நல்லதை நினைக்காது என்ற சொல் தொடரை இரண்டு பக்கமும் சேர்த்துக் கொள்ளலாம். 


படை கொண்டவர் நெஞ்சமும் நல்லதை நினைக்காது. 


மாமிசம் உண்டவரின் மனமும் நல்லதை நினைக்காது. 


இரண்டும் கொலையை நாடும். 


மாமிசம் உண்பது சரி தவறு அல்ல என்பதல்ல விவாதம். 


சாப்பிட்டால் மனதில் அருள் வருவது கடினம். அவ்வளவுதான். 


அருள் வராவிட்டால் போகட்டும் என்றால் ஒரு பிரச்சினையும் இல்லை. 


அன்பு விரிய அருள் பிறக்கும். 


அருள் மனதில் சுரக்கவில்லை என்றால், அன்பின் வட்டம் சுருங்கும். 


அன்பின் வட்டம் சுருங்க சுருங்க சுயநலம் மேலோங்கும். மற்ற உயிர்களின் மேல் அருளும் அன்பும் குறையும். 


சிந்திக்க வேண்டிய விடயம். 



Wednesday, March 6, 2024

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி 


நிறைய பேர் படிப்பார்கள். தாங்கள் படித்து அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.. காரணம், எங்கே அவனுக்கும் தெரிந்து விட்டால், நம் மதிப்பு குறைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். அல்லது, மற்றவன் முன்னேறக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாக இருக்கலாம். 


அருணகிரியார் கூறுகிறார் 


"மறைத்து வைக்கும் கல்வியை கொண்டவர்களின் வாசலில் சென்று அவர்களிடம் உதவி கேட்கும் படி வைக்காமல் உயர்ந்த மெய்ப் பொருளை நீ எனக்கு அருள வேண்டும். தலைவா, இளையவனே, வஜ்ராயுதம் என்ற படையைக் கொண்டவனே, சிவ யோகத்தை பக்தர்களுக்குத் தருபவனே "


என்று. 


பாடல் 



கரவாகிய கல்வியுளார் கடை சென்று 

இரவா வகை மெய்ப் பொருளீகுவையோ 

குரவா குமரா குலிசாயுதகுஞ் 

சரவா சிவ யோக தயாபரனே 


பொருள் 


கரவாகிய = கரத்தல் என்றால் மறைத்தல். மறைத்து வைக்கும் 


 கல்வியுளார் = கல்வியை உடையவர்கள் 


கடை சென்று = வாசலில் சென்று 

 

இரவா வகை  = பிச்சை எடுக்காமல் இருக்கும்  படி 


மெய்ப் பொருளீகுவையோ  = மெய்யான பொருளை எனக்குத் தந்து அருள் புரிவாயா 

 

குரவா = குரவன் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு என்றாலும், தலைவன் என்ற அர்த்தம் இங்கு பொருந்தும். 


குமரா = இளையவனே 

 

குலிசாயுத = குலி + ஆயுதம் = வஜ்ரப் படையை உடையவனே 

 

 

குஞ்சரவா = குஞ்சரம் என்றால் யானை. தெய்வயானைக்கு தலைவனே 


சிவ யோக தயாபரனே = சிவ யோகத்தை பக்தர்களுக்கு தருபவனே 


சாதாரண மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு மற்றவர்களுக்கு தர வேண்டும் என்று மறைத்து வைத்துக் கொள்வார்கள். முருகன், சிவ யோக பலன்களையே பக்தர்களுக்குத் தருபவன். அவனிடமே நேரே சென்று கேட்டு பெற்றுக் கொள்ளலாம். 


"இரவா வகை மெய் பொருள் ஈகுவையோ" என்று கொண்டு, கரத்தல் தொழிலை செய்பவர்கள் மெய் பொருளை கற்றுத் தராமல் மற்றவற்றை கற்றுத் தருவார்கள், அந்த மாதிரி ஆட்களிடம் போய் நிற்காமல், நீயே எனக்கு மெய்ப் பொருளைத் தா என்கிறார். 


"கரவா வகை கல்வி"..நாம் படிக்கும் அனைத்தும் நமக்கு மெய் பொருளை உணர்த்துவதில்லை. அதை மறைத்து, வேறு எதையெதையோ நமக்குத் தரும். அந்த மாதிரி மெய்ப் பொருளை மறைக்கும் கல்வியை விட்டு விட்டு மெய்ப் பொருளை அறியும் கல்வியை எனக்குத் தா என்று வேண்டுகிறார் என்றும் கொள்ளலாம். 


வள்ளுவர் கூறுவார், 


கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழார் எனின் 


கல்வி, மெய் பொருளைத் தர வேண்டும். 


 


Monday, March 4, 2024

திருக்குறள் - பொருளும் அருளும்

 திருக்குறள் - பொருளும் அருளும் 


நிறைய பேருக்கு சம்பாதிக்கத் தெரியும். அதை சேமிக்கத் தெரியாது.  சிலருக்கு சேமிக்கத் தெரியும், ஆனால் சம்பாதிக்கத் தெரியாது. சிலருக்கு சம்பாதிக்கவும் தெரியும், சேமிக்கவும் தெரியும் ஆனால் அனுபவிக்கத் தெரியாது. மூன்றும் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. 


பொருளை ஆட்சி செய்ய வேண்டுமா? அதன் அனைத்துத் துறைகளிலும் (சம்பாதித்தல், சேமித்தல், செலவிடுதல்) சிறந்து விளங்க வேண்டுமானால், செல்வத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். செல்வத்தை அலட்சியம் செய்தால், அதனை நல்ல வழியில் பயன்படுத்த முடியாது. 


பொருளை ஆட்சி செய்யும் தகுதி பொருளைப் போற்றாதவர்களுக்கு இல்லை. 


அது போல 


அருளை ஆட்சி செய்யும் தகுதி பிற உயிர்களை தின்பவர்களுக்கு இல்லை. 


பாடல் 


பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி

யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.


பொருள் 


பொருளாட்சி = பொருளை ஆட்சி செய்கின்ற திறமை 


போற்றாதார்க் கில்லை = அந்தப் பொருளை போற்றாதவர்களுக்கு இல்லை 


யருளாட்சி = அருளை ஆட்சி செய்யும் திறன் 


யாங்கில்லை = ஆங்கு இல்லை 


யூன்றின் பவர்க்கு. = ஊன் தின்பவர்க்கு 


சில பேர் என்ன சொல்கிறார்கள் என்றால், நான் உணவு விடுதிக்கு (hotel) சென்று சில மாமிச உணவை வரவழைத்து உண்கிறேன். அந்த உயிர்களை நான் கொல்லவில்லை. நான் சாப்பிடாவிட்டால் வேறு யாராவது சாப்பிடத்தான் போகிறார்கள். நான் உண்பது ஒரு இறந்த உடலைத்தான். நான் கொல்லவில்லை. ஒரு வேளை யாருமே உயிர் கொலை செய்யமாட்டேன் என்று இருந்து விட்டால், நான் மாமிசம் தின்ன முடியாது. நாளடைவில் அதை மறந்து விடுவேன்.எனவே தவறு என் மேல் அல்ல.....


என்று வாதம் செய்வார்கள். 

அந்த உயிர்களை கொல்பவன் என்ன சொல்லுவான் "நான் கொல்வது அவன் தின்பதற்காக? அவன் தின்பதை நிறுத்தி விட்டால் நான் ஏன் கொல்லப் போகிறேன். தவறு என் மேல் அல்ல. தின்பவன் மேல் என்று கூறுவான். 


இப்படி மாறி மாறி பழி போட்டுக் கொண்டு யாரும் பொறுப்பை எடுக்க மாட்டார்கள். 



வள்ளுவர் சொல்கிறார், "அந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீ மாமிசம் சாப்பிட்டாயா? ஆம் என்றால், உனக்கு அருளை ஆளுகின்ற குணம் இல்லை. யார் கொன்றார், யார் தின்றார் என்பதல்ல பிரச்சனை. 


"நீ மாமிசம் உண்கிறாயா, உனக்கும் அருளுக்கும் சம்பந்தம் இல்லை" 


மாமிசம் உண்பது சரியா தவறா என்று வள்ளுவர் இங்கே வாதம் செய்யவில்லை. மாமிசம் சாப்பிட்டால் உயிர்கள் மேல் அருள் வராது. அவ்வளவுதான் அவர் சொல்லுவது. 


அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறார். வள்ளுவரைப் போல் உதாரணம் சொல்ல இன்னொருவர் பிறக்க வேண்டும். 


கண்டமேனிக்கு ஊதாரித்தனமாக செலவு செய்பவன் இடத்தில் எப்படி பொருள் தாங்காதோ அது போல உயிர்களை தின்பவனிடம் அருள் தங்காது என்கிறார். 


பொருளை போற்ற வேண்டும். எச்சரிக்கையுடன்  செலவழிக்க வேண்டும். கணக்கு எழுத வேண்டும். சரியான படி முதலீடு செய்ய வேண்டும். செய்த முதலீட்டை பார்த்துக் கோனே இருக்க வேண்டும். வீட்டை வாடைகைக்கு கொடுத்தால், வாடகை ஒழுங்காக வருகிறதா என்று பார்க்க வேண்டும். 


இல்லை என்றால் வீடு போய் விடும். 


அது போல, உயிர்களை கொன்று தின்றால், அருள் போய் விடும். 


அருள் போனால், துறவு போகும். 


துறவு போனால், வீடு பேறு போகும். மீண்டும் பிறவி வந்து சேரும்.


அவ்வளவு பெரிய பலனை பெறுவதற்கு இந்தச் சின்ன தியாகத்தை செய்யக் கூடாதா என்று வள்ளுவர் கேட்காமல் கேட்கிறார்.