Showing posts with label naaladiyaar. Show all posts
Showing posts with label naaladiyaar. Show all posts

Saturday, December 12, 2020

நாலடியார் - எது வறுமை?

நாலடியார் - எது வறுமை?


நிறைய பேர் நினைக்கிறார்கள், படிப்பது எதற்கு? பணம் பண்ணத்தானே என்று. பணம் எப்படி பண்ணினால் என்ன? சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்யாமல் செல்வம் சேர்க்க முடியும் என்றால், படிப்பு எதற்கு? 


படிக்காத முட்டாள்கள் எவ்வளவோ பேர் பெரும் செல்வம் சேர்க்கவில்லையா? அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என்று படிப்பு அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்கள் செல்வத்தில் புரள்கிறார்களே, பின் படிப்பின் தேவை தான் என்ன?


பலருக்கு இந்த கேள்வி ரோ சங்கடமான ஒன்று. 


சில பேர் நிறைய படிப்பார்கள். பலப் பல பட்டங்கள் இருக்கும். நாலு காசு பண்ணத் தெரியாது. புத்தக அறிவு, பட்டங்கள் இவை தான் கல்வியா?


நாலடியார் விளக்குகிறது. 


சில பேர் ஆண்கள் போல் தோற்றம் அளிப்பார்கள். ஆனால் அவர்களிடம் ஆண்மைக் குணம் இருக்காது. பெண் குணம் மிகுந்து இருக்கும். பேடிகள் என்று சொல்லுவார்கள். அவர்கள், பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொள்வார்கள். அவர்களைப் போல உடை உடுத்துவார்கள். 


அது பார்த்து இரசிக்கும் படியாகவா இருக்கும்? அதே நகைதான், அதே உடை தான். இருந்தாலும் சற்று அருவெறுப்பாக இருக்காது? ஆண் தோற்றத்தில் உள்ள ஒரு அலி உதடுச் சாயம் பூசிக் கொண்டு வந்தால் பார்க்க எப்படி இருக்கும்?


அறிவில்லாதவன் கையில் உள்ள செல்வம் அப்படி இருக்குமாம்?  அவனிடம் செல்வம் இருக்கும். அளவுக்கு அதிகமாக செல்வம் இருக்கும். ஆனால், அலி அணிந்த நகைகள் போல பொருத்தம் இல்லாமல் இருக்கும். 


சரி, அறிவு உள்ளவன் என்றால் யார்? படித்து பட்டம் பெற்றவனா? உலகத்தில் உள்ள பெரிய பெரிய நிறுவங்களின் தலைவர்கள் ரொம்ப படித்தவர்கள் அல்ல. நாட்டின் தலைவர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்கள் முட்டாள்களா என்றால் இல்லை. 


நாலடியார் கூறுகிறது, "நுண்ணர்வு இன்மை வறுமை" என்று. 

அது இருந்தால் பெரும் செல்வம் உள்ளது மாதிரி. 

நுண் அறிவு அல்ல, நுண் உணர்வு.

ஒரு மருத்துவரிடம் போகிறீர்கள். இந்த இடத்தில், இந்த மாதிரி வலி இருக்கிறதுஎன்று சொல்கிறீர்கள். உடனே அவர் மனதில் அந்த வலிக்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று முடிவு பண்ணுகிறார். அதை உறுதி செய்ய சில பல சோதனைகள் செய்கிறார். அந்த முடிவு செய்யும் ஆற்றல் தான் நுண்ணர்வு. 

படிப்பு, அனுபவம், இவற்றைத் தாண்டி வருவது. 

என்ன சாப்பிட்டால் உடம்பில் என்ன நடக்கும் என்று பல பேருக்குத் தெரியும். ஆனால், நாம் உண்ட உணவினால் நம் மன நிலை எப்படி பாதிக்கப் படுகிறது என்ற நுண் உணர்வு வெகு சிலருக்கே இருக்கும். 


நம் உணர்வுகள், செயல் பாடுகள், சிந்தனை, எல்லாம் நாம் உண்ணும் உணவில் இருந்து வருகிறது. எந்த உணவை உண்டால், எப்படி நம் மனம் மாறுகிறது என்ற நுண் உணர்வு இருக்க வேண்டும். யாரிடம் பேசினால் நம் மனம் எப்படி மாறுகிறது என்று தெரிய வேண்டும். எதைப் படித்தால் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று அறியும் அறிவு வேண்டும்.


கூர்மையான அறிவு. அது இல்லாவிட்டால், அது தான் வறுமை என்கிறது நாலடியார். அந்த உணர்வு இருந்தால், அது தான் செல்வம். 


பாடல் 


 நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால்,

பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ,

கண் அவாத் தக்க கலம்?


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_12.html

Please click the above link to continue reading



நுண் உணர்வு இன்மை வறுமை; = நுண் உணர்வு இல்லாமல் இருப்பது வறுமை.  இருப்பது செல்வம். 

 அஃது உடைமை = அது இருந்தால் 

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் =  அது கிடைத்தற்கு அரிய் பெரிய செல்வம் 

எண்ணுங்கால், = நினைத்துப் பார்த்தால் 

பெண் அவாய் = பெண்மை குணம் நிறைந்து 

ஆண் இழந்த பேடி = ஆண்மைக் குணம் இழந்த பேடி 

அணியாளோ, = அணிந்திருக்கும் 

கண் அவாத் தக்க  = கண்கள் விரும்பும் 

கலம்? = அணிகலம் 


நுண் உணர்வு இல்லாதவன் பெற்ற செல்வம், பேடி அணிந்த அணிகலன் போல.


என்ன ஒரு உதாரணம்!




Tuesday, September 22, 2020

நாலடியார் - எதைக் கண்டாலும் பயம் எனக்கு

நாலடியார் - எதைக் கண்டாலும் பயம் எனக்கு 


நல்ல குடும்பத்தில் பிறந்திருப்பது அச்சம் தரும் ஒன்றாகும். 



ஏன்?

நல்ல குடும்பத்தில் பிறந்தால், படிக்காமல் இருக்க அச்சம்.  நல்ல குடும்பத்தில் எல்லோரும் படித்து இருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்த பின், படிக்காமல் இருப்பது அச்சம் தரும் செயல்.  எல்லோரும் படிக்காத மண்டூகங்களாக இருந்து விட்டால் பரவாயில்லை. அந்தக் குடும்பத்தில் ஒருவன் படிக்கவில்லை என்றால் ஒன்றும் தெரியாது. 

மோசமான வேலைகள் செய்ய அச்சம். குடும்பத்தோட பேர் கெட்டுப் போய் விடுமோ என்ற அச்சம். 

வாய் தவறிக் கூட தவறாகப் பேசி விடக் கூடாதே என்ற அச்சம். இராமாயணத்தில், இராமனுக்கு அரசு இல்லை என்று சொல்லக் கேட்ட இலக்குவன் கோபத்தில் கண்டபடி பேசுவான். அப்போது இராமன் சொல்லுவான் "மறை தந்த நாவால் வாய் தந்தன கூறுதியோ"  என்பான்.வேதம் படித்த வாயால், இப்படி கோபச் சொல் வரலாமா என்று கேட்பான். நல்ல குடியில் பிறந்தால், மறந்தும் வழுக்கிய சொல் வரக் கூடாது. வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டும். 


ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?'  
  

அதை விட பெரிய பயம் - தன்னிடம் இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு தானும் இல்லை என்று சொல்ல வேண்டி வந்து விடுமோ என்ற பயம் பெரிய பயம். 

நல்ல குடியில் பிறந்து இருப்பது என்பது, கடலில் செல்லும் கலம் போன்றது. அங்கும் இங்கும் எப்போது அலைக்கழிக்கும். எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

பாடல் 

கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம்;
சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம்; எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம்; மரத்தார்; இம்
மாணாக் குடிப் பிறந்தார்.

பொருள் 

(pl click the link below to continue reading)


கல்லாமை அச்சம் = கல்வி அறிவு இல்லாமல் இருப்பது ஒரு பயம் 

கயவர் தொழில் அச்சம் = கயவர்கள் செய்யும் கொலை, கொள்ளை போன்ற தீச் செயல்கள் செய்ய அச்சம் 

சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம் = சொல்லுகின்ற வார்த்தைகளில் தவறான, பயன் இல்லாத வார்த்தை வந்து விடுமோ என்ற அச்சம் 

எல்லாம் = அது எல்லாம் விட 

இரப்பார்க்கு = தன்னிடம் வந்து வேண்டி நிற்பவர்களுக்கு 

ஒன்று ஈயாமை அச்சம் = ஒன்று கொடுக்க முடியாமல் இருப்பது அச்சம் 

மரத்தார் = மரத்தில் செய்த படகு போல 

இம் மாணாக் குடிப் பிறந்தார். = இந்த மாதிரி நல்ல குடியில் பிறந்தவர்கள்  வாழ்க்கை.

கொடுக்க முடியாமல் போவது பற்றி பயந்து இருக்கிறார்கள். 

பயனில்லாதவற்றை பேசி விடுவோமோ என்று பயந்து இருக்கிறார்கள். 


Thursday, September 10, 2020

நாலடியார் - பையெனப் பையெனவென்று அஞ்சிப்பின் வாங்கும் அடி.

நாலடியார் - பையெனப் பையெனவென்று அஞ்சிப்பின் வாங்கும் அடி.



இந்த பெண் பிள்ளைகளை பெற்று விட்டு, பெற்றோர் படும் பாடு இருக்கிறதே அது சொல்லி மாளாது. அப்படி ஆசை ஆசையாக வளர்ப்பார்கள். கட்டிக் கொடுப்பார்கள். போன இடத்தில், பிறந்த வீடு மாதிரி செல்லம் இருக்குமா? எல்லோரையும் போல வேலை செய்ய வேண்டி இருக்கும்.

"ஐயோ, என் பிள்ளையை எப்படியெல்லாம் பொத்தி பொத்தி வளர்த்தேன்...இப்ப இப்படி கஷ்டப் படுகிறாளே " என்று வருந்துவார்கள்.

இந்தக் கவலை இன்று வந்தது அல்ல. நாலடியார் காலத்தில் இருந்து வருகிறது.

அவள் ஒரு செல்லப் பிள்ளை.

அந்தக் காலத்தில் பெண்களின் பாதங்களை அழகு செய்வார்கள். பஞ்சில் சிவந்த வண்ணங்களை முக்கி, விரலில், பாதத்தின் ஓரங்களில் வண்ணம் தீட்டுவார்கள். பார்க்க பாதம் சிவந்து அழகாக இருக்கும்.

அப்படி, அந்த பெண்ணுக்கு காலில் வண்ணம் தீட்ட முயன்ற போது , "மெல்ல, மெல்ல, கால் வலிக்குது" என்று காலை இழுத்துக் கொள்வாளாம்.

சிவந்த குழம்பை பஞ்சில் நனைத்து பாதத்தில் வைத்தால் அது அவளுக்கு வலிக்குமாம்.

அப்படி இருந்த பெண், இன்று என்னடா என்றால், செருப்பு கூட போடாமல், கல்லும் முள்ளும்  உள்ள கட்டாந்தரையில் நடக்கிறாள்.  பெற்றோர்கள் கண் கண்  கலக்குகிறார்கள்.

நாமும் தான்.


பாடல்


அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ, -அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.



பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_10.html


அரக்காம்பல் = சிவந்த  ஆம்பல் போன்ற மலர்கள்

நாறும்வாய் = போல வாசம் வீசும் அவளது வாய்

அம்மருங்கிற் கன்னோ =  இடையில்.  இங்கு பாதம்

பரற் கானம் = சரளை கற்களை கொண்ட காட்டில்

ஆற்றின கொல்லோ = உள்ள வழியில் எப்படி நடப்பாள்

அரக்கார்ந்த = சிவந்த குழம்பை

பஞ்சிகொண் டூட்டினும் = பஞ்சில் நனைத்து காலில் தடவினாலும்

பையெனப் பையெனவென்று = பைய, பைய என்று

அஞ்சிப்பின் வாங்கும் அடி. = அச்சம் கொண்டு காலை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் அந்த  மென் பாதம் 

Saturday, September 5, 2020

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்


நம்மிடம் பணம் இருந்தால் என்ன செய்யலாம்?

பணத்தை நாம் விரும்பிய விதத்தில் செலவழித்து இன்பம் அடையலாம். நல்ல உடை வாங்கலாம், சிறப்பான உணவை உண்டு மகிழலாம்,  சினிமா, ட்ராமா, உல்லாச பயணம் என்று செலவழிக்கலாம்.

அல்லது

அதை சேமித்து வைக்கலாம், கார், வீடு, நிலம், நகை என்று முதலீடு செய்யலாம்.

அவரவர் விருப்பம்.

பணம் மட்டும் அல்ல, நம் நேரமும் அப்படியே. நம்மிடம் இருக்கும் நேரத்தை எப்படி செலவழிக்கலாம் என்று நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

whatsapp , facebook , டிவி, அரட்டை என்று செலவழிக்கலாம்.

அல்லது,

அறிவை வளர்க்க, உடல் ஆரோக்கியத்தை வளர்க்க , நமக்கும் , பிறருக்கும் பயன்படும் வகையில் செலவழிக்கலாம்.

இது  நமக்குத் தெரியும். இருந்தும், நல்ல பெரிய விஷயங்களை செய்யாமல் சில்லறை  விஷயங்களில் நம் நேரத்தை செலவழிக்கிறோம்.

ஏன்?

அப்புறம் செய்து கொள்ளலாம். என்ன அவசரம். இப்ப தலைக்கு மேல வேற விஷயங்கள் இருக்கின்றன.  நல்லதை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம்  என்று நினைக்கிறோம்.

அந்த "அப்புறம்" என்பது வருவதே இல்லை.

நேரம் ஓடி விடுகிறது.  ஐயோ, நேரத்தை வீணடித்து விட்டேனே என்று நாம் வருந்த நேரலாம்.

பாடல்


நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.


பொருள்

(click below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_5.html



நரைவரும் என்றெண்ணி  = நரை வரும் என்று எண்ணி. அதாவது முதுமை வரும் என்று நினைத்து

நல்லறி வாளர் = நல்ல அறிவு உள்ளவர்கள்

குழவி யிடத்தே = சிறு வயதிலேயே

துறந்தார் = பயன் தராதவற்றை துறந்தார்

புரைதீரா = குற்றம் அற்ற

மன்னா = மன்னவனே

இளமை மகிழ்ந்தாரே = இளமை காலத்தில், மகிழ்ந்து , காலத்தை வீணே போக்கியவர்கள்

கோல் ஊன்றி = கோல் ஊன்றி

இன்னாங் கெழுந்திருப் பார். = துன்பத்தில் இருந்து எழுந்திருப்பார்


இளமையும், ஆரோக்கியமும் எப்போதும் இருக்காது. இருக்கும் போதே அதை நல்ல வழியில் செலவழிக்க வேண்டும்.




Wednesday, July 29, 2020

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து 


நாலடியார் என்றால் ஏதோ தத்துவம், அறம் மட்டும் பேசும் நூல் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

இல்லறம் இனிமையாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும். என்னை பிரிந்து அவள் எப்படி இருப்பாளோ என்று கணவன் நினைக்க வேண்டும். அதே போல் மனைவியும்.

பிரிவு என்பது  அருளிரக்கத்தை தரும் என்பார்கள். "ஐயோ பாவம், அவள் தனியாக எப்படி துன்பப் படுவாளோ" என்று அவள் மேல் இரக்கமும், அதன் காரணமாக அவள் மேல் அருளும் பிறக்குமாம்.

"நான் இல்லாட்டி என்ன, அவ தனியா சமாளிச்சுக்குவா" என்று கணவன் நினைத்தால், பின் பிரிவு என்பதன் அர்த்தம்தான் என்ன?

Independence, equal rights, liberation என்ற பெயரில் மெல்லிய அன்பு உணர்வுகளை சிதைக்க தலைப் பட்டுவிட்டோம். ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்பது என்பது அடிமை தளை என்று நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு, அந்த அடிமை தளையில் இருந்து விடுதலை பெற துடிக்கிறோம்.

அன்புக்கு கட்டுப் படுவதின் சுகம் தெரியாதவர்கள்.

தலைவியை பிரிந்த தலைவன், வேறு ஏதோ ஊரில் இருக்கிறான். தலைவியைப் பற்றி நினைக்கிறான். அவன் மனதில் இரக்கம் பிறக்கிறது.

"பாவம் அவளை தனியே விட்டு விட்டு வந்து  விட்டேன். மாலை நேரத்தில் அவள் என் பிரிவால் மனம் ஏங்கி, கண்ணீர் விட்டு, அந்த கண்ணீரை தன்னுடைய மெல்லிய விரலால் தொட்டு துடைத்து, நான் செய்த இந்த குற்றத்தை நினைத்து, கையை தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு வருந்திக் கொண்டு இருப்பாளோ" என்று ஏங்குகிறான்.

பாடல்

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_29.html

செல்சுடர்  = சுடர் என்றால் சூரியன். செல் சுடர், மாலை நேரச் சூரியன். (தமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன் -பாரதி தாசன்)

நோக்கிச் = அந்த சூரியனைக் கண்டு

சிதரரிக்கண் கொண்டநீர் = சிவந்த கண்களில் வந்த கண்ணீர் சிதற

மெல்விரல் =மெல்லிய விரல்களைக் கொண்ட அவள்

ஊழ்தெறியா =விதி  தெரியாமல்

விம்மித் =விம்மல் கொண்டு

தன் - மெல்விரலின் = தன்னுடைய மெல்லிய விரலின்

நாள்வைத்து =நாட்களை குறித்து

நங்குற்றம் =என்னுடைய குற்றத்தை

எண்ணுங்கொல், = நினைத்து வருந்துவாளோ

அந்தோ = அந்தோ

தன் = தன்னுடைய

தோள்வைத் தணைமேற் கிடந்து. = கையை தலைக்கு தலையணையாகக் கொண்டு

கற்பனை செய்து கொள்ளுங்கள்.

புதிதாக மணம் முடித்த பெண். கணவனை பிரிந்து இருக்கிறாள். மெலிந்து, தரையில் படுத்து இருக்கிறாள். கையை மடித்து தலைக்கு வைத்துக் கொண்டு படுத்து இருக்கிறாள்.

இரவு நேரம் கூட அல்ல. மாலை நேரம்.

சீவி முடித்து, பூ வைத்து, விளக்கு ஏற்றி, அதெல்லாம் அவளுக்குத் தோன்றவிலை. கட்டாந் தரையில் அந்தி சந்தி நேரம் படுத்துக் கிடக்கிறாள்.

கண்ணில் இருந்து நீர் வழிகிறது. விரலால் சுண்டி விடுகிறாள்.

கண்ணீர் நிறைவதால் "ஊழ் தெரியா" என்றார்.

அவள் அப்படி இருப்பாளோ என்னவோ தெரியாது. அப்படி இருப்பாள் என்று  கணவன்  நினைக்கிறான். அவன் மனதில் பச்சாதாபம் ஏற்படுகிறது.

என்னால் தானே அவள் துன்பப் படுகிறாள் என்று இவன் வருந்துகிறான்.

தான் குற்றம் செய்து விட்டதாக பழியை தன் மேல் போட்டுக் கொள்கிறான் "நம் குற்றம் எண்ணும் கொல் "என்று நினைக்கிறான்.

அவளுக்கு என்ன, ஜாலியா ஊர் சுத்திட்டு, swiggy ல order பண்ணி சாப்பிட்டுக்கிட்டு இருப்பாள் என்று  நினைத்தால் காதல் வருமா?

மீண்டும் மீண்டும் அவன் நினைவில் வருவது அவளின் மெல்லிய விரல்கள்.

அவள் வருந்துவாளே என்று அவன் வருந்துகிறான்.

அது தான் தாம்பத்யம். அது தான் காதல்.


இப்படி மெல்லிய, நுணுக்கமான மனித உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது  நாலடியார்.

இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.

மூல நூலை தேடிப் பிடித்து படியுங்கள்.

Monday, July 27, 2020

நாலடியார் - எதைக் கற்பது ?

நாலடியார் - எதைக் கற்பது ?


உலகத்தில் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடியுமா?  அதுவும் நன்றாக இருக்கிறது, இதுவும் சுவாரசியமாக இருக்கிறது, அது பயனுள்ளதாக இருக்கும், இது ஆன்மீகத்துக்கு உரிய நூல் என்று அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது.

சரி, ஏதோ ஒன்றை படிக்கலாம் என்று உட்கார்ந்தால் , "டொய்ங்" என்று whatsapp சத்தம். என்ன தான் வந்திருக்கிறது என்றுர் பார்ப்போம் என்று மனம் அதன் பின்னே போகிறது. பார்த்தால் அதோடு நிற்குமா மனம்? அதுக்கு ஒரு பதில் போடுவது. நாம் போட்டால் மற்றவன் சும்மா இருப்பானா? அவன் பதிலுக்கு ஒன்று சொல்லுவான். இப்படி கொஞ்ச நேரம் போகிறது.

சரி, அதை எல்லாம் முடித்து விட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,இந்த செய்திகளை கொஞ்சம் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று மனம் போகிறது.  கொரோனா என்ன ஆச்சோ, கிரிக்கட் மேட்ச் எப்படி வருமோ, தங்கம் விலை என்ன ஆயிற்றோ என்று கவலை. சரி அதை எல்லாம் பார்த்துட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,

இந்த hotmail / gmail ஒருக்க சீக்கிரம் பாத்ருவோம் என்று மனம் போகிறது.

அப்புறம், இந்த facebook update கொஞ்சம் பாக்கணும்.

இது உருப்படுமா?



நாலடியார் சொல்கிறது....

"கல்விக்கு கரை இல்லை. நம் வாழ்நாளோ மிகவும் சொற்பமானது. அதிலும் பல நாட்கள் நோயில் போய் விடுகிறது. எனவே, ஆராய்ந்து, தெளிந்து சிறந்தவனவற்றையே படிக்க வேண்டும். எப்படி என்றால், நீரும் பாலும் கலந்து இருந்தாலும், நீரை விடுத்து பாலை மட்டும் உண்ணும் அன்னம் போல."

பாடல்

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

click the link below to continue reading

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_34.html

பொருள்

கல்வி கரையில = கல்வி கரை காண முடியாதது. நாலடியார் காலத்திலேயே அப்படி என்றால், இப்போது எவ்வளவு வளர்ச்சி நிகழ்ந்து இருக்கிறது?

கற்பவர் நாள்சில; = கற்றுக் கொள்ள நினைப்பவர்களின் நாடுகளோ வெகு சில.


மெல்ல நினைக்கின்  = ஆராய்ந்து பார்த்தால்

பிணிபல = நோய் பல.உடல் நோயும், மன நோயும்.

தெள்ளிதின் =  தெளிந்து

ஆராய்ந்து =ஆராய்ந்து

அமைவுடைய = பொருத்தமானவற்றை

கற்பவே = கற்க வேண்டும்

நீரொழியப் = நீரை நீக்கி

பாலுண் = பாலை மட்டும் உண்ணும்

குருகின் தெரிந்து. = அன்னப் பறவையைப் போல

வாசிக்கின்ற ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க வேண்டும். நான் இப்போது வாசிப்பது எனக்கு  எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்று.

தனக்கும், பிறருக்கும் இம்மைக்கும், மறுமைக்கும் அறம் பொருள் இன்பம் என்றான பலன்களை தராத நூல்களை ஒரு போதும் படிக்கக் கூடாது.

என்ன ? சரியா?



Saturday, July 20, 2019

நாலடியார் - யானும் அதனை அது

நாலடியார் - யானும் அதனை அது 



செல்வத்தை சேர்க்கத் தெரிய வேண்டும், அனுபவிக்கத் தெரிய வேண்டும், சேமிக்கத் தெரிய வேண்டும்.

இந்த மூன்றும் தெரிந்தவர் உலகில் மிகச் சிலரே.

சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால், சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்கத் தெரியாமல் இருப்பார்கள்.

சிலர் தாட் பூட் என்று செலவழித்து அனுபவிப்பார்கள், செல்வத்தை சம்பாதிக்கத் தெரியாது. கடனை உடனை வாங்கி ஆடம்பரமாக வாழ்வார்கள்.

சம்பாதித்தாலும், செலவழித்தாலும், பிற் காலத்துக்கு வேண்டுமே என்று சரியான வழியில் அதை முதலீடு செய்யத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே.

சாலையில் ஒரு ஏழை போய்க் கொண்டிருந்தான். அந்த சாலையில் ஒரு பெரிய பணக்காரன் வீடு இருந்தது. அந்த வீட்டில், அந்த வீட்டின் உரிமையாளனான பணக்காரன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்த அந்த ஏழைப் பிச்சைக்காரன் சொன்னான்

"நானும் அவனும் ஒன்று" என்று.

"அது எப்படி நீயும் அவனும் ஒன்றாக முடியும். அவனோ பத்து தலைமுறைக்கு  சொத்து சேர்த்து வைத்திருக்கிறான். உன்னிடமோ அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லை.  நீங்கள் இரண்டு பேரும் எப்படி ஒன்றாக முடியும்" என்று கேட்டார்கள்.

பிச்சைக்காரன், "அந்தப் பணக்காரன் அவன் வைத்திருக்கும் பொருளை என்னுடையது என்னுடையது என்று சொல்லிக் கொண்டு திரிகிறான். நானும் எனது பொருளை எனது எனது என்று சொல்லித் திரிகிறேன்.  அவனிடம் உள்ளை செல்வத்தை அவன் யாருக்கும் வழங்குவது இல்லை. நானும் என்னிடம் உள்ள செல்வத்தை யாருக்கும் கொடுப்பது இல்லை. அவன் தன்னுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருக்கிறான். நானும், என் செல்வத்தை அனுபவிக்காமல் இருக்கிறேன். எங்களுக்குள் என்ன பெரிய வேறுபாடு ?"

என்கிறான்.

நகைச்சுவையான அந்தப் பாடல்

எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்;- தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்;
யானும் அதனை அது.


பொருள்


எனதென தென்றிருக்கும் = எனது எனது என்று இருக்கும்

ஏழை = ஏழை

பொருளை = பொருளை

எனதென தென்றிருப்பன் யானும்; = எனது எனது என்று இருப்பேன் நானும்

தனதாயின் = அவனுடையது என்றால்

தானும் அதனை வழங்கான்  = அவன் அதை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டான்

பயன்துவ்வான்; = அந்த செல்வத்தின் பயனை அவனும் அனுபவிக்க மாட்டான்

யானும் = நானும்

அதனை = அதே போல்

அது. = அதைச் செய்கிறேன்.

பணக்காரனிடம், பணம் இருக்கிறது.

நல்ல பெரிய கார் வாங்கலாம் - வாங்கவில்லை, ஆட்டோவில் போய் வந்து கொண்டிருக்கிறான் என்று   வைத்துக் கொள்வோம். அவனுக்கும், அதே போல்  ஆட்டோவில் போய் வந்து கொண்டிருக்கும் ஏழைக்கும் (பிச்சை காரனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை )  என்ன வித்தியாசம்.

ஏழை மற்றவர்களுக்கு தானம் செய்ய முடியாது.  அவனிடம் போதிய பணம் இல்லை.

பணக்காரன் தானம் செய்ய மாட்டான். இருவருக்கும் என்ன வித்தியாசம்.

பணம் இருந்தால் அனுபவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

இரண்டும் இல்லை என்றால், அந்த பணம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்றுதான்.

அனுபவிக்கவும், தானம் செய்யவும் தெரியாத பணக்காரன் , ஏழைக்கு சமம் என்கிறது  இந்த நாலடியார்.

பணம் இருந்தால், அனுபவியுங்கள், முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_20.html


Saturday, February 2, 2019

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல்

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல் 



பற்றிலேயே பெரிய பற்று இந்த உடல் மேல் கொண்ட பற்றுதான்.

இந்த உடம்புக்கு ஒரு சின்ன வலி, உபாதை என்றாலும் பதறிப் போகிறோம். "காலையில் இருந்து ஒரே தலைவலி ...சூடா காப்பி போட்டு குடிச்சேன், ரெண்டு ஸாரிடான் போட்டேன், தலைவலி தைலம் போட்டேன்...ஒண்ணுக்கும் அடங்க மாட்டேங்குது " என்று ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நாம் இந்த உடம்புக்காக கவலைப் படுகிறோம்.

அது மட்டும் அல்ல, அதுக்கு வயதாகிக் கொண்டே போகிறேதே என்ற கவலை...முடி நரைத்ததால் கவலை, தோல் சுருங்கினால் கவலை, கண் பார்வை மங்கினால் கவலை, காது கொஞ்சம் கேட்காவிட்டால் கவலை...

வயதான படுத்திருவோமோ ? மறதி வந்திருமோ ? பிள்ளைகளுக்கு பாரமா போயிருவோமோ என்ற பயம்.

இந்த உடம்பை வைத்துக் கொண்டு நாம் எவ்வளவு அல்லாடுகிறோம்....

காரணம் என்ன ?

காரணம், நாம், இந்த உடம்புதான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த உடம்பு பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியா ? அது நிஜமா ?

ஒரு ஈ இருக்கிறதே, அதன் சிறகு இருக்கிறதே, அது எவ்வளவு சின்னது? அந்த அளவுக்கு ஒரு சின்ன கீறல் உடம்பில் விழுந்தால் கூட, அதில் இருந்து இரத்தம் வரும், சீழ் பிடிக்கும், அதில் ஈ மொய்க்கும், கொஞ்சம் விட்டால் அதை காக்காய் கூட கொத்தும். அந்த காகத்தை விரட்ட, ஒரு குச்சி வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மோசமானது இந்த உடம்பு. அதுக்கு நாம் இந்தப் பாடு படுகிறோம்.

முடிக்கு டை அடிக்கிறோம், பவுடர், லிப் ஸ்டிக், ஷாம்பு, சோப்பு, எண்ணெய் , சென்ட், அது இது என்ன என்று கொட்டி முழக்குகிறோம்.

பாடல்

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

பொருள்

மா = பெரிய, சிறந்த, அழகு உடைய

கேழ் = உறவு

மட = இளமையான

நல் = நல்ல

ஆய் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே

என்றரற்று = என்று அரற்றும்

சான்றவர் = பெரியவர்

நோக்கார்கொல் = பார்க்க மாட்டார்களா ? அறிய மாட்டார்களா ?

நொய்யதோர் = இழிவான

புக்கிலை  = இடம் இல்லை

யாக்கைக்கோர் = இந்த உடம்புக்கு

ஈச்சிற கன்னதோர் = ஈ + சிறகு + அன்னது ஓர் = ஈயின் சிறகைப் போல

தோல் = தோலில்

அறினும்  = சின்ன வெட்டு காயம் ஏற்பட்டாலும்

வேண்டுமே = வேண்டுமே

காக்கை  = காக்கையை

கடிவதோர் = விரட்ட  ஓர்

கோல் = கோல் , குச்சி

இளமை நிலையானது அல்ல.

சரி, அதுக்காக எப்ப பார்த்தாலும் வயதான பெரிசுக மாதிரி கவலைப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ?

இல்லை. அது நிலையானது அல்ல என்று தெரிந்து கொண்டால் போதும்.

மரண பயம் போய் விடும். நம் மரணம் மட்டும் அல்ல, மற்றவர்களின் மரணமும்  நம்மை வருத்தாது.

"அதெல்லாம் சரி, இருந்தாலும் ...." என்று இழுப்பது கேட்கிறது...என்ன செய்ய...

மருந்தைக் கொடுக்கலாம்...யார் குடிப்பது?



Wednesday, May 30, 2018

நாலடியார் - நிலையறியா ஆமை போல்

நாலடியார் - நிலையறியா ஆமை போல் 


அவன் ஒரு பேதை என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். பேதை என்றால் என்ன ?

வருகின்ற துன்பத்தை அறியாமல் மகிழ்ந்து இருப்பவன் பேதை.

சிகரெட் பிடிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அதனால் வரப் போகும் துன்பத்தை அறியாமல் அந்த சந்தோஷத்தின் பின்னால் போகிறவன் பேதை.

மது அருந்துவதும் அப்படித்தான்.

சூதாடுவது.

படிக்கின்ற காலத்தில், படிக்காமல் நண்பர்களோடு ஊர் சுற்றிக் கொண்டிருப்பது....

இதெல்லாம் பேதைமை.

வருகின்ற துன்பம் அறியாமல், ஆடிப் பாடி சந்தோஷமாக பொழுதை கழிப்பது பேதைமை.

கடலில் மீன் பிடிக்க செல்பவர்கள், சில சமயம் ஆமையும் பிடித்து வருவார்கள்.

பெரிய அண்டாவில்,  குளிர்ந்த நீரை விட்டு, அந்த அண்டாவில் ஆமையை நீந்த விட்டு, அண்டாவிற்கு அடியில் நெருப்பை மூட்டி விடுவார்கள். குளிர்ந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடு ஏறும். வெது வெதுப்பான நீரில் , அந்த ஆமை அங்கும் இங்கும் நீந்தி மகிழும்.  நீர் சூடு ஏறி கொதிக்கக் தொடங்கும்.  சூடு பொறுக்க மாட்டாமல் ஆமை  வெந்து மடியும்.

அது பேதைமை.

சரி, இது மட்டும் தானா பேதைமை ?

இறப்பு வரும். காலன் வருவான். அது தெரியாமல், ஆடிப் பாடி மகிழும் நாம் செய்வதற்கு என்ன பெயர் வைக்கலாம் ?

பாடல்

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.


பொருள்

கொலைஞர்  = கொலையில் வல்லவர்கள்

உலையேற்றித் = உலையில் நீரை ஏற்றி

தீமடுப்ப = தீ மூட்டி வைத்த பின்

ஆமை = அதில் மிதக்கும் ஆமை

நிலையறியா = தன் நிலை அறியாமல்

தந்நீர் = அந்த நீர்

படிந்தாடி யற்றே = படிந்து ஆடியற்றே

கொலைவல் = கொலையில் வல்ல

பெருங்கூற்றம் = பெரிய கூற்றுவன் (எமன்)

 கோள்பார்ப்ப = நாள் பார்த்து வருவான்

ஈண்டை = இங்கு

வலையகத்துச் = வலையில் மாட்டி

செம்மாப்பார் =  சிறப்பாக மகிழ்ந்து இருப்பவர்

மாண்பு = செயல்

வரும் துன்பம் அறியாமல் , என்னா ஆட்டம்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/05/blog-post_30.html

Saturday, April 28, 2018

நாலடியார் - பொறுமை

நாலடியார் - பொறுமை 


நமக்கு யாராவது தீங்கு செய்தால், உடனே அவருக்கு ஏதாவது தீங்கு செய்ய வேண்டும் என்று தோன்றுவது இயல்பு. தீங்கு என்றால் பெரிய துன்பம் தர வேண்டும் என்று அல்ல. நாம் சொன்னதை எதிர்த்துச் சொன்னால், நாம் சொல்வதை மதிக்காவிட்டால், நம்மைப் பற்றி சில சமயம் உண்மை சொன்னால் கூட நமக்கு கோபம் வருகிறது.

இப்போது இல்லாவிட்டாலும், வேறு எப்போதாவது அவருக்கு பதிலுக்கு ஒரு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.

அப்படி இல்லாமல், நமக்கு தீமை செய்தவர்களை, நமக்கு துன்பம் தந்தவர்களை பொறுத்துப் போவது என்பது மிகப் பெரிய நல்ல குணம்.

பொறுமை இல்லாமல் பல காரியங்களை செய்து விட்டு பின்னால் வருந்துவதை விட, கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எவ்வளவோ சிக்கல்களை தவிர்க்கலாம்.

பொறுமை பற்றி நாலடியார் சில கருத்துக்களை கூறுகிறது.

நாம் பொறுமையை கடை பிடிக்க வேண்டும் என்றால், அந்த பொறுமையை நாசம் செய்பவர்களிடம் இருந்து முதலில் விலக வேண்டும்.

சில பேர் இருக்கிறார்கள், நாம் ஒன்று சொன்னால், வேண்டம் என்றே குதர்க்கமாக ஒரு பதில் சொல்வார்கள். நாம் அதற்கு ஒரு பதில் சொல்வோம்.  ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து நாம் ஏதாவது சொல்லி விடுவோம்.

முட்டாள்களை விட்டு விலகி இருப்பது நலம். அந்த முட்டாள்கள் நாம் சொல்வதை சிதைத்து சொல்வார்கள். திரித்து சொல்வார்கள். அவர்களிடம் இருந்து எப்படியாவது விலகி விட வேண்டும்.

பாடல்


கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.


பொருள்

கோதை யருவிக் = மாலை போல அருவி

(click here to continue reading)

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_71.html

குளிர் = குளிர்ந்து

வரை = மலை (யில் விழும்)

நன்னாட = நல்ல நாட்டை உடையவனே

பேதையோ டியாதும் = போதையோடு ஏதும்

உரையற்க = சொல்லாதே

பேதை = பேதை, அறிவிலி,முட்டாள்

உரைப்பிற் = ஏதாவது நல்லது சொன்னால்

சிதைந்துரைக்கும் = சிதைத்து உரைக்கும். மாற்றிச் சொல்லுவார்கள்.

வகையான் = வழி பார்த்து

வழுக்கிக் = மென்மையாக, (nice ஆகா)

கழிதலே நன்று = விட்டு  விலகி விடுவதே நல்லது .

முட்டாள்கள் எப்போதும் ஏதாவது வாதம்  செய்து கொண்டே  இருப்பார்கள். முன்னுக்கு பின்  முரணாக பேசிக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களை விட்டு விலகுவது நலம்.

யோசித்துப் பாருங்கள். உங்களை அடிக்கடி பொறுமை இழக்கச் செய்பவர்கள் யார்  யார் என்று. முடிந்தவரை அவர்களை விட்டு விலகி நில்லுங்கள்.




Friday, March 23, 2018

நாலடியார் - பயனில் பொழுதாக் கழிப்பரே

நாலடியார் - பயனில் பொழுதாக் கழிப்பரே 


படித்தவர்கள், அறிஞர்கள், பெரியவர்கள் இவர்களின் நட்பு கிடைப்பதே கடினம். அப்படியே கிடைத்தாலும் அந்த நட்பை சிறந்த வழியில் பயன் படுத்தாமல், "அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நல்லா இருக்கும், அதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விட்டு, அருமையான காலத்தை வீணாக கழிப்பவர்கள் அறிவில்லாத மடையர்கள் என்று சொல்கிறது நாலடியார்.

பாடல்

பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.

பொருள்

பொன்னே கொடுத்தும் = பொன் (தங்கம்) கொடுத்தும்

புணர்தற் கரியாரைக் = புணர்தற்கு அரியாரை = கூட பழக முடியாதவர்களை

கொன்னே = ஒன்றும் கொடுக்காமல்

தலைக்கூடப் பெற்றிருந்தும் = ஒன்றாக இருக்க பெற்றாலும்

அன்னோ = ஐயோ

பயனில் = பயன் படாத

பொழுதாக் கழிப்பரே  = பொழுதை கழிப்பார்கள்

நல்ல = நல்ல

நயமில் அறிவி னவர் = நன்மை இல்லாத அறிவற்றவர்கள்

பெரியவர்களின் நட்பு, செல்வத்தை விட உயர்ந்தது. பொன் கொடுத்தாலும் அந்த நட்பைப் பெற வேண்டும். சிலருக்கு அப்படி பட்ட வாய்ப்பு ஒரு செலவு இல்லாமலே கிடைத்திருக்கும். அதை சரியான படி பயன் படுத்தாமல் வீணாக பொழுதை கழிப்பார்கள் அறிவற்ற மூடர்கள்.

அறிவு இருக்கும். ஆனால் அது நன்மை தராத அறிவு. "நயமில் அறிவினவர்" என்கிறது நாலடியார்.

பணம் சேர்பதையே குறிக்கோளாக வைத்துக் கொள்ளக் கூடாது. சம்பாதித்த   பணத்தை செல்வழித்தாவது உயர்ந்தவர்களின் நட்பைப் பெற வேண்டும். ஒரு வேளை அந்த மாதிரியான  நட்பு எளிதில் கிடைத்தால், அதை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

பொழுதை வீணாக செல்வழிக்கக் கூடாது.

தேடுங்கள். நல்லவர்களை. படித்தவர்களை. அறிஞர்களை. சான்றோரை. அவர்கள் சொல்வதை கேட்டு நடங்கள். அது உங்களை மேலும் அறிவுள்ளவர்களாகச் செய்யும்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_23.html

Tuesday, March 28, 2017

நாலடியார் - மனம்வேறு செய்கையும் வேறு

நாலடியார் - மனம்வேறு செய்கையும் வேறு


நாளும் பல பேரை சந்திக்கிறோம். இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எப்படி அறிந்து கொள்வது ?

சில பேரை பார்த்தவுடன் பிடித்துப் போய் விடுகிறது. சிலரை பார்த்தாலே பிடிப்பதில்லை.

ஒருவரை நம்பி பணம் கொடுக்கலாமா ? நம்பி சில இரகசியங்களைச் சொல்லலாமா ?

ஏன், சில பேரை பார்த்து அவர்களுடன் பழகி காதல், திருமணம் என்று கூட போய் விடுகிறது. அப்படி திருமணம் செய்தவர்கள் பின்னாளில் யோசிப்பது உண்டு, எங்கே போயிற்று அந்த காதல் என்று. காதல் போய் வெறுப்பு நிறைந்த வாழ்க்கை , அவர்கள் எடுத்த முடிவை சிந்திக்க வைக்கும்.

யாரை நம்புவது ? யாரை நம்பாமல் இருப்பது ?

சிக்கல் தான். இதற்கு ஒரு தெளிவான விடை இல்லை. இருக்கவும் முடியாது.

மற்றவர்கள் மனதில் இருப்பதை நாம் ஒருநாளும் அறிந்து கொள்ள முடியாது என்கிறது நாலடியார்.


பாடல்

யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.


பொருள்

யாஅர் ஒருவர் = யார் ?

ஒருவர்தம் உள்ளத்தைத் = மற்றொருவரின்  உள்ளத்தை

தேருந் துணைமை யுடையவர் = தெரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர் ?

சாரல் = மலைச் சாரலில்

கனமணி = பெரிய மணிகள்

நின்றிமைக்கும் = நின்று ஒளி விடும்

நாட! = நாட்டை உடையவனே

கேள்; = கேள்

மக்கள் = மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு = நினைப்பது ஒன்று , செய்வது மற்றொன்றாக இருக்கும்


நல்லது செய்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல. ஊருக்கு நாலு நல்லது செய்து விட்டு  அதன் பின்னணியில் பல தீய செயல்களை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அது போல தீய செயல் செய்பவரின் மனத்திலும் சில நல்ல விஷயங்கள் இருக்கலாம்.

வழிப்பறி செய்துகொண்டிருந்த வாலமீகிக்குள் தான் பெரிய துறவி இருந்தார்.

சாத்திரம் அத்தனையும் கரைத்துக் குடித்த இராவணணுக்குள்தான் மாற்றான் மனைவியை  விரும்பும் தீய குணம் இருந்தது.

செயலை வைத்து ஒருவரை முழுவதும் எடை போட முடியாது. தீர ஆராய வேண்டும் என்கிறது நாலடியார்.

சரிதானே ?

 

Tuesday, February 28, 2017

நாலடியார் - வீடென்று எதைச் சொல்வீர் ?

நாலடியார் - வீடென்று எதைச் சொல்வீர் ?


ஒரு வீடு , வீடாவது எப்போது ?

வீட்டை சுத்தமாக வைத்து, நல்ல விளக்கு போட்டு, சாமான்களை அதது அந்தந்த இடத்தில் வைத்திருந்தால் அது  நல்ல வீடாகுமா ?

வீடென்றால் என்ன ? ஒரு வரவேற்பு அறை , சமையல் அறை , குளியல் அறை , டிவி முதலிய சாதனங்கள் இருந்தால் நல்ல வீடாகுமா ?

பல வீடுகளில் இவை எல்லாம் இருப்பது இல்லை. குடிசை வீடாக இருக்கலாம். ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீடாக இருக்கலாம். வாடகை வீடாக இருக்கலாம். மிக மிக வசதி குறைவான வீடாக இருக்கலாம். அவை எல்லாம் வீடாகாதா ?

இதெல்லாம் வீடல்ல.

வசதி இருக்கிறதோ, இல்லையோ அதெல்லாம் கணக்கு இல்லை. எந்த வீட்டில் பெண் கற்போடு இருக்கிறாளோ, அதுவே வீடு. மத்ததெல்லாம் வீடு அல்ல.

பாடல்

நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

பொருள்

நாலாறும் = நான்கு பக்கமும்

ஆறாய் = இடிந்து விழும் நிலையில் இருந்தாலும்

நனிசிறிதாய் = ரொம்ப ரொம்ப சின்னதாய் இருந்தாலும்

எப்புறனும் = எல்லா பக்கங்களிலும்

மேலாறு = மேலே உள்ள

மேலுறை = கூரை

சோரினும் = உடைந்து விழுந்தாலும்

மேலாய = சிறப்பான

வல்லாளாய்= வல்லவளாய்

வாழும் = தான் வாழும்

ஊர் = ஊரில்

தற்புகழு = தன்னை மற்றவர் புகழும்படி

மாண்கற்பின் = உயர்ந்த கற்புடைய

இல்லாள் = இல்லத்தை ஆளும் மனைவி

அமர்ந்ததே இல் =இருக்கும் இடமே வீடு

வீடு எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். நாலு பக்கமும் இடிந்து விழும்  சுவர். ஒழுகும் கூரை. எதுவாக இருந்தாலும் கவலை இல்லை.


வீட்டில் பெண் நன்றாக இருக்கிறாளா , அப்ப அதுதான் வீடு.

அதென்ன கற்புடைய பெண்கள் இருக்கும் வீடு தான் வீடு என்பது. எல்லா வீட்டு பெண்களும்  கற்புடன் தான் இருக்கிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றும்  ஏதோ வழி பிறழ்ந்து போயிருக்கலாம். அவர்களை தவிர்த்துப் பார்த்தால்  எல்லாம் கற்புள்ள பெண்கள்தான்.

எல்லா வீடும் , வீடுதான் என்று சொல்லி விட்டு போக வேண்டியதுதானே ?

கற்பு என்றால் ஏதோ உடல் சார்ந்த ஒழுக்கம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.

அது அல்ல.

கற்பு என்றால் கல் + பு விகுதி = கற்பு.

கல் போன்ற உறுதியான மனம் என்று பொருள்.

அது என்ன கல் போன்ற உறுதியான மனம் ?

ஒன்றைப் பற்றினால் அதில் நிற்பது. திருமணம் என்று ஒன்று ஆன பின்,கணவனை விட மற்ற ஆடவர்கள் அழகிலும், செல்வத்திலும், பலத்திலும், உயர்ந்தவர்களாக இருந்தாலும், கொண்ட கணவனையே சேர்ந்து நிற்கும் உறுதி.

காமம் என்பது தான் எவ்வளவுதான் பெருக்கெடுத்து வந்தாலும், கணவன் துணை இன்றி  காமத்தை அனுபவிக்காமல் இருக்கும் உறுதி. ஆண்கள் மனம் எளிதில் சலனம் அடையக் கூடியது. மனைவியை விட அழகான ஒரு  பெண்ணை பார்த்தால் சற்று பேதலிக்கும் குணம் கொண்டது. பெண் அப்படியல்ல.

எத்தனை துன்பம் வந்தாலும், நேர் வழியில் இருந்து தானும் விலகாமல் , கணவனையும், பிள்ளைகளையும் நல்ல நெறியில் செலுத்தும் உறுதி.

இராமாயணத்தில் , இராமனுக்கு முடி சூட்ட வேண்டும் உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள் என்று மந்திரிகளிடம் தசரதன் கேட்கிறான்.

எல்லோரும் அதை ஆமோதித்து தங்கள் கருத்துக்களை கூறுகிறார்கள்.

இறுதியில்,வசிட்டன் ஒரு வார்த்தை சொல்லுகிறான்.

சீதை நல்லவள் , எனவே இராமனுக்கு அரசை கொடுக்கலாம் என்று.

மண்ணினும் நல்லள் ; 
     மலர்மகள், கலைமகள், கலை ஊர்
பெண்ணினும் நல்லள் ; 
     பெரும் புகழ்ச் சனகியோ நல்லள்-
கண்ணினும் நல்லன் ; 
     கற்றவர் கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும்,
     உயிரினும், அவனையே உவப்பார்.

எதற்காக இராமனுக்கு முடி சூட்டலாம் என்று சொல்லிக் கொண்டு போகும் போது , சீதை நல்லவள், அதுவும் ஒரு காரணம் என்று சொல்கிறான்.

காரணம் என்ன ?

மனைவி ஒழுக்கமானவளாக இருந்தாள் , கணவனும் அப்படியே இருப்பான். அவள், அவனை வழி நடத்துவாள் என்பது அறியப்படுகின்ற ஒன்று.


வீட்டின் மனைவி நல்லவளாக இருந்தால், அது வீடு. இல்லையென்றால் அது வீடு இல்லை.

மனைவியை கொண்டாடுங்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தை வீடாக்குபவள் அவள்.






Sunday, January 22, 2017

நாலடியார் - எது அழகு ?

நாலடியார் - எது அழகு ?


அழகு இதில் இருக்கிறது ?

Beauty Parlor , சிகை அலங்காரம், பல விதமான நவீன உடைகள், உதட்டுச் சாயம், முகத்திற்கு பூசும் பொடிகள், என்று பலவிதங்களில் நம்மை அழகு படுத்திக் கொள்கிறோம்.

இதெல்லாம் அழகா ? நீடித்து நிற்கும் அழகா ?

முடியை எத்தனை அழகு செய்தாலும், வெளியே சென்றவுடன் ஒரு காற்று அடித்தால் கலைந்து விடும்.

எத்தனை powder கள் போட்டாலும், ஒரு வியர்வை, ஒரு மழை வந்தால் கரைந்து விட்டும்.

வெளியே செய்யும் அழகு எல்லாம் சில நிமிடங்கள்தான். மிஞ்சி மிஞ்சி போனால் சில மணி நேரம்.

உண்மையான அழகு எது தெரியுமா - ஒழுக்கத்தைத் தரும் கல்வி அழகே உண்மையான அழகு என்று சொல்கிறது நாலடியார்.

பாடல்


குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.


பொருள்

குஞ்சி யழகும் = குஞ்சி என்றால் ஆண்களின் தலை முடி. முடியின் அழகும் 

இராமன் முடி சூட்டாமல் வருகிறான். அவனை தூரத்தில் இருந்து பார்த்த கோசலை நினைக்கிறாள், மஞ்சன புனித நீரால் இராமனின் முடி நனைய வில்லை என்று...


‘புனைந்திலன் மௌலி; குஞ்சி
     மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும்
     ஐயத்தாள் நளின பாதம்.
வனைந்த பொன் கழற்கால் வீரன்
     வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ

     நெடு முடி புனைதற்கு?’ என்றாள்.


கொடுந்தானைக் கோட்டழகும் = தானை என்றால் ஆடை. கோட்டம் என்றால் வளைவு.  வளைந்து நெளிந்து இருக்கும் ஆடையின் வனப்பு.

மஞ்சள் அழகும் = மஞ்சளின் அழகும்

அழகல்ல = அழகு அல்ல

நெஞ்சத்து = மனதில்

நல்லம்யாம் = நல்லவர்கள் நாம்

என்னும் = என்ற

நடுவு நிலைமையால் = ஒழுக்கம் தவறாத நடு நிலைமையால்

கல்வி அழகே அழகு = கல்வியின் அழகே அழகு


முடி - ஆண்களுக்கு. 

மஞ்சள் - பெண்களுக்கு 

ஆடை - இருவருக்கும் 

எனவே ஆண் பெண் என்ற இருவருக்கும் இந்த வெளி வேடங்களில் அழகு இல்லை. 

கல்வியால் தான் அழகு.

கல்வி என்றால் என்ன ? நிறைய புத்தகங்கள் வாசித்து வருவதும், பட்டங்கள் பெறுவதும் அல்ல  கல்வி.

ஒழுக்கத்துடன் , நல்லவர்களாக வாழ எது வழி காட்டுகிறதோ அதுவே கல்வி. 

ஒழுக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்து இருந்தாலும், உலகம் அவனை போற்றாது.இராவணன் பெரிய கல்விமான் தான். "நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த" நா வன்மை கொண்டவன் தான். அவனிடம் அறிவு இருந்தது. ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லா கல்வியால் பயன் இல்லை.  

நல்லவர்களாக இருக்க வேண்டும். 

நடுவு நிலைமை பிறழாதவர்களாக இருக்க வேண்டும். 

இந்த இரண்டையும் தரும் கல்வியின் அழகே அழகு.

ஊருக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை நாலடியார்.

"நல்லம் யாம்" . நாம் நல்லவர்கள் என்று நம் மனதுக்குத் தெரிய வேண்டும். 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க , பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்பார் வள்ளுவர். 



அந்த கல்வியில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது ?

மேலும் சிந்திப்போம். 




Tuesday, January 3, 2017

நாலடியார் - யாரை நட்பாகக் கொள்வது ?

நாலடியார் - யாரை நட்பாகக் கொள்வது ?


நண்பர்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்கள். நம் வாழ்வின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள். அது நல்ல திசையிலும் இருக்கலாம், அல்லது மற்ற வழியிலும் இருக்கலாம்.

நண்பர்களை எப்படி தேர்தெடுப்பது ?

நம்மை விட படித்தவர்கள், செல்வத்தில், அதிகாரத்தில் , புகழில் உயர்ந்தவர்களை நாம் நட்பாக பெற விரும்புவோம். அதில் தவறு ஒன்றும் இல்லை.

நாலடியார் ஓர் எச்சரிக்கை தருகிறது.

படித்தவர்கள், அறிவாளிகள் , புத்திசாலிகள் சில சமயம் தங்களுடைய சுய நலத்துக்காக நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், வலிமை அற்ற சில நண்பர்களோ நாம் தவறே செய்திருந்தாலும் நம்மை மன்னித்து நம் மீது தொடர்ந்து அன்பு செலுத்துவார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை நாம் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.

யானை இருக்கிறதே, அது வலிமையானதுதான், கம்பீரமானதுதான் இருந்தாலும் சில சமயம் தன்னை பழக்கிய பாகனையே அது மிதித்து கொன்று  விடுகிறது. நாய் இருக்கிறதே அது சாதாரண விலங்குதான் . நாம் அதை எட்டி உதைத்தாலும், திட்டினாலும், அது நம் மீது தொடர்ந்து அன்பு காட்டும். நாம் அதன் மீது வேலை எறிந்தாலும் , அந்த வேல் உடலில் தைத்து இருந்து வேதனை தந்தாலும்  , அதையும் மறந்து அந்த நாய் நம் மீது அன்பு செலுத்தும். அது போல, நம் பிழை பொறுத்து, நம் மீது அன்பு கொண்டவர்களை நாம் நட்பாகக் கொள்ள வேண்டும்.

பாடல்

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

பொருள்

யானை யனையவர் = யானை அனையவர் = யானை போன்றவர்

நண்பொரீஇ = நட்பைக் கொள்ளாமல்

நாயனையார் = நாய் அனையர் = நாய் போன்றவர்

கேண்மை = நட்பை

கெழீஇக் கொளல்வேண்டும்; = தழுவிக் கொள்ள வேண்டும்

யானை = யானையானது

அறிந்தறிந்தும் = தன்னை நன்றாக அறிந்த

பாகனையே கொல்லும் = பாகனையே கொல்லும்

எறிந்தவேல் = தன் மேல் எறியப்பட்ட வேல்

மெய்யதா = உடலில் தைத்து இருந்த போதும்

வால்குழைக்கும் நாய் = வாலை குழைத்து வரும் நாய்


அறிவும், செல்வமும், அதிகாரமும் நட்புக்கு அடிப்படை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அது சில சமயம் அதுவே ஆபத்தாகக் கூட முடியலாம்.

அன்புதான் நட்புக்கு அடிப்படை.

அது மட்டும் அல்ல,

நாம் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்றால், நம் நண்பர்கள் செய்யும் துன்பத்தையும்  பொறுத்துக் கொள்ள வேண்டும். நட்பில் சில சமயம் சில வேண்டாத   வார்த்தைகள் வந்து விழுந்து விடலாம், சந்தேகம் வரலாம், வேறு ஏதேனும்  மனக் கசப்பு வரலாம். அவற்றை மறந்து அன்போடு இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

நாயிடம் இருந்தும் பாடம் படிக்கலாம்.

நாய் என்றால் ஏதோ ஒரு கேவலமான பிராணி என்று தான் இலக்கியங்கள்  பேசி வந்திருக்கின்றன.

நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு என்பார் மணிவாசகர்.

நம்மையும் ஓர் பொருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து என்பதும் அவர் வாக்கே.

அதை மாற்றி நாய் போன்ற குணம் உள்ளவர்களின் நட்பை கொள்ள வேண்டும் என்று சொல்கிறது  நாலடியார்.

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அந்த மாதிரி நண்பர்களாய் இருக்கிறோம் ?


Thursday, December 8, 2016

நாலடியார் - நன்மையையும் தீமையும்

நாலடியார் - நன்மையையும் தீமையும் 


மனித உறவுகள் சிக்கல்கள் நிறைந்தது.

அவற்றை வெற்றிகரமாக சமாளித்து கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல.

நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நாம் செயலாற்றும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் செய்யும் காரியங்கள் அவர்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம், அல்லது தீமையாகவும் முடியலாம்.

அதே போல் அவர்கள் நமக்குச் செய்யும் காரியங்களும் அப்படியே.

இதில் சிக்கல் என்னவென்றால், நல்லவர்கள் அவர்களுக்கு நாம் ஒரு நல்லது செய்திருப்போம். பின்னாளில் ஏதாவது தீமை செய்தால் கூட, முன்னாளில் செய்த நன்மைகளை நினைத்து நம்மால் விளைந்த தீமைகளை பொறுத்து மன்னிப்பார்கள்.

ஆனால் கயவர்களோ, நாம் எவ்வளவு நன்மை செய்திருந்தாலும், ஒரு தீமை செய்து விட்டால், முன்பு செய்த அத்தனை நல்ல காரியங்களையும் தீயதாகவே பார்ப்பார்கள்.

உதாரணமாக, நண்பர் ஒருவர் தன் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ வரன் ஏதும் இருந்தால் சொல்லும்படி நம்மிடம் கேட்டு இருப்பார், நாமும் நமக்குத் தெரிந்த வரன் ஏதும் இருந்தால் சொல்லி இருப்போம். அது திருமணத்திலும் முடிந்து இருக்கும். பின்னாளில், அந்த திருமணத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால், அந்த நண்பர் நல்லவராக இருந்தால் " சரி,ஏதோ அவருக்கு தெரிந்த வரனை சொன்னார், நம் நேரம் சரி இல்லை..." என்று விட்டு விடுவார். அதுவே அந்த நண்பர் நல்லவர் இல்லை என்றால் "...நான் துன்பப் பட வேண்டும் என்றே இந்த மாதிரி  ஒரு மோசமான வரனை எனக்குச் சொல்லி இருக்கிறான்/ள் " என்று நினைப்பதோடு மட்டும் அல்லாமல், நாம் அவருக்கு முன்பு செய்த நன்மைகளையும் தீமையாகவே  கருதுவார்.

பாடல்

ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்கு
எழுநூறு நன்றி செய்து, ஒன்று தீதுஆயின்,
எழுநூறும் தீதாய்விடும்.

பொருள்

ஒரு நன்றி = ஒரு நல்லது

செய்தவர்க்கு = செய்தவர்களுக்கு

ஒன்றி எழுந்த = பின்னால் வந்த

பிழை நூறும் = நூறு பிழைகள் (தீமைகள்)

சான்றோர் பொறுப்பர்; = சான்றோர் பொறுத்துக் கொள்வார்கள்

கயவர்க்கு = கயவர்களுக்கு

எழுநூறு = 700

நன்றி செய்து = நல்லது செய்த பின்

ஒன்று தீதுஆயின் = ஒரு தீமை செய்து விட்டால்

எழுநூறும் தீதாய்விடும் = முன்பு செய்த எழு நூறையும் தீமை என்றே கருதுவார்கள்.


சரி, கயவர்கள் எப்படியோ போகட்டும். இதில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம் என்ன ?

முதலாவது பாடம், நாம் கயவர்களா ? நல்லவர்களா ? நல்லவர்கள் என்றால் மற்றவர்கள் நமக்குச்  செய்த தீமைகளை அவர்கள் நமக்குச் செய்த நல்லவற்றை நினைத்து மன்னித்து விடவேண்டும்.

இரண்டாவது பாடம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று ஆராய்ந்து பின் உதவி செய்ய வேண்டும். நாம் நல்லதே நினைத்து  உதவி செய்வோம். ஏதோ ஒரு காரணத்தால் அது சரியாக வர வில்லை என்றால்,  உதவி பெற்றவன் கயவனாக இருந்தால், நாம் இது வரை அவனுக்குச் செய்த எல்லா நன்மைகளையும் தீமையாகவே கருதி நமக்கு துன்பம் விளைவிக்க நினைப்பான்.

மூன்றாவது பாடம், மற்றவர்கள் நமக்குச் செய்யும் நன்மைகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவர்கள் நமக்கு தீமை செய்தால், முன்பு செய்த நன்மைகளை நினைத்து , தீமைகளை மன்னித்து விட வேண்டும்.

பாவத்திலேயே பெரிய பாவம் என்று வள்ளுவர் எதை கூறுகிறார் தெரியுமா ? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊருக்கு தீ வைத்தல், பொது நீர் நிலையில் நஞ்சைக் கலத்தல் , குரு நிந்தனை என்று இதை எல்லாம் பெரிய பாவமாக  கருதவில்லை. இதை எல்லாம் விட பெரிய பாவம் ஒருவன் நமக்குச் செய்த நன்றியை மறந்து விடுவது ஆகும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு 

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறந்து விடுவதைப் போல பெரிய தீமை இல்லை என்கிறார்.

எனவே, மற்றவர்கள் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து, அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மறந்து மன்னித்து வாழப் பழகுவோம்.




Wednesday, December 7, 2016

நாலடியார் - வழும்பருக்கில்லா தேரை

நாலடியார் - வழும்பருக்கில்லா தேரை 



சிலர் நிறைய புத்தகங்கள் வாசிப்பார்கள். பெரியவர்கள் பேசிய சொற்பொழிவுகளை கேட்பார்கள். அவர்கள் வீட்டுக்குப் போனால் எங்கு பார்த்தாலும் புத்தகமாய் இருக்கும். படித்தத்தில் பல மனப்பாடம் கூட ஆகி இருக்கும். பல புத்தகங்களில் இருந்து மேற் கோள் காட்டுவார்கள்.

ஆனால், நடை முறை வாழ்க்கை என்னவோ ஒன்றும் படிக்காதவன் வாழ்க்கை மாதிரித்தான் இருக்கும். "இவ்வளவு எல்லாம் படிக்கிறீர்களே , நீங்கள் செய்வதற்கும் படித்ததற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே " என்று கேட்டால் "அதெல்லாம் படிக்க நல்லா இருக்கும்...நடை முறைக்கு சாத்தியம் இல்லை.." என்று படித்ததை எல்லாம் தள்ளி வைத்து விடுவார்கள்.

இந்த தவளை இருக்கிறதே, அது குளத்தில் வாழும். குளத்தில் நல்ல தண்ணீர் தான் இருக்கும். இருந்தும், அதன் முதுகு என்னவோ அழுக்கு ஏறி வழுக்கும் படி இருக்கும். தன் உடம்பில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யத் தெரியாது. அழுக்காக அலையும்.

அது போல, நிறைய படித்தும் கேட்டும் இருந்தும், மன அழுக்கு நீங்காமல் திரிபவர்கள் பலர்.

பாடல்

செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்

தேர்கிற்கும் பெற்றி அரிது.


பொருள்

செழும்பெரும் = செழுமையான பெரிய

பொய்கையுள் = குளத்தில்

வாழினும் = வாழ்ந்தாலும்

என்றும் = என்றும்

வழும்பறுக்க = வழும்பு என்றால் அழுக்கு. அழுக்கை போக்கிக் கொள்ளாத

கில்லாவாந் தேரை:= செய்யாதாம் தேரை

வழும்பில்சீர் = குற்றம் அற்ற உயர்ந்த

நூல்கற்றக் கண்ணும் = நூல்களை கற்ற பின்னும்

நுணுக்கமொன் றில்லாதார் = நுணுக்கம் ஒன்று இல்லாதவர்கள்


தேர்கிற்கும் பெற்றி அரிது = தன்னை தேர்ச்சி கொள்ளச் செய்து கொள்ளும் வன்மை இல்லாமல் இருப்பார்கள்

இந்தப் பாடல், கயமை என்ற அதிகாரத்தில் வருகிறது.

பல படித்தும் அதை தம் வாழ்வில் கடை பிடிக்காதவர்கள் கயவர்கள்.

இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது என்ன என்றால்

"நுணுக்கமொன் றில்லாதார்"

நூலை மேலோட்டமாக படித்து விட்டு செல்பவர்கள். நுணுக்கமாக  ஆராயாதவர்கள். நூலில் சொல்லப் பட்ட உண்மைகளை, ஆழ்ந்த கருத்துக்களை  அறியாதவர்கள் தங்கள் குறைகளை போக்கிக் கொள்ள மாட்டார்கள்.

இரண்டாவது அர்த்தம்,  நுணுக்குதல் என்றால் நுண்ணியமாக வேலை செய்தல் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது, படித்தவற்றில் உள்ளவற்றை , நமது  வாழ்க்கைக்கு ஏற்றவாறு ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  அப்படியே எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது.

மூன்றாவது,

கற்க கசடு அற , கற்பவை, கற்ற பின், நிற்க அதற்குத் தக 

என்றார் வள்ளுவர். படித்தவற்றை , அப்படியே பின் பற்றக் கூடாது. அது வாழ்க்கைக்கு எப்படி  பயன்படும் என்று அறிந்து பயன்படுத்த வேண்டும்.

நான்காவது, நுணுகுதல் என்றால் கூர்மையாக்குதல் என்று பொருள். படிக்க படிக்க அறிவு கூர்மையாக வேண்டும். மேலோட்டமான அறிவு எல்லோருக்கும் இருக்கும். ஆழ்ந்த அறிவு, கூர்மையான அறிவு வளர வேண்டும்.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே " என்பார் மணிவாசகப் பெருந்தகை 


உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

என்பது திருவாசகம்

இன்றிலிருந்து ஒரு உறுதி மொழி எடுத்துக்  கொள்ளுங்கள்.

எது தேவையோ அதை மட்டுமே படிப்பது என்றும், படித்ததில் உள்ளவற்றை ஆராய்ந்து அதன்படி நடப்பது என்றும்.

படித்தபடி நடக்காவிட்டால் , படித்து என்ன பலன் ? எதைக் கேட்டாலும், இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று ஒதுக்கி விடுவதென்றால், படித்து நேரத்தை ஏன் விரயமாக்க வேண்டும் ? படிக்காமல் இருந்தால் , அந்த நேரமாவது மிச்சப்படுமே. காலத்தை வீணடிப்பானேன் ? ஏதோ பெரிய புத்தகங்களை எழுதினவர்கள் எல்லாம் நடை முறையில் நடக்கக் கூடியது எது, நடக்க முடியாதது என்று தெரியாதவர்கள் போலவும், நாம் தான் அனைத்தும் அறிந்தவர்கள் போலவும் நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும்.


ஏன் நுணுக்கமாக அறிய வேண்டும் ? புத்தி ஏன் கூர்மையாக இருக்க வேண்டும் ?

புலன்களும் புத்தியும் கூர்மையாக கூர்மையாக அவற்றிற்கு பின்னால் உள்ள உண்மை புலப்படும்.

சப்தம் வருகிறது. சங்கீத ஞானம் உள்ளவனுக்கு அதில் உள்ள இராகம், தாளம், பாவம், லயம், சுருதி எல்லாம் தெரியும். சங்கீத அறிவு இல்லாதவனுக்கு அது ஒரு சப்தம் அவ்வளவுதான். அறிவு கூர்மையாகும் போது சத்தம் சங்கீதமாகும்.

 இரைச்சலான இந்த உலகத்தின் பின்னால் இருக்கும் இனிய சங்கீதம் தெரிய வேண்டும் என்றால் , புத்தியை கூர்மை படுத்த வேண்டும்.

நுணுகி ஆராயுங்கள். உண்மை வெளிப்படும். பிரபஞ்சம் புலப்படும்.


கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா 
வெளியே, வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே! 
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!

என்று பட்டர் சொன்னது போல , உங்கள் அறிவின் அளவுக்குள் இந்த பிரபஞ்சம் வசப்படும்.






Thursday, November 24, 2016

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு 


வாழ்க்கை நிலையாமை கூட எல்லோருக்கும் புரிந்து இருக்கிறது. இன்றில்லா விட்டால் என்றாவது ஒரு நாள் மரணம் வரும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆனால், தெரியாத இரண்டு நிலையாமை இருக்கிறது.

ஒன்று, செல்வம்.

இன்னொன்று இளமை.

இளமை எப்போதும் இருக்கும் என்று மனிதன் நினைக்கிறான். முதுமை எட்டிப் பார்த்தால் கூட அதை மறுதலிக்கிறான். எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அதை மறுக்கப் பார்க்கிறான்.

முடி நரைக்கிறது  - சாயம் பூசி அதை மீண்டும் கறுப்பாக காட்டுகிறான்.

பல் ஆடுகிறது, விழுகிறது - ஏதேதோ சிகிச்சை செய்து முன்பு போல் செய்து கொள்கிறான்.

எத்தனை க்ரீம்கள், பவுடர்கள் , பூச்சுகள், என்று கல்லறைக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அழகாக , இளமையாக தோன்ற வேண்டும் என்று நினைப்பது என்ன தவறா ?

தவறில்லைதான்...இருந்தாலும், அந்த இளமையை பற்றிக் கொண்டு இருப்பதில் ஒரு  சிக்கல் இருக்கிறது.

பாடல்

மற்று அறிவாம் நல் வினை; யாம் இளையம்' என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே, கரவாது, அறம் செய்ம்மின்!-
முற்றி இருந்த கனி ஒழிய, தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு!

பொருள்

மற்று = பின்னால்

அறிவாம் = அறிவோம், செய்வோம்

நல் வினை; = நல்ல வினைகளை

யாம் இளையம்' = நாம் இளமையானவர்கள் என்று

என்னாது = எண்னாமல்


கைத்து = கையில்

உண்டாம் = உள்ள

போழ்தே = போதே

கரவாது = மறைக்காமல்

அறம் செய்ம்மின்! = தான தர்மங்களை செய்யுங்கள்

முற்றி = முற்றி

இருந்த = இருக்கும்

கனி ஒழிய = கனியை விட்டுவிட்டு

தீ வளியால் = வெப்பக் காற்றில்

நல் காய் = நல்ல காய்

உதிர்தலும் உண்டு! = உதிர்ந்து விடுவதும் உண்டு

எப்போதும் இளமையாக இருக்க நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்படி இளமையாக இருப்பதாக  நினைத்துக் கொண்டு, நல்ல காரியங்களை பின்னால் பார்த்துக்  கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், சில சமயம் கனிந்த பழம் இருக்க காய் உதிர்வதும் உண்டு.

வயதான பின் தான் மரணம் வரும், நினைவு தவறும் என்று நினைக்கக் கூடாது.

வாழ்க்கை என்பது நீர் குமிழி மாதிரி. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் .

எனவே, நல்ல காரியங்களை தள்ளிப் போடாமல் உடன் செய்வது நல்லது.



Friday, October 28, 2016

நாலடியார் - அவர்கள் செய்த குற்றம்

 நாலடியார் - அவர்கள் செய்த குற்றம்  


காமம் பற்றி பேசுவது என்பது இன்றும் ஒரு சங்கடமான விஷயமாகவே இருக்கிறது. பிள்ளைகள் எந்த வலை தளத்தில் , எதைப் பார்த்து கெட்டுப் போவார்களோ என்ற பயப்படாத பெற்றோர்கள் இல்லை. பிள்ளைகள் சில வலை தளங்களுக்குச் செல்லாமல் தடுக்கவும் எத்தனையோ வழி முறைகள் , மென் பொருள்கள் வந்துள்ளன.

எல்லாம் எதனால் ?

காதல், காமம் பற்றி சரியான ஒரு அணுகுமுறை இல்லாததால்.

திருக்குறள், நாலடியார் போன்ற நூல்கள், காமத்தை எவ்வளவு அழகாகச் சொல்கின்றன.

ஒரு தாயும் மகனும் ஒன்றாக அமர்ந்து , முகம் சுளிக்காமல் அவற்றை படிக்க முடியும்.

ஒரு தந்தையும், மகளும் ஒன்றாக படித்து இன்புற முடியும்.

அப்படி ஒரு பாடல்.

ஒரு பெண் பிரிவுத் துயரால் வாடுகிறாள். அவள் காதலன் பொருள் தேடி வெளியூர் சென்றிருக்கிறான். தன் துயருக்கு நான்கு  பேரை அவள் குற்றம் சாட்டுகிறாள்.

சிவன், காகம், பாம்பு, தாய்.

இந்த மூன்று பேரும்தான் தன்னுடைய துயருக்கு காரணம் என்கிறாள்.

எப்படி ? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே ?

பாடல்

கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி.

பொருள்

கண்மூன் றுடையானும் = மூன்று கண்கள் உடைய சிவனும்

காக்கையும் = காக்கையும்

பையரவும் = அரவு என்றால் பாம்பு. படம் எடுத்து ஆடும் பாம்பும்

என்னீன்ற யாயும் = என்னை ஈன்ற தாயும்

பிழைத்ததென் = எனக்கு பிழை செய்தார்கள்

பொன்னீன்ற = பொன் போன்ற

கோங்கரும் = முளை விடும் அரும்பு

அன்ன = போன்ற

முலையாய் = மார்பை உடையவளே

பொருள்வயிற் = பொருள் சேர்க்க வேண்டி

பாங்கனார் = தோழர்

சென்ற நெறி = சென்ற வழி

என்ன இது ஒண்ணுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா ?


சிவன், முன்பு ஒரு முறை மன்மதனை எரித்தான் . அப்படியே விட்டிருக்கலாம். ரதியின் மேல் பரிதாபம் கொண்டு, அவனை மீண்டும் உயிர்பித்தான். அப்படி உயிர்ப்பிக்காமல் இருந்திருந்தால், அவன் இப்படி என் மேல் மலர் அம்புகளை ஏவி என்னை  இப்படி வதைக்க மாட்டான் அல்லவா. எனவே, சிவன் முதல் குற்றவாளி.

இந்த காகம் , தன் கூட்டில் உள்ள குயிலின்   முட்டையை அடை காத்து குயிலாக  வெளிக் கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்தக் குயில் இப்படி இனிமையாகக்  கூவி என் பிரிவுத் துயரை மேலும் துன்பம் உள்ளதாக மாற்றாமல் இருந்திருக்கும். 

பாம்பு. இராகு கேது என்ற பாம்பு , சந்திரனை கிரகணத்தன்று விழுங்கியது. அப்படியே இருந்திருக்கலாம். ஏனோ மீண்டும் வெளியில் விட்டு விட்டது. அப்படி  விட்டதால் தானே இந்த நிலவு என்னை இப்படி சுட்டு எரிக்கிறது. 


தாய். எல்லாவற்றிற்கும் மேல், என் தாய் என்னை பெண்ணாக பெறாமல் இருந்திருந்தால்  எனக்கு இந்த துயர் வருமா என்று கேட்கிறாள். 

யாரிடம் ? தன் தோழியிடம். அவளை எப்படி வருணிக்கிறாள் ? தென்னை மரத்தில்  சின்ன குருத்து வரும். அது போல இளமையான மார்பகங்களை கொண்டவளே  என்று. தானும் அவ்வளவு சின்னப் பெண் என்று சொல்லாமல் சொல்கிறாள். 

இளமையான, காதல் வயப்பட்ட பெண். பிரிவு அவளை மிகவும் வாட்டுகிறது. 

எவ்வளவு கண்ணியமாகச் சொல்கிறாள். 

பிரிவிலும் ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது. 


Thursday, October 27, 2016

நாலடியார் - கீழ் மேலாய் நிற்கும் உலகு

நாலடியார் - கீழ் மேலாய் நிற்கும் உலகு 


நல்லவர்கள் துன்பத்தில் , வறுமையில் வாடுவதும், கெட்டவர்கள் செலவச் செழிப்பில் மகிழ்ச்சியாக இருப்பதும் நாம் தினமும் காணும் காட்டுச்சியாக இருக்கிறது.

அறம் , நீதி, நேர்மை, கடின உழைப்பு என்று இருப்பவர்கள் வாழ்வில் முன்னேற முடியாமல் கையால் ஆகாதவன், ஒண்ணுக்கும் உதவாதவன் என்று பட்டம் பெற்று ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிக் தவிப்பார்கள்.

கயவர்களோ பெரும் செல்வத்துடன், எல்லோரும் வியக்கும் வண்ணம் வாழ்வார்கள்.

நாலடியார், இதற்கு ஒரு தீர்வு சொல்லவில்லை. அடுத்த ஜென்மத்தில் அல்லது சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் அவரவர்களின் செயலுக்கு ஏற்ற பலனை அனுபவிப்பார்கள் என்று சாக்கு போக்கு சொல்லவில்லை.

உலகம் அப்படித்தான் இருக்கிறது. எல்லாமே தலைகீழாக இருக்கிறது.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பணம் படைத்த செல்வந்தர்களும், படித்த சான்றோரும் கெட்டு கீழ் நிலையில் இருக்கவும். வேசிகளும், தீயவர்களும் உயரிய இடத்தில் இருப்பதும் நாளும் நடக்கிறது. குடையில், பயன்படும் துணிப் பகுதி கீழும், கைப்பிடி மேலும் இருப்பதைப் போல என்று  யதார்த்தைப் பேசிச்  செல்கிறது.



பாடல்

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருக்கிக்
கடைக்கால் தலைக்கண்ணதாகிக் குடைக்கால்போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு!

பொருள்

உடைப் = உடைய. மற்றவர்களுக்கென்று உடைய 

பெருஞ் செல்வரும் = பெரிய செல்வந்தர்களும் 

சான்றோரும் = சான்றோரும்

கெட்டுப் = கெட்டு , கீழ் நிலை அடைந்து

புடைப்பெண்டிர்  மக்களும் = விலை மகளிரும் 

கீழும் = கீழான கயவர்களும்

பெருக்கிக் = செல்வம் புகழ் இவற்றைப் பெருக்கி

கடைக்கால் =    கீழே உள்ள குச்சி

தலைக்கண்ணதாகிக் = தலைப் பக்கம் வந்து

குடைக்கால்போல் = குடையில் உள்ளது போல

கீழ்மேலாய் = கீழே உள்ளது மேலேயும், மேலே உள்ளது கீழேயும்

நிற்கும் உலகு! = இருக்கும் இந்த உலகம்


உடைப்பெருஞ் செல்வரும் - அறிவுள்ளவர்களிடம் சேர்ந்த செல்வம் , ஊருக்கு பொதுவில் இருக்கும் ஊருணியில் நீர் நிறைந்தால் எப்படி எல்லோருக்கும் பயன் தருமோ அது போல எல்லோருக்கும் பயன் தரும் என்பார் வள்ளுவர்.

ஊருணி நீர் நிறைந்தற்றே-உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு.

என்பது குறள்