Friday, March 1, 2019

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா


மனித உணர்ச்சிகள் நுண்மையானவை. அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த மிகுந்த திறமை வேண்டும். மனதில் நினைப்பதை சரியாகச் சொல்லத் தெரியாமல், ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லி, எவ்வளவு சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.

ஆண் பெண் உணர்வு என்பது மிக நுட்பமானது. மிகவும் அந்தரங்கமானது. பெண்ணுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், ஒரு நாணம், ஒரு பயம், ஒரு தயக்கம் அவளை எப்போதும் பின்னுக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறது. எனவே, அவள் சொல்வதில் பாதி உண்மை, மீதியை நாம் ஆண்  தேடி புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. தவறாக புரிந்து கொண்டால், அதுவும் சிக்கல். என்ன

கலித்தொகை. பாலைக் கலி.

அற்புதமான பாடல்.

தலைவி, தன் தோழியிடம் சொல்கிறாள். காதல், காமம் எல்லாம் ஒன்று சேர்ந்தது. அதை எவ்வளவு நளினமாக, நாசூக்காக, ஒண்ணுமே தெரியாத மாதிரி சொல்கிறாள் என்று பாருங்கள்.

"பல்லு கொஞ்சம் கூர்மையானது தான். முள்ளு போல இருக்கும். இருந்தாலும் குத்தாது. குத்தினாலும் வலிக்காது. அந்த பற்கள் நிறைந்த வாயில் இருந்து ஊறும் நீர், கள்ளை விட இன்பம் தரும் என்று சொல்லும் அவர், அதோடு நிற்காமல், என் உடையையும் திருத்துவார். ஏன் அப்படி செய்கிறார் என்று எனக்கு ஒண்ணும் தெரியல" என்கிறாள் பாவம் போல.

பாடல்

முள்ளுறழ்  முளை  யெயிற் றமிழ்தூறுந் தீநீரைக்
கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மமையாரென்
னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவ
ருள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முள்ளு உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை 
கள்ளினும் மகிழ் செய்யும் என உரைத்து அமையார் என் 
ஒன் ஒள்  இழை திருத்துவார் காதலர் மற்று 
அவர் உள்ளுவதென் கொல் அறியேன் என்னும் 

பொருள்


முள்ளு = முள்

உறழ் = மாறிய, மாறுபட்ட. முள்ளு மாதிரி இருக்கும், ஆனா முள்ளு இல்லை

முளை = முனை ,

எயிற்று = எயிறு என்றால் பல்

அமிழ்து ஊறும் = அமிழ்து ஊறும்

தீ நீரை  = தீ நீரை

கள்ளினும் = கள்ளை விட

மகிழ் செய்யும் = மகிழ்ச்சி தரும்

என உரைத்து = என்று சொன்னதோடு

அமையார் = சும்மா இருக்க மாட்டார்

என் = என்னுடை

ஒன் ஒள்  இழை = ஒள் என்றால் ஒளி பொருந்திய, shining.  இழை என்றால் ஆடை. சிறந்த பள பளப்பான ஆடை

திருத்துவார் = சரி செய்வார்

காதலர் = காதலர்

மற்று  = மேலும்

அவர் = அவர்

உள்ளுவதென் = மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ

கொல் = அசைச் சொல்

அறியேன் = எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

என்னும் = என்று சொல்லுவாள்



"முளை எயிற்று அமிழ்து ஊறும்"

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்பது திருமதிரம்.

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

இந்து என்றால் சந்திரன்

சந்திரனின் இளம் பிறையை போன்ற பல்லை (தந்தத்தை) உடைய விநாயகரை போற்றுகிறேன் என்கிறார் திருமூலர்.



"தீ நீர்"

சூடான நீர்.  குளிர்ச்சிதான். இருந்தாலும் கொஞ்சம் சூடும்தான். என்ன ஒரு வார்த்தை பிரயோகம்.

அவனை பார்ப்பதற்கு என்றே நல்லா உடை உடுத்திக் கொண்டு போய் இருக்கிறாள்.

அவன் அந்த ஆடையை "திருத்தினானாம்". எதுனால அப்படி செய்தான்னு எனக்குத் தெரியலை என்கிறாள். பாவம் போல.

ஏன் என்று சொல்லி இருந்தால், அது மூன்றாம் தர காம பத்திரிக்கையாகி இருக்கும். தெரியாது என்று சொன்னதில் அந்த இலக்கியம் உயர்ந்து நிற்கிறது.

காமத்தை எவ்வளவு நளினமாக, மென்மையாக வெளிப்படுத்துகிறது இந்த இலக்கியங்கள்.

மற்றதை எல்லாம் விட்டு விடுவோம்.

உணர்ச்சிகளை மென்மையாக, முழுமையாக எப்படி வெளிப்படுத்துவது என்று  இதில் இருந்து பாடம் படிப்போம். அது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post.html

Monday, February 25, 2019

திருக்குறள் - தவம்

திருக்குறள் - தவம்


நீங்கள் மற்ற குறள்களை படிக்கிறீர்களோ, இல்லையோ அல்லது மற்ற புத்தகங்கள் எதையும் படிக்கிறீர்களோ இல்லையோ, இந்த ஒரு குறளை மட்டும் முழுவதுமாக உணர்ந்து படித்தால் போதும் என்று சொல்லுவேன். அவ்வளவு இருக்கிறது.

அப்படி என்ன குறள் அது?

பாடல்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு


பொருளுக்கு பின்னால் வருவோம்.

அனைத்து உயிர்களும் இன்பத்தையே விழைகின்றன. துன்பம் வேண்டும் என்று யாராவது நினைப்பார்களா ? ஆனால், இன்பம் என்னவோ அத்தி பூத்தாற் போல் என்றோ ஒரு நாள் வருகிறது, சில காலம் இருக்கிறது. பின் மறைந்து விடுகிறது. எப்பப் பாரு துன்பம், வேலை, எரிச்சல், எதிர் காலம் பற்றிய பயம், ஒரு படபடப்பு, இனம் புரியாத ஒரு டென்ஷன், சந்தோஷம் வந்தால் கூட வெளியே காட்டிக் கொள்ள பயம், கண் பட்டு விடுவோமோ என்று, மற்றவர்கள் பொறாமை கொள்வார்களோ என்று பயம்...இன்பத்தில் கூட துன்பமே இருக்கிறது.

இது என்ன வாழ்க்கை? எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை. இன்னும் ஓடு ஓடு   என்று வாழ்க்கை ஓட்டிக் கொண்டே இருக்கிறது.

பணம் இருந்தால், உடல் நிலை சரி இல்லை.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், உறவுகள் சரி இல்லை.

உறவுகள் சரியாக இருந்தால்,  வேலையில் குழப்பம்.

இப்படி ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு நம்மை ஒரு பக்கமும் போக விடாமல்  வாழ்க்கை புரட்டி புரட்டி எடுக்கிறது.

வெளியே சந்தோஷமாகக் காட்டிக் கொண்டாலும், உள்ளூர ஆயிரம் சிக்கலில்  கிடந்து தவிக்கிறோம்.

என்ன செய்வது ? இதில் இருந்து எப்படி வழி படுவது ?

இந்த கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.

இலக்கியங்கள் பொதுவாகவே எதையும் மிகைப் படுத்தி கூறும் இயல்பு உடையவை.

ஒருவன் பலசாலி என்று சொல்ல வேண்டும் என்றால், ஆயிரம் யானை பலம் கொண்டவன்  என்று சொல்லும். மலையையே தூக்கி விடுவான் என்று சொல்லும். மலையை தூக்க முடியுமா ? முடியாது. இருந்தாலும், பெரிய பல சாலி என்று சொல்லுவதற்கு  ஒரு உத்தி அது.

பல இலக்கியங்களில் பார்க்கிறோம்....பெரிய சாதனைகளை  செய்பவர்கள், தவம் செய்து , வரம் பெற்று அவற்றை சாதித்தார்கள் என்று பார்க்கிறோம்.

காட்டில் சென்று, முள் முனையில் நின்று, அன்ன ஆகாரம் இன்றி,  உடம்பின் மேல் புற்று வளரும் அளவுக்கு தன்னை மறந்து தவம் செய்வார்கள். கடவுள் நேரில் வருவார்.  வேண்டிய வரங்களை தருவார்...என்றெல்லாம் படித்து இருக்கிறோம்.

தவம் செய்தால், கடவுளே நேரில் வருவார். நாம் நினைத்தது நடக்கும். இந்திர பதவி கிடைக்கும். அகில உலகங்களையும் ஆளலாம். தேவர்களையும் வேலை வாங்கலாம். நீண்ட நாள் வாழலாம். புது உலகையே படைக்கலாம். ரொம்ப ஜாலியாக இருக்கலாம்.

சரி. நம்மால் காட்டில் போய் , ஜடா முடி எல்லாம் வளர்த்துக் கொண்டு தவம் செய்ய முடியுமா ?   அன்னம் தண்ணி இல்லாமல் இரண்டு நாள் இருக்க முடியுமா நம்மால்?  முடியாது தான்.

அப்படி என்றால் நம்மால் தவம் செய்ய முடியாதா ?

ஆயிரம் யானை பலம் மாதிரி, இவை எல்லாம் கொஞ்சம் அதீத கற்பனை தான்.

காட்டுக்கெல்லாம் போக வேண்டாம்.

வள்ளுவர் சொல்கிறார். தவம் என்றால் என்ன என்று.

ரொம்ப ரொம்ப எளிமையான விளக்கம். ஏழே வார்த்தை.

தவம் என்றால் இரண்டு விஷயங்கள் என்று சொல்ல்கிறார் வள்ளுவர்.

ஒண்ணு நமக்கு வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்வது.

இன்னொன்று

மற்றவர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது.

அம்புட்டுதான்.

இதில் முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

துன்பம் வந்தால் பொறுத்துக் கொள்வது.

அதற்கு என்ன அர்த்தம்?

துன்பம் வரும். வந்து கொண்டே இருக்கும். அதை பொறுப்பதுதான் தவம்.

சற்று விரிவாகப் பார்ப்போம்.

புத்தர் சொல்கிறார், வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்தது என்று. அதற்கு அர்த்தம் எப்ப பார்த்தாலும் ஏதாவது பசி, பிணி, அடி தடி, சண்டை, வழக்கு, வாய்தா என்று அத்தம் அல்ல.

வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றால், முயற்சி வேண்டும். எந்த முயற்சியும் கடினமானது தான்.

உதாரணமாக,

பிள்ளை பரீட்சைக்கு படிக்கிறான். ஒரு இடத்தில் இருந்து, ஒவ்வொரு நாளும், பல மணி நேரம் விடாமல் படிப்பது என்பது கடினமான செயல் தான். துன்பம் தான். வலி அல்ல. வருத்தம் அல்ல. ஆனால், துன்பம். முதுகு வலிக்கும். கை வலிக்கும். தூக்கம் வரும். கழுத்து வலிக்கும். அவற்றைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அது தவம்.

கணவன் மனைவி உறவில் ஏதோ சிக்கல். யார் பேசுவது. எப்படி சமாதானம் செய்வது. எப்படி விட்டு கொடுப்பது. தப்பு யார் பேர்ல....இவற்றை எல்லாம் நேருக்கு நேர் இருந்து பேசுவது சங்கடம்தாம். வலி அல்ல. வருத்தம் அல்ல. ஆனாலும், ஒருவித துன்பம் தான். அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொண்டு, பேசினால்தான் சிக்கல் தீரும். இல்லை என்றால் கோர்ட் படி ஏற வேண்டி வரும்.

அலுவலகத்தில், தொழில் செய்யும் இடத்தில், நண்பர்கள் மத்தியில், உறவில் எங்கும்  சிக்கல்கள் வரலாம்...அதை சகித்துக் கொண்டு, அவற்றை களைய வேண்டும். பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் ஒன்றும் நடக்காது.

அலுவலகத்தில் மேலே உயர வேண்டுமா ? மற்றவர்களை விட கடினமாக உழைக்க வேண்டும். அது துன்பம் தான். பெண்டாட்டி, பிள்ளைகளை விட்டு விட்டு, சோறு தண்ணி இல்லாமல் இரவு பகலாக உழைத்தால் பதவி உயர்வு வரும். உழைப்பு துன்பம் தான். அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால்   சாதிக்க முடியாது.

கணவனுக்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்கு நல்லது செய்வோம். அவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் ஏதாவது பேசி விடுவார்கள். அந்த வார்த்தை துன்பம்தான். அதைப் பொறுப்பது தவம். தவம் செய்தால் வெற்றி கிடைக்கும்.

விளையாட்டில், படிப்பில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். துன்பம் இல்லாமல் இருக்காது.

இன்னும் சொல்லப் போனால் , நாம் செய்ய வேண்டியது எல்லாம் எந்த துன்பம் வேண்டும் என்று தேர்வு செய்வது தான்.

கடினமாக உழைத்து படிக்கும் துன்பம் வேண்டுமா ?

அல்லது நல்ல வேலை இல்லாமல், நல்ல சம்பளம் இல்லாமல் படும் துன்பம் வேண்டுமா?

இந்த இரண்டு துன்பத்தில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வது மட்டும் தான் நாம் செய்யக் கூடியது. இரண்டுமே வேண்டாம் என்றால் முடியாது.

நேர்ந்த துன்பத்தை பொறுத்துக் கொள்வது தவம் என்கிறார் வள்ளுவர்.

துன்பத்தை பொறுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்லவே. எப்படி துன்பத்தை பொறுத்துக் கொள்வது? சொல்லுவது எளிது. செய்வது எப்படி?

அதற்குத்தான் விரதம் என்று ஒன்று வைத்தார்கள்.

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார். அது துன்பம் தான். பசிக்கத்தான் செய்யும். சட்டியில் சாதம் இருக்கிறது. வேண்டுமானால் போட்டு சாப்பிடலாம். சாப்பிடாமல் இருந்து பார். இப்படி ஒவ்வொரு மாதமும் பசி என்ற துன்பத்தை பொறுத்து பழகிக் கொள்கிறோம்.

தூக்கம் வரும். சிவ இராத்திரி. தூங்காமல் இருந்து பார். துன்பம் தான். பொறுத்துப் பழகு. கண் விழித்து வேலை செய்ய வேண்டிய நாட்கள் வரும். அப்போது, இந்த பழக்கம் கை கொடுக்கும்.

மலை ஏறு. பாத யாத்தரை போ. விரதம் இரு. தூக்கம் முழி.

இதெல்லாம் ஒரு பயிற்சி.

"உற்ற நோய் பொறுத்தல்"

நோய் என்றால் துன்பம். துன்பம் வந்தால் தையா தக்கா என்று குதிக்காமல், அமைதியாக அதை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். அதுதான் தவம்.

தவம் வெற்றிக்கு வழி வகுக்கும்.

வெற்றி இன்பத்தை கொண்டு வந்து தரும்.

யோசித்துப் பாருங்கள். துன்பம் என்று எவ்வளவு விஷயங்களை நீங்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்று. செய்யணும். செஞ்சால் நல்லது. அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் செயல்களின் பட்டியலை தயார் செய்யுங்கள்.

ஒவ்வொன்றாக செய்யுங்கள். ஒவ்வொன்றும் கஷ்டம் தான். செய்து முடிக்க செய்து முடிக்க  மனதில் நிம்மதி பிறக்கும். வெற்றி வரும். இன்பம் வரும்.

செய்து பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_25.html

Saturday, February 23, 2019

பட்டினத்தார் பாடல்கள் - காதற்ற ஊசியும் வாராது காண்

பட்டினத்தார் பாடல்கள் - காதற்ற ஊசியும் வாராது காண்


நாம் செல்கின்ற வழியில் ஒரு பள்ளம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நேரே சென்றால் அதில் தடுக்கி விழுந்து விடுவோம் என்று தெரியும். இருந்தாலும், நேரே போய் அதில் தடுக்கி விழுந்து முட்டியை உடைத்துக் கொள்வது எவ்வளவு அறிவான செயல் ?

மருத்துவர் சொல்கிறார் , "நீங்க நிறைய இனிப்பு சாப்பிடக் கூடாது. மாவு பொருள்களை சாப்பிடக் கூடாது. நிறைய உடற் பயிற்சி செய்ய வேண்டும் " என்று. இருந்தும், அவர் சொல்வதை கேட்காமல், கண்டதையும் தின்பது அறிவான செயலா ?

தெரிந்தும் ஏன் தவறான செயல்களை செய்கிறோம் ?

கேட்டால், "இனிப்பு சாப்பிடாதே என்பது நல்ல அறிவுரை தான். இருந்தாலும் நடை முறைக்கு ஒத்து வராது " என்ற ஒரு பெரிய வேதாந்தம் வைத்து இருக்கிறோம். நம்மால் செய்ய முடியாதவற்றை எல்லாம், நம் சோம்பேறித்தனத்தை எல்லாம் இந்த ஒரு வரியில் சொல்லி விட்டு, மனம் போன படி நடக்கிறோம். அது அறிவான செயலா ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அரசர்கள் ஆண்ட காலத்தில் , இப்போது உள்ளது போல அல்ல பொருளாதார முறை. எவ்வளவு வரி வசூல் ஆனதோ அவ்வளவுதான் செலவு செய்ய முடியும். சில சமயம் போர், வெள்ளம், வறட்சி என்று வரும்போது செலவு அதிகமாகி விடும்.  அப்போது அரசர்கள், பெரிய வணிகர்களிடம் கடன் வாங்குவார்கள்.  அரசனுக்கு  கடன் கொடுப்பது என்றால் எவ்வளவு செல்வம் வேண்டும் ? அப்படிப் பட்ட செல்வ குடும்பத்தில் பிறந்தவர் பட்டினத்தார்.

செல்வத்தின் நிலையாமை ஒரே வரியில் அவருக்கு புரிந்து போனது. இத்தனை செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்தார். இதை எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு போகவா முடியும் என்று நினைத்தார். நம் கூட வராத இந்த செல்வத்தை சம்பாதிக்க, காக்க  ஏன் இந்தப் பாடு பட வேண்டும் என்று நினைத்தார்.

ஒரே நொடியில் அத்தனை செல்வத்தையும் உதறி தள்ளி விட்டு கட்டிய கோவணத்துடன் தெருவில் இறங்கி விட்டார்.

அது அறிவு.

தேவை இல்லை என்று தெரிந்த பின், அதை கட்டிக் கொண்டு போராடுவானேன்?  தூக்கி எறிந்து விட்டு கிளம்பி விட்டார்.

பாடல்

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

பொருள்

வாதுற்ற = வாதம் என்றால் தருக்கம். போர்.


திண்புயர் = திண்மையான புயங்கள். தோள்கள்

அண்ணாமலையர் = அண்ணா மலையில் வீற்று இருக்கும் சிவனின்

மலர்ப் பதத்தைப் = மலர் போன்ற பாதங்களை

போதுற்ற = மலர் தூவி

எப்போதும் = எப்போதும்

புகலுநெஞ் சே! = புகழ்வாய் நெஞ்சே

இந்தப் பூதலத்தில் = இந்த உலகில்

தீதுற்ற செல்வமென்? = தீமையான செல்வம் என்ன

தேடிப் புதைத்த = அரும்பாடு பட்டு தேடி, பின் புதைத்து வைத்த

திரவியமென்? = திரவியங்கள் என்ன

காதற்ற ஊசியும் = காது இல்லாத ஊசியும்

வாராது = வராது

காணுங்  =காண் , உம்

கடைவழிக்கே! = இறுதி வழிக்கே

செல்வம் தீமை கொண்டது.

அந்தக் காலத்தில் வங்கிகள் கிடையாது. கம்பெனிகள் கிடையாது. shares , fixed டெபாசிட், bonds எல்லாம் கிடையாது.

வீட்டில் செல்வத்தை வைத்து இருந்தால் , கள்ளர்கள் கொண்டு போய் விடுவார்கள் என்று பயந்து, பணத்தை பானையில் போட்டு கட்டி, புதைத்து வைத்து விடுவார்கள்.

வயதான காலத்தில் வைத்த இடம் மறந்து போகும்.

கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தினால் என்ன பயன்?

இப்போதும் கூட பாடு பட்டு பணத்தை தேடி, ஷேர் மார்க்கெட்டில் போடுகிறார்கள். அது விலை குறைந்து நட்டத்தில் போகும். சம்பாதித்த பணம் வீணாகிப் போகும்.

கஷ்டப் பட்டு சம்பாதித்து அதை மூலதனம் பண்ணி, அது காணாமல் போகும்.  இது என்ன அறிவற்ற செயல்.....

தெரிந்தும் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஊசி செய்யும் ஒரே வேலை தைப்பது. அந்த ஊசியின் காது (நூல் கோர்க்கும் ஓட்டை) உடைந்து போனால், அந்த ஊசியால் ஒரு பலனும்  .இல்லை.  அப்படி ஒரு    பயனும் இல்லாத ஊசி கூட நம் கூட வராது. அப்படி இருக்க, எதுக்கு இந்தப் பாடு ?

பணம் சேர்ப்பதா வாழ்வின் குறிக்கோள்?


படிப்பவை நம்மை பாதிக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் படிப்பேன்,  ஆனால் படித்தவற்றின் படி நடக்க மாட்டேன் என்றால் எதற்கு படித்து  நேரத்தை வீணாக்க வேண்டும் ?

காதற்ற ஊசியும் வாராது காண் , உம் கடை வழிக்கே 

நீதி நூல் - இனிய சொல்

நீதி நூல் - இனிய சொல் 


நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும் ?

எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.

முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம், சிரிச்சு பேசி, மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்..." னு நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா, எப்ப பாரு எரிஞ்சு எரிஞ்சு விழும்...வாயில நல்ல வார்த்தையே வராதே " என்ற இகழ் வரும்.

இரண்டாவது, நம்மை பிடிக்காதவர்கள், வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள். இனிய சொல் பகையை முறிக்கும். கொடிய சொல் நட்பை பிரிக்கும்.

மூன்றாவது, இனிய சொல் பேசுவதனால் நமக்கு என்ன இழப்பு வந்து விடப் போகிறது? ஒன்றும் இல்லை. பின் எதற்கு தயங்க வேண்டும். எப்போதும் இனிய சொற்களையே பேச வேண்டும்.

நான்காவது, நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நம்மோடு எப்போதும் இணை பிரியாமல் கூடவே இருப்பார்கள்.

பாடல்


வட்டவுல கெட்டுமிசை மட்டற நிரப்பும்
வெட்டவரு துட்டரை விலக்கிவச மாக்கும்
நட்டமிலை யெட்டனையு நட்டுநர ரெல்லாம்
இட்டமுறு கட்டுதவும் இன்மொழிய தன்றோ.


பொருள் 


வட்டவுல = வட்ட உலகில்

கெட்டு = எட்டு திசையும்

மிசை = இசை, இசை என்றால் புகழ்

மட்டற நிரப்பும் = அளவு இல்லாமல் நிரப்பும். புகழ் வந்து சேரும்.

வெட்டவரு = நம்மை வெட்ட வரும்

துட்டரை = தீயவர்களை, கொடியவர்களை

விலக்கி = நம்மை விட்டு விளக்கி

வச மாக்கும் = அவர்களை நம் வசமாகும்

நட்டமிலை = இனிய சொல் சொல்வதானால் நமக்கு ஒரு நட்டமும் இல்லை

யெட்டனையு = எத்துணையும்

நட்டுநர ரெல்லாம் = நாட்டில் உள்ள மக்களை எல்லாம்

இட்டமுறு = விருப்பத்துடன்

கட்டுதவும் = கட்ட உதவும். பிணைக்க உதவும்

இன்மொழிய தன்றோ. = இனிய மொழி அல்லவா ?


இனிய சொற்களை கூறுவதானால் என்னவெல்லாம் பயன் இருக்கிறது.

எனவே, எப்போதும் இனிய சொற்களையே பேச பழக வேண்டும்.

இனிய சொற்களை பேச வேண்டும் என்றால், முதலில் இனிய சொற்களை கேட்க வேண்டும். நல்லவற்றை கேட்க கேட்க அது நம்மையும் அறியாமல் நம்மிடம்  ஒட்டிக் கொள்ளும்.

கேளுங்கள். 


Friday, February 22, 2019

கச்சி கலம்பகம் - தூயவளே

கச்சி கலம்பகம் - தூயவளே 


காதல்வயப் பட்ட ஆண்களுக்குத் தெரியும், அவர்களின் மயக்கம். தான் காதலிக்கும் பெண் தேவதையா, கடவுளா, இப்படியும் ஒரு அழகான பெண் இருக்க முடியுமா என்று மயங்குவார்கள்.

அப்படி ஒரு காதல் போதை.

கச்சி கலம்பகத்தில் வரும் காதலன் , அவனுடைய காதலியை கண்டு மயங்குகிறான். இவள் மானிடப் பெண்னே அல்ல. இரம்பையோ, ஊர்வசியோ, மேனகையோ என்று திகைக்கிறான். இருந்தும் இவள் கண் இமைக்கிறது, அவள் சூடிய பூ வாடுகிறது எனவே இவள் மானிடப் பெண் தான் என்று முடிவுக்கு வருகிறான்.


பாடல்


பொங்கும் அருணயனப் பூவின் இதழ்குவியும்
இங்கு மலர்க்கோதை இதழ்வாடு - மங்குறவழ்
மாடக் கச்சியில் வாழுமெம் பெருமான்
குறையா வளக்கழுக் குன்றில்
உறைவா ளிவள்பூ வுதித்ததூ யவளே

பொருள்

பொங்கும் = பொங்கி வரும்

அருள் = கருணை , அன்பு

நயனம் = கண்கள்

பூவின் = பூ போன்று

இதழ்குவியும் = இதழ் குவியும். பூவின் மடல் குவிவது போல அவள் கண்கள் (இமைகள்) குவிகின்றன)

இங்கு = இங்கு

மலர்க்கோதை = மலர் மாலை

இதழ்வாடு = இதழ் வாடும். அவள் அணிந்த மாலையில் உள்ள மலர்கள் வாடும்

மங்குறவழ் = மங்குல் தவழ்  = மேகம் தவழும்

மாடக் = மாடம்

கச்சியில் = காஞ்சீபுரத்தில்

வாழுமெம் பெருமான் = வாழும் எம் பெருமான்

குறையா = குறையாத

வளக்கழுக் குன்றில் = வளம் பொருந்திய திருக்கழுக்குன்றம் என்ற இடத்தில்

உறைவா ளிவள் = வசிப்பவன் இவள்

பூ வுதித்த = பூ உலகில் உதித்த

தூ யவளே = தூய்மையானவளே

அவள் கண்கள் கருணையை வடிக்கின்றன.

"பொங்கும் அருள் நயனம்"

இந்த பூலோகத்தில் வந்து உதித்தாள்.

உதிப்பது என்றால், உள்ளது மீண்டும் தோன்றுவது என்று அர்த்தம்.

சூரியன் உதித்தது என்று சொல்வோம். சூரியன் எங்கேயும் போய் விடவில்லை. அது இரவில் நம் பார்வையில் படாமல் இருந்தது. காலையில் நமக்குத் தெரிகிறது. எனவே அதை  உதித்தது என்கிறோம்.

அது போல, அவள் இந்த பூ உலகில் வந்து உதித்தாள். வேறு ஏதோ உலகத்தில் உள்ளவள். இங்கு வந்து உதித்தாள் என்று அர்த்தம்.

நம்ம ஆட்கள் (முன்னோர்கள்) இரசித்து இரசித்து காதலித்து இருக்கிறார்கள்.

பாடலை வாசித்துப் பாருங்கள். காதலியை எந்த அளவுக்கு உயரே கொண்டு போகிறான் என்று தெரியும்.

Lovesu ....

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_22.html




Thursday, February 21, 2019

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ 


உயிர்களை வருத்தக் கூடாது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் , அதற்காக நாம் ரொம்ப சிரமம் எடுத்துக் கொள்வது கிடையாது. ஒரு கொசு கண் முன் பறந்தால் , ஒரே அடி.

குசேலர். கண்ணனின் தோழன். மிகுந்த வறுமையில் வாடினார். நிறைய பிள்ளைகள். வருமானம் இல்லை. பசி. பட்டினி. "கண்ணன் உங்கள் நண்பர் தானே, அவரிடம் சென்று ஏதாவது உதவி கேட்டால் என்ன " என்று கொஞ்சம் அவலை ஒரு பழைய துணியில் முடிந்து குசேலரை கண்ணனிடம் அனுப்பி வைக்கிறாள்.

குசேலர் கண்ணனை காண புறப்பட்டுப் போகிறார்.

போகிற வழியில் நல்ல வெயில். நிழல் பார்த்து மரத்தடியிலேயே போகலாம். நமக்கு எப்படி நிழல் வேண்டுமோ அது போலத்தானே எறும்பு போன்ற சின்ன உயிர்களுக்கும் நிழல் வேண்டும். அவைகளும் மர நிழலில் தானே நகரும். நாம் அந்த வழியில் சென்றால், அவற்றின் மேல் மிதித்து அவை இறந்து போகாதா? அவை பாவம் இல்லையா என்று நினைத்து, நிழலை விட்டு விட்டு வெயிலில் நடக்கிறார். வெயில் மண்டையைப் பிளக்கிறது. குடை எல்லாம் வாங்க வசதி இல்லை. தன் கையை விரித்து தலைக்கு குடை போல வைத்துக் கொண்டு நடந்து போகிறார். ....

பாடல்

சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
     போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
     ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
     காத லங்கை விரித்துக் கவித்தரோ.

பொருள்

சீத = குளிர்ந்த

நீழற் = நிழல்

செலிற் = செல்லும்

சிற் றுயிர் = சின்ன உயிர். ஈ எறும்பு போன்றவை

தொகை = கூட்டம்

போதச்  = அறிவு. இங்கே அறிந்து அல்லது எண்ணி என்று கொள்ளலாம்

 சாம்பும் = வருந்தும்

மென் றெண்ணிய = என்று எண்ணிய

புந்தியான் = புத்தி உள்ளவன்

ஆத வந்தவழ் = ஆதவன் + தவழ் = சூரியன் தவழும்

ஆறு = வழி

நடந்திடுங் காதல்  = நடக்க விரும்பி

அங்கை = அவருடைய கையை

விரித்துக் = விரித்து

கவித்தரோ. = குடை போல கவிழ்த்துக் கொண்டார்

ஜீவ காருண்யத்தின் உச்சம். தன்னால் ஒரு எறும்புக்குக் கூட தீங்கு வரக் கூடாது என்று எண்ணி, தன்னை வருத்திக் கொண்டு வெயிலில் நடந்தார்.

ஏழ்மை ஒரு புறம்.  பசி ஒரு புறம். வீட்டில் பிள்ளைகள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு புறம் நினைத்துப் பார்ப்போம். நாமாக இருந்தால் என்ன எல்லாம் நினைத்துப் பார்ப்போம் என்று.

ஏழையாக பிறந்ததற்காக பெற்றோரை ஏசுவோம், இந்த சமுதாயத்தை திட்டுவோம்,  அந்த கடவுளை தூற்றுவோம்.

எறும்புக்கு அருள் செய்ய மனம் வருமா அந்த சூழ்நிலையில் ?

அப்படிப்பட்ட அருளாளர்கள் பிறந்த மண் இது.

இவற்றை எல்லாம் படிப்பதன் மூலம், நம் மனத்திலும் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம்  அருள் சுரக்கத்தான் செய்யும்.

இல்லையா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_21.html

Wednesday, February 20, 2019

கைந்நிலை - நீந்தும் நெஞ்சு

கைந்நிலை - நீந்தும் நெஞ்சு 


அது ஒரு பெரிய காடு.

அந்த காட்டில் உள்ள மரங்களில் உள்ள பொந்துகளில் ஆந்தைகள் வசிக்கும். அவை இரவில் இரை தேடும். பகலில் , மர பொந்துகளில் வசிக்கும். வெயில் ஏற ஏற சூடு தாங்காது. கொஞ்சம் கொஞ்சமாய் பொந்தின் உள்ளே போகும். எவ்வளவு தான் போக முடியும். ஓரளவுக்கு மேல போகவும் வழி இருக்காது. மேலே வந்தால் சூடு வேற. பொந்துக்குள் இருந்து கொண்டு சத்தம் எழுப்பும். அது ஏதோ அந்த மரம் அனத்துவதைப் போல இருக்கும்.  டொக் டொக் என்று மரத்தை தன் அலகால் கொட்டி சத்தம் எழுப்பும்.

அந்த வழியாக போனால், கொஞ்சம் பயமா இருக்கும் அல்லவா ?

அது இருக்கட்டும் ஒரு பக்கம். பின்னால் வருவோம்.

வீட்டில், கணவனோ பிள்ளையோ வெளியூர் போய் இருப்பார்கள். இல்லத்தரசியின் மனம் பூராவும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கும். உடம்பு மட்டும் தான் இங்கே இருக்கும்.

இப்ப எந்திரிச்சிப்பாரு. இப்ப காப்பி குடிச்சிருப்பாரு. காலையில அந்த மாத்திரை சாப்பிடணும். ஞாபகம் இருக்குமோ இல்லையோ....

பிள்ளை காலையில தானே எழுந்திருக்க மாட்டானே. அவனை எழுப்பணுமே....

இந்த பொண்ணு தனியா அங்க போய் என்ன பண்ணுதோ....

என்று மனம் பூராவும் அங்கேயே இருக்கும்.

அது போல, இந்தப் பாட்டில், ஒரு தலைவி இருக்கிறாள். அவள் கணவன் பொருள் தேடி வெளியூர் போய் இருக்கிறான். அவன் போகிற வழியில் ஆந்தைகள் வாழும் காடு இருக்கிறது.

இவள் மனம் அவன் பின்னேயே போகிறது....


பாடல்



ஆந்தை குறுங்கலி கொள்ள நம் மாடவர்
காய்ந்து கதிர்தெறூஉங் கானங் கடந்தார்பின்
னேந்த லிளமுலை யீரெயிற்றா யென்னெஞ்சு
நீந்து நெடுவிடைச் சென்று.


பொருள்


ஆந்தை = ஆந்தை

குறுங்கலி கொள்ள = சிறிய ஒலி எழுப்ப

நம் மாடவர் = நம் ஆடவர் = நம்ம ஆளு (தோழியிடம் சொல்லுகிறாள் )

காய்ந்து = தீய்க்கும்

கதிர்தெறூஉங் கானங் = சூரிய கதிர்கள் தெறிக்கும் கானகம்

கடந்தார் = கடந்து செல்லுவார்

பின் = அவர் பின்

னேந்த லிளமுலை = ஏந்தல் இள முலை கொண்ட

யீரெயிற்றா  = எயிறு என்றால் பற்கள்.  இளமையான பற்களை கொண்டவளே

யென்னெஞ்சு = என் நெஞ்சு

நீந்து = நீந்துகின்றது

நெடுவிடைச் சென்று = நீண்ட அந்த வழியில்  சென்று


மனம் , நடந்து போகவில்லையாம். நீந்தி சென்றதாம். தவிப்பை மேலும் அடிக் கோடிட்டு காட்டுகிறது. நடந்து போனால், வழியில் எங்காவது நின்று இளைப்பாறிப் போகலாம்.  நீந்தும் போது எங்கே இளைப்பாறுவது.

தோழியை புகழ்கிறாள். அழகான பற்கள், இளமையான மார்பு என்று. "நீயும் என்னைப் போல சின்ன பெண் தானே. இந்தத் தவிப்பு உனக்கும் புரியும் தானே" என்று கேட்காமல் கேட்கிறாள்.

அந்தக் காலத்தில் இருந்து பெண்கள் இந்த பாடு தான் படுகிறார்கள்.

கணவனையும் பிள்ளைகளையும் அனுப்பி வைத்து விட்டு, உடல் இங்கும், மனம் அங்குமாய்  மருகுகிறார்கள்.

அந்தக் காலத்தில் , தோழிகளிடம் இவ்வளவு வெளிப்படையாக பேசினார்கள். இப்ப, அதெல்லாம் இருக்கிறதா என்ன ? இவ்வளவு அன்யோன்யமாக பெண்கள் தங்கள் தோழிகளிடம் பேசிக் கொள்கிறார்களா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_20.html