Wednesday, February 20, 2019

கைந்நிலை - நீந்தும் நெஞ்சு

கைந்நிலை - நீந்தும் நெஞ்சு 


அது ஒரு பெரிய காடு.

அந்த காட்டில் உள்ள மரங்களில் உள்ள பொந்துகளில் ஆந்தைகள் வசிக்கும். அவை இரவில் இரை தேடும். பகலில் , மர பொந்துகளில் வசிக்கும். வெயில் ஏற ஏற சூடு தாங்காது. கொஞ்சம் கொஞ்சமாய் பொந்தின் உள்ளே போகும். எவ்வளவு தான் போக முடியும். ஓரளவுக்கு மேல போகவும் வழி இருக்காது. மேலே வந்தால் சூடு வேற. பொந்துக்குள் இருந்து கொண்டு சத்தம் எழுப்பும். அது ஏதோ அந்த மரம் அனத்துவதைப் போல இருக்கும்.  டொக் டொக் என்று மரத்தை தன் அலகால் கொட்டி சத்தம் எழுப்பும்.

அந்த வழியாக போனால், கொஞ்சம் பயமா இருக்கும் அல்லவா ?

அது இருக்கட்டும் ஒரு பக்கம். பின்னால் வருவோம்.

வீட்டில், கணவனோ பிள்ளையோ வெளியூர் போய் இருப்பார்கள். இல்லத்தரசியின் மனம் பூராவும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கும். உடம்பு மட்டும் தான் இங்கே இருக்கும்.

இப்ப எந்திரிச்சிப்பாரு. இப்ப காப்பி குடிச்சிருப்பாரு. காலையில அந்த மாத்திரை சாப்பிடணும். ஞாபகம் இருக்குமோ இல்லையோ....

பிள்ளை காலையில தானே எழுந்திருக்க மாட்டானே. அவனை எழுப்பணுமே....

இந்த பொண்ணு தனியா அங்க போய் என்ன பண்ணுதோ....

என்று மனம் பூராவும் அங்கேயே இருக்கும்.

அது போல, இந்தப் பாட்டில், ஒரு தலைவி இருக்கிறாள். அவள் கணவன் பொருள் தேடி வெளியூர் போய் இருக்கிறான். அவன் போகிற வழியில் ஆந்தைகள் வாழும் காடு இருக்கிறது.

இவள் மனம் அவன் பின்னேயே போகிறது....


பாடல்



ஆந்தை குறுங்கலி கொள்ள நம் மாடவர்
காய்ந்து கதிர்தெறூஉங் கானங் கடந்தார்பின்
னேந்த லிளமுலை யீரெயிற்றா யென்னெஞ்சு
நீந்து நெடுவிடைச் சென்று.


பொருள்


ஆந்தை = ஆந்தை

குறுங்கலி கொள்ள = சிறிய ஒலி எழுப்ப

நம் மாடவர் = நம் ஆடவர் = நம்ம ஆளு (தோழியிடம் சொல்லுகிறாள் )

காய்ந்து = தீய்க்கும்

கதிர்தெறூஉங் கானங் = சூரிய கதிர்கள் தெறிக்கும் கானகம்

கடந்தார் = கடந்து செல்லுவார்

பின் = அவர் பின்

னேந்த லிளமுலை = ஏந்தல் இள முலை கொண்ட

யீரெயிற்றா  = எயிறு என்றால் பற்கள்.  இளமையான பற்களை கொண்டவளே

யென்னெஞ்சு = என் நெஞ்சு

நீந்து = நீந்துகின்றது

நெடுவிடைச் சென்று = நீண்ட அந்த வழியில்  சென்று


மனம் , நடந்து போகவில்லையாம். நீந்தி சென்றதாம். தவிப்பை மேலும் அடிக் கோடிட்டு காட்டுகிறது. நடந்து போனால், வழியில் எங்காவது நின்று இளைப்பாறிப் போகலாம்.  நீந்தும் போது எங்கே இளைப்பாறுவது.

தோழியை புகழ்கிறாள். அழகான பற்கள், இளமையான மார்பு என்று. "நீயும் என்னைப் போல சின்ன பெண் தானே. இந்தத் தவிப்பு உனக்கும் புரியும் தானே" என்று கேட்காமல் கேட்கிறாள்.

அந்தக் காலத்தில் இருந்து பெண்கள் இந்த பாடு தான் படுகிறார்கள்.

கணவனையும் பிள்ளைகளையும் அனுப்பி வைத்து விட்டு, உடல் இங்கும், மனம் அங்குமாய்  மருகுகிறார்கள்.

அந்தக் காலத்தில் , தோழிகளிடம் இவ்வளவு வெளிப்படையாக பேசினார்கள். இப்ப, அதெல்லாம் இருக்கிறதா என்ன ? இவ்வளவு அன்யோன்யமாக பெண்கள் தங்கள் தோழிகளிடம் பேசிக் கொள்கிறார்களா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_20.html

1 comment:

  1. அற்புதமான பாடல். ஏதோ சினிமா மாதிரி நம் கண்முன்னே அந்தக் காட்சியும், உணர்ச்சிகளும் விரிகின்றன. கண்ணில் கண்ணீர் வருகிறது. நன்றி.

    ReplyDelete