Monday, February 18, 2019

குறுந்தொகை - இனியவோ ?

குறுந்தொகை - இனியவோ ?


காரிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போகலாம். ஆனால், ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்துக்குப் போக முடியுமா ? ஆயிரம் ஆண்டுகள் முன்னோ பின்னோ போக முடியுமா ? அப்படி போக இதில் ஏறிப் போக வேண்டும்? அதற்கு ஒரு வாகனம் இருக்கிறதா என்ன?

இருக்கிறது. அதன் பெயர் இலக்கியம்.

இலக்கியம் படைக்க மட்டும் அல்ல, படிக்கவும் நிறைய கற்பனை வளம் வேண்டும்.  இலக்கியங்கள் காலத்தால் மிக முந்தியவை. அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியம் காலத்தால் மிக முந்தியது. இலக்கியங்கள் நம்மை வேறு ஒரு கால கட்டத்திற்கு மிக எளிதாக கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்தவை. நாமும் கொஞ்சம் ஒத்துழைத்தால். அந்த வண்டியில் போக கற்பனை என்ற டிக்கெட் வாங்க வேண்டும். அவ்வளவுதான்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

என்றாவது சாப்பாட்டில் உப்பு இல்லாமலோ, அல்லது மிகக் குறைவாகவோ போட்டு சாப்பிட்டு இருக்கிறீர்களா? எப்படி இருக்கும்? வாயில் வைக்க விளங்காதல்லவா? உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று சொல்லுவார்கள்.

நமக்கு உப்பு மிக எளிமையாக கிடைத்து விடுகிறது.

ஆயிரம்    ஆண்டுகள் பின்னோக்கி போங்கள். பெட்ரோல் கிடையாது. டீசல் கிடையாது. லாரி , டெம்போ வேன் கிடையாது. மின்சாரம் கிடையாது. கம்ப்யூட்டர் கிடையாது. உப்பு எங்கோ ஒரு கடற்கரையில் உருவாகும். அது கடற்கரையை விட்டு தள்ளி இருக்கும் ஒரு ஊருக்கு எப்படி வரும்? யோசித்துப் பாருங்கள் ?

உப்பு விற்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது. அவர்களுக்கு உமணர்கள் என்று பெயர்.   அவர்கள், கடற்கரையில் இருந்து உப்பு வாங்கிக் கொண்டு ஊர் ஊராய் சென்று    விற்பார்கள்.

அப்படி போகும் வழியில், ஹோட்டல் எல்லாம் கிடையாது. அக்கம் பக்கம் ஊர் ஒன்றும் இருக்காது. ஊர் வேண்டும் என்றால், நீர் வேண்டும், விவசாயம் வேண்டும், அதெல்லாம் இருந்தால் தான் ஊரு உருவாகும். தண்ணி இல்லாத காட்டில்  ஊர் ஏது ? ஒரே வறண்ட நிலமாக இருக்கும்.

அவர்களே ஏதாவது பாழடைந்த ஒரு வீட்டின் நிழலிலோ அல்லது மரங்களின் நிழலிலோ தங்கி, கற்களை கூட்டி, அடுப்பு செய்து உணவு ஆக்கி உண்பார்கள். உண்ட பின், அவற்றை அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவார்கள். கருகிய விறகும், சாம்பலும், அந்த கூட்டு கற்களும் அங்கே கிடக்கும்.

அந்த வழியாக தலைவன் சென்று வேறு ஒரு ஊருக்குச் சென்று பொருள் தேடப் போகிறான். அவளும், அவன் கூட வருவேன் என்று மல்லுக்கு நிற்கிறாள். அவன் இதை எல்லாம் எடுத்துச் சொல்லி..."வேண்டாண்டா...உன்னால முடியாது. ரொம்ப கஷ்டம். நீ பேசாம, இராஜாத்தி மாதிரி இங்க இரு.  நான் போய் சம்பாதித்து பொருள் கொண்டு வருகிறேன் "  என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். அவள் சம்மதிக்கவில்லை.

அவளுடைய தோழியிடம் சென்று சொல்கிறாள் "என்ன விட்டு விட்டு அவன் மட்டும் தனியா போறேன்னு சொல்றான். நானும் கூடப் போறேன். அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. சரியான மர மண்டையா இருக்கான்....நீயாவது அவனிடம் சொல்லேன் " என்று. தோழி "சரி...சரி..நீ அழாத, நான் பேசுறேன்" என்று சொல்லிவிட்டு, அவனிடம் சென்று பேசுகிறாள்

" நீ சொல்வதெல்லாம் சரி தான். ஆனா உனக்கு ஒண்ணு புரிய மாட்டேங்குது. அது தான் பெண்ணின் மனசு. நீ இல்லாமல் அவள் இங்கே சந்தோஷமா இருப்பான்னு நினைக்கிறியா  ?" என்று ஒரு போடு போடுகிறாள்.

பாடல்

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

பொருள்

உமணர் = உப்பு விற்பவர்கள். உப்பு விற்பவர்கள் என்று குறிப்பாக சொன்னாலும், விற்பவர்கள், வியாபாரிகள் என்று பொதுவாக பொருள் கொள்வது நன்றாக இருக்கும்.

சேர்ந்து = ஒன்றாகச் சேர்ந்து

கழிந்த = விற்று முடித்தவுடன் விலகி சென்ற பின்

மருங்கின் = இடத்தின்

அகன்தலை = விலகிய இடத்தில்

ஊர் பாழ்த்தன்ன = பாழ் பட்ட, வெறிச்சோடிப் போன ஊர் போல

ஓமை = ஒரு விதமான மரம். (tooth brush tree என்று பொருள் சொல்கிறார்கள். ஒரு வேளை சவுக்கு மரமாக இருக்குமோ ?)

அம் பெருங்காடு = ஊருக்கு வெளியே உள்ள அந்த பெரிய காடு

இன்னா = கொடியது

என்றிர் ஆயின் = என்று நீ சொன்னால்

இனியவோ = இனிமையானதா ?

பெரும = பெரியவனே

தமியர்க்கு மனையே = தனித்து நிற்கும் எங்கள் வீடே

நீ இல்லாத வீடு வெறிச்சோடிப் போய் இருக்கும். தனியாக அவள் என்ன செய்யவாள். அதை எல்லாம் நீ சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்று கூறுகிறாள்.

சொன்னது பாதி. சொல்லாமல் விட்டது மீதி.

ஒருவேளை அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் ஆகி இருக்கலாம். குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம். குழந்தைகள் இருந்தால் அவைகளையும் தூக்கிக் கொண்டு வருவேன் என்று சொல்லுவாளா?  கணவனும் இல்லை. பிள்ளைகளும் இல்லை என்றால், தனிமையில் அவள் என்ன செய்வாள்?

பெண்களின் சங்கடங்களை ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை போலும், சங்ககாலம் தொட்டு.

கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். காலம் கடந்து, இன்னொரு உலகத்துக்கு உங்களை இந்த இலக்கியங்கள் கொண்டு செல்லுவதை நீங்கள் உணரலாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_18.html


1 comment:

  1. "நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?" என்று கம்ப ராமாயணத்தில் இராமனிடம் சீதை கேட்டது நினைவுக்கு வருகிறது.

    "no தங்கமணி, enjoy" என்று ஜனகராஜ் கத்தும் நகைச்சுவைக்கு காட்சியும் நினைவுக்கு வருகிறது!

    நெருக்கமான அன்பு இருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    பாடலுக்கு நன்றி.

    ReplyDelete