Tuesday, February 12, 2019

இராமாயணம் - பொருள் ஒன்று, சொல் இரண்டு

இராமாயணம் - பொருள் ஒன்று, சொல் இரண்டு 


சில சமயம் ஒரு பொருள், வேறு வேறு விதமான உணர்ச்சிகளை நமக்குத் தரும். பொருள் ஒன்று தான். அது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து அதன் தன்மை மாறும்.

உதாரணமாக, பூ மாலையை எடுத்துக் கொள்வோம். அது கடவுள் சிலை மேல் இருந்தால் ஒரு அழகு. புது மண தம்பதிகள் மேல் இருந்தால் ஒரு அழகு. அதுவே ஒரு பிணத்தின் மேல் கிடந்தால் நமக்கு வேறு பல உணர்ச்சிகளைத் தரும். மாலை என்னவோ ஒன்றுதான். அது இருக்கும் இடத்தைப் பொறுத்து நமக்கு பல்வேறு உணர்ச்சிகளை தூண்டுகிறது.

மரங்கள் பல உண்டு. சில மரங்கள் வெட்டி வீழ்த்தப் பட்டாலும், அது மரம்தான். நல்ல தேக்கு மரத்தில் செய்த கதவு என்று தான் சொல்வோம். பனை மரத்தில் செய்த உத்திரம் என்று தான் சொல்லுவோம். ஆனால் சில மரங்கள் இருக்கின்றன. இருக்கும் வரை மரம், இறந்த பின் அது விறகு என்று அழைக்கப் படும். வீட்டில் அடுப்பு எரிக்கும் விறகு எந்த மரம் என்று யாருக்குத் தெரியும்.

பாரதியார் சொல்லுவார், கொடுங்கோல் மன்னன் ஜார்ஜ் இறந்த பின் அவன் கூட இருந்த ஆட்கள் எல்லாம் வீழ்ந்தார்கள். மரம் விழுந்து விறகானது போல என்பான்.

இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் 
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து 
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி 
அறங்கொன்று சதிகள் செய்த 
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார், 
புயற்காற்றுங் சூறை  தன்னில் 
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம் 
விறகான செய்தி போலே! 

மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போல...

இராமாயணத்தில், கைகேயிடம் கூனி சொல்கிறாள். "இரண்டு வரம் கேள். ஒன்றில் இராமனை காட்டுக்கு அனுப்பு. இன்னொன்றில் பரதனுக்கு அரசாட்சியைக் கேள். இதனால் 'செழு நிலம் எல்லாம்" உன் மகனுக்கு கிடைக்கும் என்கிறாள். 

கூனியின் நோக்கில் அது செழு நிலம். செழுமையான நிலம்.

'இரு வரத்தினில் , ஒன்றினால் அரசு கொண்டு , இராமன் 
பெரு வனம் அத்து இடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச் செய்தி ஒன்றினால் ; செழும் நிலம் எல்லாம் 
ஒரு வழி படும் உன் மகற்கு ; உபாயம் ஈது ' என்றாள் 


அது கேட்ட கைகேயி மனம்  மாறுகிறாள்.

கூனியை அப்படியே கட்டிக் கொள்கிறாள். அவளுக்கு பரிசுகள் எல்லாம் தருகிறாள். இந்த உலகம் முழுவதையும் என் மகனுக்குத் தந்தாய். இந்தத் தரைக்கு நாயகனின் தாய் இனி நான்" என்கிறாள்.

அவளை அறியாமலேயே அவள் வாயில் இருந்து சொற்கள் வந்து விழுகின்றன. செழு நிலம், "தரை" என்று ஆகி விட்டது. செழுமையான நிலத்தில் எல்லாம் முளைக்கும். தரையில் என்ன என்ன விளையும்?

பாடல்

உரைத்த கூனியை உவந்தனள் , உயிர் உறத் தழுவி , 
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி , 
'இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் ! 
தரைக்கு நாயகன் தாய் இனி நீ ; எனத் தணியா . 


பொருள்

உரைத்த கூனியை = அவ்வாறு சொன்ன கூனியை

உவந்தனள் = உவகை கொண்டாள்

உயிர் உறத் தழுவி  = இறுக்க கட்டிப் பிடித்து

நிரைத்த மா மணி = பெரிய மணிகள் நிறைந்த

ஆரமும் = சங்கிலியும்

நிதியமும் = மற்ற செல்வங்களும்

 நீட்டி = கொடுத்து

'இரைத்த வேலை = எப்போதும் இரைந்து கொண்டே இருக்கும் கடல்

சூழ் = சூழ்ந்த

உலகம் = இந்த உலகை எல்லாம்

என் ஒரு மகற்கு ஈந்தாய் ! = என் ஒரு மகனுக்கு தந்தாய்

தரைக்கு = இந்த தரைக்கு

நாயகன் = தலைவனின்

தாய் இனி = தாய் இனிமேல் நான்

நீ ; எனத் தணியா . = நீ (மேலும் சொல்ல இருக்கிறாள் அடுத்து வரும் பாடல்களில்).

இது வரை இராமனும் தனக்கு மகன் என்று நினைத்துக் கொண்டிருந்த கைகேயி, இப்போது பரதன் மட்டும் தான் தனக்கு மகன் என்று நினைக்கத் தொடங்குகிறாள்

"என் ஒரு மகற்கு ஈந்தாய்" என்கிறாள்.

கம்பனின் சொல் நயம். நிலம் தரையானது. இராமன் இல்லாத அயோத்தி வெறும் கட்டாந்தரை தான் என்று சொல்லாமல் சொல்கிறான்.

ஒரு சொல்லுக்குள் காப்பியத்தின் போக்கை காட்டிவிட்டுப் போகிறான் கம்பன்.

இப்படி படித்து இரசிக்க நிறைய இருக்கிறது. ஒரு வாழ் நாள் போதாது. இருக்கிற கொஞ்ச நாளில் நல்லவற்றைப் படிப்போம். இரசிப்போம். 


2 comments:

  1. ஒரே வார்த்தைக்கு இரண்டு பொருள் இருப்பது அருமையான விளக்கம்.

    ஆனால், "தாய் இனி நீ" என்று கூனியை ஏன் அழைக்கிறாள்?

    ReplyDelete
  2. கம்பனின் சிறப்பான சொல்லாட்சி நன்றாக புலப்படுகிறது.ஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமாகவும் வேறொன்றினால் ஈடு செய்ய முடியாதபடியும் விழுகிறது. நல்ல விளக்கம்.நன்றி.

    ReplyDelete