Saturday, February 23, 2019

பட்டினத்தார் பாடல்கள் - காதற்ற ஊசியும் வாராது காண்

பட்டினத்தார் பாடல்கள் - காதற்ற ஊசியும் வாராது காண்


நாம் செல்கின்ற வழியில் ஒரு பள்ளம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நேரே சென்றால் அதில் தடுக்கி விழுந்து விடுவோம் என்று தெரியும். இருந்தாலும், நேரே போய் அதில் தடுக்கி விழுந்து முட்டியை உடைத்துக் கொள்வது எவ்வளவு அறிவான செயல் ?

மருத்துவர் சொல்கிறார் , "நீங்க நிறைய இனிப்பு சாப்பிடக் கூடாது. மாவு பொருள்களை சாப்பிடக் கூடாது. நிறைய உடற் பயிற்சி செய்ய வேண்டும் " என்று. இருந்தும், அவர் சொல்வதை கேட்காமல், கண்டதையும் தின்பது அறிவான செயலா ?

தெரிந்தும் ஏன் தவறான செயல்களை செய்கிறோம் ?

கேட்டால், "இனிப்பு சாப்பிடாதே என்பது நல்ல அறிவுரை தான். இருந்தாலும் நடை முறைக்கு ஒத்து வராது " என்ற ஒரு பெரிய வேதாந்தம் வைத்து இருக்கிறோம். நம்மால் செய்ய முடியாதவற்றை எல்லாம், நம் சோம்பேறித்தனத்தை எல்லாம் இந்த ஒரு வரியில் சொல்லி விட்டு, மனம் போன படி நடக்கிறோம். அது அறிவான செயலா ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அரசர்கள் ஆண்ட காலத்தில் , இப்போது உள்ளது போல அல்ல பொருளாதார முறை. எவ்வளவு வரி வசூல் ஆனதோ அவ்வளவுதான் செலவு செய்ய முடியும். சில சமயம் போர், வெள்ளம், வறட்சி என்று வரும்போது செலவு அதிகமாகி விடும்.  அப்போது அரசர்கள், பெரிய வணிகர்களிடம் கடன் வாங்குவார்கள்.  அரசனுக்கு  கடன் கொடுப்பது என்றால் எவ்வளவு செல்வம் வேண்டும் ? அப்படிப் பட்ட செல்வ குடும்பத்தில் பிறந்தவர் பட்டினத்தார்.

செல்வத்தின் நிலையாமை ஒரே வரியில் அவருக்கு புரிந்து போனது. இத்தனை செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்தார். இதை எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு போகவா முடியும் என்று நினைத்தார். நம் கூட வராத இந்த செல்வத்தை சம்பாதிக்க, காக்க  ஏன் இந்தப் பாடு பட வேண்டும் என்று நினைத்தார்.

ஒரே நொடியில் அத்தனை செல்வத்தையும் உதறி தள்ளி விட்டு கட்டிய கோவணத்துடன் தெருவில் இறங்கி விட்டார்.

அது அறிவு.

தேவை இல்லை என்று தெரிந்த பின், அதை கட்டிக் கொண்டு போராடுவானேன்?  தூக்கி எறிந்து விட்டு கிளம்பி விட்டார்.

பாடல்

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

பொருள்

வாதுற்ற = வாதம் என்றால் தருக்கம். போர்.


திண்புயர் = திண்மையான புயங்கள். தோள்கள்

அண்ணாமலையர் = அண்ணா மலையில் வீற்று இருக்கும் சிவனின்

மலர்ப் பதத்தைப் = மலர் போன்ற பாதங்களை

போதுற்ற = மலர் தூவி

எப்போதும் = எப்போதும்

புகலுநெஞ் சே! = புகழ்வாய் நெஞ்சே

இந்தப் பூதலத்தில் = இந்த உலகில்

தீதுற்ற செல்வமென்? = தீமையான செல்வம் என்ன

தேடிப் புதைத்த = அரும்பாடு பட்டு தேடி, பின் புதைத்து வைத்த

திரவியமென்? = திரவியங்கள் என்ன

காதற்ற ஊசியும் = காது இல்லாத ஊசியும்

வாராது = வராது

காணுங்  =காண் , உம்

கடைவழிக்கே! = இறுதி வழிக்கே

செல்வம் தீமை கொண்டது.

அந்தக் காலத்தில் வங்கிகள் கிடையாது. கம்பெனிகள் கிடையாது. shares , fixed டெபாசிட், bonds எல்லாம் கிடையாது.

வீட்டில் செல்வத்தை வைத்து இருந்தால் , கள்ளர்கள் கொண்டு போய் விடுவார்கள் என்று பயந்து, பணத்தை பானையில் போட்டு கட்டி, புதைத்து வைத்து விடுவார்கள்.

வயதான காலத்தில் வைத்த இடம் மறந்து போகும்.

கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தினால் என்ன பயன்?

இப்போதும் கூட பாடு பட்டு பணத்தை தேடி, ஷேர் மார்க்கெட்டில் போடுகிறார்கள். அது விலை குறைந்து நட்டத்தில் போகும். சம்பாதித்த பணம் வீணாகிப் போகும்.

கஷ்டப் பட்டு சம்பாதித்து அதை மூலதனம் பண்ணி, அது காணாமல் போகும்.  இது என்ன அறிவற்ற செயல்.....

தெரிந்தும் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஊசி செய்யும் ஒரே வேலை தைப்பது. அந்த ஊசியின் காது (நூல் கோர்க்கும் ஓட்டை) உடைந்து போனால், அந்த ஊசியால் ஒரு பலனும்  .இல்லை.  அப்படி ஒரு    பயனும் இல்லாத ஊசி கூட நம் கூட வராது. அப்படி இருக்க, எதுக்கு இந்தப் பாடு ?

பணம் சேர்ப்பதா வாழ்வின் குறிக்கோள்?


படிப்பவை நம்மை பாதிக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் படிப்பேன்,  ஆனால் படித்தவற்றின் படி நடக்க மாட்டேன் என்றால் எதற்கு படித்து  நேரத்தை வீணாக்க வேண்டும் ?

காதற்ற ஊசியும் வாராது காண் , உம் கடை வழிக்கே 

6 comments:

  1. மிக அருமையான விளக்கம்!

    ReplyDelete
  2. படிப்பவை நம்மை பாதிக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் படிப்பேன், ஆனால் படித்தவற்றின் படி நடக்க மாட்டேன் என்றால் எதற்கு படித்து நேரத்தை வீணாக்க வேண்டும் ?

    மிக அருமை.......
    வாழ்த்துக்கள், வாழ்க, வளர்க ,சிறக்க, மதிக்க...

    ReplyDelete
  3. இந்த அறிவெல்லாம் படித்து வர முடியுமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  4. மிக அருமையான விளக்கவுரை நன்றி ஓம் நமச்சிவாய

    ReplyDelete