Thursday, January 30, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம் பையல்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம் பையல் 


நாலாயிர திவ்ய பிரபந்தம் போல எளிய தமிழ் பாடல்கள் கிடையாது. அவ்வளவு எளிமை. ஆழ்வார்கள் பெருமாளோடு கொஞ்சுகிறார்கள். அவ்வளவு அன்யோன்யம்.


"நமக்கு தெரிஞ்ச பையன்...கொஞ்சம் பாத்துக்குங்க" என்று நமக்கு தெரிந்த பையனை மற்றவர்களிடம் அறிமுகம் செய்வது வழக்கம் தானே.

"யார்ரா அவன்...எப்படி பாத்ததாலும் நம்ம பய டா அவன்" என்று நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவதை கேட்டு இருக்கிறோம்.

"நம்ம பையன்" என்று ஒருவர் நம் மீது உரிமை கொண்டாடினால் நமக்கு சந்தோஷம் தானே?

தொண்டரடிப் பொடி ஆழ்வார் கூறுகிறார், "பெருமாளே நீ எனக்கு பெரிய உதவி ஒன்றும் செய்ய வேண்டாம்...இவன் நம்ம பையன் என்று மத்தவங்க கிட்ட சொல்லு போதும்...அதுவே எனக்கு பெரிய அருள் ...அது கூட சொல்ல முடியாதா உனக்கு..என்ன கல் நெஞ்சு உனக்கு " என்று ஆதங்கப் படுகிறார்.

பாடல்


"தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே"

பொருள்


"தெளிவிலாக் = தெளிவு இல்லாத

கலங்கல் = கலங்கிய

நீர் சூழ் = நீர் சூழ்ந்த (காவிரி, கொள்ளிடம் என்ற இரண்டு ஆற்றின் நீரும் கலங்கி செல்லும்)

திருவரங்கங் கத்துள் ளோங்கும் = திருவரங்கத்து உள் ஓங்கும்

ஒளியுளார் தாமே = ஒளி உளார் தாமே

யன்றே =அன்றே

தந்தையும் தாயு மாவார் = தந்தையும் தாயும் ஆவார்

எளியதோ ரருளு மன்றே  = எளியது ஓர் அருளும் அன்றே

எந்திறத் தெம்பி ரானார் = எம் திறத்து எம்பிரானார்

அளியன் = அன்பு கொண்டவன்

நம் பையல் = நம்ம பயல்

என்னார் = என்று சொல்ல மாட்டார்

அம்மவோ  = அம்மாடி

கொடிய வாறே = எவ்வளவு கொடிய நெஞ்சம் கொண்டவர் அவர்

என்னை உன் அடியான் என்று சொல்ல வேண்டாம். என்னை உன் ஆழ்வார்களில் ஒருவனாகச் சொல்ல வேண்டாம். "நம்ம பயல்" என்று சொல்லு. அப்படி சொல்ல உனக்கு என்ன தயக்கம் என்று கேட்கிறார்.

ஆழ்வார்கள், ஆண்டவனை அனுபவித்தது ஒரு மாதிரி என்றால், வைணவ உரை ஆசிரியர்கள் அதற்கு மேல்  சென்று அனுபவிக்கிறார்கள். உரை என்றால் வைணவ உரை தான்   என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு உருக்கம்.

ஏன், அப்படி சொல்கிறேன் என்று கேளுங்கள்.


"தெளிவிலாக் கலங்கல் நீர்"

ஆற்று நீர் கலங்கித்தான் இருக்கும். ணுப்பும் நுரையுமாகத்தான் இருக்கும். அதில் ஒன்றும் விசேடம் இல்லை.

ஆனால், இந்த பாடலுக்கு உரை எழுதியவர்கள் சொல்கிறார்கள் , ஏன் காவிரியும், கொள்ளிடமும் கலங்கி இருந்தது தெரியுமா "பாற் கடல் போல நாம் தினமும்  பெருமாளை சேவிக்க முடியவில்லையே. ஆண்டில் பல நாள் நீர் இல்லாமல் போய் விடுகிறதே....அவன் பாதம் தொட்டு தடவி அவன் அருகில் இருக்க முடியவில்லையே   என்று கலங்கியதாம்".

பெருமாளை , "அன்றே தாயும் தந்தையும் ஆனார்" என்று சொல்கிறார். ஏன்?

நாம் நம் பெற்றோரை தாய், தந்தையர் என்று அழைக்கிறோம்.

தமிழ் ஆழமான மொழி.

தாயார், தந்தையார் என்ற சொல்லில் தாய் + யார்? தந்தை + யார்? என்ற கேள்வி நிற்கிறது அல்லவா?

இந்தப் பிறவியில், இந்த உடம்புக்கு இவர்கள் தாய், தந்தையர். இதற்கு முன்னால் ? இதற்குப் பின்னால் ? யார் தந்தையோ, யார் தாயோ?

இப்படியே முன்னோக்கிப் போனால், முதல் தாய் தந்தை என்று ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா?  ஆதி மூலம், அவர் தான் நம் பெருமாள் என்கிறார்.

"போற்றி என் வாழ் முதலாகிய பொருளே" என்பார் மணிவாசகர்.

இறைவன் ஆணா, பெண்ணா?

தாயா? தந்தையா?

தந்தைதான். தாயும் ஆனவர். தாயுமானவர்.

அவன் தாயும், தந்தையாக இருக்கிறான் என்கிறார் ஆழ் வார்.

"அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ" என்பார் திருநாவுக்கரசர்.

ஆணாகி, பெண்ணாகி ...என்பது மணிவாசகம்.

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  


படித்து படித்து உருகும் பாசுரங்கள். தினம் ஒரு பாசுரமாவது படிக்க வேண்டும். படித்தால் மட்டும் போதாது, பொருள் தெரிந்து, உணர்வு தெரிந்து அதில் மனம் கரைய வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_30.html

Wednesday, January 29, 2020

திருக்குறள் - நாடு

திருக்குறள் - நாடு 


சில நாட்களுக்கு முன் நாம் நமது குடியரசு தினத்தை கொண்டாடினோம். நம்மிடம் உள்ள ஆயுத பலம்,  அரசு மேற்கொண்ட முயற்சிகள் போன்றவற்றை அணிவகுப்பில் இடம் பெறச் செய்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினோம்.  இவை ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதார மந்த நிலை, வேலை இல்லா திண்டாட்டம் போன்ற சவால்களும் நம் முன்னே இருக்கின்றன.

சற்று தள்ளி, வேறொரு நாட்டில் கொடிய நோய் ஒன்று பரவி வருகிறது. அது உலகம் பூராவும் பரவி விடுமோ என்று உலகமே அஞ்சுகிறது.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும், சில நல்லவைகளும் , சில அல்லாதவைகளும் இருப்பதைக் காண்கிறோம்.

ஒரு நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார்....என்னது ? ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஒண்ணே முக்கால் அடியில் சொல்ல முடியுமா என்று நமக்கு வியப்பாக இருக்கும். என்னதான் சொல்கிறார் பார்த்து விடுவோம்.

குறள்


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு


பொருள்

உறுபசியும்  = பெரிய பசியும்

ஓவாப் பிணியும் = நீங்காத நோயும்

செறுபகையும் = அழிக்கின்ற பகையும்

சேராது = சேராமல்

இயல்வது = இருப்பது

நாடு = ஒரு நல்ல நாட்டுக்கு இலக்கணம்.

பசியும், பிணியும், பகையும் இல்லாமல் இருப்பது நல்ல நாடு என்கிறார்.

இது சரிதானா? வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம்,  கட்டமைப்பு  (infrastructure ), எதிர்கால பாதுகாப்பு (social security ) இதெல்லாம் வேண்டாமா?  சட்டம் ஒழுங்கு முக்கியம் இல்லையா? போன்ற கேள்விகள் எழலாம்.

சிந்திப்போம்.

அது  என்ன உறு பசி ?

பெரிய பசி. கொடுமையான பசி.

அங்கொன்றும், இங்கொன்றும் சிலருக்கு சில வேளை பசி இருக்கலாம். யாருக்குமே, எங்குமே பசியே இருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது.

பெரிய பசி என்றால், பஞ்சம் வந்து, உணவு தட்டுப்பாடு வந்து அதனால் மக்கள் பசியால்  வாடுவது. அது உறு பசி.

அந்த உறு பசி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

விவசாயிகள் பாடுபட வேண்டும் (agricultural production ). அவர்களுக்கு விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் (Levy and pricing ), விவசாயம்  செய்ய நீர்  வேண்டும். அதற்கு நீர் மேலாண்மை வேண்டும் (water management ). மழை நீரை தேக்கி தேவையான நேரத்தில் பயன் படுத்தும்  விதத்தில் அணை  கட்ட வேண்டும். (Dam  - infrastructure ). விளைவித்த பொருள்களை சரியான படி  சேமித்து வைக்க வேண்டும்.. உணவு கிடங்குகள் வேண்டும் (storage , godown , warehouse ....infrastructure ). உணவு எல்லா இடத்திலும் உண்டாக்க முடியாது.  நிலத்தின் வளம், நீர் வளம் இவற்றைக் கொண்டு தான் உணவு உற்பத்தி செய்ய முடியும்.  ஒரு இடத்தில் உற்பத்தி செய்த பொருளை நாட்டில் எல்லா  பாகத்துக்கும் விரைந்து கொண்டு செல்ல வேண்டும். (distribution ). அப்படி  கொண்டு செல்ல நல்ல சாலை வசதி வேண்டும் (road , வண்டிகள், infrastructure ).  எல்லோராலும் விலை கொடுத்து வாங்க முடியாமல் இருக்கலாம். மான்ய விலையில் உணவு பொருட்களைத் தர பொது விநியோக முறை வேண்டும்  (public distribution சிஸ்டம்).

பசியை ஒழிக்க வேண்டும் என்றால், இவ்வளவு செய்ய வேண்டும்.

அடுத்தது,  "ஓவா பிணி"

தீராத நோய். தீராத நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

ஆரோக்கியமான உணவு வேண்டும்.

சுகாதாரம் வேண்டும் (hygene ).

அதற்கு நீரும், காற்றும் சுத்தமாக இருக்க வேண்டும் (pollution control ).

குப்பைகளை, கழிவு நீரை உடனடியாக நீக்க வேண்டும் (waste  அண்ட் waste water management ).

நோய் தடுப்பு முறை வேண்டும் (vaccination )

நோய் இன்னது என்று அறியும் அறிவு வேண்டும் (medical diagnosis )

நல்ல மருத்துவ மனைகள் வேண்டும் (hospital )

அவற்றை நிர்வாகம் செய்ய நல்ல மருத்துவர்கள் வேண்டும் (medical education ).

புது புது மருந்துகளை கண்டு பிடிக்க வேண்டும் (research and development )

நோய் பரவாமல் தடுக்க வேண்டும் (quarantine ).

ஓவா பிணி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இவை எல்லாம் செய்ய வேண்டும்.

செறு  பகை

அடுத்து நிற்கும் பகை, அழிக்கும் பகை.

இது இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

படைகள் வேண்டும் (defence force )

ஆயுதங்கள் வேண்டும் (arms and ammunitions )

எதிரியின் நடவடிக்கைளை கவனிக்க வேண்டும் (military intelligence )

அரண் வேண்டும்.

இவற்றிற்கு எல்லாம் பணம் வேண்டும் (resources ). அதற்கு வரி வசூல் செய்ய வேண்டும். அதற்கு நாட்டில் பொருளாதாரம் முன்னேற வேண்டும், உற்பத்தி பெருக வேண்டும்.

இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்ய நல்ல அரசாங்கம் வேண்டும்.

அப்படி ஒரு அரசு இருந்தால், அது இந்த குறளில் சொல்லாத மற்றவற்றையும் தானே செய்யும்.

நான் தந்த பட்டியல் சிறியதுதான். இன்னுமும் எவ்வளவோ இருக்கிறது.

எவ்வளவு ஆழமாக சிந்தித்து இருக்கிறார் வள்ளுவர் ?

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_29.html

Tuesday, January 21, 2020

திருக்குறள் - திருமணமும் சமுதாயக் கடமைகளும்

திருக்குறள் - திருமணமும் சமுதாயக் கடமைகளும் 


(முந்திய பிளாகின் url

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_20.html)


எதற்காக திருமணம் செய்து கொண்டீர்கள் என்று திருமணம் ஆனவர்களைக் கேட்டால்,

 "அந்தக் காலத்தில், அப்பா அம்மா பாத்து செஞ்சு வச்சாங்க, பண்ணிக்கிட்டேன்" என்று சிலர் சொல்லுவார்கள்.

 "அந்தப் பெண்ணை/பையனை பிடிச்சு இருந்தது...காதல் பண்ணி திருமணம் செய்து கொண்டோம்...எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது...எவ்வளவு காலம் தான் காதலிச்சுக்கிட்டே இருக்கிறது...?" என்று சிலர் சொல்லலாம்.

இன்னும் சிலர், "அத்தை பொண்ணு, மாமா பையன்...சொந்தம் விட்டுப் போகக் கூடாதுனு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்" என்று சிலர் சொல்லலாம்.

ஒரு இனக் கவர்ச்சி. ஒரு சந்தோஷம். புது உறவில் வரும் ஒரு குறுகுறுப்பு. ஒரு எதிர்பார்ப்பு என்று கொஞ்சம் காரணங்களும் இருக்கலாம்.

ஆனால், இவை எல்லாம் இரண்டு தனி மனிதர்கள் சம்பந்தப் பட்டவை. திருமணம் என்பது அவ்வ்ளவுதானா? இரண்டு பேர் சம்பந்தப்பட்ட ஒரு தனிப்பட்ட விஷயமா? அப்படி என்றால் கட்டாயம் மற்றவர்கள் அதில் தலையிடக் கூடாதுதான்.

நம் சமுதாயம் திருமணத்தை அப்படி பார்க்கவில்லை.

நம் சமுதாயம்  திருமணத்தை ஒரு அறமாக பார்த்தது. அதற்கு "இல்லறம்" என்று பெயர் வைத்தது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு இல்லறம் என்று பெயர். இல்லத்தில் இருந்து செய்யும் அறம்.

இன்னொன்று, திருமணம் என்பது ஏதோ இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று  நம் சமுதாயம் பார்க்கவில்லை.

திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய சமுதாய ஒப்பந்தம் என்று நம் சமுதாயம்  சிந்தித்தது.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்களா, அவர்களுக்கு சில  கடமைகளை முன் வைத்தது நம் இனம்.

இந்த கடமைகளை, பொறுப்புகளை நீ ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து  கொள். இல்லை என்றால், இல்லறம் உனக்கு சரிவராது  என்று அடித்துச் சொன்னது நம்  சமுதாயம்.

அது என்ன கடமைகள்? அதை ஏன் செய்ய வேண்டும் ? என்ற கேள்வி ஒரு புறம் இருக்கிறது.

சரி, ஏற்றுக் கொள்வோம். சில சமுதாய கடமைகள் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். ஒரு ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும்  திருமணம் செய்து கொண்டால் அந்த சமுதாய கடமைகளை செய்ய முடியாதா?  என்றும் ஒரு கேள்வி வரும் அல்லவா?

ஒரு ஆணும் ஆணுமோ அல்லது ஒரு பெண்ணும் பெண்ணுமோ அந்த கடமைகளை செய்ய முடியாது  என்று நாம் பார்க்க இருக்கிறோம்.

சரி அது என்ன கடமைகள்? பதினோரு கடமைகளை சொல்கிறார் வள்ளுவர். அதெல்லாம் தெரியாமல் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்கிறோம்.

அவை என்னென்ன என்று பார்க்க இருக்கிறோம்.

அப்படித்தானே?


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_21.html





Monday, January 20, 2020

திருக்குறள் - ஓரினச் சேர்க்கை

திருக்குறள் - ஓரினச் சேர்க்கை 


இன்று ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வது, பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது சட்டப்படி அங்கீகாரம் பெற்ற ஒன்றாக ஆகிவிட்டது.

"ஏன், ஒரே பாலினத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? உனக்கு பிடிக்கவில்லை என்றால் செய்து கொள்ளாதே.  மற்றவர்களை தடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது? இது தனி மனித சுதந்திரம். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை " என்ற வாதம் முன் வைக்கப் படுகிறது.

என்ன பதில் சொல்வது?  சட்டம், தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் என்று வந்த பின், அதற்கு என்ன பதில் சொல்லுவது.

ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ளாத இளைய தலை முறையினர் கூட, "எனக்கு ஏற்பு இல்லை. ஆனால், அதற்காக அது தவறு என்று எப்படி சொல்லுவது" என்று கேட்கிறார்கள்.

பெரியவர்களும் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறார்கள்.

இது சரிதானா? எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டு விடுவதா?  இப்படியே போனால் எங்கு போய் முடியும் இது?  என்ற பயம் தலை தூக்காமல் இல்லை.

இதில் ஏதோ தவறு என்று மனம் சொல்கிறது. இருந்தும், என்ன தவறு என்று சொல்ல முடியவில்லை.  அது சரி என்று சொல்பவர்களின் வாதத்தை எதிர் கொள்ள முடியவில்லை.

ஒரு சமுதாயம் இப்படி தடுமாறி நிற்கும் போது, அந்த சமுதாயத்திற்கு யார் வழி காட்டுவது?  எது சரி, எது தவறு என்று யார் எடுத்துச் சொல்வது? அப்படியே சொன்னாலும்,  யார் ஏற்றுக் கொள்வார்கள்?

திருமணம் என்பது இரண்டு தனி மனிதர்கள் சம்பந்தப் பட்ட ஒன்றுதானா? அதற்கு மேல்  அதில் ஒன்றும் இல்லையா?

திருமணத்துக்கும் , சமுதாயத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா ?

இருக்கிறது என்றால், அது என்ன தொடர்பு?

ஏதோ பெரிய புரட்சிகரமான ஒன்றை கண்டு பிடித்துவிட்டது போல  சொல்கிறார்கள்.

ஏறக்குறை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், இவற்றைப் பற்றி மிக மிக தீவிரமாக,  ஆழமாக யோசித்து எழுதி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.

அவற்றை எல்லாம் படிக்காமல் விட்டதால், திக்கு திசை தெரியாமல்  தவிக்கிறோம்.


"உலகம் எங்கேயோ போய் கொண்டிருக்கிறது...நீங்க வேற திருக்குறள், ஆத்தி சூடி என்று பஞ்சாங்கம் வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்...அதை எல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு வாருங்கள்.." என்று சிலர் கூறலாம்.

திருக்குறளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவரே கூடச் சொல்லவில்லை.

நிற்க அதற்கு தக என்று தான் சொல்லி இருக்கிறார்.

அவர் என்ன தான் சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.

ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால் விட்டு விடுவோம்.

தெரிந்து கொள்வதால் என்ன பிழை வந்து விடப் போகிறது?

எந்த அளவுக்கு நம்மவர்களின் சிந்தனை சென்று இருக்கிறது என்று பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.

இதற்கு மேலும் சிந்திக்க முடியுமா என்று தோன்றுகிறது.

இன்றைய மேற்கிந்திய சமுதாய மற்றும் உளவியல் கோட்பாடுகளை எல்லாம்  ஒரே அதிகாரத்தில் தூக்கிச் சாப்பிட்டுவிட்டுப் போகிறார் வள்ளுவர்.

Capitalism - socialism - communism - இவை அனைத்தையும் சொன்னது மட்டும் அல்ல,  அவற்றை தாண்டிச் செல்கிறது வள்ளுவரின் சிந்தனை.

அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார்? Build up கொஞ்சம் தூக்கலா இருக்கே  என்று நினைக்கிறீர்களா....

அதையும் தான் பார்த்து விடுவோமே...


interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_20.html

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என 


திருமணம் செய்து கொள்ள ஆவலோடு வந்திருந்த அனைத்து நாட்டின் அரசர்களில், தங்களுக்கு பிடித்த அரசரை தேர்ந்து எடுக்க ஆசையோடு வந்த காசி இராஜாவின் பெண்கள் மூவரும், அங்கே பீஷ்மரை கண்டு கொஞ்சம் ஆச்சரியப் பட்டார்கள். இந்தக் கிழவன் இங்கே என்ன செய்கிறான் என்று.

பீஷ்மர் அதை எல்லாம் பற்றி கவலைப் படவில்லை. அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து, தன் தேரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

மதம் கொண்ட யானை போல சென்றார் என்கிறார் வில்லியார்.

பாடல்

ஏனைவேந்த ரெதிரிவரைப்பெருந்
தானைசூழ்மணிச் சந்தனத்தேற்றியே
சோனைமாமதஞ் சோருங்கடதட
யானையென்ன விளவலொடேகினான்.

பொருள்

ஏனை = மற்ற

வேந்தர் = அரசர்கள்

எதிர் = எதிரில்

இவரை = இந்த மூன்று பெண்களையும்

பெருந் = பெரிய

தானை = படை

சூழ் = சூழ்ந்த

மணிச்  = மணிகள் கட்டிய

சந்தனத்தேற்றியே = தேரில் ஏற்றி

சோனை =அடை மழை போல

மாமதஞ் சோருங் = மதன நீர் சொரியும்

கடதட = பெரிய தலையை உடைய (கடம் = மதம், தடம் = இடம், மதம் பிறக்கும் இடம்)

யானையென்ன = யானை போல

விளவலொடேகினான். = இளவரசனோடு சென்றான்



அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

என்பது கந்தர் அலங்காரம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/5.html

Sunday, January 19, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - 4 - கையில் மாலை இவற்கு

வில்லி பாரதம் - சிகண்டி - 4 - கையில் மாலை இவற்கு 


ஏதோ அந்தக் காலம் முதல் இன்று வரை பெண்களை அடக்கியே வைத்து இருந்தார்கள் என்று இன்றைய பெண்களில் பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு சுதந்திரமும் இல்லை. பெண் விடுதலை வேண்டும். பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள்.

உண்மை அதுவா என்று வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்க வேண்டும்.

அந்தக் காலத்தில், பெண்களுக்கு சுயம்வரம் என்று வைத்திருந்தார்கள். இராஜா வீட்டில். பெரிய பெரிய நாட்டின் அரசர்கள் எல்லோரும் வந்திருப்பார்கள். பெண்ணின் கையில் மாலையைக் கொடுத்து, உனக்கு யாரைப் பிடித்து இருக்கிறதோ, அவரை தேர்ந்து எடுத்துக் கொள் என்ற உரிமையை தந்து இருந்தார்கள். பெண்ணின் தந்தை நினைத்து இருந்தால், அந்தப் பெண்ணை யாராவது ஒரு அரசனுக்கு மணமுடித்து இருக்கலாம். அப்படிச்  செய்யாமல், மணமகனை தேர்ந்து எடுக்கும் உரிமையை பெண்ணுக்கு கொடுத்து இருந்தார்கள்.

"ஹா...அதெல்லாம் இராஜா வீட்டு பெண்களுக்கு...சாதாரண பெண்களுக்கு அப்படியெல்லாம் உரிமை இருந்ததா ?" என்று கேட்பதற்கு முன், மீண்டும் ஒரு முறை நம் இலக்கியங்களை, வரலாற்றினை வாசியுங்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

காசி இராஜன் பெண்கள் மூவரும் சுயம்வர மண்டபத்துக்கு மாலையும் கையுமாக வருகிறார்கள்.

அங்கே பல மன்னர்கள் காத்து இருந்தார்கள். அவர்களோடு பீஷ்மரும் இருந்தார். அவரைப் பார்த்ததும், அந்தப் பெண்களுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, இந்த வயதான தாத்தா எதுக்கு இங்க வந்து   உட்காந்து இருக்காருன்னு ...


பாடல்


'கையில் மாலை இவற்கு' எனக் கன்னியர்
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்,
வைய மன்னன் வய நிலை நோக்கியே,
ஐயம் உற்றனர், அன்புறு காதலார்.


பொருள்


'கையில் மாலை இவற்கு' எனக்  = கையில் உள்ள மாலை இவருக்கு என்று

கன்னியர் = அந்த கன்னிப் பெண்கள்

வெய்ய = ஆசை கொண்ட

நெஞ்சொடு = மனதோடு

மின் என வந்தவர், = மின்னலைப் போல் வந்தனர் (வாம்மா மின்னல்)

வைய = உலகுக்கே

மன்னன் = அரசனான  (பீஷ்மரின்)

வய நிலை = வயதின் நிலை

நோக்கியே, = நோக்கி

ஐயம் உற்றனர் = சந்தேகப் பட்டனர்

அன்புறு காதலார் = அன்பும் காதலும் கொண்ட அந்தப் பெண்கள்

ஒரு புறம் வெவ்வேறு நாட்டின் அரசர்கள்.

இன்னொரு புறம் பீஷ்மர்

மற்றொரு புறம் கையில் மாலையுடன் காசி இராஜாவின் மூன்று பெண்கள்.

அந்த சூழ்நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அடுத்து என்ன நடக்கும்?

அந்தப் பெண்கள் மற்ற அரசர்கள் கழுத்தில் மாலையை போடுவார்களா?

அல்லது பீஷ்மர் கழுத்தில் மாலையைப் போடுவார்களா?

அல்லது பீஷ்மர் அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து செல்வாரா? அப்படிப் போனால் மற்ற  அரசர்கள் சும்மா இருப்பார்களா?

கதை சூடு பிடிக்கிறதா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/4.html

Saturday, January 18, 2020

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன்

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன் 


தன் தம்பிக்கு மணம் முடிக்க என்று காசி இராஜனின் மகள்களின் சுயம்வரத்துக்கு பீஷ்மர் போகிறார்.

தம்பிக்காக போகிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் குழப்புகிறார்கள்.

"இந்தக் கிழவன் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தவன் ஆயிற்றே, இப்போது , இந்த வயதான காலத்தில் எதற்கு இந்த சுயம்வரத்துக்கு வருகிறான்" என்று ஏனைய அரசர்கள் கலங்கினார்கள்.

கலக்கத்துக்குக் காரணம், சுயம்வரம், போட்டி என்று வந்து விட்டால், பீஷ்மரை தங்களால் வெல்ல முடியாது என்பதால்.

பாடல்

குருத்தலந்தனிற் கூறியவஞ்சினம்
ஒருத்தரன் றறிவாருலகோர்பலர்
விருத்தன்வந்தனன் மேலினியேதிவன்
கருத்தெனாமனங் காளையர்கன்றினார்.

பொருள்

குருத்தலந்தனிற் = குருகுலத்தில்

கூறிய வஞ்சினம் = முன்பு செய்த வஞ்சினம் (சத்தியம், விரதம்)

ஒருத்தரன் றறிவாருலகோர்பலர் = ஒருத்தர் அன்றி அறிவார் உலகோர் பலர்

விருத்தன் = வயதானவன்

வந்தனன் = வந்தனன்

மேலினியேதிவன் = மேல் இனி ஏது இவன்

கருத்தெனா = கருத்து என்று

மனங்  = மனத்தில்

காளையர் = அங்கு வந்திருந்த காளை போன்ற இளைய அரசர்கள்

கன்றினார். = வருந்தினர்

விருத்தன் என்றால் வயதானவன் என்று பொருள்.

விருந்தா நாரி பதி விரதா என்று வடமொழியில் ஒரு பழ மொழி உண்டு. வயதான பெண்  பதி விரதை என்பது பொருள்.


அசலம் என்றால் மலை என்று பொருள்.

விருத்தாச்சலம் என்றால் வயதான மலை என்று பொருள். விருதாச்சலத்துக்கு திருமுதுக்குன்றம்  என்பது தமிழ் பெயர்.

அங்குள்ள அம்பிகையின் பெயர் விருத்தாம்பிகை. தமிழில் பெரிய நாயகி.  வயதானவளாக காட்சி தருகிறாள்.

குகை நமச்சிவாயர் என்று ஒரு பக்தர் இருந்தார். அவர் பெரியநாயகி நோக்கி சில பாடல்களை பாடி இருக்கிறார். அவருக்கு பசிக்கும் போதெல்லாம் அன்னைக்கு கட்டளையிடுவார். "சோறு கொண்டு வா" என்று. தாயிடம் என்ன கெஞ்ச வேண்டி இருக்கிறது. "எனக்குப் பசிக்கிறது, சோறு கொண்டு வா" என்று  உரிமையுடன் கேட்பார்.

பெரிய நாயகியிடம் ஒரு நாள்

"நன்றி புனையும் பெரிய நாயகியே நுங்கிழத்தி
என்றும் சிவன்பாலிடக் கிழத்தி-நின்ற
நிலைக்கிழத்தி மேனி முழுநீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறு கொண்டு வா!"

என்று பாடினார். அம்பாளை கிழவி, கிழவி என்றே பாடினார்.

எந்த பெண்ணுக்குத்தான் தான் கிழவி என்று ஏற்றுக் கொள்ள மனம் வரும். இப்போதெல்லாம்  பாட்டி என்று சொல்லக் கூடாது என்கிறார்கள். ஆச்சியம்மா  என்று சொல் என்று பேரப்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறார்கள். பாட்டி என்று சொன்னால் வயதானவளாகத் தெரியுமாம்.

அம்பாள் நேரில் வந்து, "என்னப்பா என்னை இப்படி கிழவி கிழவி என்று சொல்லி விட்டாயே. நல்லாவா இருக்கு. இளமை உள்ளவளாகப் பாடு" என்று வேண்டினாள்.

குகை நமச்சிவாயரும்,

"முத்தாநதி சூழும் முதுகுன்றுறைவாளே 
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர் இடம் தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறு கொண்டு வா!"

என்று பாடினார்.

அம்பாளும் மகிழ்ந்து சோறு கொண்டு வந்து தந்தாளாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/3.html