Wednesday, November 17, 2021

கம்ப இராமாயணம் - பெண்களால் வரும் அழிவு

 கம்ப இராமாயணம் - பெண்களால் வரும் அழிவு 


சுக்ரீவனுக்கு முடி சூட்டிய பின், அவனுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறான் இராமன். 


"பெண்களால் ஆண்களுக்கு மரணம் வரும் என்பதை சந்தேகம் இல்லாமல் அறிந்து கொள். அதற்கு வாலி மட்டும் அல்ல, நாங்களும் சாட்சி. பெண்களால் ஆண்களுக்கு துன்பமும், பழியும் வந்து சேரும்"


என்கிறான். 


பாடல் 


''மங்கையர் பொருட்டால் எய்தும்

      மாந்தர்க்கு மரணம்'' என்றல்,

சங்கை இன்று உணர்தி; வாலி

      செய்கையால் சாலும்; இன்னும்,

அங்கு அவர் திறத்தினானே,

      அல்லலும் பழியும் ஆதல்

எங்களின் காண்டி அன்றே;

      இதற்கு வேறு உவமை உண்டோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_93.html


(please click the above link to continue reading)




''மங்கையர் பொருட்டால் = பெண்களால் 


எய்தும் = அடைவர் 


மாந்தர்க்கு மரணம்'' என்றல் = ஆண்களுக்கு மரணம் என்பதை 


சங்கை இன்று உணர்தி = சந்தேகம் இல்லாமல் உணர்ந்து கொள் 


வாலி செய்கையால் சாலும் = வாலியின் செய்கையால் அதை உணரலாம் 


இன்னும், = மேலும் 


அங்கு அவர் திறத்தினானே = அந்தப் பெண்களாலே 


அல்லலும் பழியும் ஆதல் = துன்பமும், பழியும் வரும் என்பதை 


எங்களின் காண்டி அன்றே = எங்களைப் பார்த்து புரிந்து கொள் 


இதற்கு வேறு உவமை உண்டோ? = இதற்கு மேலும் வேறு உதாரணங்கள் தேவையா ? 


சுக்ரீவன் மனைவியை கவர்ந்து கொண்டதால், வாலி இறந்தான். 


கைகேயி பேச்சை கேட்டதால் தசரதன் மாண்டு போனான்.  இராம இலக்குவனர்கள் கானகம் போனார்கள். 


சீதையின் பேச்சைக் கேட்டதால் (பொன் மான் பின்னே போனதால், இலக்குவனை அனுப்பியதால்)  இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடி படாத பாடு பட்டார்கள். 


சீதையின் பேச்சைக் கேட்டதால் வந்த வினை என்று இராமன் பல இடத்தில்  புலம்புகிறான். 


ஆனானப் பட்ட இராமனுக்கே அந்தக் கதி. 


பாடம் படிக்க வேண்டும். 






Monday, November 15, 2021

திருக்குறள் - பாலையில் மரம் துளிர்த்த மாதிரி

 திருக்குறள் - பாலையில் மரம் துளிர்த்த மாதிரி 


அன்பு.


அன்பு செலுத்தவும், அன்பை பெற்றுக் கொள்ளவும் யாருக்குத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கும். 


எல்லோரும் அன்புக்கு வேண்டி இருக்கிறது. தரவும், பெறவும். 


இருந்தும், பெரும்பாலான குடும்பங்களில் அன்பு என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. 


என்ன செய்தாலும், யாருக்கும் என் மேல் அன்பே இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். 


நான் என்ன குறை வைத்தேன், ஏன் என்னை யாருக்கும் பிடிப்பது இல்லை என்ற குறை எல்லோருக்கும் இருக்கிறது. 


ஏன்?


வீட்டிலே ஒரு செடி இருக்கிறது. அதை அன்றாடம் பார்த்து, அதற்கு நீர் வார்த்துக் கொண்டே இருந்தால் அது நின்று வளரும், பூ பூக்கும், அழகாக இருக்கும். 


நமக்கு நேரம் கிடைக்கும் போது நீர் வார்ப்போம் என்றால், சில சமயம் அது பட்டுப் போய் விடும். பின் எவ்வளவு நீர் வார்த்தாலும் அது துளிர்க்காது. 


நான் எவ்வளவு உரம் போட்டேன், நீர் வார்த்தேன் என்று சொல்லி பலன் இல்லை. அதற்கு வேண்டிய போது தர வேண்டும். 


வீடுகளில் பெரும்பாலும் அது தான் நிகழ்கிறது. 


பிள்ளைக்கு, கணவனுக்கு, மனைவிக்கு அன்பு தேவைப் படுகிறது. நாம் அப்போது வேறு எதிலோ மும்முராக இருப்போம். 


வேலை, வியாபாரம், பயணம், தொழில் சம்பந்தமாக ஆட்களை பார்ப்பது, அது சம்பந்தமாக படிப்பது, என்று அலைந்து கொண்டு இருப்போம். 


எல்லாம் குடும்பத்துக்காகத் தான். 


ஆனால், குடும்பம் என்ற செடி அங்கே அன்பு என்ற நீர் இல்லாமல் வாடிக் கொண்டு இருக்கும். 


ஒரு நாள் முற்றுமாக வாடி விடும். 


அந்த சமயம் நம் வேலை எல்லாம் முடிந்து இருக்கும். சரி, இப்போது பார் எவ்வளவு தண்ணீர் விடுகிறேன் என்று அண்டா அண்டாவாக கொட்டினால் என்ன பயன்? 


பிள்ளைகள் படித்து வெளியே போய் விடுவார்கள். கணவனுக்கோ, மனைவிக்கோ வயது ஏறி இருக்கும். வாழ்வை அனுபவிக்கும் இளமையும், துடிப்பும், வேகமும் போய் இருக்கும். 


இப்போது வந்து உரம் போடுகிறேன், நீர் ஊற்றுகிறேன் என்றால் என்ன செய்வது. 


காலம் கடந்த ஞானோதயம். 


இல்லறம் என்ற பயிர் வளர அன்பு என்ற நீர் அவசியம். 


நீரை, பயிர் வேண்டும் போதெல்லாம் வார்க்க வேண்டும். நம்மால் முடிந்த போதெல்லாம் அல்ல. 


காலம் தப்பிப் போனால், பயிர் வாடி விடும். பின் என்ன செய்தும் பயன் இருக்காது. 


பாடல் 


அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_69.html

(Please click the above link to continue reading)



அன்புஅகத்து இல்லா = அகத்தில், இல்லறத்தில், அன்பு இல்லாத 


உயிர்வாழ்க்கை = உயிர் வாழ்க்கை 


வன்பாற்கண் = வன்மையான பாலை நிலத்தில் அல்லது பாறையில் 


வற்றல் = வாடிப் போன 


மரந்தளிர்த் தற்று = மரம் தளிர்த்த மாதிரி 


உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும், "எப்படி பாலை நிலத்தில் வாடிய மரம் தளிர்காதோ அது போல அன்பு இல்லாத இல்லறம்" என்று தான் சொல்லி இருர்க்கிரார்கள். 


அதாவது, பாலை நிலத்தில் மரம் தளிர்ப்பது என்பது நடவாத ஒன்று. அது போல அன்பு இல்லாமல் இல்லறம் செய்ய முடியாது என்று தான் உரை எழுதி இருக்கிறார்கள். 


நான் அதை சற்று வேறு விதமாக சிந்தித்துப் பார்த்தேன். 


பாலை நிலம் எப்படி வந்தது?


மழை, நீர் இல்லாததால். 


அது போல அன்பு இல்லாததால் இல்லறம் பாலைவனமாகி விடும். 


அந்த பாலை நிலத்தில், ஒரு காலத்தில் செழித்து நின்ற மரம் இப்போது வாடி விட்டது. 


அது போல இல்லறத்தில் இருந்தவர்கள் ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இப்போது இல்லை. 


பின் மழை பொழிந்தாலும், மரம் தளிர்காதது போல், பின் எவ்வளவுதான் அன்பு செய்தாலும், இல்லறம் தளிர்காது. 


அதை வாட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


அதற்குதேவையான சமயத்தில் நீர் வார்க்க வேண்டும்.


அன்பு செலுத்தும் வாய்ப்புகளை தள்ளிப் போடக் கூடாது. 


எப்போதேலாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதே செய்து விட வேண்டும். 


அர்த்தம் பொருந்தி வருகிறதா? 




திருக்குறள் - ஒரு இடைச் செருகல்

 திருக்குறள் - ஒரு இடைச் செருகல் 


திருக்குறளை படிக்க படிக்க ஒரு பிரமிப்பு வருகிறது. எவ்வளவு ஆழமான, அர்த்தம் செறிந்த, வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கொண்ட நூல் என்று. சிந்திக்க சிந்திக்க அதன் எல்லைகள் விரிந்து கொண்டே போகின்றது. 


ஒரு வாழ்நாளில் படித்து முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. 


நான் படித்ததை, கேட்டதை, என் அறிவுக்கு எட்டியவரை எளிமைப் படுத்தி எழுதிக் கொண்டு இருக்கிறேன். 


இன்னும் எத்தனை நாள் ஆகுமோ முழுவதும் எழுதி முடிக்க. 


இடையே இடையே ஒரு சலிப்பும், சோர்வும் வந்து விடுகிறது. 


யார் படிக்கிறார்கள், யாருக்கேனும் இது ஒரு அணுவளவேனும் உதவுகிறதா அல்லது கடலில் பெய்த மழை போல், காட்டில் காய்ந்த நிலவு போல் பயனற்றுப் போகிறாதா என்ற ஆயாசம் இடை இடையே வருகிறது. அதனால் கொஞ்சம் இடைவெளியும், கால தாமதமும் வந்து விடுகிறது. 



https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_15.html


(please click the above link to continue reading)


திருக்குறள் ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். யாருக்காகவும் காத்து இருக்காமால், நீங்களே அதை நேராக படித்து விடுவது உங்களுக்கு நலம் தரும். 


நான் என்று எழுதி முடிக்க? அப்படியே எழுதி முடித்தாலும், அது ஒரு முழுமையான ஒன்றாக இருக்காது. 


அத்தனை நாள் ஏன் காத்து இருக்க வேண்டும். உலகில் உள்ள அத்தனை உரைகளும் வலை தளத்தில் உள்ளது. காலணா செலவு செய்யாமல் அத்தனை உரைகளையும் படித்து விடலாம். 


எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக படித்து முடிகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு நிறைந்த பலன் தரும். 



Friday, November 12, 2021

திருக்குறள் - அன்பிலதனை அறம்

திருக்குறள் - அன்பிலதனை அறம் 


அன்பு செய்ய வேண்டும் என்பது கட்டாயமா? அன்பு செய்யாவிட்டால் என்ன?  எவ்வளவு அன்பு செய்தாலும் யாரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இவர்கள் மேல் அன்பு செய்து என்ன பலன்? பேசாமல் நம்ம வேலையை பார்த்துக் கொண்டு போகலாம். 


திருப்பி அன்பு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாம் செய்யும் அன்புக்கு களங்கம் கற்பிக்கும் ஆட்களும் இருக்கிறார்கள். உலகில் அன்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. எல்லாமே ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத் தான் நடக்கிறது. எல்லாம் வியாபாரம். பண்டமாற்றாக இருக்கிறது....


என்று நமக்கு ஒரு அலுப்பு தோன்றலாம். 


என்னத்துக்கு அன்பு செய்வானேன்...பின் வருந்துவானேன்...சும்மா இருந்துவிட்டுப் போகலாம் என்று தோன்றும். 


ஆனால், வள்ளுவர் சொல்கிறார், அன்பு செய்ய வேண்டியது கட்டாயம் என்று. அன்பு செய்யாவிட்டால் அதற்கு தண்டனை உண்டு என்கிறார். ஆங்கிலத்தில் fine / penalty என்று கூறுவார்களே அது போல அன்பு செய்யாவிட்டால் தண்டனை உண்டு.


யார் தண்டிப்பார்கள்?  குறளை வாசிப்போம். 


பாடல் 


என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_12.html


(Please click the above link to continue reading)



என்பி லதனை  = என்பு + இல் + அதனை = எலும்பு இல்லாத அதை 


வெயில்போலக் காயுமே =வெயில் எவ்வாறு வருத்துமோ 


அன்பி லதனை அறம் = அன்பு + இல் +அதனை = அன்பு இல்லாத அதை அறம் 


பரிமேலழகர் துணை இல்லாமல் புரிந்து கொள்வது கடினம். 


உடம்பு, உயிர் என்று இரண்டு இருக்கிறது அல்லவா? 


இதில் எதற்கு எலும்பு இருக்கும்? உடம்புக்கா? உயிருக்கா? 


உடம்புக்கு எலும்பு இருக்கும். உயிருக்கு எலும்பு இல்லை. 


எலும்பு இல்லாத உடலை வெயில் எப்படி காயுமோ, அது போல அன்பு இல்லாத உயிரை அறக் கடவுள் தண்டிப்பார் என்கிறார் பரிமேலழகர். 


அன்பு செய்வது எது ? உடலா? உயிரா? 


உயிர்தானே அன்பு செய்யும். உயிர் போய் விட்டால் உடம்பு அன்பு செய்யுமா? அல்லது நம்மால்தான் உயிரில்லாத உடல் மேல் அன்பு செய்ய முடியுமா? 


உயிரின் வேலை அன்பு செய்வது. அதன் கடமை. அந்தக் கடமையில் இருந்து அது தவறினால், அறக் கடவுள் அந்த உயிரை தண்டிப்பார். 


உயிரின் இயற்கைக் குணம் அன்பு செய்வது. நாம் முயற்சி செய்து அந்த அன்பை கட்டுப்படுத்துகிறோம். 


வெயில் எதற்கு வருகிறது? உலகில் உள்ள மக்களை சுட்டு எரிக்க வேண்டும் என்றா வருகிறது? இல்லை. அது பாட்டுக்கு வருகிறது.  நாம் வெயிலில் போய் அலைந்து திரிந்து விட்டு, "சீ, இந்த வெயில் என்னமா சுடுது...வறுத்து எடுக்கிறது, மண்டையைப் பிளக்கிறது" என்று வெயிலை குறை கூறுகிறோம். நம்மை வெளியில் வா என்று வெயில் அழைத்ததா? இல்லையே? நாமே வெளியில் போய் சூடு வாங்கிக் கொண்டு வருகிறோம். 


அது போல, அறக் கடவுள் நம்மை தண்டிக்க கிளம்பி வர மாட்டார். நாமே போய் தண்டனை அடைவோம். அன்பு செய்யாவிட்டால், தண்டனை தானே நிகழும். 


"ஐயோ, நான் யாருக்கும் ஒரு தீங்கும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்தத் துன்பம்" என்று நினைத்தால், எங்கோ அன்பு செய்யாத குற்றத்திற்கு கிடைத்த தண்டனை அது என்று எண்ணிக் கொள்ள வேண்டும். 


துன்பத்தை நாமே வலிய சென்று வாங்கி வருவோம். வெயிலில் அலைந்து துன்பப் படுவது போல. 


துன்பத்தில் இருந்து தப்ப வேண்டுமா? 


அன்பு செய்வது ஒன்றுதான் வழி. 


என்ன ஒரு சிந்தனை ! 




Thursday, November 11, 2021

பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம்

 பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம் 


நாம் முயற்சி செய்கிறோம். நம் தகுதி, உழைப்பு, நேர்மை இவற்றிற்கு ஏற்ப ஏதோ ஒரு ஊதியம் கிடைக்கிறது. 


நம்மைவிட குறைந்த தகுதி, குறைவான உழைப்பு, குறைவான திறமை உள்ளவன் நம்மை விட பல மடங்கு அதிகம் பொருள் ஈட்டுகிறான். 


நம்மை விட தகுதியில், திறமையில், உழைப்பில் உயர்ந்தவன் நம்மை விட குறைவாக பொருள் ஈட்டுகிறான். 


இது நடக்கிறதா இல்லையா இந்த உலகில்?


காரணம் என்ன?


ஊழ் வினைப் ப் பயன் என்று நம் இலக்கியம் மிக ஆழமாக நம்பியது. 


ஏதோ எல்லாம் என்னால் என்று நினைக்காதே. முன் வினைப் பயன் இருந்தால் கிடைக்கும். இல்லை என்றால் என்ன முயன்றாலும் நட்டம்தான் வந்து சேரும். 


மூத்த மைந்தனுக்குத்த் தானே பட்டம் கிடைக்க வேண்டும். அதை விட்டு அவன் கானகம் போனனான். காரணம் என்ன?


"விதியின் பிழை" என்றான் இராமன். 


இங்கே பட்டினத்தார் சொல்லுகிறார்....


"முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என் மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில் செலவழிக்காமல் அதாவது ஏழைக்களுக்கு கொடுக்காமல், இறைப் பணியில் செலவிடாமல், படித்தவர்களுக்கு ஒன்று கொடுக்காமல் இருந்து ஒரு நாள் இறந்து போய்விட்டால் என்ன செய்வாய்? அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கப் போகிறாயா?"


என்று கேட்கறார். 


பாடல் 



முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்

இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே!

அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்

கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_17.html


(pl click the above link to continue reading)



முன் தொடர்பில் = முற் பிறவியில் 


செய்த முறைமையால் = செய்த புண்ணியத்தால் 


வந்த செல்வம் = வந்த செல்வத்தை 


இற்றைநாள் = இன்று, இப்போது 


பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே! = பெற்றோம் என்று எண்ணாதே பாழ் மனமே 


அற்றவர்க்கும் ஈயாமல் = பொருள் இல்லாதவர்களுக்கு உதவாமல் 


அரன் பூசை ஓராமல் = சிவ பூசை செய்யாமல் 


கற்றவர்க்கும் ஈயாமல் = கற்றவர்களுக்கும் கொடுக்காமல் 


கண் மறைந்து விட்டனையே. = இறந்து போனாயே 


நீ பெற்ற செல்வதால் உனக்கும் பயன் இல்லை, மற்றவர்களுக்கும் பயன் இல்லை. 


என்னே அறிவீனம்!




கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி

 கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின், அவனுக்கு இராமன் சில தர்மங்களை போதிக்கிறான். 


ஒரு தலைவன் தன் குடிகளை எப்படி நடத்த வேண்டும் என்று இராமன் கூறுகிறான். .


"உன் குடிகள் உன்னை தங்கள் தலைவன் என்று நினைக்கக் கூடாது. தங்களின் தாய் என்று நினைக்கும் படி நீ அரசு நடத்த வேண்டும். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு யார் மூலமாகவாவது தீங்கு வந்தால், அப்படி தீமை செய்வோரை அற நெறி மீறாமல் தண்டிப்பாயாக" என்றான். 


பாடல் 


நாயகன் அல்லன்; நம்மை

        நனி பயந்து எடுத்து நல்கும்

தாய் என இனிது பேணத்

        தாங்குதி தாங்குவாரை

ஆயது தன்மையேனும்

        அறவரம்பு இகவா வண்ணம்

தீயன வந்தபோது

        சுடுதியால் தீமையோரை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_11.html


(Please click the above link to continue reading)



நாயகன் அல்லன் = தலைவன் அல்ல 


நம்மை = நம்மை (குடி மக்களை) 


நனி = மிகவும் 


பயந்து எடுத்து நல்கும் = போற்றி எடுத்து கொடுக்கும் 


தாய் என = தாய் என்று சொல்லும்படி 


இனிது பேணத்  தாங்குதி = இனிதாகச் சொல்லும்படி அவர்களை பாதுகாப்பாய் 


 தாங்குவாரை = அப்படி தாங்கும் 


ஆயது தன்மையேனும் = தன்மை இருந்தாலும் 


அறவரம்பு இகவா வண்ணம் = அறத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு 


தீயன வந்தபோது = தீமைகள் வந்த போது 


சுடுதியால் தீமையோரை = தீயவர்களை தண்டிப்பாய் 


தலைவன் என்று வந்துவிட்டால் ஒரு பெருமை, அகங்காரம், மமதை வந்து விடும். அப்படி இல்லாமல், ஒரு தாய் குழந்தைகளை காப்பது போல காக்க வேண்டும் என்கிறான். 


மேலும், தீமை செய்பவர்களை தண்டிக்க வேண்டும், அதுவும் அறத்திற்கு உட்பட்டு.


உன்னத இலட்சியங்கள். முழுவதுமாக முடியாவிட்டாலும், அதை நோக்கி நாம் தினம் நகர வேண்டும். 


அரசனுக்கு மட்டும் அல்ல. நமக்கும்தான்.





Wednesday, November 10, 2021

திருக்குறள் - அன்பும் மறமும்

திருக்குறள் - அன்பும் மறமும் 


அறம், மறம் என்று இரண்டு இருக்கிறது. 


அறம் நமக்குப் புரிகிறது. மறம் என்ற சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துவது இல்லை. 


மறம் என்றால் வீரம், தீரம், வெற்றி, சண்டை, சீற்றம், சினம் என்று பொருள்கள் இருக்கின்றன. 


அறத்திற்கு மட்டுமே அன்பு துணை போகும் என்று சில அறியாதவர்கள் கூறுவார்கள். மறத்துக்கும் அந்த அன்பு தான் துணை என்கிறார் வள்ளுவர். 


தவறாக புரிந்து கொள்ளப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று. 


அது எப்படி சண்டை பிடிக்க அன்பு துணையாக முடியும் ? ஒருவன் மேல் கோபம் கொள்ள அன்பு துணை செய்யுமா? அன்பு இருந்தால் சண்டை பிடிக்க முடியுமா? 


பின் ஏன் வள்ளுவர் அப்படிச் சொல்லி இருக்கிறார். 


பாடல்  


அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_10.html


(Please click the above link to continue reading)


அறத்திற்கே = அறத்திற்கு மட்டுமே 


அன்புசார்பு = அன்பு துணை செய்யும் 


என்ப  அறியார் = என்று கூறுவார் அறியாதவர்கள் 


மறத்திற்கும் = மறத்திற்கும் 


அஃதே துணை. = அந்த அன்பே துணை 


பரிமேலழகர் இல்லாவிட்டால் இந்த குறளுக்கு சரியான அர்த்தம் காண்பது கடினம். 


அவர் உரை சொல்கிறார் "ஒருவன் மேல் கோபம் வந்து விட்டதா, அவன் கூட சண்டை போட வேண்டும் என்று தோன்றுகிறதா? அந்த பகைமையை மாற்றுவதும் அன்புதான்" என்கிறார். .


பகை வந்து விட்டது. பகை நல்லதா என்றால் இல்லை. கோபம் நல்லதா என்றால் இல்லை. 


பின் பகையை எப்படி மாற்றுவது?


அவன் கூட சண்டை போட்டு, அவனை தோற்கடித்தால் பகை முடிந்து விடுமா? வென்றாலும் தோற்றாலும் பகை நிற்கும். இன்னும் சொல்லபோனால் சண்டைக்குப் பின் பகை மேலும் வலுப்படும். 


பகையை மாற்ற ஒரே வழி அன்புதான். 


சின்ன உதாரணம் பார்க்கலாம். 


கணவன் மனைவிக்குள் ஏதோ கருத்து வேறுபாடு. சண்டை வந்து விட்டது. அந்த சண்டை, பகை, கோபம் எப்படிப் போகும்? மேலும் மேலும் சண்டை பிடிக்கலாம். ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருக்கலாம். என்ன செய்தாலும் பகை போகாது. சரி விடு என்று யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்து அன்பு செலுத்தினால்தான் உறவு நிலைக்கும். விட்டுக் கொடுத்தவர்களை பலவீனமானவர்கள் என்று நினைக்கக் கூடாது. எனக்காக அவர்/அவள் விட்டுக் கொடுத்தாள்/ர் என்று அன்பு செய்ய வேண்டும். 


அன்பு எந்தப் பகையையும் மாற்றி விடும். 


அன்பு மட்டும் தான் பகையை மாற்றும். 


சரி, இப்படி பொருள் கொள்ளலாம் என்று பரிமேலழகருக்கு யார் உரிமை தந்தது? இது சரியான விளக்கம் தானா? 


அதற்கும் ஒரு மேற்கோள் காட்டுகிறார் பரிமேலழகர். 


துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம்உடைய

நெஞ்சம் துணையல் வழி.


என்ற குறளில், "துன்பத்திற்கு யாரே துணையாவார்" என்பதில் யாரும் துன்பத்துக்கு துணை போக மாட்டார்கள் என்று தெரிகிறது அல்லவா. 


அது போல, மறத்துக்கு அன்பு துணை போகாது. ஆனால் மறத்தை மாற்றி அதை அறமாக்க அன்பு துணை செய்யும் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


பகையும், கோபமும், சீற்றமும், சினமும் அன்பினால் மறையும். 


பாசம், அன்பு, கருணை,காதல் இதற்கு மட்டும் துணை செய்வது அல்ல அன்பும். 


பகைமையை மாற்றி நேசத்தை வளர்க்கவும் அன்பு துணை செய்யும் என்கிறார். .


எங்கெல்லாம் கோபம் இருக்கிறதோ, பகை இருக்கிறதோ, அங்கே அன்பு செலுத்துங்கள். 


பகையே இல்லாத வாழ்வு வாய்க்கும்.