Thursday, November 11, 2021

கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி

 கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின், அவனுக்கு இராமன் சில தர்மங்களை போதிக்கிறான். 


ஒரு தலைவன் தன் குடிகளை எப்படி நடத்த வேண்டும் என்று இராமன் கூறுகிறான். .


"உன் குடிகள் உன்னை தங்கள் தலைவன் என்று நினைக்கக் கூடாது. தங்களின் தாய் என்று நினைக்கும் படி நீ அரசு நடத்த வேண்டும். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு யார் மூலமாகவாவது தீங்கு வந்தால், அப்படி தீமை செய்வோரை அற நெறி மீறாமல் தண்டிப்பாயாக" என்றான். 


பாடல் 


நாயகன் அல்லன்; நம்மை

        நனி பயந்து எடுத்து நல்கும்

தாய் என இனிது பேணத்

        தாங்குதி தாங்குவாரை

ஆயது தன்மையேனும்

        அறவரம்பு இகவா வண்ணம்

தீயன வந்தபோது

        சுடுதியால் தீமையோரை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_11.html


(Please click the above link to continue reading)



நாயகன் அல்லன் = தலைவன் அல்ல 


நம்மை = நம்மை (குடி மக்களை) 


நனி = மிகவும் 


பயந்து எடுத்து நல்கும் = போற்றி எடுத்து கொடுக்கும் 


தாய் என = தாய் என்று சொல்லும்படி 


இனிது பேணத்  தாங்குதி = இனிதாகச் சொல்லும்படி அவர்களை பாதுகாப்பாய் 


 தாங்குவாரை = அப்படி தாங்கும் 


ஆயது தன்மையேனும் = தன்மை இருந்தாலும் 


அறவரம்பு இகவா வண்ணம் = அறத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு 


தீயன வந்தபோது = தீமைகள் வந்த போது 


சுடுதியால் தீமையோரை = தீயவர்களை தண்டிப்பாய் 


தலைவன் என்று வந்துவிட்டால் ஒரு பெருமை, அகங்காரம், மமதை வந்து விடும். அப்படி இல்லாமல், ஒரு தாய் குழந்தைகளை காப்பது போல காக்க வேண்டும் என்கிறான். 


மேலும், தீமை செய்பவர்களை தண்டிக்க வேண்டும், அதுவும் அறத்திற்கு உட்பட்டு.


உன்னத இலட்சியங்கள். முழுவதுமாக முடியாவிட்டாலும், அதை நோக்கி நாம் தினம் நகர வேண்டும். 


அரசனுக்கு மட்டும் அல்ல. நமக்கும்தான்.





1 comment:

  1. அரசனுக்கும் தலைவனுக்கும் மிக நல்ல அறிவுரை.

    நன்றி.

    ReplyDelete