Thursday, November 18, 2021

திருக்குறள் - அக மற்றும் புற உறுப்புகள்

 திருக்குறள் - அக மற்றும்  புற உறுப்புகள் 


பாடல் 


புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு


பொருள் 


புறத்துறுப்பு = புறத்தில் உள்ள உறுப்புகள் 


எல்லாம் = அனைத்தும் 


எவன்செய்யும் = என்ன செய்யும்? என்ன பலனைத் தரும் 


யாக்கை = உடம்பில் 


அகத்துறுப்பு = அகத்தில் உள்ள உறுப்பில் 


அன்பில் அவர்க்கு = அன்பு இல்லாதவர்களுக்கு 


இதை பொதுவாக பொருள் சொல்வது என்றால், புற உறுப்புகளான கால், கை முதலியவை என்ன பயன் தரும், உடம்பில் அன்பு இல்லாத போது என்று சொல்லி விடலாம். 


பரிமேலழகர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_18.html

(please click the above link to continue reading)



அப்படி பொருள் கொண்டால், அந்தக் குறளுக்கும், இல்லறத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. 


சரி, பின் பரிமேலழகர் என்ன உரை சொல்கிறார்?


அதற்கு  அப்புறம் வருவோம். 


இல்லறம் நன்றாக நடக்க என்ன வேண்டும்?


உற்றார், உறவினர், நட்பு, சுற்றம், அக்கம் பக்கம் உள்ளோர், என்று எல்லோரின் தயவும், அவர்களோடு சுமுகமான உறவும் முக்கியம் அல்லவா?


எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு, குற்றம் குறை கூறிக் கொண்டு திரிந்தால் அந்த இல்லறம் எப்படி இருக்கும்?


விருந்து வேண்டும், நட்பு வேண்டும், நாலு பேர் நம்மை நாடி வர வேண்டும். நாம் போக நாலு இடம் வேண்டும். 


ஒன்றும் வேண்டாம் என்றால் பின் இல்லறம் எதற்கு? துறவியாகப் போய் விடலாமே?


எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களோடு நாம் பின்னி பிணைந்து செல்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இல்லறம் சிறக்கும். 


சரி தானே?


அந்த நட்பு, உறவு, நெருக்கமானவர்களைத் தான் பரிமேலழகர் "புறத்து உறுப்பு" என்கிறார். 


எத்தனை நட்பு, சுற்றம், உறவுகள் இருந்தாலும், மனதில் அன்பு இல்லாவிட்டால் அவற்றால் ஒரு பயனும் இல்லை. 


நாளடைவில் அவர்கள் நம்மை விட்டு விலகிப் போய் விடுவார்கள் அல்லது நாம் விலகி வந்து விடுவோம். 


அகத்தில் அன்பு இல்லாவிட்டால், புறத்தில் எத்தனை உறவுகள் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை. 


அது பரிமேலழகர் சொல்லும் உரை. 


நம் உடல் உறுப்புகள் மேல் நமக்கு வெறுப்பு இருக்குமா? என் கையை எனக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது அதை வெட்டி எறிந்து விட வேண்டும் என்று நினைப்போமா? என் கண் அழகாக இல்லை. அதைத் தோண்டி எடுத்து தூர எறிந்து விட வேண்டும் என்று நினைப்போமா? 


நாம் என்பதே இந்த உடல் உறுப்புகளின் தொகுப்புதானே. 


அது போல் இந்த இல்லறத்துக்கு உறவுகள் உறுப்பு போன்றவை. 


நம் விரல் நம் கண்ணை குத்தி விட்டது என்பதற்காக விரலை வேட்டுவோமா? சிலசமயம் பல் தெரியாமல் நாக்கை கடித்து விடும். அதற்காக பல்லை பிடுங்கி விட முடியுமா? 


உறுப்புகள் தவறு செய்யலாம். விட்டு விடக் கூடாது. 


மேலும் சிந்தித்துப் பார்க்க பொருள் விரியும். 


அன்பு இருந்தால் உறவுகள் பலப்படும். இல்லறம் சிறக்கும் என்பது நுண்ணிய கருத்து. 




1 comment:

  1. பரிமேலழகர் உரை கொஞ்சம் திடுக்கிடும்படித்தான் இருக்கிறது!

    ReplyDelete