Friday, November 5, 2021

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய்

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய் 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் கூறுகிறான். 


இது அரசனுக்கு கூறியது தானே, நமக்கு எதற்கு என்று நினைக்க வேண்டியது இல்லை. இது எந்தப் பொறுப்பில் உள்ளவர்க்கும் பொருந்தும். 


எவ்வளவு பெரிய அறங்களை எவ்வளவு அழகாக சொல்கிறார்கள். 


யோசித்துப் பார்ப்போம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு சொல்வதென்றால் என்ன சொல்லுவோம்? 


எவ்வளவோ சொல்லலாம். எதைச் சொல்வது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். 


கடுமையான உழைப்பு, நீதி, நேர்மை, என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


கம்பன் எப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள். 



பாடல் 


 செய்வன செய்தல், யாண்டும்

      தீயன சிந்தியாமை,

வைவன வந்தபோதும் வசை

      இல இனிய கூறல்,

மெய்யன வழங்கல், யாவும்

      மேவின வெஃகல் இன்மை,

உய்வன ஆக்கித் தம்மோடு

      உயர்வன:  உவந்து செய்வாய்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_5.html


(Pl click the above link to continue reading)



செய்வன செய்தல் = செய்ய வேண்டியதை செய்து விட வேண்டும். ஒரு பொறுப்பு என்று வந்து விட்டால் அதை முடிக்க வேண்டும். வினை முடித்தல். யார் யாருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்து விட வேண்டும். 


யாண்டும் = எப்போதும் 

தீயன சிந்தியாமை = தீயவற்றை சிந்திக்கக் கூட கூடாது. 


வைவன வந்தபோதும் = ஒரு பொறுப்பில் இருந்தால், நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். ஒருவன் நல்லது என்பான். அதையே ஒருவன் கெடுதல் என்று வைவான். பொது வாழ்வில் இதெல்லாம் இயற்கை.  


வசை  இல இனிய கூறல், = அப்படியே ஒருவன் வைத்தாலும், பதிலுக்கு திட்டாமல், இனியவற்றை கூற வேண்டும். அரசாங்கம் என்றால் மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு கடுமையான விமரிசனம் என்றாலும் பொறுத்துக் கொண்டு இனிய பேச வேண்டும். 


மெய்யன வழங்கல்  = எது சரியோ அதைச் செய்ய வேண்டும். பிடித்தவன், பிடிக்காதவன் என்று பாராபட்சம் பார்க்காமல், உண்மை எதுவோ, எது சரியோ, அதைச் செய்ய வேண்டும். 



யாவும் மேவின வெஃகல் இன்மை = வெஃகல் என்றால் பிறர் பொருள் மேல் ஆசை கொள்ளுதல். அரசனிடம் ஏராளமான அதிகாரம் இருக்கும். யாரிடம் இருந்தும் எதையும் தன் அதிகாரத்தால் பறிக்க முடியும். அப்படி செய்யக் கூடாது என்கிறார். பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், சொத்து வைத்து இருப்பவர்களை மிரட்டி அவர்கள் பொருள்களை பறிக்கக் கூடாது. பறிக்க நினைக்கவே கூடாது என்கிறார். 

 

உய்வன ஆக்கித்  = உய்தல் காப்பாற்றுதல். 


தம்மோடு உயர்வன = இந்த நல்ல குணங்கள் இருக்கின்றனவே, அவை என்ன செய்யும் என்றால் யார் அவற்றை கடைப் பிடிகிறார்களோ அவர்களை காக்கும். அது மட்டும் அல்ல அவர்களை தங்கள் உயரத்துக்கு உயர்த்தும். அவை கை பிடித்து மேலே தூக்கி விடும். தாமும் உயர்ந்து, தங்களை கடைப் பிடிப்பவர்களையும் உயர்த்தும். 


 உவந்து செய்வாய். = இவற்றை மன மகிழ்ச்சியோடு செய்வாய். அது தான் சிக்கல். நாமாக இருந்தால் என்ன செய்வோம்...."இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு...நடை முறை சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விடுவோம். அல்லது, செய்ய வேண்டுமே என்று கடனே என்று செய்வோம். 


நல்ல காரியங்களை மன மகிழ்ச்சியோடு, விருப்பத்தோடு செய். 


விரதம் இருப்பது நல்லது என்றால், அதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். 


உடற் பயிற்சி நல்லது என்றால் அதை செய்வதில் ஒரு உற்சாகம் வேண்டும். மூக்கால் அழுது கொண்டே செய்யக் கூடாது. 


தானம் செய்வது என்றால் விருப்பத்தோடு செய்ய வேண்டும். 


செய்வதில் மகிழ்ச்சி இல்லை என்றால் செய்ய மாட்டோம். கொஞ்ச நாள் செய்வோம் அப்புறம் விட்டு விடுவோம். விருப்பம் இருந்தால் மேலும் மேலும் செய்வோம். 


அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை. விரும்பிச் செய்ய வேண்டும். 



நல்லவற்றை செய்வதில் விருப்பம் இருக்க வேண்டும். 


"உவந்து செய்வாய்" என்கிறான் இராமன். 



2 comments:

  1. இது நிரந்தரமான உண்மை. தற்காலத்திற்கு நன்றாக பொருந்தும். மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்!

    ReplyDelete
  2. உவந்து செய்வாய் என்பது அருமை. நன்றி.

    ReplyDelete