Monday, November 8, 2021

கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல்

 கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல் 


வாழ்க்கை யாரை எங்கே எப்படி கொண்டு சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயம் குப்பை காகிதம் கோபுர உச்சிக்கும் போய் விடும். 


நம்மை விட குறைந்தவர்களை, அவர்கள் சாதரணமானவர்கள் என்று நினைத்து நாம் அவர்களுக்கு ஏதோ தீமை செய்தால், அதை அவர்கள் மனதில் வைத்து இருந்து சரியான நேரத்தில் நமக்கு மிகப் பெரிய தீமையை செய்து விடுவார்கள். நம்மால் தாங்க முடியாது. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் வழங்கினான். 

அப்போது இராமன் சொல்கிறான் 


"சிறியர் என்று எண்ணி மற்றவர்களுக்கு துன்பம் செய்து விடாதே. அப்படி செய்ததால், கூனி என்ற ஒரு கிழவி எனக்கு செய்த தீமையால் நான் துயரம் என்ற கடலில் வீழ்ந்தேன்"


என்றான். 


பாடல் 


'சிறியர் என்று இகழ்ந்து நோவு

      செய்வன செய்யல்; மற்று, இந்

நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை

      இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,

குறியது ஆம் மேனி ஆய

      கூனியால், குவவுத் தோளாய்!

வெறியன எய்தி, நொய்தின் வெந்

      துயர்க் கடலின் வீழ்ந்தேன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_8.html


(please click the above link to continue reading)



'சிறியர் என்று = நம்மை விட அறிவில், பணத்தில், அதிகாரத்தில், சிறியவர்கள் என்று எண்ணி 


இகழ்ந்து = அவர்களை இகழ்வாகப் பேசி 


நோவு செய்வன செய்யல் = துன்பம் தருவனவற்றை செய்யாதே 


மற்று, = மேலும் 


இந்நெறி இகழ்ந்து = இந்த வழியை மறந்து 


யான் = நான் (இராமன்) 


ஓர் தீமை இழைத்தலால் = தீமை செய்ததால் 


உணர்ச்சி நீண்டு = அந்த பகைமை உணர்ச்சியை நீண்ட நாள் மனதில் வைத்து இருந்து 


குறியது ஆம் மேனி ஆய = குறுகிய வடிவை உடைய 


கூனியால் = கூனியால் 


குவவுத் தோளாய்! = திரண்ட தோள்களை உடையவனே (சுக்ரீவனே) 


வெறியன எய்தி = துன்பத்தினை அடைந்து 


நொய்தின்  = வருந்தி 


வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன். = துன்பம் என்ற கடலில் வீழ்ந்தேன் 


யோசித்துப் பார்த்து இருப்பானா இராமன். 


சக்ரவர்த்தி திருமகன் அவன். 


அவளோ அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு கூன் விழுந்த கிழவி. 


அவளால் என்ன செய்ய முடியும்?


ஆனால், அவள் சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டாள். 


தசரத சக்ரவர்த்தி இறந்தான். இராமன் கானகம் போனான். சீதையும், இலக்குவனும் காடு போனார்கள். இராமன் அரசை இழந்தான். இருக்க இடம் இன்றி, உடுத்த துணி இன்றி காட்டில் பதினாலு வருடம் அலைந்தான். 


பரதன் அரசை ஏற்கவில்லை. இராமன் பாதுகையை வைத்து, அயோத்திக்கு வெளியே இருந்து ஆட்சி செய்தான். 


வாலி இறந்தான். 


இராவணன் இறந்தான். கும்பகர்ணன், இந்திரசித்து போன்றோர் இறந்தனர். 


எல்லாம் யாரால்? அந்தக் கூனியால். 


பெரிய பிழை ஒன்றும் இல்லை. மண் உருண்டை வைத்து அவள் கூன் முதுகில் இராமன் அம்பு விட்டான், சிறு வயதில். 


அது பொறுக்காமல் அந்தக் கூனி இவ்வளவு செய்தாள்.


பெரிய பெரிய படைகள் சாதிக்க முடியாதவற்றை அந்த பெண் தனி ஒரு ஆளாக நின்று செய்தாள். 


வீட்டு வேலை செய்பவர்களை, வண்டி ஓட்டுபவர்களை, காவல்காரர்களை, கீழே வேலை செய்பவர்களை, யாராக இருந்தாலும், அவர்களுக்கு தீமை செய்யக் கூடாது. 


அதிலும் பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு கீழே பலர் இருப்பார்கள். என்றோ ஒரு மறதியில், அசதியில் தவறு இழைத்து விட்டால் பின் ஆயுள் முழுவதும் வருந்த வேண்டி இருக்கும்.  இராமன் வருந்தியதைப் போல. 


சில சமயம் அவர்கள் நமக்கு தீமை செய்தார்கள் என்று கூடத் தெரியாது. இல்லாததும் பொல்லாததும் சொல்லக் கூடாத இடத்தில் போய் சொல்லி விடுவார்கள். நாம் செய்யாததை, சொல்லாததை செய்ததாகவும், சொன்னதாகவும் திரித்துச் சொல்லி நம்மை சிக்கலில் மாட்டி வைத்து விடுவார்கள். 


சிறியாரை இகழேல் என்று தன் அனுபவத்தை பாடமாக்கிச் சொல்கிறான் இராமன். 


படிப்போம். 



1 comment:

  1. நாம்அ கடை பிடிக்ற்புக வேண்தடிய அற்புதமான
    உபதேசம்.

    ReplyDelete