Thursday, November 11, 2021

பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம்

 பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம் 


நாம் முயற்சி செய்கிறோம். நம் தகுதி, உழைப்பு, நேர்மை இவற்றிற்கு ஏற்ப ஏதோ ஒரு ஊதியம் கிடைக்கிறது. 


நம்மைவிட குறைந்த தகுதி, குறைவான உழைப்பு, குறைவான திறமை உள்ளவன் நம்மை விட பல மடங்கு அதிகம் பொருள் ஈட்டுகிறான். 


நம்மை விட தகுதியில், திறமையில், உழைப்பில் உயர்ந்தவன் நம்மை விட குறைவாக பொருள் ஈட்டுகிறான். 


இது நடக்கிறதா இல்லையா இந்த உலகில்?


காரணம் என்ன?


ஊழ் வினைப் ப் பயன் என்று நம் இலக்கியம் மிக ஆழமாக நம்பியது. 


ஏதோ எல்லாம் என்னால் என்று நினைக்காதே. முன் வினைப் பயன் இருந்தால் கிடைக்கும். இல்லை என்றால் என்ன முயன்றாலும் நட்டம்தான் வந்து சேரும். 


மூத்த மைந்தனுக்குத்த் தானே பட்டம் கிடைக்க வேண்டும். அதை விட்டு அவன் கானகம் போனனான். காரணம் என்ன?


"விதியின் பிழை" என்றான் இராமன். 


இங்கே பட்டினத்தார் சொல்லுகிறார்....


"முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என் மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில் செலவழிக்காமல் அதாவது ஏழைக்களுக்கு கொடுக்காமல், இறைப் பணியில் செலவிடாமல், படித்தவர்களுக்கு ஒன்று கொடுக்காமல் இருந்து ஒரு நாள் இறந்து போய்விட்டால் என்ன செய்வாய்? அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கப் போகிறாயா?"


என்று கேட்கறார். 


பாடல் 



முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்

இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே!

அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்

கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_17.html


(pl click the above link to continue reading)



முன் தொடர்பில் = முற் பிறவியில் 


செய்த முறைமையால் = செய்த புண்ணியத்தால் 


வந்த செல்வம் = வந்த செல்வத்தை 


இற்றைநாள் = இன்று, இப்போது 


பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே! = பெற்றோம் என்று எண்ணாதே பாழ் மனமே 


அற்றவர்க்கும் ஈயாமல் = பொருள் இல்லாதவர்களுக்கு உதவாமல் 


அரன் பூசை ஓராமல் = சிவ பூசை செய்யாமல் 


கற்றவர்க்கும் ஈயாமல் = கற்றவர்களுக்கும் கொடுக்காமல் 


கண் மறைந்து விட்டனையே. = இறந்து போனாயே 


நீ பெற்ற செல்வதால் உனக்கும் பயன் இல்லை, மற்றவர்களுக்கும் பயன் இல்லை. 


என்னே அறிவீனம்!




1 comment:

  1. நமது செல்வத்துக்கும், நல்வாழ்க்கைக்கும் நாம் ஒரு லாட்டரியில் வெற்றி பெற்றவர் போல இருக்கிறோம். சிரியாவில் பிறக்காமல், இந்தியாவில் பிறந்தது அதிட்டம். பள்ளி செல்லும் வாய்ப்பிக் கிடைத்தது அதிட்டம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். "I am the winner of the genetic lottery" என்று Bill Gates கூறினாராம்.

    முன் பிறவி இருக்கிறதோ, இல்லையோ - நாம் அதிட்டம் பெற்றவர்கள் என்ற தன்னடக்க எண்ணம் கொண்டு வாழ்வதே உயர்வு.

    நன்றி.

    ReplyDelete