Thursday, November 25, 2021

திருவிளையாடற் புராணம் - பண்டை பழவினை மாற்றுவார் யார் ?

 திருவிளையாடற் புராணம் - பண்டை பழவினை மாற்றுவார் யார் ?


பாண்டிய மன்னன் குதிரை வாங்கி வரும்படி சொல்லி மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அனுப்பினான். மணிவாசகரோ, குதிரை வாங்காமல் அந்தப் பணத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார்.


என்னதான் பக்திமானாக இருந்தாலும், மற்றவர் பணத்தை எடுத்து இறை காரியம் செய்யலாமா? நாளை மற்றவர்களும் அப்படிச் செய்யலாம் அல்லவா? மாணிக்கவாசகரே செய்தார், நான் செய்தால் தப்பா என்று ஆளாளுக்கு ஆரம்பித்து விட்டால்? 


அப்படி செய்ததற்கு மணிவாசகர் தண்டனை பெற்றார். அது வேறு விடயம்.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


மணிவாசகரின் நண்பர்கள் அவரிடம் "இப்படி மன்னன் கொடுத்த பணத்தில்திருப்பணி செய்து விட்டீரே, மன்னன் குதிரை எங்கே கேட்டு, உண்மை அறிந்து உம்மை தண்டித்தால் என்ன செய்யப் போகிறீர்" என்று கேட்டார்கள். 


அதற்கு அவர் 


"இன்றே இறந்தாலும், சரி. அல்லது நீண்ட நாள் இருக்க வேண்டி இருந்தாலும் சரி. அரசன் கோபித்தாலும் சரி. அல்லது பாராட்டினாலும் சரி. சுவர்க்கம் போனாலும் சரி. அல்லது நரகமே ஆனாலும் சரி. என்ன ஆனாலும் சரி, சிவனை மறக்க மாட்டேன். நடப்பது எல்லாம் விதிப் பயன். அதை யாராலும் மாற்ற முடியாது"


என்று கூறினார். 


பாடல் 


இறக்கினு மின்றே யிறக்குக வென்று மிருக்கினு மிருக்குக வேந்தன்

ஒறுக்கினு மொறுக்க வுவகையு முடனே யூட்டினு மூட்டுக வானிற்

சிறக்கினுஞ் சிறக்க கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக சிவனை

மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தான் மாற்றுவார் யாரென

                                            மறுத்தார்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_25.html



(pl click the above link to continue reading)



இறக்கினு மின்றே யிறக்குக = இறக்கினும் இன்றே இறக்குக 


வென்று மிருக்கினு மிருக்குக = என்றும் இருக்க வேண்டும் என்றாலும் இருப்போம் 


 வேந்தன் = அரசன் 


ஒறுக்கினு மொறுக்க = கோபித்தால் கோபித்து கொள்ளட்டும் 


வுவகையு முடனே யூட்டினு மூட்டுக = அல்லது உவகையுடன் உபசரித்தாலும் உபசரிகட்டும் 


வானிற் = மேலுலகில் 


சிறக்கினுஞ் சிறக்க = சிறப்பாக சொர்க்கத்தில் இருந்தால் சந்தோஷமாக இருப்போம் 


கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக = அல்லது கொடிய தீ நரகத்தில் கிடந்து துன்பப் பட வேண்டி இருந்தால் துன்பப் படுவோம் 


 சிவனை மறக்கிலம் = என்ன ஆனாலும் சரி, சிவனை மறக்க மாட்டோம் 


 பண்டைப்  = முந்தைய 


பழவினை = பழுத்த வினைகள் 


விளைந்தான் = வந்து விளைந்தால் 


 மாற்றுவார் யாரென மறுத்தார். = அதை மறுத்து யாரால் மாற்ற முடியும் 


அதெல்லாம் சரி, மாணிக்கவாசகர் அப்படி இருந்தார். அதுக்கு என்ன இப்ப? நாம அவர் போல இருக்க முடியுமா? அப்படி இருந்தால் நாமும் மணிவாசகராகி விடமாட்டோமா? இதெல்லாம் நடக்கிற காரியமா?


அப்படி அல்ல.


வாழ்வில், நாம் நினைக்கிறோம் எல்லாம் நம் சாமர்த்தியத்தில், நம் அறிவுத் திறனில், நம் உழைப்பில் நிகழ்கிறது என்று. நம்மால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். 


அப்படி நடந்தால் "பார்த்தாயா என் சமத்தை" என்று மார் தட்டுகிறோம். 


அப்படி நடக்கவில்லை என்றால்  மனமொடிந்து போகிறோம். 


இது போன்ற இலக்கியங்கள் நமக்கு ஒரு சமநிலையைத் தருகின்றன.


வெற்றியில் ஆடாதே. தோல்வியில் துவண்டு விடாதே.


எல்லாம் முன் செய்த வினை என்று இரு. இனி வரும் நாட்கள் நல்லவையாக இருக்க வேண்டும் என்றால்,இப்போது நல்லது செய்து கொண்டிரு என்று சொல்கின்றன. 


வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் இரண்டும் இருக்கும். 


ரொம்ப அல்லாட வேண்டாம். நிதானமாக இருப்போம் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன. 





2 comments:

  1. தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தேவையான கருவிகளை www.valaithamil.com இணையதளத்தில் கண்டறியலாம்.

    ReplyDelete
  2. இப்படிச் செய்வதுதான் சரி என்ற திண்ணம் வந்து விட்டால், விளைவுக்குப் பயப்படக் கூடாது என்ற பொருள் எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete