Monday, November 22, 2021

திருக்குறள் - உயிர் நிலை

 திருக்குறள் - உயிர் நிலை 


பாடல் 


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_22.html


(please click the above link to continue)




அன்பின் வழியது உயிர்நிலை  = அன்பின் வழி செல்லும் உடம்பே உயிர் உயிர் உள்ள உடம்பு 


அஃதிலார்க்கு = அந்த அன்பு இல்லாதவர்களுக்கு 


என்புதோல் போர்த்த உடம்பு. = உள்ள உடம்பு என்பது எலும்பை தோல் போர்த்திய ஒன்று 


அதாவது, அன்பு இல்லாதவனை பிணம் என்கிறார் வள்ளுவர். எலும்பு இருக்கிறது, தோல் இருக்கிறது. உயிர் இல்லை என்றால் அது பிணம்தானே. 


இப்படித்தான் உரை எழுதிய பெரியவர்கள் அனைவரும் கூறி இருக்கிறார்கள். 


இருந்தும் ஏதோ ஒன்று நிறைவு பெறாத மாதிரி இருக்கிறது. 


அன்பில்லாதவன் பிணத்துக்கு சமம், உயிர் இல்லாதவன் மாதிரி என்று சொல்வதற்கு வள்ளுவர் வேண்டுமா? அல்லது அதை சொல்ல "அன்பின் வழியது உயிர் நிலை" என்று சொல்ல வேண்டுமா?


இதில் மேலும் ஆழமான கருத்து ஏதேனும் இருக்குமோ என்று சிந்தனை செய்து பார்த்தேன். 


எனக்குத் தோன்றியதை பகிர்ந்து கொள்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம். சரி என்று பட்டால், ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் தள்ளி விடுங்கள். 


நிலை அல்லது நிலைப்பாடு என்று நாம் எதைச் சொல்கிறோம்? 


ஒருவரின் நோக்கம், விருப்பம், செயல் இவற்றை நாம் அவரின் நிலைப்பாடு என்கிறோம். 


வருமான வரியைக் குறைக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு என்று ஒரு அரசியல் கட்சி கூறலாம். அது அவர்கள் நிலை. அவர்கள் அந்த நிலையில் இருக்கிறார்கள்.


உயிரின் நிலை என்ன என்று கேட்டால் அன்பு வழியில் செல்வது தான் உயிரின் நிலை. அதன் நிலைப்பாடு. எப்போது உயிர் அன்பு செய்வதை நிறுத்தி விடுகிறதோ, அப்போது, அது இருந்தும் பயன் இல்லை. 


பள்ளிக் கூடம் செல்வேன், படிக்க மாட்டேன் என்று ஒருவன் கூறினால், அவன் மாணவனாக இருக்கவே தகுதி இல்லாதவன் தானே? 


அவனை மாணவன் என்றே சொல்ல முடியாது. 



இப்போதெல்லாம் ஆசிரியர்கள் பல தகாத காரியங்களை செய்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியில் தொல்லை தந்ததாக ஆசிரியர்கள் மேல் குற்றச் சாட்டுகள் வருகின்றன . அது உண்மையாக இருந்தால், அவர்கள் ஆசிரியர்கள் என்ற தகுதியில் இருந்து தவறி விட்டவர்கள் என்று தானே ஆகும். அவர்களை ஆசிரியர்கள் என்று கூற முடியுமா?


அது போல, அன்பு செய்யாத உயிரை, உயிர் என்ற கணக்கில் கொள்ள முடியாது. அது ஒரு உடம்பில் இருந்தாலும், அந்த உடம்பு உயிரற்ற உடம்பாகத்தான் கருதப் படும். என்பு தோல் போர்த்திய உடம்பு தான். உயிர் என்று பேருக்கு இருக்கிறதே தவிர அது செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை. 


குறளை சற்று மாற்றிப் போடுவோம்.


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.


என்பதை 


உயிர்நிலை(யாவது) அன்பின் வழி


 அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.


என்று கொண்டால் நான் சிந்திக்கும் பொருள் வர வாய்ப்பு இருக்கிறது. 


மூச்சு விடுவது, சாப்பிடுவது, நடப்பது, தூங்குவது எல்லாம் உயிரின் வேலை முக்கிய வேலை அல்ல. அன்பு செய்வதுதான் உயிரின் முக்கிய வேலை. அன்பின் வழியில் செல்வதுதான் உயிரின் நிலை. 


மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். 


இந்த உரை சரி என்று சொல்லவில்லை. இப்படி சிந்தித்தேன் என்று சொல்கிறேன். 


சரி என்று பட்டால் கொள்ளவும். இல்லையெனில் தள்ளவும். 






பிணம் யார் மேலாவது அன்பு செய்யுமா? அதற்கு தாய் யார், தகப்பன் யார், உற்றார் யார்,நட்பு யார் என்று ஒன்றும் தெரியாது. அது பாட்டுக்கு கிடக்கும். தோல் இருக்கும், உள்ளே எலும்பு இருக்கும். என்ன பயன்? அன்பு செலுத்த முடியாது. 


வள்ளுவர் சொல்கிறார், சில பேர் உயிரோடு இருந்தாலும், அன்பு செய்யாமல் இருப்பார்கள். அவர்களை வள்ளுவர் உயிர் உள்ளவர்கள் பட்டியலில் இருந்து எடுத்து விடுகிறார். அவர்களிடம் இருப்பது எலும்பை தோல் போர்த்திய உடம்பு அவ்வளவுதான் என்கிறார். அதில் உயிர் இருக்கிற மாதிரி தெரியவில்லை. இருந்தால் அது அன்பு செய்யுமே?



1 comment:

  1. சரியான கருத்துதான்.

    நன்றி.

    ReplyDelete