Wednesday, November 10, 2021

திருக்குறள் - அன்பும் மறமும்

திருக்குறள் - அன்பும் மறமும் 


அறம், மறம் என்று இரண்டு இருக்கிறது. 


அறம் நமக்குப் புரிகிறது. மறம் என்ற சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துவது இல்லை. 


மறம் என்றால் வீரம், தீரம், வெற்றி, சண்டை, சீற்றம், சினம் என்று பொருள்கள் இருக்கின்றன. 


அறத்திற்கு மட்டுமே அன்பு துணை போகும் என்று சில அறியாதவர்கள் கூறுவார்கள். மறத்துக்கும் அந்த அன்பு தான் துணை என்கிறார் வள்ளுவர். 


தவறாக புரிந்து கொள்ளப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று. 


அது எப்படி சண்டை பிடிக்க அன்பு துணையாக முடியும் ? ஒருவன் மேல் கோபம் கொள்ள அன்பு துணை செய்யுமா? அன்பு இருந்தால் சண்டை பிடிக்க முடியுமா? 


பின் ஏன் வள்ளுவர் அப்படிச் சொல்லி இருக்கிறார். 


பாடல்  


அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_10.html


(Please click the above link to continue reading)


அறத்திற்கே = அறத்திற்கு மட்டுமே 


அன்புசார்பு = அன்பு துணை செய்யும் 


என்ப  அறியார் = என்று கூறுவார் அறியாதவர்கள் 


மறத்திற்கும் = மறத்திற்கும் 


அஃதே துணை. = அந்த அன்பே துணை 


பரிமேலழகர் இல்லாவிட்டால் இந்த குறளுக்கு சரியான அர்த்தம் காண்பது கடினம். 


அவர் உரை சொல்கிறார் "ஒருவன் மேல் கோபம் வந்து விட்டதா, அவன் கூட சண்டை போட வேண்டும் என்று தோன்றுகிறதா? அந்த பகைமையை மாற்றுவதும் அன்புதான்" என்கிறார். .


பகை வந்து விட்டது. பகை நல்லதா என்றால் இல்லை. கோபம் நல்லதா என்றால் இல்லை. 


பின் பகையை எப்படி மாற்றுவது?


அவன் கூட சண்டை போட்டு, அவனை தோற்கடித்தால் பகை முடிந்து விடுமா? வென்றாலும் தோற்றாலும் பகை நிற்கும். இன்னும் சொல்லபோனால் சண்டைக்குப் பின் பகை மேலும் வலுப்படும். 


பகையை மாற்ற ஒரே வழி அன்புதான். 


சின்ன உதாரணம் பார்க்கலாம். 


கணவன் மனைவிக்குள் ஏதோ கருத்து வேறுபாடு. சண்டை வந்து விட்டது. அந்த சண்டை, பகை, கோபம் எப்படிப் போகும்? மேலும் மேலும் சண்டை பிடிக்கலாம். ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருக்கலாம். என்ன செய்தாலும் பகை போகாது. சரி விடு என்று யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்து அன்பு செலுத்தினால்தான் உறவு நிலைக்கும். விட்டுக் கொடுத்தவர்களை பலவீனமானவர்கள் என்று நினைக்கக் கூடாது. எனக்காக அவர்/அவள் விட்டுக் கொடுத்தாள்/ர் என்று அன்பு செய்ய வேண்டும். 


அன்பு எந்தப் பகையையும் மாற்றி விடும். 


அன்பு மட்டும் தான் பகையை மாற்றும். 


சரி, இப்படி பொருள் கொள்ளலாம் என்று பரிமேலழகருக்கு யார் உரிமை தந்தது? இது சரியான விளக்கம் தானா? 


அதற்கும் ஒரு மேற்கோள் காட்டுகிறார் பரிமேலழகர். 


துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம்உடைய

நெஞ்சம் துணையல் வழி.


என்ற குறளில், "துன்பத்திற்கு யாரே துணையாவார்" என்பதில் யாரும் துன்பத்துக்கு துணை போக மாட்டார்கள் என்று தெரிகிறது அல்லவா. 


அது போல, மறத்துக்கு அன்பு துணை போகாது. ஆனால் மறத்தை மாற்றி அதை அறமாக்க அன்பு துணை செய்யும் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


பகையும், கோபமும், சீற்றமும், சினமும் அன்பினால் மறையும். 


பாசம், அன்பு, கருணை,காதல் இதற்கு மட்டும் துணை செய்வது அல்ல அன்பும். 


பகைமையை மாற்றி நேசத்தை வளர்க்கவும் அன்பு துணை செய்யும் என்கிறார். .


எங்கெல்லாம் கோபம் இருக்கிறதோ, பகை இருக்கிறதோ, அங்கே அன்பு செலுத்துங்கள். 


பகையே இல்லாத வாழ்வு வாய்க்கும். 




2 comments:

  1. Amazing Anbu !
    உங்கள் பணி ஓங்கி வளர இறையருள் பெருகட்டும் 🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete
  2. மறத்திற்கு - அறம் அல்லாததற்கு. எப்படி அன்பு துணை? நீங்கள் அன்பு செய்பவருக்கு ஒருவர் துன்பம் தரும்போது அப்படி செய்தவரை துன்புறுத்தல் மறம். இதற்குக்குக் காரணம் தண்டிக்கப்பட்டவர் மீது அன்பு வைக்கவில்லை. ஒருவர் மீது வைத்த அன்பு மற்றொருவருக்கு மறமாக முடியும் என்று பொருள். உங்கள் உரை எனக்கு உடன்பாடில்லை

    ReplyDelete