Sunday, October 15, 2023

நாலடியார் - தன் போல் ஒருவன் முகம் நோக்கி

நாலடியார் - தன் போல் ஒருவன் முகம் நோக்கி 


படித்தவர்கள், அறிஞர்கள் சொல்வதைக் கேட்பது கடினம். அவர்கள் சொல்வதை கேட்டுப் புரிந்து கொள்ள புத்தியை செலவிட வேண்டும். 


யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது அதை விட கடினம். 


"அதெல்லாம் நடை முறை சாத்தியம் அல்ல" என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டி கழிக்க வேண்டும். 


எதுக்கு இவ்வளவு சிக்கல்?


நம்ம அளவுக்கு அறிவு (குறைந்த) ஒருவனை கண்டு பிடித்து அல்லது அது போல ஆட்கள் உள்ள ஒரு whatsapp குழுவில் சேர்ந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் செய்திகள், துணுக்குகள், போன்றவற்றை பரிமாறி மகிழலாம். 


புத்திசாலிகள் ஒரு குழு வைத்து இருப்பதைப் போல, அறிவு குறைந்தவர்களும் ஒரு குழு வைத்து அவர்களுக்குள் மகிழ்ந்து கொள்வார்கள் என்கிறது இந்தப் பாடல்:


பாடல் 


 கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி

பற்றாது தன்னெஞ் சுதைத்தலால், - மற்றுமோர்

தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்

புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_15.html


(please click the above link to continue reading)



 கற்றா ருரைக்குங் = கற்றார் உரைக்கும் (சொல்லும், கூறும்) 


கசடறு = கசடு + அறு = குற்றம் இல்லாத 


நுண்கேள்வி = நுண்மையான செய்திகள் 


பற்றாது = பற்றிக் கொள்ளமால், கேட்காமல், படிக்காமல் 


தன்னெஞ் சுதைத்தலால் = தன் + நெஞ்சு + உதைத்ததால் = தன்னுடைய மனம் அதை உதைத்து தள்ளி விடுவதால் 



மற்றுமோர் = வேற ஒரு 


தன்போ லொருவன் = தன்னை போன்ற ஒருவன் (முட்டாள்) 


முகநோக்கித் = முகத்தைப் பார்த்து, அவனுடன் சேர்ந்து 


தானுமோர் = தானும் ஓர் 


புன்கோட்டி = புல்லிய அவையை, குழுவை 


கொள்ளுமாம் கீழ் = கீழ் மக்கள் கொள்வார்கள் 


கீழ் மக்கள், அவர்கள் நிலையில் உள்ளவர்களிடமே சேர்ந்து கொள்வார்கள். 


அந்த நிலையை விட்டு மேலே வர வேண்டும் என்றால், தன்னை விட அறிவில் உயர்ந்தவர்களிடம் பழக வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவற்றை புரிந்து கொள்ள முயல வேண்டும். முடிந்தால் அதன் படி நடக்க வேண்டும். 


மாறாக, முட்டாள்களிடம் சேர்ந்து பொழுதைக் கழித்தால், அந்த நிலையிலேயே இருக்க வேண்டியதுதான். 


உயரும் வழி சொல்லித் தருகிறது இந்தப் பாடல். 



Saturday, October 14, 2023

திருக்குறள் - வறியார்க்கு ஈவதே ஈகை

 திருக்குறள் - வறியார்க்கு ஈவதே ஈகை 


ஈகை என்றால் என்ன என்று ஒரு வரைவிலக்கணம் (definition) தருகிறார் முதலில். 


நம் வீட்டில் ஒரு பண்டிகை என்றால் சில பல பலகாரங்கள் செய்வோம். அண்டை அயல் வீடுகளுக்கும் கொடுப்போம். 


அது ஈகையா?


நாம் இன்று கொடுத்தால் அவர்கள் அடுத்த முறை அவர்கல் வீட்டில் ஒரு விசேடம் வரும் போது நமக்கு பலகாரங்கள் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 


அப்படி எல்லாம் இல்லை. அதுக்காக ஒன்றும் நான் தருவது இல்லை என்று வாதம் செய்யலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் பலகாரம் அனுப்புகிறீர்கள். அடுத்த வீட்டுக்காரர் பெற்றுக் கொள்கிறார். ஒரு முறை கூட பதிலுக்கு செய்வது இல்லை என்றால் எத்தனை காலம் அனுப்புவீர்கள்? 


அது போல் நம்மை விட பெரிய ஆள்களுக்கு விருந்து கொடுப்பது, அவர்கள் வீட்டு கல்யாணத்துக்கு போய் முறை செய்வது எல்லாம் அவர்களால் பின்னால் நமக்கு ஒரு காரியம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பில். 


இன்றெல்லாம் திருமண வீடுகளில் மொய் எழுதுகிறார்கள்.  எதற்கு? பின்னால் திருப்பிச் செய்ய வேண்டும். பொருளாகக் கொடுத்தாலும் அதை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். இன்னார், இத்தனை பவுனில் நகை அன்பளிப்பாக அளித்தார் என்று. பின்னால் செய்ய வேண்டுமே. 


இதெல்லாம் ஈகை இல்லை.


பின் எதுதான் ஈகை?


ஒன்றும் இல்லாத வறியவர்களுக்கு ஒரு பலனும் எதிர்பார்க்காமல் ஒன்று கொடுப்பதுதான் ஈகை. 


பாடல் 



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_14.html


(please click the above link to continue reading)


வறியார்க்கொன்று = வறியவர்களுக்கு ஒன்று 


ஈவதே = கொடுப்பதே 


ஈகை = ஈகை 


மற்று எல்லாம் = மற்றவை எல்லாம் 


குறிஎதிர்ப்பை = பிரதி பலனை எதிர்பார்த்து செய்யும் 


நீரது உடைத்து. = தன்மை கொண்டது. 


தெருவில் ஒரு பிச்சைகாரன் போகிறான். அவனுக்கு ஒரு பத்து உரூபாய் தருகிறோம். அது ஈகை. காரணம், அவன் பதிலுக்கு நமக்கு ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கையில் தந்தது அல்ல என்பதால். 


இரண்டு விடயங்கள் சொல்கிறார். 


ஒன்று, வறியவனுக்கு கொடுக்க வேண்டும். உள்ளூர் அரசியல் பெரும் புள்ளிக்கு விருந்து கொடுத்தால் அது ஈகை அல்ல. 


இரண்டாவது, எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுக்க வேண்டும்.  வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு ஒரு பழைய ஆடையை கொடுக்கலாம். அது ஈகை அல்ல. காரணம், நாம் அவளுக்கு இதைச் செய்தால் அவள் நம்மிடம் விசுவாசமாக இருப்பாள், வேலையை விட்டு போய் விட மாட்டாள் என்ற நம்பிக்கையில் கொடுப்பது. 


கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?


"நீரது" என்றால் என்ன?  பொதுவாக நீர்மை என்றால் தன்மை. இயற்கை குணம்.  சரி, புரிகிறது. அது என்ன நீர் + அது?


பகுபத உறுப்பிலக்கணம் என்று ஒன்று இருக்கிறது. ஒரு சொல்லை பகுத்து, அதாவது பிரித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வது. 


ஒரு சொல் மூன்று பகுதிகளைக் கொண்டது. 


பகுதி + இடைநிலை + விகுதி 


பகுதி என்பது முதலில் வருவது. விகுதி எனபது கடைசியில் வருவது. இடைநிலை என்பது நடுவில் வருவது. 


ஒரு வினைச்சொல்லில் (verb), பகுதி என்பது வினையைக் குறிக்கும், விகுதி என்பது யார் செய்தார்கள் என்பதைக் குறிக்கும். இடை நிலை என்பது காலத்தை குறிக்கும். அதாவது அது எப்போது நடந்தது என்று சொல்லும். 


ஒரே சொல்லில் மூன்றும் வரும். 


உதாரணமாக:


வந்தான் என்ற சொல்


வா + த் + த் + ஆன் 


என்று பிரியும். 


வா என்ற பகுதி வருகின்ற செயலைக் குறிக்கும். 


இரண்டாவது வரும் த் என்பது சந்தி, அது ந் என திரிந்தது விகாரம். அது என்ன என்று இன்னொரு நாள் பார்ப்போம். 


அடுத்து வரும் த் காலம் காட்டும் இடை நிலை. அது இறந்த காலத்தைக் குறிக்கும். 


இறுதியில் வரும் ஆன் என்பது ஆண்பால், படர்கை, வினை முற்று விகுதி.


இங்கே, நீரது என்பது நீர்+ அது என்று பிரியும். 


நீர் என்றால் நீர்மை. அது என்ற விகுதி, தனியாக ஒரு பொருளைத் தராமல் பகுதியின் பொருளையே தந்தது என்கிறார் பரிமேலழகர். 


  " 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி."


அதாவது, நீரது என்றால் (என்புழி) அது என்பது பகுதியான நீர்மையையே மீண்டும் குறிக்கும் விகுதி. 


இது தேவையா?...:)


வேலை மெனக்கெட்டு ஒரு வார்த்தைக்கு இவ்வளவு விளக்கம். இலக்கணத்துக்கு அவ்வளவு முக்கியத்வம் கொடுத்து இருக்கிறார்கள். 



Friday, October 13, 2023

கம்ப இராமாயணம் - காமன் பூங்கணைக்கும்

கம்ப இராமாயணம் - காமன் பூங்கணைக்கும்


வானர சேனைகளோடு தென் கடற்கரையில் நிற்கிறான் இராமன். ஒரு புறம் மனைவியைத் துறந்த வருத்தம். இன்னொரு புறம் இந்த சேனையை நடத்திச் சென்று இராவணனை போரிட்டு வெல்ல வேண்டிய வேலை. இரண்டுக்கும் நடுவில் நிற்கிறான் இராமன். 


அந்தக் கடல் நீர், எப்படி வந்தது என்றால், இராமனைப் பிரிந்த சீதை அழுத கண்ணீர் கடல் நீராக மாறி இராமனை நோக்கி வந்ததாம். அல்லது அவனுக்கு அப்படித் தெரிகிறது. 


இன்னொரு புறம் மன்மதன் வீசும் கணைகள். 


இரண்டுக்கும் இலக்காகி நின்றான் இராமன். 


பாடல்  


வழிக்கும் கண்ணீர் அழுவத்து  வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த

பழிக்கும், காமன் பூங்கணைக்கும்  பற்றாநின்றான் பொன் தோளைச்

சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில்  துள்ளும் பொறியின் சுடும் அன்னே!

கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த்  தென்றல் தூற்றும் குறுந்து திவலை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_13.html


(please click the above link to continue reading)



வழிக்கும் கண்ணீர் = வழியும் கண்ணீர் 


அழுவத்து = கடலில் (அழுவம் = கடல்) 


வஞ்சி  = பெண், சீதை 


அழுங்க = வருந்தி 


வந்து அடர்ந்த = வந்து சேர்ந்த (கடல் நீர்)  


பழிக்கும் = அந்த பழிக்கும் 


காமன் பூங்கணைக்கும் = மன்மதனின் பூங் கணைகளுக்கும் 


பற்றாநின்றான் = பற்றி நின்றான் 


பொன் தோளைச் = அழகிய தோள்களை 


சுழிக்கும் = சுழித்து எழும் 


கொல்லன் = கொல்லனுடைய (நகை செய்பவன்) 


ஒல் உலையில் = கொதிக்கும் உலையில் 


துள்ளும்  = துள்ளி வெடித்து தெறிக்கும் 


பொறியின் = தீப் பொறியை போல 


சுடும் அன்னே! = சுட்டது 


கொழிக்கும் கடலின் = ஆராவரிக்கும் கடலின்


நெடும் திரைவாய்த்  = நீண்ட பெரிய கரையில் 


தென்றல் = தென்றல் 


தூற்றும் = மேலே அள்ளி வீசும் 


குறுந்து திவலை = சிறு சிறு நீர் துளிகள் 


கையை நீரில் நனைத்து மற்றொருவர் மேல் தெளித்தால் எப்படி இருக்கும்? அது போல, தென்றல் , கடலில் தன் கையை முக்கி இராமன் மேல் தெளித்தது போல இருந்ததாம்.


மனைவியை பிரிந்ததில் இரண்டு விடயங்களை கம்பன் காட்டுகிறான்.. 


ஒன்று, வருத்தம். 


இன்னொன்று, காமன் கணைகள். அன்பை செலுத்த, பகிர்ந்து கொள்ள, கொஞ்ச, அவள் இல்லையே என்ற ஏக்கம். 


எவ்வளவு துல்லியமாக கம்பன் உணர்சிகளை படம் பிடிக்கிறான் !






Thursday, October 12, 2023

கந்தரனுபூதி- என்று விடப் பெறுவேன்?

கந்தரனுபூதி- என்று விடப் பெறுவேன்?


பள்ளியில் படிக்கும் போது முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று படித்து மேலே போவோம். எனக்கு நான்காம் வகுப்பு ரொம்ப பிடித்து இருக்கிறது. எனவே, நான் நான்காம் வகுப்பை விட்டு மேலே வர மாட்டேன் என்று யாராவது சொல்வார்களா?


அலுவலகத்தில் வேலையில் சேரும் போது ஒரு ஆரம்ப நிலையில் சேர்வோம். பின் நன்றாக வேலை செய்து மேலும் மேலும் பெரிய பெரிய பதவிகளை அடைவோம். நடுவில் ஏதோ ஒரு பதவியில் இருந்து கொண்டு, இது ரொம்ப பிடித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு ஒரு பதவி உயர்வும் வேண்டாம். இங்கேயே இருந்து விடுகிறேன் என்று யாராவது சொல்வார்களா?  


ஆனால், வாழ்வில், பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலையில் சேர்ந்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகள் பெற்றோம்..அவற்றை வளர்த்தோம்...வளர்த்தோம்..வளர்ந்தன...என்று ஒரு இடத்தில் தங்கி விடுகிறோம். அடுத்து என்ன?  


இல்லறம் தான் இறுதியா? அதற்கு மேல் ஒன்றும் இல்லையா?


அதற்கு மேல் போகத் தெரியவில்லையா அல்லது போக விருப்பம் இல்லையா?


சில பேருக்கு மேலே போக விருப்பம் இருக்கும், ஆனால் எப்படி போவது, எங்கே போவது என்று தெரியாது. குழப்பமாக இருக்கும். 


சிலருக்கு, நாலாவது வகுப்பு பிடித்து போய் விடுவதைப் போல, இல்லறமே இறுதி என்று இருந்து விடுகிறார்கள். 


இதில் இருந்து விடுபட்டு மேலே செல்வது எப்படி?


பாடல் 


சிந்தா குல இல் லொடு செல்வ மெனும் 

விந்தா டவி யென்று விடப் பெறுவேன் 

மந்தா கினி தந்தி வரோதயனே 

கந்தா முருகா கரு ணாகரனே . 


பொருள்



(please click the above link to continue reading)


 

சிந்தா குல = சிந்தை + ஆகுலம் = ஆகுலம் என்றால் வருத்தம், குழப்பம், துன்பம் என்று பொருள். சிந்தனை + ஆகுலம் என்றால் மனதுக்கு வருத்தம், குழப்பம் தரும் என்று பொருள்   


இல் லொடு = இல்லறத்தோடு 


செல்வ மெனும் = செல்வம் என்ற 

 

விந்தா டவி = விந்தை + அடவி =  அடவி என்றால் காடு. விந்தா அடவி என்றால் விந்தையான காடு 


யென்று = என்று 


விடப் பெறுவேன் = விடுவேன் 

 

மந்தா கினி = கங்கை 


 தந்தி = தந்த 


வரோதயனே = வரம் + உதயன் = தேவர்கள் பெற்ற வரத்தினால் உதயம் ஆனவனே 

 

கந்தா = கந்தா 


முருகா = முருகா 


கரு ணாகரனே = கருணையே வடிவானவனே 


இந்த இல்லறம் இருக்கிறதே அது சிந்தையை மயக்கும். ஒரு நாள் இனிமையாக இருப்பது போலத் தெரியும். இன்னொரு நாள் என்னடா இது என்று வெறுப்பு வரும். முன்னும் போக விடாது. பின்னும் போக விடாது. செக்கு மாடு சுத்தி சுத்தி வர வேண்டியதுதான். 


அதை ஒரு விந்தையான காடு என்கிறார். 


ஏன் விந்தை என்றால், காட்டுக்குள் போனவன், வெளியே வர வழி தெரியாமல் தவிப்பான். அவன் தான் போனான். போகும் போது காடு, மலை, மரம், அருவி என்று பார்த்துக் கொண்டே போனவன் திரும்ப வழி தெரியாமல் சிக்கிக் கொண்டு தவிப்பான். அது போல இந்த இல்லறமும். உள்ளே நுழையத் தெரியும். வெளியே வரத் தெரியாது. 


இன்னொன்று, காட்டுக்குள் போவது, அங்கேயே தங்கி விட அல்ல. ஆனால், சிலர் அடடா அருவி எவ்வளவு அழகாக இருக்கிறது, குயில் கூவுகிறது, மயில் ஆடுகிறது என்று அதன் அழகில் மயங்கி அங்கேயே இருந்து விடுகிறார்கள். பின்னால் புலி, சிங்கம் வரும், பாம்பு வரும், கள்ளர்கள் வருவார்கள், பல துன்பங்கள் வரும். அது தெரியாமல் சிக்கிக் கொண்டு தவிப்பார்கள். 


எனவே, ஆபத்து நிறைந்தது தெரியாமல் அழகால் மயக்கும் காடு வினோதமான ஒன்று என்கிறார். இல்லறமும் அது போலத்தான். 


நம் வாழ்க்கை முறையை வகுத்த நம் முன்னவர்கள்

அறம், பொருள், இன்பம், வீடு என்று பாதை போட்டார்கள். 


அறம் என்பது இல்லறம், துறவறம் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக பிரியும். 


இரண்டு அறத்துக்கும் பொருள் வேண்டும். வெறும் பொருளும், அறமும் இருந்தால் போதாது, ஆணும் பெண்ணும் கூடும் இன்பம் வேண்டும். 


ஆனால், இவை எல்லாம் முடிவு அல்ல. முடிவு என்பது வீடு. அதை அடைய இவை எல்லாம் படிக்கட்டுகள். மாடிக்கு போகாமல் படிக்கட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாமா?


மேலே போக வேண்டாமா?


அதெல்லாம் இருக்கட்டும், இப்ப சுட சுட ஒரு strong காப்பி கொஞ்சம் சர்க்கரை தூக்கலா போட்டு குடிச்சா எப்படி இருக்கும்....:)


 



திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம் 


தனி மனிதனுக்கு செய்யும் உதவி ஈகை எனப்படும். ஊருக்காக செய்யும் உதவி ஒப்புரவு எனப்படும். 


கேள்வி என்ன என்றால் ஒப்புரவு உயர்ந்ததா, ஈகை உயர்ந்ததா? 


ஒரு தனி மனிதனுக்கு செய்வதை விட ஊருக்கே செய்வது தானே உயர்ந்தது என்று நாம் நினைப்போம். ஆனால் வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. 


ஊருக்காக செய்யும் எந்த உதவிக்கும், ஒரு விளம்பரம் கிடைக்கும். ஒரு பேருந்து நிலையம், ஒரு தண்ணீர் பந்தல், இலவச மருத்துவமனை என்று எது செய்தாலும் ஒரு புகழ் கிடைக்கும். அந்த உதவிக்கு பலன் கிடைக்கும். 


நாம் ஒன்று செய்தோம். பதிலுக்கு நமக்கு ஒன்று கிடைத்தது என்றால் அது வியாபாரம். இலாபம் நட்டம் அப்புறம். கொடுத்ததற்கு பலன் கிடைத்தது அல்லவா?


மாறாக, ஒரு பிச்சைகாரனுக்கு ஒரு பத்து உரூபாய் பிச்சை போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நம் பெயர் கூட அவனுக்குத் தெரியாது. அந்த உதவியால் நமக்கு ஒரு பலனும் இல்லை. இப்படி பலன் எதிர்பாராமல் செய்யும் உதவி பலன் பெறும் உதவியை விட உயர்ந்தது அல்லவா?


எனவே, ஈகை என்ற அதிகாரத்தை ஒப்புரவு என்ற அதிகாரந்த்தின் பின் வைக்கிறார். 


சரி, ஈகை என்றால் என்ன என்று தெரிந்து விட்டது. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_12.html


(please click the above link to continue reading)


ஈகை பற்றி ஒரு கட்டுரை எழுது என்றால் நாம் எப்படி எழுதுவோம்?


யோசித்துப் பார்ப்போம். 


வள்ளுவர் எப்படி எழுத்கிறார் என்று பாருங்கள். 


முதலில், ஈகை என்றால் என்ன, அதன் இலக்கணம் என்ன, பொருள் என்ன என்று வரையறை செய்கிறார். முதல் குறளில் இதை சொல்லி விடுகிறார். 


அடுத்த ஆறு குறள்களில் ஈகையின் சிறப்பு பற்றி கூறுகிறார். 


ஆறு ஒண்ணும் ஏழு குறள் ஆகி விட்டது. இன்னும் மூன்று குறள்கள் இருக்கின்றன. 


அடுத்த மூன்று குறள்களில் ஈயாமையின் குற்றம் பற்றி கூறுகிறார். ஈயாமல் என்ன ஆகும், யார் அப்படி இருப்பார்கள் என்று விளக்குகிறார். 


மிக மிக அருமையான ஆழமான அர்த்தம் கொண்ட அதிகாரம். 


ஒவ்வொன்றாக சிந்திப்போம். 


 



Wednesday, October 11, 2023

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்


எந்நேரமும் ஒரு பதற்றம். ஒரு அவசரம். ஏதோ ஒரு சிந்தனை. குழப்பம். 


எதையும் நிறுத்தி, நிதானமாக, பொறுமையாக கையாள நேரம் இல்லை. இரசிக்க நேரம் இல்லை. 


வாழ்வின் வேகத்தை குறைக்க வேண்டும். இனிய காலைப் பொழுது, மரத்தின் இலைகளில் இருந்து சொட்டும் மழை நீர், மென்மையான தென்றல், சூடான காப்பி, சுவையான உணவு, மயக்கும் பாடல், குழந்தையின் மழலை...என்று எவ்வளவோ இருக்கிறது. 


வீட்டில், மனைவியோ, அம்மாவோ இரண்டு மணி நேரம் போராடி உணவு தயாரித்து இருப்பார்கள் . அது என்ன என்று கூட பார்க்காமல், டிவி பார்த்து கொண்டே உள்ளே அள்ளிப் போடுவது. நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. சொல்லக் கூடாது என்று இல்லை. பழக்கம் இல்லை. இரசிக்கப் பழகவில்லை. 



இரசனை என்பது ஒரு நாளில் வந்து விடாது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியின் மூலம் வளர்க்க வேண்டும். 


இலக்கியங்கள் அந்தப் பயிற்சியை நமக்குத் தருகின்றன. 


யுத்த காண்டம் சொல்ல வந்த கம்பன், எங்கு, எப்படி ஆரம்பிக்கிறான் பாருங்கள். 


இராமன் கடற்கரையில் நிற்கிறான். அவ்வளவுதான் செய்தி. அதை கம்பன் எப்படிச் சொல்கிறான் பாருங்கள். 


"பாற்கடலில் இருந்து பிரிந்து வந்த திருமால், எங்கெங்கோ போய் விட்டு, இப்போது நம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்து இருக்கிறான். அவன் கண் மூடி தூங்க நல்ல மென்மையான பாய் போடுவோம் என்று அலை என்ற பாயை உதறி உதறிப் போடுகிறதாம்..வா இராமா வந்து படுத்துக் கொள்" என்று. 


பாடல் 


சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால்,

மாயன், வந்தான்; இனிவளர்வான்' என்று கருதி, வரும் தென்றல்

தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்தி, புடை சுருட்டிப்

பாயல் உதறிப் படுப்பதே ஒத்த-திரையின் பரப்பு அம்மா


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_11.html


(pl click the above link to continue reading)


சேய காலம் = நீண்ட காலம் 


பிரிந்து = பிரிந்து இருந்து 


அகலத் திரிந்தான் = அகன்று திரிந்தான் (இராமன்) 


மீண்டும் = மீண்டும் 


சேக்கையின்பால் = படுக்கையின் பக்கம் 


மாயன் = மாயனான இராமன் 


வந்தான் = வந்தான் 


இனி = இனிமேல் 


வளர்வான்' = கண் வளர்வான் (தூங்குவான்) 


என்று கருதி = என்று நினைத்து 


வரும் தென்றல் = மெல்ல வரும் தென்றல் 


தூய மலர்போல்  = தூய்மையான மலர் போன்ற 


நுரைத் தொகையும் = நுரைகளை  


முத்தும் சிந்தி = முத்துப் போல சிதறி 


புடை சுருட்டிப் = அருகில் சுருட்டி  


பாயல் = பாயை 


உதறிப் படுப்பதே = உதறி படுப்பதற்கு போட்டது 


ஒத்த = மாதிரி இருந்தது 


திரையின் = அலைகளின் 


பரப்பு = விரிந்த பரப்பு 


அம்மா = ஆச்சரியச் சொல் 


அலைகளைப் பார்த்தால் அதன் மேல் பரப்பில் நீர் குமிழிகள் இருக்கும். அந்தக் குமிழிகள் முத்துப் போல இருக்கிறதாம். 


அலை சுருண்டு, சுருண்டு எழுவதும், விழுவதும் ஏதோ கடல் பாயை உதறிப் போடுவது போல இருக்கிறதாம். 


பின்னாடி இரத்த ஆறு ஓடப் போகிறது. யுத்தம் என்றால் வலியும், இழப்பும் இருக்கும் தானே. கம்பனுக்கு அது தெரியாதா.


அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இதை இரசிப்போம் என்று கற்பனையை தவழ விடுகிறான். 


நம் வாழ்வில், நாளை என்ன வரும் என்று நமக்குத் தெரியாது. விபத்து, உடல் நலக் குறைவு, துக்க செய்தி, தோல்வி, என்று எது வேண்டுமானாலும் வரலாம். 


இன்றை, இந்த நொடியை இரசித்துப் பழக வேண்டும். 


வாழ்வை இரசிக்க காரணம் எல்லாம் வேண்டாம். அனைத்தையும் இரசிக்கப் பழக வேண்டும். 


Tuesday, October 10, 2023

திருக்குறள் - விற்றும் கொளல் வேண்டும்.

 திருக்குறள் - விற்றும் கொளல் வேண்டும். 


ஒப்புரவு என்றால் ஊருக்கு நல்லது செய்வது. தனி மனிதனுக்கு அல்ல, ஊருக்கு. 


சரி, ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று இறங்கினால், நம்மிடம் உள்ள செல்வம் எல்லாம் சீக்கிரம் கரைந்து போய் விடாதா? அப்புறம் நமக்கு யார் உதவி செய்வார்கள்? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி வரும். 


இந்த மாதிரி சந்தேகம் வரும் போது நாம் இரண்டு விதத்தில் அதைப் போக்கிக் கொள்ளலாம். 


முதலாவது, இதுவரை அப்படி நாட்டுக்கு நல்லதுசெய்து ஏழையாகி துன்பப் பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று ஆராயலாம். நாட்டுக்கு நல்லது செய்து நொடித்துப் போனவர் யார்?


எனக்குத் தெரிந்து கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் நாட்டுக்காக தன் செல்வம் அனைத்தையும் கொடுத்து, சிறையில் கிடந்து துன்பப்பட்டார். அவர் அப்படி செய்யாமல் இருந்திருந்தால், சொத்தோடு சுகமாக வாழ்ந்து இருக்கலாம். 


பணம் போனது என்னவோ உண்மைதான். அவர் வாங்கிய கப்பலும் போனது. வியாபாரம் நொடித்துப் போனது. இனிய வாழ்நாளை சிறையில் கழித்தார். 


என்ன ஆயிற்று?  


இந்தத் தமிழனம் உள்ள வரை, அவர் புகழ் நிலைத்து நிற்கும் அல்லவா?  ஒரு வேளை அவர் இது ஒன்றையும் செய்யாமல் இருந்து இருந்தால் அப்படி ஒரு ஆள் இருந்தார் என்றே தெரியாமல் போய் இருக்கும். 


இன்னொருவர், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். தன் சொந்த செலவில் ஊர் ஊராக சுற்றி அலைந்து, படாத பாடு பட்டு பழைய தமிழ் ஓலைச் சுவடிகளை கண்டு பிடித்து அச்சில் ஏற்றினார். அவர் அப்படி ஊருக்கு நல்லது செய்யாமல் இருந்திருந்தால், எவ்வளவு நாம் இழந்து இருப்போம். 


தேடினால் இன்னும் பலர் கிடைக்கலாம். ஊருக்கு நல்லது செய்து வருந்தியவர் யாரும் இல்லை 


இன்னொரு வகை, இதையெல்லாம் ஆராய்ந்து ஒருவர் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளலாம்.. 


வள்ளுவர் சொல்கிறார், 


"ஒப்புரவு செய்வதானால் வறுமை வரும் என்று யாராவது சொன்னால், அந்த வறுமையை தன்னைக் விற்றாவது பெற வேண்டும்"


என்று. 


பாடல் 


ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_10.html


(please click the above link to continue reading)

ஒப்புரவி னால் = ஒப்புரவு செய்வதானால் 


வரும் = வருவது 


கேடெனின்= கேடு என்றால் 


அஃதொருவன் = அந்தக் கேட்டினை ஒருவன் 


விற்றுக்கோள் = விலைக்கு வாங்கிக் கொள்ளும் 


தக்கது உடைத்து = தகுதி உடையது 


இந்த குறளுக்கு பரிமேலழகர் மிக நுணுக்கமாக உரை செய்து இருக்கிறார். அது என்ன என்று பார்ப்போம். 


"ஒப்புரவி னால்வரும் கேடெனின் " = ஒப்புரவு செய்வதனால் கேடு வரும் என்று கூறினால். "கூறினால்" என்றால் யார் கூறினார் என்ற கேள்வி வரும் அல்லவா. அப்படி ஒரு வேளை யாரவாது கூறினால் என்று பொருள் சொல்கிறார். 


அதாவது, யாரும் சொல்ல மாட்டர்கள். ஆனால், சில வம்பு செய்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு வேளை கேட்கலாம். அப்படி யாராவது கூறினால்....


"விற்றுக்கோள் தக்கது உடைத்து": அந்த கேட்டினை விற்றாவது பெற்றுக் கொள்ளும் தகுதி உடைத்து.. அவன் தான் ஒப்புரவு செய்து, எல்லாம் இழந்து நிற்கிறானே. அவன் எதை விற்பான் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்கு பதில் சொல்கிறார். "தன்னை விற்றாவது" அந்த செயலை செய்ய வேண்டும். 


தன்னை விற்று செய்யும் காரியம் உலகில் ஒன்றும் இல்லை. எனவே, அப்படி ஒன்றும் நிகழ்ந்து விடாது என்பதை குறிப்பால் உணர்த்தினார். 


இந்தக் குறளோடு, இந்த அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


நாளை, இதன் தொப்புரையை காண்போம்.