Wednesday, October 11, 2023

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்


எந்நேரமும் ஒரு பதற்றம். ஒரு அவசரம். ஏதோ ஒரு சிந்தனை. குழப்பம். 


எதையும் நிறுத்தி, நிதானமாக, பொறுமையாக கையாள நேரம் இல்லை. இரசிக்க நேரம் இல்லை. 


வாழ்வின் வேகத்தை குறைக்க வேண்டும். இனிய காலைப் பொழுது, மரத்தின் இலைகளில் இருந்து சொட்டும் மழை நீர், மென்மையான தென்றல், சூடான காப்பி, சுவையான உணவு, மயக்கும் பாடல், குழந்தையின் மழலை...என்று எவ்வளவோ இருக்கிறது. 


வீட்டில், மனைவியோ, அம்மாவோ இரண்டு மணி நேரம் போராடி உணவு தயாரித்து இருப்பார்கள் . அது என்ன என்று கூட பார்க்காமல், டிவி பார்த்து கொண்டே உள்ளே அள்ளிப் போடுவது. நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. சொல்லக் கூடாது என்று இல்லை. பழக்கம் இல்லை. இரசிக்கப் பழகவில்லை. 



இரசனை என்பது ஒரு நாளில் வந்து விடாது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியின் மூலம் வளர்க்க வேண்டும். 


இலக்கியங்கள் அந்தப் பயிற்சியை நமக்குத் தருகின்றன. 


யுத்த காண்டம் சொல்ல வந்த கம்பன், எங்கு, எப்படி ஆரம்பிக்கிறான் பாருங்கள். 


இராமன் கடற்கரையில் நிற்கிறான். அவ்வளவுதான் செய்தி. அதை கம்பன் எப்படிச் சொல்கிறான் பாருங்கள். 


"பாற்கடலில் இருந்து பிரிந்து வந்த திருமால், எங்கெங்கோ போய் விட்டு, இப்போது நம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்து இருக்கிறான். அவன் கண் மூடி தூங்க நல்ல மென்மையான பாய் போடுவோம் என்று அலை என்ற பாயை உதறி உதறிப் போடுகிறதாம்..வா இராமா வந்து படுத்துக் கொள்" என்று. 


பாடல் 


சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால்,

மாயன், வந்தான்; இனிவளர்வான்' என்று கருதி, வரும் தென்றல்

தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்தி, புடை சுருட்டிப்

பாயல் உதறிப் படுப்பதே ஒத்த-திரையின் பரப்பு அம்மா


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_11.html


(pl click the above link to continue reading)


சேய காலம் = நீண்ட காலம் 


பிரிந்து = பிரிந்து இருந்து 


அகலத் திரிந்தான் = அகன்று திரிந்தான் (இராமன்) 


மீண்டும் = மீண்டும் 


சேக்கையின்பால் = படுக்கையின் பக்கம் 


மாயன் = மாயனான இராமன் 


வந்தான் = வந்தான் 


இனி = இனிமேல் 


வளர்வான்' = கண் வளர்வான் (தூங்குவான்) 


என்று கருதி = என்று நினைத்து 


வரும் தென்றல் = மெல்ல வரும் தென்றல் 


தூய மலர்போல்  = தூய்மையான மலர் போன்ற 


நுரைத் தொகையும் = நுரைகளை  


முத்தும் சிந்தி = முத்துப் போல சிதறி 


புடை சுருட்டிப் = அருகில் சுருட்டி  


பாயல் = பாயை 


உதறிப் படுப்பதே = உதறி படுப்பதற்கு போட்டது 


ஒத்த = மாதிரி இருந்தது 


திரையின் = அலைகளின் 


பரப்பு = விரிந்த பரப்பு 


அம்மா = ஆச்சரியச் சொல் 


அலைகளைப் பார்த்தால் அதன் மேல் பரப்பில் நீர் குமிழிகள் இருக்கும். அந்தக் குமிழிகள் முத்துப் போல இருக்கிறதாம். 


அலை சுருண்டு, சுருண்டு எழுவதும், விழுவதும் ஏதோ கடல் பாயை உதறிப் போடுவது போல இருக்கிறதாம். 


பின்னாடி இரத்த ஆறு ஓடப் போகிறது. யுத்தம் என்றால் வலியும், இழப்பும் இருக்கும் தானே. கம்பனுக்கு அது தெரியாதா.


அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இதை இரசிப்போம் என்று கற்பனையை தவழ விடுகிறான். 


நம் வாழ்வில், நாளை என்ன வரும் என்று நமக்குத் தெரியாது. விபத்து, உடல் நலக் குறைவு, துக்க செய்தி, தோல்வி, என்று எது வேண்டுமானாலும் வரலாம். 


இன்றை, இந்த நொடியை இரசித்துப் பழக வேண்டும். 


வாழ்வை இரசிக்க காரணம் எல்லாம் வேண்டாம். அனைத்தையும் இரசிக்கப் பழக வேண்டும். 


2 comments:

  1. சபாஷ். வாழ்க்கையை இரசித்து வாழ வேண்டும்

    ReplyDelete
  2. This moment is inevitable:)

    ReplyDelete