Saturday, October 21, 2023

திருக்குறள் - ஈகை - இரக்கப்படுவது தவறு

 திருக்குறள் - ஈகை - இரக்கப்படுவது தவறு 


என்னது, இரக்கப்படுவது தவறா? 


ஒருவன் வறுமையில் வாடுகிறான் என்றால் அவனைப் பார்த்து இரக்கபடுவது எப்படி தவறாகும். அப்படி இரக்கப்படாவிட்டால் அவனுக்கு எப்படி உதவி செய்யவேண்டும் என்று தோன்றும்?


ஆனால் வள்ளுவர் சொல்கிறார் இரக்கப்படுவது தவறு என்று. 


இது என்ன புதுக் கதையாக இருக்கிறது?


பாடல் 


இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணும் அளவு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_21.html


(pl click the above link to continue reading)


இன்னாது = இனியது என்பதன் எதிர்பதம் இன்னாது. அதாவது, நல்லது அல்ல, கெட்டது 


இரக்கப் படுதல் = ஒருவர் மேல் இரக்கம் கொள்வது 


இரந்தவர் = நம்மிடம் உதவி என்று கேட்டு வந்தவர் 


இன்முகம் காணும் அளவு = இனிய முகத்தை காணும் வரை 


யோசித்துப் பாருங்கள். 


வீட்டில் வேலை பார்க்கும் பெண், தன்னுடைய மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப் பட்டு இருக்கிறது, ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று நம்மிடம் கேட்கிறாள். வேலை செய்யும் பெண் நல்லவள். அவளுடைய மகளையும் நாம் பார்த்து இருக்கிறோம். நல்ல பெண். பாவமாக இருக்கிறது. பணம் இல்லை என்றால் திருமணம் நடக்காது. அந்தப் பெண்ணின் வலி நமக்குத் தெரிகிறது. 


சரி, இந்தா என்று ஒரு பத்து உரூபாய் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். 


அந்தப் பெண்ணின் வலி தீர்ந்து விடுமா? பிரச்சனை தீர்ந்து விடுமா? வேண்டாம் என்று சொல்ல மாட்டாள். ஆனால், அவள் முகத்தில், அவள் வலியில், ஒரு மாற்றமும் இருக்காது. அவளைப் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றும்? அப்பாட, ஒருவழியாக அந்த பெண்ணின் பிரச்சனையை தீர்த்து  விட்டோம் என்று ஒரு நிம்மதி வருமா?  


வராது. 


அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஒரு சங்கடம் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், நம்மிடம் உதவி என்று ஒருவன் கேட்டு வந்தால், அவன் முகம் மாறி, சிரித்த முகமாக மாறும் வரை உதவி செய்ய வேண்டும். 


அது வரை, இரக்கப் படுகிறேன் என்று சொல்லுவது நமக்குத் துன்பம் தரும் ஒன்றுதான். 


மேலே சொன்ன உதாரணத்தில், அந்த வேலைக்கார பெண்ணிடம், "இந்தா இதை கல்யாண செலவுக்கு வைத்துக் கொள்" என்று ஒரு பத்தாயிரம் கொடுத்தால் , அவள் முகம் மலரும் தானே. "ரொம்ப நன்றிமா/நன்றி ஐயா" என்று கண்ணீர் மல்க சொல்லிவிட்டுப் போவாள். 


அப்படி அவள் முகம் மலர்ந்து, இனிமையானதாக மாறும்வரை, இரக்கப் படுவது நமக்கும் துன்பம் தருவதுதான் என்கிறார். 


இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு. இரசிக்கலாம். நடைமுறையில் சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசை. 


நல்ல விதை என்றாலும், போடுகின்ற இடத்தில் எல்லாம் விளைவது இல்லை. நல்ல நிலத்தில் விழுந்தால், அது முளைத்து பலன் தரும். 


திருக்குறள் ஒரு நல்ல விதை. அது எந்த மனத்தில், எந்த நிலத்தில் விழுகிறது என்பதைப் பொறுத்து அது எப்படி வளரும் என்பது. 


அது முடியாது, இது சாத்தியம் இல்லை, இது நடைமுறைக்கு ஒத்து வராது என்று படிப்பதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால்,  ஒன்றும் விளையாத உவர் நிலமாகப் போய் விடும் மனம். 


மனதை பண் படுத்தி வைப்போம், விதை விழுந்தால் முளைக்கும். மனதை கட்டாந்தரையாக மாற்றி வைத்து இருந்தால் ஒரு விதையும் முளைக்காது. 




No comments:

Post a Comment