Sunday, October 8, 2023

திருக்குறள் - வறுமை என்றால் என்ன?

 திருக்குறள் - வறுமை என்றால் என்ன?


வறுமை என்றால் என்ன?  


சொந்த விமானத்தில் போக முடியாத அளவுக்கு ஏழையாக இருக்கிறேனே என்று யாராவது கவலைப் படுவார்களா? அது வறுமை இல்லை. 


சரி, பத்து படுக்கை அறை உள்ள ஒரு வீடு இல்லையே என்ற வறுமையில் யாராவது வருந்துகிரார்களா?


இல்லை.


வறுமை என்றால் நமக்கு ஒன்று வேண்டும் ஆனால் அதை அடைய முடியவில்லை என்றால் வருவது. 


ஒரு கார் வேண்டும், இரண்டு அல்லது மூன்று படுக்கை அறை கொண்ட வீடு வேண்டும், மூணு வேளை நல்ல உணவு வேண்டும், இதெல்லாம் இல்லை என்றால் வறுமை என்று சொல்லலாம். 


ஒரு பிச்சைகாரன் ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் வறுமை என்பான். 


எனவே, தான் அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாமல் போனால் அது வறுமை. 


இப்படி பார்ப்போம். 


ஒருவனுக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. ஊர் பக்கம் பத்து பதினைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. வருடா வருடம் நெல் வருகிறது. வீட்டின் பின் புறம் பத்து பசு நிற்கிறது. பாலும், தயிரும் செழிப்பாக இருக்கிறது. 


ஆனால், மருத்துவர் சொல்லி இருக்கிறார் "அரிசியை கையில் எடுத்தால், சர்க்கரை கூடும், அப்புறம் அந்த கையையே எடுக்க வேண்டி வரும்" என்று. 


வீட்டு வேலைகாரர்கள் சோறு, குழம்பு என்று உண்டு மகிழ்வார்கள். முதலாளிக்கு கேப்பை களி தான் உணவு. அதுவும் ஒரு உருண்டைதான். 


யார் வறுமையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும். 


அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாவிட்டால் அது வறுமை. 


வள்ளுவர் சொல்கிறார், 


ஒரு ஒப்புரவு செய்பவனுக்கு வறுமை எது என்றால், அவன் ஒப்புரவு செய்ய முடியாமல் போவதுதான். 


ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறான். ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த வருத்தம் தான் அவனுக்கு வறுமை என்று. 


பாடல் 


நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_8.html


(please click the above link to continue reading)


நயனுடையான் = நயன் + உடையான் = நல்லது உள்ளவன், நல்லவன், ஒப்புரவு செய்பவன் 


நல்கூர்ந்தான் ஆதல் = ஏழையாக ஆகி விடுதல் 


செயும்நீர = செய்யும் தன்மை, அதாவது ஒப்புரவு செய்யும் தன்மை 


செய்யாது = செய்ய முடியாமல் 


அமைகலா வாறு = அமைந்து விட்டால் 


இரண்டு விடயங்களை நாம் சிந்திக்க வேண்டும்.


ஒன்று, இவ்வளவு பணம் இருந்து என்ன பலன்? யாருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படி ஊருக்கு நல்லது செய்து அதனால் வரும் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்துவானம். இந்த பணம் இருந்தும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். இல்லை என்றால் வறுமை. இருந்தும் ஒன்றும் பலன் இல்லை என்றால், அதுவும் வருமைதானே. 


இரண்டாவாது, ஒப்புரவு செய்தால் வறுமை வந்துவிடுமே என்ற பயந்து, பணத்தை இறுக்க கட்டிப் பிடித்துக் கொண்டால், அந்த பணத்தை நல்ல வழியில் செலவழிக்க முடியாததும் ஒரு விதத்தில் வறுமைதான் என்கிறார்.


எந்த அளவுக்கு சிந்தித்து இருக்கிறார்கள். 


பொது நலம் என்பதின் உச்சம் தொட்டு இருக்கிறார்கள். 


ஏதோ கம்யூனிசம் , சோசியலிசம் என்பதெல்லாம் மேலை நாடுகளின் கண்டு பிடிப்புகள் என்று நாம் நினைக்கிறோம். அல்ல. வள்ளுவப் பெருந்தகை அவற்றைப் பற்றி எல்லாம் என்றோ சிந்தித்து இருக்கிறார். 


இதில் ஆச்சரியம் என்ன என்றால், இந்த பொது நல சிந்தனையை ஒரு அரசாங்கம் செய்ய வேண்டும், சட்டம் போட்டு கொண்டு வர வேண்டும் என்று இல்லாமல், அதை இல்லற தர்மமாக நம்மவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். 


கார்ல் மார்க்ஸ், angels எல்லாம் சிந்திக்காத பகுதி. 


தனி  மனித சொத்துரிமை கூடாது என்று சோசியலிசம் கூறுகிறது. அபப்டி என்றால் எதற்காக உழைக்க வேண்டும் என்ற கேள்வி வரும். உழைப்ப கட்டாயமாக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும். அதெல்லாம் நடக்காது. 


வள்ளுவர் வழி தனி வழி. நீ நன்றாக உழை. பொருள் சேர். அதை அனுபவி. அதே சமயம் அந்த பொருளால் சமுதாயத்துக்கும் ஏதாவது நன்மை செய் என்கிறார். 


இதை அறமாக நம்மவர்கள் கருதினார்கள். 


அப்படி ஒரு பரம்பரை நம்முடையது. பெருமை கொள்வோம். 





1 comment: