Friday, October 27, 2023

திரிகடுகம் - அறியாமையால் வரும் கேடு

 திரிகடுகம் - அறியாமையால் வரும் கேடு 


திரிகடுகம் என்பது மூன்று மூலிகைகளின் தொகுதி. 


திரிகடுகம் என்ற நூலில், ஒவ்வொரு செய்யுளும் மூன்று செய்திகளை எடுத்துக் கொண்டு அவை நல்லதா, கெட்டதா என்று கூறும். 


அதன் மூலம், எதை நாம் செய்யலாம், செய்யக் கூடாது என்று அறிந்து கொள்ளலாம். 


வாழ்க்கைக்கு, நடைமுறைக்கு மிகத் தேவையான, உபயோகப் படும் நூல். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


"கல்வி அறிவில்லாதவர்களோடு பழகுவதும், கற்புடைய மனைவியை அடிப்பதும், வீட்டுக்குள் ஒழுக்கம் இல்லாதவர்களை அனுமதிப்பதும், இந்த மூன்றும் அறியாமையால் வரும் கேடுகளாகும்."


பாடல் 


கல்லார்க் கினனாய் ஒழுகலும் காழ்கொண்ட

இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம்

சிறியாரைக் கொண்டு புகழுமிம் மூன்றும்

அறியாமை யான்வருங் கேடு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_27.html


(please click the above link to continue reading)



கல்லார்க் கினனாய் = கல்லார்க்கு + இனனாய் = கல்லாதவர்களோடு  சேர்ந்து நட்பாய்  


ஒழுகலும்  = இருப்பதும் 


காழ்கொண்ட = உறுதி கொண்ட, கற்புள்ள 


இல்லாளைக்  = மனைவியை 


கோலாற்  = கம்பால் 


புடைத்தலும் = அடிப்பதும் 


இல்லம் = வீட்டில் 


சிறியாரைக் = ஒழுக்கமில்லா சிறியாரை 


கொண்டு  = கொண்டு வருவதும் 


புகழுமிம் மூன்றும் = முக்கியமான இந்த மூன்றும்  


அறியாமை யான்வருங் கேடு. = அறியாமையால் வரும் கேடு 


அதாவது, அறிவு இருந்தால் இந்த தவறுகளை செய்ய மாட்டோம். 


ஒருவேளை ஒருவன் மற்றவற்றை படிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, இது போன்ற நூல்களைப் படித்தால், சரி எது, தவறு எது என்று அறிந்து கொள்ள முடியும். 


இப்படி நூறு பாடல்கள் இருக்கின்றன.


ஒரு நாளைக்கு ஒன்று என்று வைத்துக் கொண்டால் கூட, மூன்று மாதத்தில் படித்து முடித்து விடலாம். 




No comments:

Post a Comment