Monday, October 16, 2023

கம்ப இராமாயணம் - பூசாது போகாது

கம்ப இராமாயணம் - பூசாது போகாது  


வானர படைகளோடு தென் கடற்கரையில் இராமன் நிற்கிறான். தனியனாக கடலைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். 


அவன் மேல் கம்பனுக்கு அவ்வளவு பரிதாபம் பிறக்கிறது. 


ஒவ்வொரு நாளும் சீதையின் பிரிவால் அவன் உடல் வாடுகிறது. நேற்று இருந்தது போல இன்று இல்லை. அந்த அவலத்தைக் கண்டு கடல் கதறுகிறது. ஐயோ, என் இராமனுக்கா இந்த கதி என்று. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், தென்றல் காற்று பூக்களில் உள்ள மகரந்தகளை கொண்டு வந்து இராமன் மேல் பூசுகிறது. 


காதல், பிரிவு, சோகம், காமம், தன்னிரக்கம் என்று அனைத்தையும் குழைத்து தமிழில் ஊட்டுகிறான் கம்பன். 


பாடல் 


நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய், நிலை தளர்வான்-

தன்னைக் கண்டும், இரங்காது தனியே கதறும் தடங் கடல்வாய்,

பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும்

புன்னைக் குறும் பூ நறுஞ் சுண்ணம் பூசாது ஒருகால் போகாதே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_16.html


(please click the above link to continue reading)


நென்னல் = நேற்று 


கண்ட = பார்த்த 


திருமேனி = இராமனின் உருவம் 


இன்று = இன்று 


பிறிது ஆய்= வேறு மாதிரி 


நிலை தளர்வான்= தன் இயல்பு நிலையில் இருந்து தளர்ந்து 


தன்னைக் = தளர்வான் தன்னை. தளரும் இராமனை 


கண்டும் = பார்த்த போதும் 


இரங்காது = இரக்கம் கொள்ளாமல் 


 தனியே கதறும்  = தனியே கதறும் 


தடங் கடல்வாய் = பெரிய கடலின் கரையில் 


பின்னல் திரைமேல் = பின்னல் போல் எழும் அலைகள் மேல் 


தவழ்கின்ற = தவழ்ந்து வருகின்ற 


பிள்ளைத் தென்றல் = இளம் தென்றல் 


கள் உயிர்க்கும் = தேனை சொரியும் 


புன்னைக் = புன்னை மரத்தின் 


குறும் பூ = சின்ன சின்ன பூக்களின் 


நறுஞ் = மணம் வீசும் 


சுண்ணம் = பொடிகள் (மகரந்தப் பொடிகள்) 


பூசாது = இராமன் மேல் பூசாது 


ஒருகால் போகாதே = ஒரு காலத்திலும் போகாது 


பூசாமல் போகாது என்றால், பூசிவிட்டுப் போகும் என்று அர்த்தம். 


"உன்னிடம் கொடுத்த கடனை வாங்காமல் விட மாட்டேன் என்றால் வாங்கியே தீருவேன் என்று அர்த்தம்". 


இராமன் வாடுகிறான். 


கடல் அழுகிறது. 


தென்றலுக்கு அது எல்லாம் தெரியவில்லை. 


"பிள்ளைத் தென்றல் தவழ்ந்து" என்கிறான் கம்பன். 


அலை வருகிறது. அதன் மேல தென்றல் உட்கார்ந்து கொண்டு வருகிறது. அது சிறு பிள்ளை தவழ்ந்து வருவது போல இருக்கிறதாம். அலையை , குழந்தையின் தவழ்தலுக்கு உவமை சொல்லி கேட்டு இருக்கிறோமா? 


இவ்வளவு நுணுக்கமான அழகான பாடலை எங்கு வைக்கிறான் கம்பன்? யுத்த காண்டத்தில். 


வாழ்வில் எத்தனை சிக்கல் வந்தால் என்ன?  இரசிப்பதற்கு இடம் இருக்கிறது என்று கோடு போட்டு காட்டுகிறான். 


G K Chesterson என்று ஒரு ஆங்கில கட்டுரையாளர் இருந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு ஒரு கால் போய்விட்டது அல்லது முறிந்து விட்டது. நாமாக இருந்தால் எவ்வளவு வருத்தப் படுவோம் .


அவர், The advantages of having one leg என்று ஒரு கட்டுரை எழுதினார். பள்ளிப் பருவத்தில் படித்த ஞாபகம். 


துன்பம் என்பது நாம் பார்க்கும் விதத்தில் இருக்கிறது. 


கோடிகணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு தூக்கமில்லாமல், பசி இல்லாமல் துன்பப் படுபவர்களும் இருக்கிறார்கள். 


கையில் காலணா காசு இருக்காது. நன்றாக உண்டு, தன்னை மறந்து தூங்குபவர்களும் இருக்கிறார்கள். 


வாழ்க்கை, நம் பார்வையில் இருக்கிறது. 


 


1 comment: