Wednesday, October 25, 2023

கம்ப இராமாயணம் - என் மகளைக் காப்பாற்று

 கம்ப இராமாயணம் - என் மகளைக் காப்பாற்று 


பெண்ணை கட்டிக் கொடுத்தாகி விட்டது. 


பின், அந்தப் பெண்ணுக்கு ஒரு துன்பம் என்றால் அந்தப் பெண்ணின் தாயின் மனம் என்ன பாடுபடும். என் மகள் இப்படி கிடந்து துன்பப் படுகிராளே என்று தவிக்கும் அல்லவா?  என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பாள். 


மருமகனைப் பார்த்து "நீங்க ஏதாவது செய்யக் கூடாதா...அவ இவ்வளவு கஷ்டப் படுகிராளே" என்று மாப்பிளையிடம் புலம்புவாளா மாட்டாளா?


என் வயிற்றில் வந்து பிறந்ததனால்தானே, அவளுக்கு இவ்வளவு கஷ்டம்.வேறு எங்காவது பிறந்திருந்தால் நல்லபடியாக வாழ்ந்திருப்பாள். பாழாய்ப்போன எனக்கு மகளாக வந்து வாய்த்து இப்படி துன்பப்படுகிறாளே என்று தாயின் மனம் தவிக்கும்தானே. 


பாற்கடலில் தோன்றியவள் திருமகள். திருமகளின் அம்சம் சீதை. கடல், சீதைக்கு தாய். 


அந்த கடல்தாய் புலம்புகிறாள் 


" சந்திரனின் பிறை போன்ற நெற்றியை உடைய சீதை, ஒரு நாளும் தொலையாத துன்பத்தைக் கொண்ட நான் பெற்ற பெண், தவம் இருந்து பெற்ற பெண், இப்படி தனிமையில் (அசோகவனத்தில்) கிடந்து தவிப்பது சரிதானா?" 


என்று புலம்பி, தளர்ந்து,  கண்ணீர் சிந்தி, தன் அலை என்ற கரத்தை நீட்டி இராமனின் காலில் விழுந்து புலம்பினாள். 


பாடல்  


இந்து அன்ன நுதல்பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்

தந்த பாவை தவப் பாவை தனிமை தகவோ எனத் தளர்ந்து

சிந்துகின்ற நறுந்தரளக் கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து

வந்து வள்ளல் மலர்த் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறிகடலே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_25.html

(pl click the above link to continue reading)


இந்து அன்ன = பிறைச் சந்திரனைப் போன்ற 

 

நுதல் = நெற்றியைக் கொண்ட 


பேதை இருந்தாள் = சீதை இருந்தாள் 


நீங்கா = ஒரு நாளும் தீராத 


இடர் = துன்பங்களைக் கொண்ட 


கொடியேன் = கொடியவளாகிய நான் (கடல்) 


தந்த பாவை = பெற்ற பெண் (சீதை)  


தவப் பாவை = தவம் இருந்து பெற்ற பெண் (சீதை) 


தனிமை தகவோ = தனிமையில் கிடந்து இப்படி தவிப்பது சரிதானா 


எனத் = என்று 


தளர்ந்து = தளர்ந்து, 


சிந்துகின்ற = சிந்தும், வழியும் 


நறுந்தரளக் = தரளம் என்றால் முத்து. நல்ல முத்துப் போன்ற 


கண்ணீர் ததும்பி = கண்ணீர் ததும்பி 


திரைத்து = அலையானது 


எழுந்து = மேலே எழுந்து 


வந்து = வந்து 


வள்ளல் = இராமனின் 


மலர்த் தாளின் = மலர் போன்ற பாதங்களில் 


வீழ்வது = வீழ்ந்து 


ஏய்க்கும் = முறையிடும் 


மறிகடலே = அலைபாயும் கடலே 


மகளின் துன்பம் கண்டு இரங்கும் தாயின் சோகத்தை கம்பன் படம் பிடித்து காட்டுகிறான். 



 

1 comment:

  1. THIS IS FATHER'S FEELING- SAMUTHRA RAJA. I THINK THE WORD "KODIYEN " FOR MALE.

    ReplyDelete