Sunday, October 29, 2023

திருக்குறள் - பசிப்பிணி தீண்டாது

 திருக்குறள் - பசிப்பிணி தீண்டாது 


ஒரு பல்வலி மருத்துவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பல் வலியால் துன்பப் படுவாரா? அவருக்குத் தெரியும் பல் வலி எதனால் வருகிறது, அதை எப்படி போக்குவது என்று. உடனே அந்த வலிக்கு தகுந்த சிகிச்சையை மேற் கொள்வார் அல்லவா?


இன்னும் ஒரு படி மேலே போய், அப்படி பல் வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பல் வலி வராமல் தடுத்து விடுவார் அல்லவா?


அதை ஏன் சொல்கிறேன் என்றால்....


தான தர்மம் செய்வதால் எழையாகிப் போய் நாமும் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டி வருமோ என்று சிலர் பயப்படலாம். ஊரில் உள்ளவருகெல்லாம் உணவு கொடுத்து ஒரு நாள் தனக்கு உணவு இல்லாமல் ஆகி விடுமோ என்ற பயம் வரலாம் அல்லவா?


வள்ளுவர் சொல்கிறார் 


"பகுத்து உண்பதை பழக்கமாக கொண்டவனை பசி என்ற பிணி ஒரு போதும் தீண்டாது" என்கிறார். 


பாடல் 


பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்

தீப்பிணி தீண்டல் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_29.html


(please click the above link to continue reading)



பாத்தூண் = பகுத்து + ஊன் = உணவை பகுத்து 


மரீஇ யவனைப் = அணைத்துக் கொண்டவனை, பழக்கமாக கொண்டவனை 


பசிஎன்னும் = பசி என்ற 


தீப்பிணி = தீமையான பிணி (நோய்) 


தீண்டல் அரிது = தீண்டாது 


அது எப்படி ? மற்றவர்களுக்கு உணவு அளித்தால் நாம் பசியால் வாட மாட்டோம்?


வீட்டில் மனைவி சமையல் செய்வாள் (சில பல வீடுகளில்). சில சமயம் உணவு பத்தாமல் போய் விடும். கணவனோ, பிள்ளைகளோ கொஞ்சம் அதிகம் உண்டால், மனைவிக்கோ, அம்மாவுக்கோ உணவு இல்லாமல் போய் விடும். அதற்காக அவர்கள் பட்டினியாக இருப்பது இல்லை. அவர்களுக்குத் தெரியும் எப்படி உணவு சமைப்பது என்று. இருக்கின்ற பொருட்களை வைத்து ஏதாவது செய்து ஒரு உணவு செய்து விடுவார்கள். சில சமயம் அது மற்ற உணவை விட சுவையாகக் கூட இருக்கும். 


உணவு செய்யத் தெரிந்தவன் ஏன் பசியாக இருக்கப் போகிறான். 


பல் வைத்தியம் தெரிந்தவன் ஏன் பல் வலியால் துன்பப் படப் போகிறான். 


அது போல மற்றவர்களுக்கு உணவு தரத் தெரிந்தவன் தான் ஏன் பசியோடு இருக்கப் போகிறான்?


மேலும், எல்லோருக்கும் உணவு அளித்தவன் ஒரு நாள் உணவு இல்லாமல் இருந்தால், அவனால் உதவி பெற்றவர்கள் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா?


எனவே, அவனுக்கு எப்படியும் உணவு கிடைத்து விடும். பசியால் வருந்தமாட்டான். 


இந்தக் குறளை நாம் சற்று விரித்து நோக்க வேண்டும். 


இது ஏதோ உணவு, பசி, பட்டினி என்று இருக்காமல், மற்றவர்களுக்கு உதவி செய்தால் நாம் ஏழையாகி விடுவோமா என்ற பயம் இருந்தால், அது தேவையில்லாத பயம் என்கிறார் வள்ளுவர். 


மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் யாரும் கெட்டு போவதில்லை என்பது அவர் தரும் உறுதி. 








1 comment: