திருக்குறள் - கொல்லாததும், சொல்லாததும்
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
சான்றான்மை என்ற அதிகாரத்தில் வரும் குறள்.
சான்றாண்மை என்றால் உயர்ந்த குணங்களை அடைந்து பின் அதில் இருந்து வழுவாமல் இருப்பது.
ஒருவன் சான்றோனாக வாழ வேண்டும் என்றால், அதற்கு ஒரு பட்டியலை தருகிறார் வள்ளுவர். அதில் உள்ளது எல்லாம் முடியாவிட்டாலும், கொல்லாமை மற்றும் பிறர் தீமை சொல்லாமை எந்த இரண்டையாவது கடை பிடியுங்கள் என்கிறார்.
நோன்பு என்றால் விரதம் என்று கொள்ளலாம்.
நோன்பு என்பது ஒன்றை அடைய வேண்டி செய்வது. அடைந்த பின், நோன்பு முடிந்து விடும். சபரி மலைக்கு மாலை போடுவது மாதிரி. மலைக்கு போய் வந்தபின் நோன்பு, கார்த்திகை விரதம் முடிந்து விடும்.
ஏகாதசி விரதம். கார்த்திகை சோமவார விரதம்....மாதிரி.
சால்பு என்பது எப்போதும் கடைப்பிடித்து வாழ்வது. திருடாமல் இருப்பது, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது மாதிரி. எப்போதும் கடை பிடித்து வாழ்வது.
சான்றாமை என்பது பிற உயிரை கொல்லா நோன்பும், பிறர் தீமை சொல்லா சால்பும் உடையது.
நோன்பை விட சால்பு உயர்ந்தது.
ஒரு உயிரை கொல்வது தீமைதான். அதை விட தீமையானது மற்றவர்களின் கெட்ட குணங்களை, தீமைகளை வெளியே சொல்வது என்கிறார் வள்ளுவர். எனவே தான் கொல்லாததை நோன்பு என்றும், சொல்லாததை சால்பு என்றும் சொல்கிறார்.
கொல்வதற்கு ஆயுதம் வேண்டும். ஆயுதம் இல்லாத சமயம் கொல்லாமல் இருக்க முடியும். ஆனால் மற்றவர்களைப் பற்றி பேசுவது அப்படி அல்ல. நாக்கு மட்டும் போதும்.
கொல்வதற்கு, கொல்லப்படுபவன் நேரில் இருக்க வேண்டும். பிறரை பற்றி பேச, பேசப்படும் ஆள் நேரில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், வள்ளுவர் "நலத்தது" என்கிறார்.
அது என்ன நலத்தது ?
நல்லது என்று சொல்லவில்லை. நல்லவைகளோடு சேர்ந்தது என்கிறார்.
சான்றோன் என பெயர் எடுத்த யாரும், பிறர் தீமைகளை வெளியே சொல்ல மாட்டார்கள்.
ஏழே ஏழு வார்த்தை. எவ்வளவு அர்த்த செறிவு.
இன்னும் யோசித்தால், மேலும் அர்த்தம் தோன்றும் என்று நினைக்கிறேன்....