Sunday, June 10, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?


Empathy என்றால் மற்றவர்களின் மனநிலையில் இருந்து உலகையும் அதில் நடக்கும் செயல்களையும் பார்ப்பது.

ஒரு நல்ல படைப்பாளிக்கு இது மிக அவசியம்.

கதா பாத்திரங்களின் மன நிலையில் இருந்து எழுதினால் அது மிகவும் நன்றாக இருக்கும்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஏறக்குறைய அனைத்து ஆழ்வார்களும் தங்களை தாயக, நாயகியாக, தந்தையாக, நினைத்து மிக அருமையான பாசுரங்களை தந்து இருக்கிறார்கள்.

குல சேகர ஆழ்வார் இராமன் மேல் மிகுந்த ஈடு பாடு உள்ளவர்.

தன்னை தசரதனாக பாவித்து, இராமன் கானகம் போனால் எப்படியெல்லாம் துன்பப் படுவானோ என்று நினைத்து உருகி உருகி பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார்.

அதில் இருந்து ஒரு பாடல்:





கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே



கொல்லணைவேல் = கொல் + அணை + வேல் = கொல்வதற்கு ஏற்ற வேல் போன்ற

வரிநெடுங்கண் = நீண்ட கண்களை கொண்ட

கோசலைதன் = கோசலையின்

குலமதலாய் = குலத்தில் தோன்றிய மகனாய்

குனிவில் லேந்தும் = வளைந்த வில் ஏந்தும்

மல்லணைந்த = மல்லர்களை பொருதிய

வரைத்தோளா = மலை போன்ற தோள்களை உடையவனே

வல்வினையேன் = கெட்ட வினை உடையேன்

மனமுருக்கும் = மனம் உருகும்

வகையே கற்றாய் = வழி எல்லாம் கற்றாய்

மெல்லணைமேல் = மென்மையான பஞ்சனைமேல்

முன்துயின்றாய் = முன்பெல்லாம் உறங்கினாய்

இன்றினிப்போய் = இன்று இனிப் போய்

வியன் = விரிந்து, பரந்த, பெரிய

கான = கானகத்தில்

மரத்தின் நீழல் = மரத்தின் நிழலில் (வீடு எல்லாம் கிடையாது, மரத்தடியில்
தான் தூங்க வேண்டும்)

கல்லணைமேல் = கல்லின் மேல்

கண்டுயிலக் = கண் துயில

கற்றனையோ = கற்றுக் கொண்டாயோ

காகுத்தா = ககுஸ்தன் என்ற அரச குலத்தில் வந்தவனே

கரிய கோவே = கரிய நிறம் கொண்ட அரசனே

1 comment: