Monday, October 29, 2012

குறுந்தொகை - தயிர் சாதமும் புளிக் குழம்பும்


குறுந்தொகை - தயிர் சாதமும் புளிக் குழம்பும்


புதிதாய் திருமணம் முடித்து கணவனோடு அவன் வீட்டிற்கு வந்து இருக்கிறாள். வீடு ஒண்ணும் பெரியது அல்ல. விறகு அடுப்பு. அவன் வெளிய நிமித்தம் வெளியே போய் இருக்கிறான். மதியம் உணவுக்கு வீட்டிற்கு வருவான். புது மனைவி அல்லவா.

அவன் வருவதற்குள் எப்படியாவது உணவு சமைத்து வைத்து விட வேண்டும் என்று பர பர வென்று வேலை செய்கிறாள். அவளுக்கு சமைத்து அவ்வளவா பழக்கம் இல்லை. இருந்தாலும் சுவையான உணவை சமைத்து அவனுக்கு ருசியாக உணவளிக்க வேண்டும் ஆசைப் படுகிறாள். 

சாதம் ஆச்சு. என்ன பண்ணலாம் ?

தயிர் சாதம் பண்ணலாமா ?

கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர் விட்டு அவளுடைய காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள்.

பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள்.  தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு...பழக்கம் வேறு இல்லை. அவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல். 

விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது. 

அவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று புளிக் குழம்பு செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள். 

அவன் வந்து விட்டான். அவனுக்கு பரிமாறுகிறாள். அவன் ருசித்து சாப்பிடுகிறான். அவன் முகத்தில் உள்ள சந்தோஷத்தை பார்த்து அவளுக்கும் சந்தோஷம்.

அந்த குறுந்தொகைப் பாடல் 



முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் 
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் 
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் 
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் 
இனிதெனக் கணவ னுண்டலின் 
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே. 

பொருள்:

முளிதயிர் = முற்றிய தயிரை

பிசைந்த = பிசைந்த

காந்தண் = காந்தள் மலரை போன்ற

மெல்விரல் = மெல்லிய விரலை 

கழுவுறு = துடைத்த

கலிங்கங் கழாஅ துடீ = கலிங்கம் என்றால் துணி. சேலையில் துடைத்துக் கொள்கிறாள். அந்த புடவையை மாற்றக் கூட அவளுக்கு நேரம் இல்லை.

இக் = இங்கு, இப்போது

குவளை யுண்கண் = குவளை மலர் போன்ற கண்கள்

குய்ப்புகை கமழத் = சமையல் செய்யும் போது தோன்றிய புகை கமழ (தாளிக்கும் போது ?) 

தான் = அவளே

றுழந் தட்ட= உழந்து இட்ட. கலக்கி செய்த

தீம்புளிப் பாகர் = புளியின் பாகை கூண்டு செய்த (புளிக் குழம்பு) 

இனிதெனக் = நன்றாக இருக்கிறது என்று

கணவ னுண்டலின் = கணவன் உண்டலின் = கணவன் உண்பதை பார்த்து 

நுண்ணிதின் = மிக நுட்பமாக

மகிழ்ந்தன் = மகிழ்ந்து

றொண்ணுதன் முகனே = அவள் முகம் அந்த மெல்லிய மகிழ்ச்சியை காட்டியது

3 comments:

  1. from the days of kurundhogai till now we make the same thayir saadham and puli kulambu only. and still we survive. isnt it great?

    ReplyDelete
  2. I think you missed the point. it is not about making curd rice and puli kuzhambu...

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பாட்டில் நேரடியாக இல்லாத ஒரு விஷயத்தை நீ எழுதி, பாடலுக்கு மேலும் சுவை ஊட்டிவிட்டாய். இந்தப் பாடலில், "புதிதாய் திருமணம் ஆன பெண்" என்று எங்கும் சொல்லவில்லை. ஆனால் உன் முகவுரையில் அதை எழுதியதால், இப் பாடலின் சுவை பன்மடங்கு கூடிவிட்டது. பாடல் இனிமை, உன் உரையோ அதைவிட இனிமை.

      Delete