Sunday, October 28, 2012

கம்ப இராமாயணம் - இக்கட்டான கட்டங்கள்


கம்ப இராமாயணம் - இக்கட்டான கட்டங்கள் 


இராம காதையில் பல இக்கட்டான கட்டங்கள் உள்ளன. காப்பிய முடிச்சுகள். அந்த இடங்களில் , சில கதா பாத்திரங்கள் எப்படி நடந்து கொள்ளும் விதம் காவியப் போக்கையே மாற்றி விடும் அளவுக்கு கதை ஓட்டத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

இந்த இக்கட்டான இடங்களை கம்பன் எப்படி கையாளுகிறான் என்பதை தொகுத்தால் அது ஒரு சுவாரசியமான புத்தகமாக உருவெடுக்கும்.

கைகேயி மனம் மாறும் இடம், இராமன் கானகம் செல்ல ஒத்துக் கொள்ளும் இடம், இராமன் பரதனின் வேண்டுகோளை புறக்கணிக்கும் இடம், வாலியை மறைந்து நின்று கொல்லும் இடம், சீதை லக்ஷ்மணனை இராமனை தேடிச் சொல்ல போக பணிக்கும் இடம், சூரபனகை மூக்கு அறுபடும் இடம், விபீடணன் கட்சி மாறும் இடம் என்று பல தர்ம சங்கடமான இடம். 

அதில் விபீடணன் இராவணனை விட்டு செல்லும் நிகழ்வுகளைப் பார்ப்போம். 

விபீடணன் செய்தது சரியா ? 

இராவணன் செய்த அத்தனை குற்றங்களுக்கும் துணை போனவன் விபீடணன். அவன் சீதையை தூக்கி வந்த போது ஒன்றும் சொல்லவில்லை. இராவணின் செல்வத்தை, செல்வாக்கை அனுபவித்து வந்தவன் அவன். 

ஆபத்து என்று வந்த போது இராவணனுக்கு அறிவுரை சொல்லத் தொடங்குகிறான். முதலிலேயே சொல்லி திருத்தி இருக்க வேண்டாமா ? எல்லாம் நடக்கும் வரை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு , கடைசியில் அறிவுரை சொல்கிறான். அறிவுரை சொல்லும் நேரம் அல்ல அது. 

இராவணன் கேட்கவில்லை. என்ன செய்திருக்க வேண்டும் விபீடணன். அண்ணனுக்காக சண்டை இட்டு இருக்க வேண்டாமா ? நல்லது சொன்னேன், நீ கேட்கவில்லை, நான் இராமனிடம் போகிறேன் என்று கிளம்பி விட்டான். 



எத்துணை வகையினும் உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;
அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என,
உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.

பொருள்:

எத்துணை வகையினும் = எத்தனையோ வழியில்

உறுதி எய்தின,= எப்போதும் உறுதியானது எதுவோ (அறம், நீதி, தர்மம்)

ஒத்தன, உணர்த்தினேன்; = எது நல்லதோ அதை உனக்கு உணர்த்தினேன் (ஒத்தது வாழ்வான் உயிர் வாழ்வான் - குறள்)

உணரகிற்றிலை; = நீ உணரவில்லை

அத்த ! = என் தந்தை போன்றவனே 

என் பிழை பொறுத்தருளுவாய்' = என் குற்றங்களை பொறுத்துகொள்

என, = என்று கூறி 

உத்தமன் = உத்தமனான விபீடணன்

அந் நகர் = அந்நகர் (இலங்கை)

ஒழியப் போயினான். = ஒழியப் போனான்

கம்பனின் வார்த்தை பிரயோகங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

கம்பர் ஆழ்வார்களின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். 

உத்தமன் என்றால் உயர்ந்தவன், சிறந்தவன் என்று பொருள். மற்றவர்களுக்கு நல்லது நினைப்பவன் என்று ஒரு பொருள் உண்டு. "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்பது பாசுரம். கம்பர் விபீடணனை " உத்தமன்" என்று சொல்லிவிட்டார். 

ஊரை விட்டு போனான் என்று சொல்லவில்லை. "ஒழியப் போனான்" என்கிறார்...வரப் போகும் அழிவுக்கு கட்டியம் கூறுவது போல். 

  

1 comment:

  1. அதாவது, கம்பர் விபீஷணன் செய்தது சரி என்கிறாரா?

    இராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு வந்தபோது, யாரவது அவனை எதிர்த்துப் பேசினார்களா?

    ReplyDelete