Monday, October 22, 2012

திருச்சதகம் - கரை காணாக் கடல்


திருச்சதகம் - கரை காணாக் கடல் 


பிறவியை பெரிய கடல் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 

கடல், அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது. நமக்கு என்ன என்று நாம் இருப்போம். 

மாணிக்க வாசகர் அந்த பிறவி பெருங்கடலை நம் மனதில் தைக்கும்படி உணர்த்துகிறார். 

பெரிய கடல். அந்த கடல் நடுவே (கரையோரம் அல்ல) நீங்கள் தனியாக மாட்டிக் கொண்டு தத்தளிகிறீர்கள். அலை உங்களை போட்டு புரட்டி எடுக்கிறது. புயல் காற்று ஒரு புறம் ஊசி போல் துளைக்கிறது. சற்று தூரத்தில் சில சுறா மீன்கள் நீந்திக் கொண்டு இருக்கின்றன. எப்படி கரை சேர்வது என்று தவித்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு மரத்துண்டு கிடைக்கிறது பற்றிக்கொள்ள. உங்கள் அருகே வந்து ஒரு மாலுமி கரை இருக்கும் இடத்தை காட்டுகிறார்.  உங்களுக்கு எப்படி இருக்கும் ?

பிறவி என்ற பெருங்கடல்.

துன்பம் என்ற அலை அடித்துக்கொண்டே இருக்கிறது

பெண்கள் மேல் கொண்ட மோகம் என்ற புயல் காற்று அலைகழிக்கிறது

ஆசை என்ற சுறாமீன் விழுங்க வருகிறது

அஞ்செழுத்து தான் தெப்பம்

கரை காட்டியது அவன் அருள்

பாடல் 

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு
இனியென்னே உய்யுமாறு என்றென்று எண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதலஅந்தம் இல்லா மல்லல்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.

சீர் பிரித்த பின்

தனியனேன் பெரும்பிறவி பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி
கனியை நேர் துவர் வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வன் சுராவின் வாய்ப்பட்டு
இனி என்னே உயியுமாறு என்று எண்ணி
அஞ்சு எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லாமல்
கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்கனேற்கே

பொருள் 

தனியனேன் = தனித்து விடப்பட்ட நான்

பெரும்பிறவி பௌவத்து = பிறவி என்ற பெரும் கடலில்

எவ்வத் தடந்திரையால் = துன்பம் என்ற அலைகளால்

எற்றுண்டு = அலைகழிக்கப்பட்டு

பற்று ஒன்று இன்றி = பற்றிக் கொள்ள எதுவும் இல்லாமல்

கனியை நேர் = கனி போல் சுவைக்கும்

துவர் வாயார் = இனிய இதழ்களை கொண்ட பெண்கள் (அவர்கள் கொண்ட 
மோகத்தால்)

என்னும் காலால்  = என்ற புயல் காற்றால் (கால் = காற்று. காலன் = காற்றை (மூச்சை) எடுப்பவன்)

கலக்குண்டு = கலக்கப்பட்டு

காம = ஆசை என்ற

வன் சுராவின் = கொடிய சுராவின்

வாய்ப்பட்டு = வாயில் விழுந்து

இனி என்னே உயியுமாறு = இனி எப்படி பிழைக்கப் போகிறோம்

என்று எண்ணி = என்று எண்ணி 

அஞ்சு எழுத்தின் = நமசிவாய என்ற அஞ்சு எழுத்தாகிய

புணை = தெப்பத்தை 

பிடித்து கிடக்கின்றேனை = பிடித்து கிடக்கின்ற என்னை

முனைவனே = முயற்சி செய்பவனே

முதல் அந்தம் இல்லாமல் = முதலும் முடிவும் இல்லாமல் தவித்து 
கொண்டிருந்த என்னை

கரை காட்டி = கரையையை காட்டி

ஆட்கொண்டாய் = என்னை ஆட்கொண்டாய்

மூர்கனேற்கே = மூர்கனான எனக்கே

3 comments:

  1. என்ன... தவம்.... செய்தனை....

    ReplyDelete
  2. அற்புதமான பாட்டு.

    இதைப் படிக்கும்போது எனக்குள் ஒரு கேள்வி: பல ஆண் கவிகள், பெண் மோகத்தால் துயர் அடைந்ததாக எழுதி இருக்கிறார்கள். அதேபோல, யாரவது பெண் கவிகள், ஆண் மோகம் பற்றி எழுதியது உண்டா?

    ReplyDelete
  3. நாச்சியார் திருமொழி பூராவும் அது தான். எனக்கு என்னமோ பெண்களுக்கு ஆண் மோகம் என்பது கொஞ்ச நாள் தான் என்று நினைக்கிறேன். ஆண்களுக்கு பெண் மோகம் இறுதி நாள் வரை இருக்கும் போல் இருக்கிறது.

    ReplyDelete