Saturday, October 20, 2012

அபிராமி அந்தாதி - மனம் நெகிழ வைக்கும்


அபிராமி அந்தாதி - மனம் நெகிழ வைக்கும்

அபிராமி அந்தாதியில் பல இடங்களில் அபிராமி பட்டர் அபிராமியின் மார்பகங்களை குறித்துப் பாடுகிறார். என்னடா இது ஒரு பக்தி பாடலில், ஒரு இறைவியையை பற்றி இப்படி கூறலாமா என்று பலர் நினைக்கலாம்.

ஒரு குழந்தை இந்த உலகில் வந்தவுடன், அது இயற்கையாக தேடுவது அதனுடைய தாயின் மார்புகளை தான். தாய் தன் உதிரத்தை பாலாக்கி தன் குழதைக்குத் தருகிறாள். குழந்தை உயிர் வாழ, அது வளர, அதை நோயில் இருந்து பாதுகாக்க தாய் பால் உதவுகிறது. தாய் பால் உணவு மட்டும் அல்ல, அது தாயின் அன்பு, காதல், பாசம், வாஞ்சை, அவளின் அரவணைப்பு எல்லாம் அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. 

கஷ்டம் வரும் போது எல்லாம் நாம் தாயை தான் நினைக்கிறோம். துன்பம், கஷ்டம் வரும்போது "ஐயோ, அம்மா" என்று அவளை நினைக்கிறோம். சுகம் வரும்போது தந்தையை நினைக்கிறோம் ("அப்பாட " ) என்கிறோம்.

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன் 
அருள் நினைந்தே அழும் குழவி அது போல் ஆனேனே 

என்று உருகும் பிரபந்தம்.

ஒரு குழந்தை தாயின் மார்பை பார்பதை போல் பட்டர் அபிராமியையை பார்க்கிறார். உலகுக்கு எல்லாம் அமுது ஊட்டுபவள் அல்லவா அவள். 

பாடல்: 


இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க 
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம் 
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே. 
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே

பொருள் 

இழைக்கும் வினைவழியே = நாம் செய்யும் வினைகள் நம் வாழ்க்கையோடு இழைகின்றது.  இழை இழையாகப் பின்னுகிறது நம் வாழ்கையை.  

அடும் = கொல்லுதல், சண்டை இடுதல் 

காலன் = எமன்

எனை நடுங்க அழைக்கும் பொழுது = அவன் என்ன நம்மை வெற்றிலை பாக்கு வைத்தா அழைத்து கொண்டு போகப் போகிறான் ? இறப்புக்கு நடுங்காதார் யார்?

வந்து = இறக்கும் தருணத்தில் என்னால் வர முடியாது. அதனால் நீயே வந்து

அஞ்சல் என்பாய் = பயப்படாதே என்று என்னிடம் சொல்வாய். என் பயத்தை போக்குவாய்

அத்தர் = என் தந்தை, (சிவன்). 

"அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் "  என்பது திருவாசகம் 

சித்தம் எல்லாம் = அவனுடைய சித்தம் எல்லாம் (சிவனின் மனம் எல்லாம் ) 

குழைக்கும் = நெகிழ வைக்கும். அப்பா எப்போதுமே கொஞ்சம் கடினமானவர் தான். அதனால் பிள்ளைகள் அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் சொல்லச் சொல்லும். அப்பாவின் மனதை மேன்மை ஆக்குபவள் அம்மா. "என்னங்க, நம்ம பிள்ளை தான, பாவம் ஆசை படுறான், வாங்கி குடுங்க, மேல படிக்கணும்னு ஆசை படுறான், படிக்கட்டுமே,  " என்று  அப்பாவின் மனதை குழைப்பவள் அம்மா. சிவனிடமும் அப்படிதான். 

களபக் = களபம் என்றால் சேறு. இங்கே சந்தனம், குங்குமம் போன்ற வாசனை பொருட்கள் சேர்ந்த ஒரு சாந்து என்று கொள்வது பொருத்தம்.

குவிமுலை = குவிந்த மார்புகளை உடைய

யாமளைக் = யாமளையே 

கோமளமே = இளமையானவளே, மென்மையானவளே, அழகானவளே
 . 
உழைக்கும் பொழுது, = துன்பம் வரும் போது

உன்னையே = உன்னிடமே

அன்னையே = அன்னையே

என்பன் ஓடிவந்தே = என்று ஓடி வந்து விடுவேன். அம்மா என்று உன்னிடம் ஓடி வந்து விடுவேன். பயபடாதடா என்று சொல்லி, என் துன்பத்தை நீ போக்க வேண்டும்.

அபிராமி அந்தாதி மற்ற பாடல் போல் அல்ல. வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தால் முழுப் பாடலும் தெரிந்து விட்டதாய் அர்த்தம் அல்ல. வார்த்தைகளை தாண்டி , அந்த பாசம், அந்த பக்தி, அந்த காதல், அந்த அன்யோன்யம்....அதை வார்த்தைகளில் சொல்வது மிக கடினம். உணர்வது எளிது. 

2 comments:

  1. Wow! என்பதுதான் சரி. வேறே என்ன சொல்ல?!

    ReplyDelete