Monday, October 15, 2012

அபிராமி அந்தாதி - ஞாபகம் இல்லாமல் எனக்கு அருள் செய்து விட்டாய்


அபிராமி அந்தாதி - ஞாபகம் இல்லாமல் எனக்கு அருள் செய்து விட்டாய்


நீங்கள் ஒரு பெண்ண மேல் காதல் கொள்கிறீர்கள். அந்த பொண்ணு ரொம்ப அழகு. அவளின் அன்புக்காக உருகுகிறீர்கள். அவள் உங்களை பார்த்து ஒரு முறை புன்முறுவல் பூக்க மாட்டாளா என்று தவம் இருக்கிறீர்கள். 

நீங்கள் அவளை விடாமல் காதலிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

ஒரு நாள் அவள் உங்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்துகிறாள். உங்களிடம் வந்து அவளும் உங்களை விரும்புவதாகச் சொல்லி செல்கிறாள். 

எப்படி இருக்கும் உங்களுக்கு ? எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் ? 

நான் என்ன செய்து விட்டேன் ? என்ன ஆச்சு அவளுக்கு ? திடீர்னு வந்து அவளும் என்னை காதலிப்பதாக சொல்கிறாளே ? ஒருவேளை ஞாபக மறதியா வேறு யாரிடமோ சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்லி விட்டு போகிறாளோ ? என்று உங்கள் மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.  ஒவ்வொரு அணுவிலும் சந்தோஷம் கொப்பளிக்கிறது. இவ்வளவு சந்தோசத்தை எப்படி தாங்கப் போகிறீர்கள் ? 

இறை அருளும் அப்படித்தான். அபிராமி பட்டருக்கு அபிராமியின் அருள் கிடைத்தது.  அவரால் நம்ப முடியவில்லை. நான் என்ன செய்து விட்டேன், எனக்கு எப்படி அவளின் அருள் கிடைத்தது. ஒரு வேளை, அபிராமி ஞாபகம் இல்லாமல் எனக்கு அருள் தந்து விட்டாளோ ? அவளின் அருள் மட்டும் அல்ல, அவளை அறியும் அறிவையும் தந்தாள். 

புலம்புகிறார்...தாயே, மலை மகளே, திருமாலின் தங்கச்சியே...என்று உருகுகிறார்.....

பாடல்



நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, 
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம் 
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.-- 
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

பொருள் 

நாயேனையும் = இந்த சிறியேனையும்

இங்கு = இங்கு

ஒரு பொருளாக = ஒரு பொருளாக

நயந்து வந்து = விரும்பி வந்து 

நீயே = அபிராமியாகிய நீயே


நினைவின்றி ஆண்டு கொண்டாய், = ஞாபக மறதியாய் என்னை ஆண்டு கொண்டு விட்டாய்  

நின்னை உள்ளவண்ணம்  = நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே 

பேயேன் அறியும் அறிவு தந்தாய்,= நான் அறியும் அறிவை தந்தாய்

என்ன பேறு பெற்றேன்.= நான் என்ன தவம் செய்தேன் 

தாயே, = என் தாய் போன்றவளே 

மலைமகளே, = மலை மகளே 

செங்கண் மால் திருத் தங்கைச்சியே.= சிவந்த கண்களை உடைய திருமாலின் தங்கச்சியே 

1 comment:

  1. மறந்து போய் அருள் செய்வது ஒரு நல்ல கருத்து. "நாயேனையும் ஒரு பொருளாக" என்று தன்னைத்தானே தாழ்வாக எண்ணுவது மிகவும் உலுக்கும் சொல்லாக இருக்கிறது.

    ReplyDelete